search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவுகள்"

    வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.
    புகார்க் கூடங்களாக ஏன் குடும்பங்கள் மாறிவருகின்றன? என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்று எல்லோரும் ஏன் பேசத் தொடங்கிவிட்டோம்? வாழ்வு பாடாய்ப் படுத்துவதாக ஏன் நினைக்கத் தொடங்கியுள்ளோம்?

    சிலருக்கு இருக்கப் பிடிக்காமல் ஏன் வெறுக்கப் பிடிக்கிறது? உப்பு விற்கப்போனால் மழைபெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு உள்ளத்திலும் நூற்றுக்கணக்கான புகார்ப் பட்டியல்கள். என்ன ஆயிற்று நம் இந்தியக் குடும்பங்களுக்கு?

    ‘வீடு சிறையாக மாறிவிட்டது. வறட்டு கவுரவமும் தேவையில்லாப் பிடிவாதமும் எங்களை வெறுப்பில் ஆழ்த்துகின்றன’ என்கிற இளைய சமுதாயத்தின் குரல் ஒருபுறம். பொறுப்பு வெறுப்பாய் மாறி மகனை, மகளை, மனைவியைக், கணவனைத், தந்தையைக் கொலை செய்யும் அளவுகூடக் கொண்டுபோய் விடுகிறது.

    எதையும் விட்டுக் கொடுப்பதற்கு யாரும் தயாரில்லை. ஐவகை நிலமும் அறிந்தவன் பால்கனிச் செடியைப் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானதோ அதைப்போல் நல்ல குடும்ப அமைப்பு நம் கண் முன்சிதைந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

    வீட்டுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்குப் பிரச்சினைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள், வீட்டுக்குள் நுழையவே பிடிக்கவில்லை என்று இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்குள் நுழையும் குடும்பத் தலைவர்களைக் குடும்பங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவா?

    இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் தனிமையின் துயர் அறுக்க இணையதளங்களிலும் சமூகஊடகங்களிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பறவைகளை இந்தக் குடும்பங்கள் எப்படி ஆற்றுப்படுத்தப் போகின்றன? உருகத் துடிக்கிற பனியைப் பருகத் துடிக் கிற இளைய உதடுகள் இது குறித்து என்ன சொல்லப் போகின்றன?

    பொறுப்பாயிருக்கிற வரை வெறுப்பாயிருக்காது எதன்மீதும்! அந்தப் பொறுப்பை யார் யாருக்கு உணர்த்துவது? நாம் அசருகிற போதெல்லாம், ‘விடுறா இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். பிரச்சினையைத் தூக்கிப் போட்டுட்டு ஆத்தாளுக்கு பதினோறு ரூபாய் முடிஞ்சி வச்சிட்டு அடுத்தவேலை பாருடா’ என்று சொன்ன அந்த சுமைதாங்கி மனிதர்களை அன்னை இல்லங்களில் கொண்டு விட்டுவந்த இடரை இப்போது அனுபவிக்கிறோம்.

    கால்நூற்றாண்டு உறவுகளை எல்லாம் திருமணம் என்கிற பந்தத்தின் பொருட்டு விட்டுவிலகி வந்து தன்னையே நம்பி வாழும் மனைவிக்கு மனது என்ற ஒன்று இருக்கிறது, அவள் நலன் நாடல் என் கடமை என்று கணவன் ஏன் நினைப்பதில்லை?

    உலகம் செலுத்தும் பேரன்பில் ஓரன்பாவது நமக்குக் கிடைக்கத் தானே செய்யும்! நாம் மட்டும் ஏன் அந்த அன்பை மற்றவர்களுக்குத் தர மறுக்கிறோம்.

    நாடகங்களில் காட்டுமளவு வெகு கொடூரமாக இன்னும் மாறவில்லை குடும்பவாழ்வு. கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொள்கிறவர்கள் வெற்றி வந்தால் அளவுக்கதிகமாய் ஆடாமலும் தோல்வி வந்தால் துவண்டுபோகாமலும் வெகுஇயல்பாய் இருக்கிறார்கள்.

    என்னதான் நம் வாழ்வின் வினாடிகள் வெளியில் ஆட்டமும் ஓட்டமுமாய் கழிந்தாலும் ஆன்மா ஆனந்தமயமாவதும் அமைதியடைவதும் இல்லத்தில்தான். இல்லத்தில் உள்ளது நம் உள்ளத்தின் நிம்மதி. அந்த இல்லத்தைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நாம்தான்.

