search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்சைமர்"

    அல்சைமர் நோய் என்பது மூளையின் செல்களைத்தாக்கி, நம்முடைய நினைவுகளை தொடர்ந்து அழித்து, சிந்திக்கும் திறனை முற்றிலும் பாதித்து விடுகிறது.
    இன்று (செப்டம்பர் 21-ந்தேதி) உலக அல்சைமர் தினம்.

    உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகமக்களை அதிக அளவில் கொல்லும் ஐந்து முக்கிய நோய்களில் அல்சைமரும் ஒன்று. உலகில், அல்சைமர் நோயில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்கள். அல்சைமர் நோய் என்பது மூளையின் செல்களைத்தாக்கி, நம்முடைய நினைவுகளை தொடர்ந்து அழித்து, சிந்திக்கும் திறனை முற்றிலும் பாதித்து விடுகிறது.

    இறுதியில் மிக சாதாரணமான வேலைகளை செய்யும் திறன்களைக்கூட முழுமையாக இழக்கிறோம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் குணப்படுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை. ஆரம்பக்கட்டத்தில் அறிந்தால், மேலும் சீர்கெடுவதை தவிர்க்க முடியும். அல்சைமர் என்பது டெம்னீஷியா என்கிற நோயின் ஒரு வகையாகும். டெம்னீஷியா என்பது மூளைக்கும் உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை துண்டித்தும், ஒருவரின் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கவும் செய்கிறது.

    அல்சைமர் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை அழித்து, நினைவுகள், மற்றும் மொழியாற்றலை செயலிழக்க செய்கிறது. இந்நோயினை முதன்முதலாக கண்டறிந்த மருத்துவர் அலோய்ஸ் அல்சைமர் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது. தன்னிடம் நோயாளியாக வந்து இறந்துப் போன பெண் ஒருவரின் மூளை திசுக்களை ஆராயும்போது அவைகள் இயல்பாக இன்றி, ஒன்றுக்கொன்று பிணைந்தும், முறுக்கிக்கொண்டும் இருந்தன.

    படலங்கள் திசுக்கள் மீது படர்ந்து இருந்தது. இதன்காரணமாக, நரம்புமண்டலத்திற்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மூளையிலிருந்து நரம்புமண்டலத்தின் வாயிலாகத்தான் உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளுக்கும் உத்தரவுகள் செல்கின்றன. இத்துண்டிப்பின்காரணமாக உறுப்புகள் செயல்பாட்டினை இழக்கிறது. மூளையில் ஏற்பட்டிருந்த இந்நோயின் காரணமாகவே அப்பெண் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அல்சைமர் கண்டறிந்தார்.

    அல்சைமர் நோய்க்கான ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு தகவல்களை உள்வாங்குவதிலும், அதனை நினைவில் தக்கவைத்துக் கொள்வதிலும் சிரமம்உண்டாகும். இதனால், நினைவில் நிறுத்த திரும்ப திரும்பகேள்விகள் கேட்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு பொருளைஎங்கே வைத்தோம் என்றுநினைவுக்கு வராமல் தேடிக்கொண்டே இருத்தல், தினமும் சென்று வரும் இடங்களுக்கான வழிகளைக்கூட மறந்துவிடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. மேலும், தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும்ஆற்றலும் மங்கிவிடுகிறது. இதனால், சாதாரண முடிவுகள் உதாரணமாக, சாலையை கடப்பதில் கூட தவறுகள் உண்டாகி விபத்தில் முடிகின்றன. மேலும், பேச்சு, படிப்பு, எழுதுதல் போன்றவை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

    பெரும்பாலும் அறுபது வயதானவர்கள், அறுபது வயதினை கடந்தவர்களை இந்நோய் தாக்கினாலும், இளம் வயதினருக்கும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்சைமர் நோய் ஏற்படுவதற்கு வயது மூப்பு மட்டுமின்றி, முன்னோர்களிடமிருந்து மரபணுக்கள் வாயிலாக சந்ததியினருக்கு கடத்தப்படுகிறது. இவைகளைத்தவிர விபத்துகளில் தலையில் காயம் ஏற்பட்டு மூளைபாதிக்கப்பட்டால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. இதனால்தான் மோட்டார் வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதும், காரில்பயணிப்போர் இருக்கை பட்டை அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



    அல்சைமர் நோய் வராமல் எப்படிதடுப்பது?

    தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், இதயம் சீராக இயங்கும் வகையில் உடலை பேணுதல், நீரழிவு நோயினைக்கட்டுப்பாட்டில் வைத்தல், உடல் பருமனை குறைத்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல் போன்றவைகள் உதவுகின்றன. மேலும் மிக முக்கியமாக, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருத்தல்அவசியம்.

    வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், நமக்கு வயதாகிவிட்டது என்று, தூங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மூளைக்குவேலைத்தராத எளிமையான, செயல்களை செய்வது அல்சைமர் நோய்க்கு வழிவகுத்துவிடும். மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதியதிறன்களை கற்றுக்கொள்ள முயற்சிப்பது நன்று.

    உதாரணமாக, புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிர்கள், அறிவு விளையாட்டுகள், போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும். சதுரங்கம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் நன்று. புத்தகங்கள் படிப்பது, படித்ததை மற்றவர்களிடம் பகிர்வது, எழுதுவது போன்றவைகளும் மூளைக்கு வேலைத்தரக் கூடியவைகள்.

    தன்னார்வ தொண்டராக, பொது தொண்டாற்றுவது அல்சைமர் நோய் வருவதை தடுப்பதாக கனடா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. புதியவர்களை சந்திக்கும் போதும், புதிய வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் போதும் நமதுமூளையில் என்டோர்பின்ஸ் என்கிற ஹார்மோன் சுரக்கிறது, இது மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும்வைத்திருக்க உதவுகிறது.ஒரேவிதமான வேலைகளை தினம் தொடர்ந்து செய்யும் போது மூளைதானியங்கி முறைக்கு சென்றுவிடுகிறது.

    நாளடைவில், மூளைசெல்கள் இறக்கத்தொடங்குகின்றன. புதியவைகள், வித்தியாசமானவைகளை முயற்சிக்கும் போது மூளைவிழிப்புநிலையில் இயங்குகிறது. காலை எழுந்தவுடன் பல்துலக்கும்போது, வலதுகையில் குச்சியை வைத்து தேய்ப்பவராக இருந்தால் அதைமாற்றி இடது கையில்தேய்க்க முயற்சி செய்யுங்கள். பல்தேய்க்கும் போது ஏதோ எண்ண ஓட்டத்தில் இருக்கும் மூளை அன்றைக்கு விழிப்பு நிலைக்கு வந்துவிடும்.

    இந்த எளிய உதாரணம், மூளையை எப்படி தானியங்கி நிலையிலிருந்து விழிப்புநிலைக்கு கொண்டு வருவது என்பதை விளக்கும். இதுப்போன்று, கடைக்கு தினம் செல்லும் வழியில்செல்லாமல், வேறு வழிகளில் செல்லமுயற்சிக்கலாம். இது போன்ற பயிற்சிகள் மூலமாகவும், உடலினை சரியாக பேணுவதன் மூலமாகவும் மூளையை சுறுசுறுப்பாக்கி, அல்சைமர் நோய் வருவதைதடுக்கலாம்.

    கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
    ×