search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168306"

    • தொண்டர்கள் கூட்டத்தை நாலா புறமும் பார்த்து விஜயகாந்த் கையெடுத்து கும்பிட்டார்.
    • இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பெருவிரலை உயர்த்தி காட்டி காட்டினார் விஜயகாந்த்.

    சென்னை:

    விஜயகாந்த் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் தீவிர அரசியலில் செயல்பட முடியவில்லை.

    நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களாலும் தொண்டைக் குழாய் தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரால் கம்பீரமாக எழுந்து நிற்க முடியவில்லை. தனது கணீர் குரலை மீண்டும் ஒலிக்க முடியவில்லை. இப்படி விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மட்டுமின்றி அவரது நண்பர்களும் திரையுலக பிரபலங்களும் பலமுறை கண்ணீருடன் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

    விஜயகாந்தின் உடல் நிலையை சீராக்கி அவரை பழைய விஜயகாந்த் ஆக்கி விட வேண்டும் என்பதில் அவரது மனைவி பிரேமலதாவும் குடும்பத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தே.மு.தி.க.வில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் பிரேமலதாவே பங்கேற்று வரும் நிலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க விஜயகாந்தை அழைத்து வருகிறார்கள். உடல்நிலை குன்றிய நிலையில் விஜயகாந்தை இப்படி கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வருவது சரிதானா? என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

    இது பற்றி கருத்து தெரிவித்த பிரேமலதா, "விஜயகாந்த் நலமுடன் தான் இருக்கிறார். அவருக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக உடல் சோர்வு தான்" என்று கூறியிருந்தார்.

    நேற்று முன்தினம் தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரேமலதா இதனை குறிப்பிட்டு சற்று வருத்தத்துடனே பேசினார். கேப்டன் நன்றாகத் தான் இருக்கிறார். அவரைப் பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

    தனது 70-வது பிறந்தநாளில் தொண்டர்கள் விஜயகாந்தை சந்திக்கலாம் என்று கூறியிருந்தார். இதன்படி நேற்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்தை பார்க்க கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.

    அவர்கள் பல மணி நேரம் விஜயகாந்தை பார்ப்பதற்காக காத்துக் கிடந்தனர். காலையில் இருந்து கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்ட நிலையில் விஜயகாந்த் மதியம் 12 மணியளவில் அலுவலகம் வந்தார். அவரை பார்த்ததும் கேப்டன் வாழ்க என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் கோஷங்களை எழுப்பினார்கள். தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் சேரில் அமர்ந்து இருந்த படியே கட்சியினரை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

    தொண்டர்கள் கூட்டத்தை நாலா புறமும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பெருவிரலை உயர்த்தி காட்டி காட்டினார். இதற்கு முன்பு தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வந்த போதெல்லாம் விஜயகாந்தை அதிக சோர்வுடனே கட்சியினர் பார்த்திருக்கிறார்கள்.

    ஆனால் நேற்றைய நிகழ்ச்சியின்போது விஜயகாந்தை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டனர். தலைவர் நல்லா தான் இருக்காரு.... எல்லாம் சரியாகிவிடும் என்று தொண்டர்கள் கூறியதையும் கேட்க முடிந்தது.

    இப்படி விஜயகாந்த் படிப்படியாக குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு நிச்சயம் திரும்புவார் என்கிற நம்பிக்கை கட்சியினர் மத்தியில் தற்போது சற்று ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளும் இதனை தெரிவித்தனர்.

    விஜயகாந்தின் உடல் நிலை தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "விஜயகாந்துக்கு தினமும் பிசியோதெரபி சிகிச்சை வீட்டிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது கை, கால்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் காரணமாகவே நேற்றைய நிகழ்ச்சியின் போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.

    இந்த சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு அவரை பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என்கிற நம்பிக்கை அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது. இதேபோன்று குரல் பயிற்சியும் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் தற்போது நிற்க முடியவில்லை. பேசுவதற்கும் முடியாமல் இருக்கிறார்.

    இதற்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக சீராகி விடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழாவை இன்று தே.மு.தி.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    ஆண்டுதோறும் வறுமை ஒழிப்பு தினமாக அவரது பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

    இந்த முகாமில் பங்கேற்று பலர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எந்த நோக்கத்துக்காக தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அதனை அடைந்தே தீருவோம். தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். கேப்டன் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    கேப்டனுக்கு ஏற்பட்டிருப்பது உடல் சோர்வுதான். 75-வது சுதந்திர தின நாள் அன்று தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேப்டனே விரும்பினார்.

