search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168087"

    • யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
    • யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பாத்திக்குட்பட்ட வன ப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் ஜாலியாக நடந்து செல்கின்றன.

    அவ்வப்போது வாகன ஓட்டைகளையும் விரட்டி அச்சுறுத்துகின்றன. கரும்பு லோடுகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை குட்டிகளுடன் சுவைத்து பின்னர் வனப்பகுதிக்கு சென்று வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் அடுத்த மாக்கம் பாளையம் செல்லும் வழியில் ஒற்றை யானை ஒன்று சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது, திடீரென அந்த யானை அந்த சாலை வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை துரத்த தொடங்கியது.

    இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். சிறிது நேரம் போக்கு காட்டிய யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த பகுதியில் தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றும், யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலூரில் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினர்.
    • கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திரவுபதி அம்மன் சன்னதியும் அமையபெற்று உள்ளது.இன்று அதிகாலை விநாயகர் கோவிலில் இருந்து திடீரென்று அதிக ஒலியுடன் அலாரம் அடித்தது. இதனை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியில் வந்து பார்த்தபோது விநாயகர் கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் சன்னதி முன்பு இருந்த இரும்பு கேட் திறந்து இருந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இரும்பு கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடந்தது.கோவில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் இருந்த பூட்டு உடைந்து சிதறி கிடந்தன. அப்போது திடீரென்று அலாரம் அடித்த காரணத்தினால் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் யார்? என சி.சி.டி.வி காமிரா மூலம் போலீசார் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூரில் மையப் பகுதியாக உள்ள மஞ்சக் குப்பம் விநாயகர் கோவிலில் அதிகாலையில் பூட்டை உடைத்து உண்டியலில் மர்ம நபர்கள் திருட முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. மேலும் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகரில் கட்டப்பட்ட புதிய பாலத்தை இடிக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கச்சேரி ரோட்டில் இருந்து விக்னேஷ் காலனிக்கு செல்லும் வழியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சியில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கச்சேரி ரோட்டில் இருந்து விக்னேஷ் காலனிக்கு செல்லும் வழியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆஷா முயற்சியின் பேரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் நகராட்சி பங்களிப்பு மூலம் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட ஒப்புதல் பெறப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பாலம் கட்டும் பணி நகராட்சி என்ஜினீயர்களின் வழிகாட்டுதலின்படி நடந்ததாக தெரிகிறது. அப்போது 2 முறை என்ஜினீயர்கள் பாலம் வடிவமைப்பில் திருத்தம் செய்தனர். அதனையும் ஏற்றுக்கொண்டு பாலம் கட்டப்பட்டது. பாலம் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட பாலம் நகராட்சி என்ஜினீயர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை ஜே.சி.பி. எந்திரத்துடன் நகராட்சி அலுவலர்கள் பாலத்தை இடிக்க வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் ஆஷா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து பொது–மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாலம் இடிக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு அலுவ–லர்கள் பாதியிலேயே திரும்பச் சென்றனர். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தை நகராட்சி இடிக்க முயற்சி மேற்கொண்டது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. கவுன்சிலர் ஆஷா கூறுகையில், விருதுநகர் நகராட்சி ஒப்புதலின்படி பணியானை பெறப்பட்டு பாலம் கட்டுவதற்கு ஆய்வு பணிகள் நடந்தது. அதனை தொடர்ந்து பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 2 முறை திருத்தம் செய்ய வேண்டும் என கூறினர். அதனை ஏற்று திருத்தமும் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரிகள் பல வடிவமைப்பு சரியில்லை என்று கூறி இடிக்க நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது. பாலத்தை இடிக்க நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் நிறைவு பெற்ற பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.
    • திறப்பு விழா முடிந்த பிறகு அங்கு வந்த நெல்லை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் கல்வெட்டுகளை நேரில் பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சியில் தலைவர் அறை புதுப்பித்தல், இளநிலை பொறியாளருக்கு தனிஅறை கட்டுமான பணிகள் முடிவுற்றன.

    திட்டப்பணிகள்

    மேலும் 6-வது வார்டில் மைதானம் அருகே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு செய்து வர்ணம் பூசப்பட்டது. காமராஜர் பூங்கா அருகில் உள்ள கிளை நூலக கட்டிடம் பராமரித்தல், கூடுதல் கட்டிடம் கட்டுதல் உட்பட வேலைகளுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த 3 திட்டப் பணிகளும் நிறைவு பெற்றன.