    அலுவலகத்தில் மேலாளர் என்ன சொன்னாலும் பொறுமையுடன் யோசித்து அமைதியாய் பேசும் நாம் வீட்டில் எரிந்துவிழுகிறோம். ஒன்றுமில்லாத சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுகிறோம். வெளியே போய்விட்டு வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.

    சொற்களால் பிரிந்த குடும்பங்கள் ஆயிரம்! கனத்த சொற்களால் தான் நம் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதில்லை. மென்மையாக ஆனால் அழுத்தமாக நாம் சொல்லவேண்டியதைச் சொல்லலாம்.

    மீட்டித்தான் ஆகவேண்டும் இந்த வாழ்வெனும் வீணையை, வாழ்ந்து காட்டித்தான் ஆகவேண்டும் நம்மை வெறுப்போருக்கு மத்தியிலும். தொட்டிக்குள் வாழ்ந்தாலும் சலிப்பில்லாமல் நீந்துகிற மீன்களைப் போல் நம் இயக்கம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். மூலவருக்கு முன் மனமுருகி பிரார்த்திக்கும்போது யாரேனும் மணியசைத்து அது நடக்கும் என்று குறியீடாக உணர்த்திவிடுகிற மாதிரி சுற்றிநடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றன.

    குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே வாழ்வின் நுட்பங்களைக் கற்றுத்தந்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று எப்படி இயங்குகிறது எப்படி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது? எப்படி முடிவெடுப்பது? வெளிஉலகத்தில் எப்படி நாம் நம்மை நிலைப்படுத்திக்கொள்வது? என்று உணர்த்தியிருந்தால் அவர்கள் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும்.

    அப்பா அன்பு அப்போது புரியாது, அம்மா தியாகம் தான் அம்மாவாக மாறும்போதுதான் தெரியும். பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கும் அவள் சொல்லும் ஆயிரமாயிரம் கதைகளுக்கும் எதை நாம் ஒப்பீடாகச் சொல்லமுடியும்? தன் தங்கைக்குத் தலைச்சன் பிள்ளை பிறந்திருக்கிறது என்று ஆசையோடு சேனை வைக்க ஓடிவரும் அன்பு வடிவமான தாய்மாமனுக்கு ஈடாக வேறுயாரைச் சொல்ல முடியும்? உறவுகளை மதிக்கக் கற்றுத் தாருங்கள்.

    உறவுகளின் உன்னதத்தைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புரியவையுங்கள். பெரியவர்களின் சொற்படி நடப்பது பாதுகாப்பானது என்று சொல்லி வளருங்கள்.

    வெறுப்பில் இல்லை வாழ்வின் வெற்றி, நிறைவின் இருப்பில்தான் உள்ளது என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வாழ்வெனப்படுவது வலியோடும் வலிமையோடும் வாழ்ந்து காட்டுவது என்று புரிய வையுங்கள். குடும்பம் முழுமையான வாழ்தலுக்கான அன்பின் பயிற்சிக்கூடம். அதில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம், ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

    அன்பிற் சிறந்த தவமில்லை என்றார் மகாகவி பாரதி. அன்பைத் தவிர குடும்பத்தில் வேறில்லை.

    முனைவர் சவுந்தர மகாதேவன், கல்லூரி பேராசிரியர், நெல்லை
    தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள். மனித இனம் நிம்மதியற்ற பாதையை தேர்ந்தெடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.
    எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறி தள்ளிவிட்டு வேகமாக ஓடினார்கள். பந்தயம் கடினமாக இருந்த போது வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கி வைத்து ஓடினார்கள். பின்னர் தர்ம சிந்தனைகள், கடமை, கண்ணியம், கூட சுமைகளாகிப்போயின.

    எனவே அவை அனைத்தையும், உதறி தள்ளிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தனர். உறவுகள் சுமையாக தொந்தரவாக அவர்களுக்கு தோன்றின. எனவே அவற்றையும் விட்டு தள்ளினார்கள் அல்லது வில(க்)கி ஓடினார்கள். இந்த நவீன மனிதர்களுக்கு பொருளாதார வசதி, புகழ், வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத வெறி மட்டும் எஞ்சி உள்ளதால் பந்தயத்தில் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இனி அவர்கள் வீசி எறிய எதுவுமில்லை குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.

    மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளை கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள். பிறந்த குழந்தையின் பசிக்கு பாலூட்டவும் குளிப்பாட்டவும் நேரம் இல்லாத இளம் அம்மாக்களும் உருவாகி விட்டார்கள். மனைவி வலியால் துடித்தாலும் அரவணைத்து மருந்து கொடுத்து அக்கறையும் பாசமும் காட்ட நேரம் இல்லாத கணவர்களும் மலிந்து போனார்கள்.

    பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது. சிலருக்கு அவர்கள் படும் பாட்டை நினைத்தவாரே உயிர் பிரிகின்றது. மருத்துவ செலவுக்கு அனுப்பும் பணம் கூட அவரவர் கணக்குகளில் வங்கிகளில் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லவும் முடிவதில்லை. எல்லோருடைய நேரத்தையும் கேளிக்கைகளும், செல்போன்களும் விழுங்கிவிட்டன.

    தொடு திரையில் வாழ்த்துக்கள். நகரங்கள் விரிவடைய மனித மாண்பு வெகுவாக சுருங்கி விட்டது. மூன்று வயது நிரம்பாத குழந்தைகள் மழலை காப்பகங்களுக்கும், ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களின் ஓட்டத்திற்கு இந்த குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி கூட தடையாக தென்படுகின்றது. தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின.

    இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள். இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை மனித இனம் நிம்மதியற்ற பாதையை தேர்ந்தெடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. இனி அதுவே நினைத்தாலும் நிறுத்த முடியுமா, என்ன? 
    அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம்.
    ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது. யானை, யானை அம்பாரி யானை, அரசனாக அமரச் சொல்லும் யானை.

    உனக்குக் கொஞ்சம், எனக்குக் கொஞ்சம், உவகையுடன் தின்னலாம். கை கோர்த்தே நாம் காலம் முழுதும் சஞ்சரிக்கலாம். உறவென்னும் பாறையில் உயிருள்ளவரை உலவலாம் இந்தப் பாடல்கள் நினைவிருக்கிறதா? சிறு வயதில் பள்ளி விடுமுறையில் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் சென்றவர்களுக்கு கிராமத்தில் இந்த விளையாட்டை விளையாடியது நினைவில் இன்னும் இருக்கலாம். ஐம்பது வயதை கடந்த அனைவரிடமும் மாறாத வாசனையாய் இந்த உணர்வுகள் இருக்கும். அமைதி, பொறுமை, நிதானம் என்று வாழ்வில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு வாழ்பவர்கள் நிச்சயம் தங்கள் பால்ய காலத்தை உறவுகளுடன் கழித்தவர்களாய்த்தான் இருப்பார்கள்.

    ஏட்டுக் கல்வியை பல்கலைக்கழகங்கள் கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கைக் கல்வியை இந்த மாதிரி உறவுகள்தான் கற்றுக் கொடுக்கும். எல்லா உறவுகளும் அன்பின் நெருக்கமாய் இருப்பதில்லை. அதிலும் போட்டி, பொறாமை, கோபம் என்று எல்லாம் இருக்கும். ஆனாலும் விட்டுக்கொடுத்து அன்பும் பாசமுமாய் வாழ்ந்தால் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும் என்று உணர்த்த முடியும்.

    பள்ளி விடுமுறை விட்டதுமே ஊருக்குப் போகும் குஷி ஆரம்பித்து விடும். கிராமம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவே வேண்டாம். பொழுது போவது தெரியாது. நீரை வாரி இறைக்கும் பம்புசெட், நீச்சல் கற்றுக்கொடுக்கும் கிணறு, தணலில் சுட்டுச் சாப்பிடும் கம்பு, கேழ்வரகு, சோளம், இளநீர், நுங்கு என்று இயற்கையான தின்பண்டங்கள், தாத்தா தென்னை ஓலையில் செய்து கொடுக்கும் கிளி, குருவி, சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும் மாமா, வெள்ளி, சனியில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடும் அத்தை, சித்திகள் என்று அனைவரும் அன்பை கற்றுக்கொடுத்தார்கள். அன்பைவிட அக்கறையே அதிகம் இருக்கும் அவர்கள் செயலில்.

    பங்கிட்டு வாழ கற்றுக்கொடுக்கும் பல்லாங்குழி, விட்டுக்கொடுத்து வாழ் எனச் சொல்லும் கிட்டி, கிளித்தட்டு, அத்துடன் கும்மி. இன்று பல ஆங்கில டாக்டர்கள் இரு கையையும் தட்டுங்கள் அது இதயத்திற்கு இதமானது என்கிறார்கள். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். இன்று பல இடங்களில் கை தட்ட பயிற்சி, சிரிக்க ஒரு கிளப் என்று நடக்கிறது.

