search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரிகள்"

    கரூரில் உள்ள தனியார் கல்குவாரிகளில் 2-வதுநாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் விதிமுறைகளை மீறி கற்களை வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. #ITRaid #Quarries
    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி, பவுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமாக ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மிகப்பெரிய பாறாங்கற்கள், ஜல்லிக்கற்கள் அனுப்பப்படுகின்றன.

    சமீபத்தில் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் அடைப்பு ஏற்படுத்துவதற்காக இங்கிருந்துதான் பாறாங்கற்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.

    இந்த பகுதியில் இயங்கி வரும் பெரும்பாலான குவாரி உரிமையாளர்கள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் வகையில் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. சரியான கணக்கு காட்டாமல் கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருச்சியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று நேற்று கரூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனையை தொடங்கினர். முதலில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடங்கினர்.

    பின்னர் க.பரமத்தி அருகே உள்ள தடையம்பாளையம் கற்பக விநாயகா, காருடையாம்பாளையத்தில் உள்ள பொன்விநாயகா, வல்லிபுரம் பிரிவு அருகே உள்ள விநாயகா, காட்டுமுன்னூரில் உள்ள பாலவிநாயகா, திருமுருகன் ஆகிய கல்குவாரிகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    சோதனைக்காக குவாரியின் நுழைவு வாயிலை பூட்டியதோடு, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.

    இதனால் கற்கள் ஏற்றப்பட்ட லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களை ஒரே இடத்தில் அமரச்செய்த அதிகாரிகள் கோப்புகளை பார்வையிட்டனர்.

    குவாரிகளில் எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன? அவைகள் எங்கெல்லாம் அனுப்பப்பட்டு உள்ளது? அதற்கு சரியான கணக்கு காட்டப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இன்று அதிகாலை வரை விடிய, விடிய நீடித்தது.

    பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக அதிகாரிகள் கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விதிமீறல்களை மீறியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதும் அதிகாரிகளின் சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    மதுரை தனியார் கிரானைட் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் போன்று இங்கும் நடந்துள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை முடிவில் என்னென்ன முறைகேடுகள் நடந்தது? அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய முழு விவரம் தெரியவரும். அதன்பிறகு அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பி, குவாரிகளுக்கு சீல் வைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.  #ITRaid #Quarries
    ×