search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166973"

    • இருவரது வீடுகளும் முழுவதுமாக எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.
    • அதிகாரிகள் நேரில் சென்று பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த நார்த்தாங்குடி கிராமத்தை சேர்ந்த சிவா மற்றும் வீரையன் ஆகியோர் அருகிலுள்ள கோவில் திருவிழாவிற்காக தனது குடும்பத்துடன் சென்று விட்டனர்.

    அப்போது வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது.

    அருகில், சிவா என்பவரது வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.

    இதில், இருவரது வீடுகளும் முழுவதுமாக எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.

    இந்த சம்பவம் குறித்து கலெக்டர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வலங்கைமான் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இதனால், மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சிறுமலை ரேசன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் தாழக்கடை, பழையூர், புதூர், அண்ணாநகர், ஊரடி ஆகிய பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாழக்கடையில் உள்ள ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு 20 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. இதே போல 20 கிலோ வழங்க வேண்டிய பயனாளிகளுக்கு அதை விட குறைவாக வழங்கி வந்துள்ளனர்.

    மேலும் புழுங்கல் அரிசிக்கு பதிலாக பச்சரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பல முறை கடை விற்பனையாளர்களிடம் விபரம் கேட்டும் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.

    இதனால் ஆவேசமடைந்த வேலாம்பண்ணை பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கடையில் இருந்த எடை தராசு கல்லையும் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் விற்பனையாளர் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இந்த ரேசன் கடையை முறையாக திறப்பது கிடையாது. மக்கள் வரும் நேரத்தில் பொருட்கள் வழங்குவது கிடையாது. கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் நாங்கள் வேலைக்கு சென்ற பிறகு கடையை திறந்து சிறிது நேரத்திலேயே பூட்டி விடுகின்றனர். மண்எண்ணை வினியோகமும் முறையாக இல்லை. வேலாம்பண்ணையில் இருந்து 7 கி.மீ தூரம் நடந்து வந்தாலும் பொருட்கள் இல்லை என கூறி விடுகின்றனர்.

    எனவே சிறுமலையில் செயல்படும் ரேசன் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பிரம்மதேசம் அருகே நள்ளிரவில் அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர்கள் ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
    மரக்காணம்:

    பிரம்மதேசம் அருகே உள்ளது வேப்பேரி கிராமம். இங்குள்ள மரக்காணம்-திண்டிவனம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் வேப்பேரி, பிரம்மதேசம், மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 700 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்த பின்னர் காவலாளி பள்ளியின் அனைத்து அறைக்கதவுகளையும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் பள்ளி வளாகத்துக்கு வந்தனர்.

    கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்தால் மாட்டி கொள்வோம் என்று எண்ணிய மர்ம மனிதர்கள் முதலில் வெளியே மாட்டியிருந்த எலக்ட்ரிக் பெல் மற்றும் பள்ளி மணி ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கம்ப்யூட்டர் அறை ஜன்னலின் கதவை வளைத்து லாவகமாக உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பென்டிரைவை கொள்ளையடித்தனர். இதையடுத்து கொள்ளையடித்த பொருட்களோடு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளின் வெளியே மாட்டியிருந்த பெல் மற்றும் அறையில் இருந்த பென்டிரைவை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம மனிதர்கள் இவை அனைத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரம்மதேசம் போலீசில் தலைமை ஆசிரியர் ராதா புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ராம்ஜிநகர் ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அந்தப்பகுதி பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இந்த நிலையில், வேப்பந்தட்டை தாலுகா திருவாளந்துறையில் உள்ள ராம்ஜி நகரை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரேஷன் கடை ஒன்று திறக்கப்பட்டு வாரத்தில் 3 நாட்கள் செயல்பட்டு வந்தது. இதனால் எங்கள் பகுதியில் இருந்து 205 குடும்ப அட்டைதாரர்கள் அங்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில், இந்த மாதம் அந்த ரேஷன் கடைக்கு வரவேண்டிய எந்த ரேஷன் பொருட்களும் வரவில்லை. இதனால் கடை திறக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாளந்துறைக்கு சென்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றோம்.

    எனவே ராம்ஜி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு தேவையான ரேஷன் பொருட்களை இறக்கி, வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிழக்கு ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊத்தங்கால் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடை திறந்தால் அந்த கடை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 182 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்த கலெக்டர் குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
    ×