    வீட்டில் நாலு உறவுகள் அவர்களின் குழந்தைகள் சேர்ந்து இருக்கும்போது அங்கு தெறிக்கும் சிரிப்பலைகள் மூலம் தீர்க்காத நோய்களும் உண்டா? இரவில் மீந்துப்போன குழம்பு வகைகளைச் சுட வைத்து பாட்டி சாதம் பிசைந்து போடுவாள். அதில் உள்ள ருசி எந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கிறது.? இருப்பதை பங்கிட்டுச் சாப்பிடும் வழக்கத்தையும் அல்லவா அது கற்றுத் தருகிறது. அனைவரும் ஒரே இடத்தில் பேதமின்றி படுத்திருக்க, பாட்டியும், தாத்தாவும் சொன்ன இதிகாசங்கள், நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுத் தந்தது. தாத்தாவின் கை பிடித்து நடக்கும்போது எதிர்ப்படுபவரிடம் அவர் பேசுவதும், நடந்து கொள்வதும் நமக்குப் பாடமானது. வீட்டுக்கு வந்தவர்களை பாட்டி வரவேற்கும் முறையைப் பார்த்து மரியாதை என்பதைக் கற்றுக்கொண்டோம். நேசிப்பையும், உணவில் ஆரோக்கியத்தையும், அன்பையும், பணிவையும், நல்ல பண்புகளையும் அவர்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலம் கற்றுத் தந்தார்கள்.



    ஆனால் இன்று? இன்று இளைய சமுதாயத்தின் உலகம் அலைபேசியின் தொடுதிரையிலும், கணினியிலும் அடக்கிவிட்டது. வீட்டுக்கு யாராவது வந்தால் கூட வாங்க என்று கூப்பிடத்தோணாமல் வாட்ஸ் ஆப்பிலும், முகநூலிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். காசு மட்டும் அல்லவே வாழ்க்கை. அடிப்படை பண்புகளை எந்த கல்வி நிறுவனம் கற்றுத் தருகிறது?

    இன்று பெருகி நிற்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள், பயங்கரவாதம் இந்த அளவுக்கு அன்று இல்லையே? காசு சம்பாதிக்கும் எந்திரமாக்கி விட்டோம் குழந்தைகளை. விடுமுறை என்பது அவர்களுக்கு சென்டிரல் ஜெயிலில் இருந்து சப்-ஜெயிலுக்கு மாறும் நாள். ஒரு கூட்டுக் குடும்பத்தில் எல்லா உறவுகளிடமும் அனுசரித்துப் போகப் பழகியவனால் சமுதாயத்தில் எந்த இடத்திலும் கலந்து பழகி வெற்றிபெற முடியும்.

    ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஐந்தாறு பெண் குழந்தைகளிடம் கலந்து பழகியவனால் மற்றொரு பெண்ணை தவறான எண்ணத்துடன் பார்க்கவோ, நடக்கவோ முடியாது. படித்து நல்ல வேலை கிடைத்து பையன் வெளிநாடு சென்றாலும் அவனின் வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள கூட்டுக் குடும்பத்தில் உறவுகளின் அனுசரணை இருக்கும். அன்பும், பிரியமுமான குடும்பத்தில் வளர்ந்தவன் வெளிநாட்டுக்குத் தன்னை அடிமை சாசனம் எழுதித் தரமாட்டான். முதியோர் இல்லங்கள் தேவை இல்லாமல் போயிருக்கும். உறவுகளுடன் வாழ்ந்து அவர்களை மதிக்கவும், நேசிக்கவும் கற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

    தன் மகன்-மகள் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்கள் அவர்கள் ஒரு நல்ல மனிதனாக வாழ என்ன செலவு செய்கிறார்கள்? வாழ்க்கை, பல்கலைக்கழகங்களிலோ, கோடைக்கால பயிற்சி வகுப்பிலோ இல்லை. பாட்டி, தாத்தா வீட்டில், உறவுகளின் குழுவில் இருக்கிறது, நமது கலாசாரம், பாரம்பரியத்தைக் கடத்திக்கொண்டு வருகிறவர்கள் அவர்களே.

    விடுமுறை தினங்களில் உறவுகளின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அனுப்புங்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தர வேண்டாம். அவர்களே கற்றுக்கொள்வார்கள்.