    இந்நிலையில் நிறைவு பெற்ற பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் நேற்று திறந்து வைத்தார்.

    முன்னதாக இந்த 3 பணிகளிலும் அரசு விதிமுறைப்படி கல்வெட்டுகள் அமைக்கப்படாமல் உள்ளதை முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன், கலெக்டர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனரகத்திற்கு புகார் அளித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து திறப்பு விழாவிற்கு முன்னதாகவே அந்த கல்வெட்டுகள் பேப்பர்களால் மூடப்பட்டிருந்தன.

    கல்வெட்டுகள்

    திறப்பு விழா முடிந்த பிறகு அங்கு வந்த நெல்லை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் இந்த 3 கல்வெட்டுகளையும் நேரில் பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து 3 கல்வெட்டுகளையும் பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட தகவலில் அரசு விதிமுறைகளின்படி எம்.எல்.ஏ. வின் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது மரபு.

    ஆனால் அதனை செய்யாததால் கல்வெட்டுக்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. புதிய கல்வெட்டில் தொகுதி எம்.எல்.ஏ. வின் பெயரும் பொறிக்கப்பட்டு பின்பு முறைப்படி கல்வெட்டுகள் திறக்கப்படும் என தெரிவித்தனர். காலையில் திறப்பு விழா கண்ட கட்டிடத்தில் கல்வெட்டுகள் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

    • தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது.
    • வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிப்பதும், விரட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதே போல் கடந்த சில நாட்களாக கரும்புகளை ருசிக்க யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. கரும்புகளின் வாசனையால் அந்த லாரியை யானைகள் திடீரென வழி மறித்து நிறுத்தியது. பின்னர் அதில் இருந்த கரும்புகளை பிடுங்கி ருசித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து அங்கேயே உலாவி கொண்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர். வாகனங்கள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுத்தனர். நீண்ட நேரம் சாலையை வழி மறித்த யானை கூட்டம் தானாக வனப்பகுதியில் சென்றது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரும்புகளை ருசித்த யானையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
    • அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவர் சிலையை அகற்றி விடுவதாக கூறி, இது சம்பந்தமாக கேட்டபோது சிவகுருவை தாக்கியதாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார்.பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்தவர் சிவகுரு (வயது 33) இவர் தி.மு.க. பிரமுகர். அதே பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை சொந்த செலவில் செய்து வைத்துள்ளார். ஆனால் அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவர் சிலையை அகற்றி விடுவதாக கூறி, இது சம்பந்தமாக கேட்டபோது சிவகுருவை தாக்கியதாக கூறினார். ஆகையால் அந்த நபரை கைது செய்ய கோரி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக என தெரிவித்தார். அப்போது போலீசார் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிடம் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவர்கள், இளை ஞர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
    • சிவகங்கை பூங்கா செல்லும் வழியில் சாலையோரத்தில் கடை வைத்திருந்த பாணிபூரி கடைக்காரரை 4-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் அடித்து தாக்கியுள்ளனர்.

    தஞ்சாவூர்: –

    தஞ்சாவூர் நகர் பகுதிக ளில், பல இடங்களில் கஞ்சா விற்பனைநடந்து வருகிறது. பள்ளி சிறுவ ர்கள் முதல் கல்லுாரி இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை கும்பல் படுஜோராக தொழிலில் கொடிக்காட்டி பறந்து வருகின்றனர்.