    70-வது பிறந்த நாளான நாளை கேப்டனை நீங்களே சந்திக்கலாம். கேப்டன் பிறந்தநாளையொட்டி 70 வகையான நலத்திட்ட உதவிகளை தே.மு.தி.க.வினர் வழங்கி வருகிறார்கள். எதிர்காலத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.

    இந்த விழாவில் தே.மு.தி.க. துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வி.சி.ஆனந்தன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ். பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

    • தே.மு.தி.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் விஜயபிரபாகரன் நேரில் செல்ல தயக்கம் காட்டுவதே இல்லை.
    • தே.மு.தி.க. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் எழுச்சி என்பது கேள்வி குறியாகவே உள்ளது என அரசியல் நிபுணர்கள் கணித்து வருகிறார்கள்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சி தொடர்பான கூட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார். கட்சியில் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    அதே நேரத்தில் விஜயபிரபாகரனையும் அவர்கள் மறந்து விடவில்லை. இளைஞர் அணியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை விஜயபிரபாகரனிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப இளைஞர் அணியில் மாநில தலைமை பொறுப்பை அவரிடமே வழங்க வேண்டும் என்றும் தே.மு.தி.க.வினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். விரைவில் நடைபெற உள்ள தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது ஒரு புறம் இருக்க... விஜயபிரபாகரனோ... கட்சி பொறுப்புகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடமையே கண்ணாக பணியாற்றி வருகிறார். தே.மு.தி.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் விஜயபிரபாகரன் நேரில் செல்ல தயக்கம் காட்டுவதே இல்லை. காது குத்து முதல் கல்யாணம் வரை வரிசை கட்டி நிற்கும் எல்லா நிகழ்ச்சிகளிலுமே விஜயபிரபாகரன் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

    கட்சியினர் மனம் மகிழும் வகையில் நடந்து கொள்ளும் அவர் அந்த நிகழ்ச்சிகளில் பேசும்போது, இது நமது குடும்ப விழா. நீங்கள் எல்லாம் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்பதை தவறாமல் சுட்டிக்காட்டிட மறப்பது இல்லை. இது கட்சியினர் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் விஜயபிரபாகரனை இளைய கேப்டன் என்றும், எழுச்சி நாயகன் என்றும் தே.மு.தி.க.வினர் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

    எதிர்காலத்தில் தே.மு.தி.க.வை வழி நடத்தி செல்லும் அத்தனை தகுதிகளும் விஜயபிரபாகரனிடம் உள்ளன என்றும், எனவே நிச்சயம் அரசியலில் நாங்கள் குறிப்பிடுவது போல எழுச்சி நாயகனாகவே அவர் ஒருநாள் மாறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    தே.மு.தி.க. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் எழுச்சி என்பது கேள்வி குறியாகவே உள்ளது என அரசியல் நிபுணர்கள் கணித்து வருகிறார்கள். ஆனால் தே.மு.தி.க.வினரோ இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதில் இருந்தும் மீண்டு வருவோம். இதற்கான அடித்தளம்தான் விஜயபிரபாகரனின் இந்த "வீட்டு சுற்றுப்பயணம்" என்றும் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு:

    தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்சார உயர்வு மற்றும் உணவு பொருள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை மத்திய- மாநில அரசுகள் திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில தொழில்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், தம்பி முருகன், முகிலரசன், கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கறீம், நகர செயலாளர்கள் முருகம், ரங்கன், எம்.ஜி.மூர்த்தி, பிரபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லயன் நாகராஜ், கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் எத்திராஜ், ராமதாஸ், ஜெயபால், கவுன்சிலர் தனலட்சுமி முருகன், அலாவுதீன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
    • சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    அவனியாபுரம்:

    தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு என்பது மக்களுக்கானது தான் என்பதை உணர்ந்து வரி விதிக்க வேண்டும். தொடர்ந்து வரி உயர்வால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதுவும் கொரோனா காலத்திற்கு பின்பு மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு அதுவும் பேக் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.வரி என்பது மக்களை கடுமையாக பாதிக்கும். ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசு என்பதை உணரவேண்டும்.

    மாணவி ஸ்ரீமதி இறந்து புதைத்த இடத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் தொடர்ந்து மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    மாணவிகள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்தார்களா? அப்படி தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன என்பதனை அறிய தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பல ஊழல் வழக்குகளை நடத்தியது. அதேபோல் தற்போது பா.ஜ.க. ஊழல் வழக்குகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இருந்து ஊழல் வழக்குகளை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தே.மு.தி.க. நிர்வாகிகள் அழகர், கணபதி, பாலச்சந்தர், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.

    • ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்.
    • நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும்.

    திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க கூடாது.

    ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்.

    நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, காலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தினால் மக்கள் அதனை வரவேற்பார்கள்.

    கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவு சின்னங்கள் உள்ள நிலையில் தற்போது 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது அவசியமற்றது.

    நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும்.

    மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.

    கோபி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தினேஷ்குமார் என்பவரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அ.தி.மு.க.வில் சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலத்தை அவதூறாக பேசியதாகவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக அப்போது அ.தி.மு.க. கோபி நகர செயலாளராக இருந்த சையதுபுடான்சா என்பவர் கோபிசெட்டிபாளையம் ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் இன்று காலை ஆஜர் ஆனார்.

    இந்த வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதும் தே.மு.திக. பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் பணிகள் கடந்த 10-ந் தேதி தொடங்கி உள்ளது.

    வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் முதல் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. சேலம் கிழக்கு, மாநகர் சேலம் மேற்கு மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள கிளை கழங்களில் 9 கிளை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஊராட்சி கழகத்துக்கு செயலாளர், 2 துணை செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    மாநகராட்சி பகுதியில் வட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், பகுதி பிரதிநிதிகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இதுபோன்று அனைத்து மாவட்டங்களுக்கும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இதுபோன்று உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதும் தே.மு.திக. பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளரான பிரேமலதாவுக்கு புதிய பதவி வழங்கப்பட உள்ளது. கட்சியின் செயல் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    இதுபோன்று விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர் அணி மாநில செயலாளராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தே.மு.தி.க. அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.
    • தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    தே.மு.தி.க. முதல்கட்ட அமைப்பு தேர்தல் வருகிற 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தே.மு.தி.க. அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்.

    ஒன்றிய ஊராட்சி பூத் கிளை கழகங்கள், பேரூராட்சி வார்டு கிளை, நகராட்சி வார்டு பூத் கிளை, நகராட்சி வார்டு கழகம், மாநகராட்சி வட்டங்களில் உள்ள பூத் வாரியாக கிளை கழகங்களுக்கு, பூத் கிளை கழக செயலாளர், பூத் அவைத்தலைவர், பூத் பொருளாளர், 2 பூத் துணை செயலாளர்கள், 2 பிரதிநிதிகள், 2 பூத் செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட 9 கிளை கழக நிர்வாகிகள் ஊராட்சி கழகத்திற்கு, ஊராட்சி கழக செயலாளர், 2 துணை செயலாளர்கள், மாநகராட்சி வட்ட கழகத்திற்கு, ஒரு வட்ட செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், 4 பகுதி பிரதிநிதிகள் கொண்ட 11 பேர் ஆகியவற்றுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெறும்.

    மாவட்ட தேர்தல் ஆணையர்களாக தென்சென்னை வடக்கு-எம்.ஆர்.பன்னீர் செல்வம், மத்திய சென்னை மேற்கு-பி.கிருஷ்ணமூர்த்தி, வடசென்னை மேற்கு-சி.மகாலட்சுமி, தென் சென்னை தெற்கு-செல்வ. அன்புராஜ், வடசென்னை கிழக்கு-ஜி.கே.மகேந்திரன், மத்திய சென்னை கிழக்கு-எஸ்.கணேசன், மேற்கு சென்னை-எம்.விஜய கண்ணன், ஆவடி மாநகர்-சுபமங்களம் டில்லிபாபு, செங்கல்பட்டு-ஜி.காளி ராஜன், திருவள்ளூர் கிழக்கு-கு.நல்லதம்பி, திருவள்ளூர் மேற்கு-செ.தினகரன், காஞ்சீபுரம்-பி.வேணுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.
    • தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது கட்சியை தொடர் தோல்வியில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பாக பிரேமலதா ஆலோசனை நடத்தி உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருக்கும் நிலையில் அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா கட்சியை வழிநடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வருகிறார்.

    தே.மு.தி.க. நிர்வாகிகளுடனான இந்த சந்திப்பின்போது கட்சியை தொடர் தோல்வியில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பாக பிரேமலதா ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்துக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. உயர்மட்ட உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு உள்கட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

    • ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர்.
    • ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

    2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர்.

    இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும்.

    இதன்மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த பிள்ளைகளின் கல்வி தரம் காப்பதற்கான வாய்ப்பாக இது அமையும்.

    ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
    • தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நீரிழிவு நோய் காரணமாக கால் விரல்கள் அகற்றப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஜயகாந்த் தீவிர சிகிச்சையில் இருந்தார்.

    இதனால், விஜயகாந்த் குணமடையக் கூறி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொலைபேசி வாயிலாகவும், டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல் நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    தொலைபேசி வாயிலாக விசாரித்த மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், வி.கே. சசிகலா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கும் எனது நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கழக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கழக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    ×