    சுற்றத்தின் அழகு சூழ இருத்தல் என்கிறார் அவ்வையார். அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம். நம் வீட்டில் அவர்கள் வருவதை அனுமதிக்கலாம். அன்பாய் விருந்தோம்பலாம். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்பக் கிடைக்கும். டாலர்களில் இல்லை வாழ்க்கை. பெற்றோர்கள் இருக்க வேண்டியது முதியோர் இல்லங்களில் இல்லை. குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது செல்வத்தை அல்ல. அதைவிட உயர்வான நல்ல கல்வி. அன்பான சுற்றம், உறவுகள்.

    எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா

    தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே.
    தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன. உண்மை அறிவியலின் உச்சத்தை அடைந்து விட்டான் மனிதன். ஆனால் அத்தனை அறிவுசார் கண்டுபிடிப்புகளும் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனவா? அவனது கண்டுபிடிப்புகளின் ஆளுமை ஒரு எல்லையை அடையும் போது சுயநலம் தலைத்தூக்கி, அதனை தான் மட்டும் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தானே கவனம் செல்கிறது.

    அந்த அறிவியல் அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் காணும்போது ஏற்கனவே இன்னொருவன் கண்டுபிடிப்பதை எப்படி அழிக்க முடியும் என்ற அச்சுறுத்தலைத் தானே அது தருகிறது. தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமானவற்றுக்கு பயன்படும் விகிதாசாரத்தை ஒப்பிடும் போது அது அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் அளவுதான் அதிகம் இருக்கிறது.

    கண்டுபிடிப்புகளின் வழி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ரசாயன குண்டுகள், அதனை இட்டுச் செல்லும் வான ஊர்த்திகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தவனை அழிக்கவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வியாபாரம் தான் உலக வர்த்தகத்தில் உச்சத்தில் இருக்கிறது.

    பூமியில் தண்ணீரை இல்லாமல் செய்துவிட்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரைத் தேடும் அவலநிலையை என்ன சொல்வது? உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிற்கூடங்களை அனுமதித்துவிட்டு புதிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டுபிடிப்பது எந்த அறிவுடைமையைச் சார்ந்தது?

    அறுபதுகளில் வாழ்பவர்களை விட இருபதுகளில் வாழும் இன்றைய இளைஞர்கள் அறிவு ஜீவிகள். ஐக்கூ அதிகம் நிறைந்தவர்கள். ஆனால், என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள்? இயற்கையை மறந்த எந்திரத்தனமான ஒரு வாழ்க்கை என்ன சுகத்தை தந்துவிடும்? ரோபோக்கள் போன்று உணர்ச்சியற்ற வாழ்க்கையில் என்ன லாபம் கிடைத்துவிடும்?

    அன்பு, அறம், வீரம், ஞானம், நகைச்சுவை என்று எத்தனையோ பண்புகளோடு, குணாதிசயங்களோடு வாழவேண்டிய நிலைமை மாறி, ‘அழுத்தம்’ என்றே ஒரே அச்சில் சுழன்று வருகிறார்கள். இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மன உளைச்சலால், மன அழுத்தத்தால் மாய்ந்து போகிறார்கள்.

    இன்றைய இளைய தலைமுறையினர் அத்தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்ற பாசப் பிணைப்பு கொண்ட உறவுகளையே யார் என்று அறியாமல் வாழ்கிறார்கள். அலைபேசி, வலைத்தளம், முகநூல்கள் என்று ஏதோ ஒரு வேற்று உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள்.

    உறவுகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; யாரையும் மதிப்பதும் இல்லை; அவர்களை சுற்றி எது நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உலகம் கைபேசியில் தான் சுழல்கிறது. நெருங்கிய உறவுகள் இறந்தாலும் கூட அவர்களுக்கு அழத் தெரியவில்லை. உணர்வுகள் மரத்துப்போய்விட்டன.