    கஞ்சா போதைக்கு அடிமை யான சிறுவ ர்கள்,இளை ஞர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் கடந்த மாதம் கரந்தை பகுதியில் அரிவாளை காட்டியும், வியாபாரிகளை தாக்கியும் பணம் கேட்டு மிரட்டி தாக்கினர். இதில் ஒரு வியாபாரி மரணம் அடைந்தார்.இந்த நிலையில் மீண்டும் கஞ்சா போதையில் சில சிறுவர்கள் வியாபாரிகளை அடித்து ரவுடியிசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா செல்லும் வழியில் சாலையோரத்தில் கடை வைத்திருந்த பாணிபூரி கடைக்காரரை 4-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் அடித்து தாக்கியுள்ளனர். அவர் பயத்தில் அலறி ஓடினார். அதன் பிறகு அங்கிருந்த பழக்கடையில் பழங்களை எடுத்து வியாபாரி மீது வீசி ரகளை செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ரவுடியிசத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.கஞ்சா போதையில் இளைஞ ர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என எண்ணி வருத்த மடைந்தனர். உடனடியாக தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வியாபாரியை சிறுவர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் இறந்ததால் பரபரப்பு நிலவியது.
    • கொட்டாம்பட்டி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பூமங்களப்பட்டியைச் சேர்ந்தசெந்தமிழ்ச்செல்வன் -சுமங்கலி ஆகியோரின் மகன் நிதிஷ் (வயது 12) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நிதிஷ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளியில் இருந்த போதுஅவனை ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது. இதில் அவனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நிதிஷை கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மதுரையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    மாணவர் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மதுரை-திருச்சி மெயின் ரோட்டில் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி. பிரபாகரன் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பள்ளியில் மாணவனுக்கு விஷப்பூச்சி கடித்ததால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கூறினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டம் காரணமாக 1 மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • தொண்டி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வேலை பார்த்து கொண்டிருந்த போது அவரது காதில் கட்டுக்கம்பி குத்தியது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அண்ணாநகரை சேர்ந்தவா முருகன் (வயது 35). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இவருக்கு தொண்டீஸ்வரி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வேலை பார்த்து கொண்டிருந்த போது அவரது காதில் கட்டுக்கம்பி குத்தியது. காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் கிளீனிக்கில் சிகிச்சை பெற்றார். அப்போதிருந்து முருகனின் உடல் நிலை மோசமானது. நேற்று இரவு முருகனின் உடல் நிலை கவலை கிடமானதால் தொண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தவறான சிகிச்சை அளித்ததால் முருகன் இறந்ததாக புகார் கூறிய உறவினர்களும், அப்பகுதி பொதுமக்களும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தொண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி.பாஸ்கரன் தலைமையில், பரமக்குடி டி.எஸ்.பி. திருமலை, தொண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், காசி, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்ராதேவி, சுதர்சன், பாலசிங்கம் மற்றும் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முருகனின் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

    • பருத்தி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு மட்டும் விலை போவதால் விலையை அதிகப்படுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதால் தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

     நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வல ங்கைமான், பாடகச்சேரி, சித்தன்வாழூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதியில் உள்ள விவசாயி களின் பருத்தி ஏலம் விடப்படுகிறது.

    கடந்த வாரம் ஒரு கிலோ பருத்தி 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ 60 ரூபாய்க்கு மட்டும் விலை போவதால் .விலையை அதிகப்ப டுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரி க்கையை வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது தாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாகவும், மனைவியின் நகைகளை அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபடுவ தாகவும், உடனடியாக தமிழக அரசு இவ்விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து வலங்கைமான் காவல்துறை இன்ஸ்பெக்டர் விஜயா நேரில் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளை கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினார்.. தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு வந்த விவசாயிகளிடத்தில் வருவாய் ஆய்வாளர் சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதனைத் தொடர்ந்து விவசாயிகள் போரா ட்டத்தை ஒத்தி வைத்தனர். இதையடுத்து இன்று காலை மீண்டும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடந்த இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மகன்களுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் பெண் தனது இரண்டு மகன்களுடன் திடீர் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அப்போது இரண்டு மகன்கள் கையில் வைத்திருந்த அட்டையில் போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை எனக்கு நீதியும் இல்லை என எழுதி இருந்தனர் மேலும் அந்தப் பெண் துண்டைத் தரையில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கிருந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி பண்டரக்கோட்டை சேர்ந்தவர் வசந்தி. எனது கணவர் பாரதிராஜா. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏற்கனவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் தெரிவித்து இருந்தார்.

    தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாததால் புகார் குறித்து விசாரணை நடத்த வில்லை. ஆகையால் போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மகன்களுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருடப்பட்டுள்ளது.
    • இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த ஜி.எஸ்.டி. சாலை யில் விபூதி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று காலையில் வழக்கம்போல் கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலில் உள்ள கைரேகை சேகரித்தனர். கோவில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே 2 முறை இந்த கோவிலில் உண்டியல் இதுபோன்ற திருட்டு நடந்துள்ளது. இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×