    அத்தை மகள், மாமன் மகள் என்ற அனிச்சப் பூக்களின் அருமை தெரியாமல் எந்த நாடோ, எந்த ஊரோ, எங்கிருந்தோ வந்த யாரோ ஒருவரை மனைவியாக்கி கொண்டு மனமாச்சரியங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது பிரிந்து மனஅழுத்ததில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

    தான் நிர்ணயித்த இலக்கை அடைந்து திரும்பி பார்க்கும் போது ஒன்றுமே இல்லாத வெற்றிடம் தான் தெரிகிறது. என்ன வாழ்க்கை? எந்த நோக்கத்திற்காக வாழ்ந்தோம்? விடையே தெரியவில்லை. நம் அறிவை மனிதநேயத்திற்காக, மனிதகுல மேம்பாட்டிற்காக எப்படி பயன்படுத்தினோம்? எங்கோ வேற்றுக் கிரகத்தில் உள்ளவர்களை இங்கு ஆராய்கிறோம். தான் வாழ்ந்த வாழ்க்கையைச் சிந்திக்க தவறிவிட்டோம்.

    அன்றாடம் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுகொண்டிருக்கும் உறவுகளைப் பற்றி சிந்தித்தோமா? பரம்பரை பரம்பரையாய் ஆல மரங்களாய் வாழ்ந்த உறவுகள் ஒற்றை மரமாய் விரைவில் விழப் போவதை கவனத்தில் கொண்டோமா? சூனியம் ஒன்று சூழவிருப்பதை, சூழ்நிலைகளின் தாக்கம் நம்மை பாதிக்கபோவதை உணர்ந்திருக்கிறோமா?

    தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே. இந்த கலாசார சீரமைப்புக்கு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். உங்கள் வாரிசுகளின் எதிர்காலம் அதில் தான் அடங்கி இருக்கிறது.

    எழுத்தாளர் மு.முகமது யூசுப்
    இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும்.
    இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்றிதழ்களுடன் வேலைக்கு அமர்ந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானவர்கள் பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கிறோம். ஆள்மாறாட்டம் செய்து அகப்பட்டுக்கொள்கின்ற நிகழ்ச்சிகளும் நிகழவே செய்கின்றன. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற விரும்புவதில் தவறில்லை. அதற்கு நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    போலித்தனம் என்பது ஏமாற்றுகின்ற முயற்சியின் வெளிப்பாடேயாகும். ஒரு பொருள் அமோகமாக விற்பனை ஆகிறது என்றால், அது எந்தப் பெயரில் விற்பனை ஆகிறதோ, அதே பெயரில் போலிகள் வரத்தொடங்கிவிடுகின்றன. உடனே அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்ற நிறுவனத்தார் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். இதெல்லாம் எதை காட்டுகிறது? பொய்யை நிஜம் போல நம்பவைப்பதில் சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்பதைத்தானே.



    ஆனால் உறவுமுறைகளில் போலித்தனம் வெற்றிப்பெறுவதில்லை. நாம் நாமாக இருப்பதில்தான் நமக்கு பெருமை. நாம் இன்னொருவரைப் போல எதற்காக நடிக்க வேண்டும்? நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டிக்கொண்டு எதற்காக வாழ வேண்டும்?

    ஆனால் உறவுகளில் போலித்தனம் மிகுந்தே காணப்படுகிறது. முகத்துக்கு நேராக புகழ்பவர்கள், யாரை புகழ்ந்தார்களோ, அவர்களையே இன்னொருவரிடம் இகழ்வார்கள். இதுபோன்ற போலிகளுக்கு செல்வாக்கும் பலமும் இருப்பது மறுப்பதற்கில்லை. எதிரில் அளவுக்கு மீறிப் புகழ்கிறவர்களை நம்புவது ஒரு பலவீனம். இந்த உறவுகள் நெருக்கடி நேரங்களில் துணை நிற்பதில்லை.

    பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும். எப்போது எந்த பொய் காட்டிக் கொடுக்கும் என்று தெரியாது. எல்லா நேரத்திலும் எச்சரிக்கையுடன், அச்சத்துடன் வாழ வேண்டி இருக்கும். யோசித்து பார்த்தால் போலித்தனமாக வாழ வேண்டிய அவசியமே இல்லை. நாம் எப்படி இருக்கிறோமோ அந்த நிலையில் உறவுகளை மேற்கொண்டால் போதும். நாம் இருக்கின்றபடி நம்மை ஏற்றுக்கொண்டு நம்மிடம் உறவு செய்கின்றவர்களே நல்ல உறவினர்களாக இருப்பார்கள். அவர்களே நிலைத்து நீடிக்கக் கூடியவர்கள். பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்த பிறகு ஏற்படுகின்ற உறவுகளே இயற்கையான உறவுகளாகும்.

    ஜெ.யுகாதேவி, சமூக ஆர்வலர்
    ×