search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுகம்"

    • ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்'

    இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நேற்று முன் தினம் அதிகாலை 3.15 மணியளவில் வான்வழியாக நடந்த டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.

    காசா போர் தீவிரமாகி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் அதிபர் நேதனயாகு இந்த வாரம் சந்திக்க உள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நடந்த இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் நாட்டின் ஹோதைதா [Hodeida] நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹவுதிக்களின் முக்கிய தளவாடங்களுள் ஒன்றான ஏமானி துறைமுகம் மீது இஸ்ரேலிய போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 89 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த பதிலடி தாக்குதல் குறித்து பேசியுள்ள இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதனயாகு, 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எங்களின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த துணிந்தால் ஹவுதிக்கள் மீது இதுபோன்ற பல தாக்குதலைகளை இஸ்ரேல் நடத்தும். தற்போது ஹோதைதாவில் எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

    • சார்ட் சர்கியூட் காரணமாக கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது.
    • தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    கோவா அருகே வணிக சரக்குக்கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். IMDG எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் வந்துகொண்டிருந்த்து. அப்போது சார்ட் சர்கியூட் காரணமாக  கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது.

    கப்பல் பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. தீ மளமளவென பரவிய நிலையில் இந்திய கடலோரக் காவல்படையினர் 2 படகுகளில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    • விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள். இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் தயாராக நின்ற விசைப்படகுகளில் டீசல் நிரப்பினார்கள். மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களை பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பினர்கள். அதன்பிறகு இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    இன்று ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த விசைப்படகுகள் அனைத்தும் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு இன்று இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, கைக்கொழுவை, நெடுவா, கணவாய், திருக்கை, கிளாத்தி, நவரை போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பிடித்துக்கொண்டு வரும் உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    இந்த ஆண்டு முதல் வெளியூர் வியாபாரிகளும் நேரடியாக மீன் கொள்முதல் செய்யலாம் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை கட்ட தொடங்கிவிட்டது.

    • வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 112 டிகிரி வரை ஒரு சில மாவட்டங்களில் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கோடை வெயிலை தாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

    இதனை தணிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கோடை மழை குளிர்வித்தது. ஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு மழை பெய்ததோடு உயிர்பலியையும் ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பருவம் தவறிய பலத்த மழையால் கடுமையான சேதங்களை சந்தித்தன.

    இதற்கிடையே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ரீமால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுவடையக்கூடும் என்றும், நள்ளிரவில் வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் அவ்வாறு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசும் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் புயல் கரைக்கு நெறுங்கும் நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

    இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாகவும், தகுந்த இடைவெளியுடனும் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

    • வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
    • வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

    இது புயலாக மாறினால் ரீமேக் என புயலுக்கு பெயர் சூட்ட உள்ளனர். புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும். வருகிற 26-ந் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலில் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதின்பேரில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும். 26-ந்தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • பிடிபட்ட ரஷ்ய வாலிபரிடம் பாஸ்போர்ட் இல்லை.
    • விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச துறை முகமாக செயல்படும் இங்கு மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இங்குள்ள வல்லார்பாடம் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வெளிநாட்டு வாலிபர் ஒருவர் அத்துமீறி நிழைந்தார்.

    கொள்கலன் முனை யத்தின் மேற்கு பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து புகுந்த அந்த நபரை பாது காப்பு படையினர் பிடித்தனர். பின்பு அவரை முளவு காடு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த இலியா எகிமோவ்(வயது26) என்பது தெரியவந்தது.

    அவர் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு கேரளாவுக்கு வந்ததாகவும், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த தாகவும், கூகுள் மேப்பை பார்த்து வந்தபோது வழி மாறி கொச்சி துறைமுகத்தின் கொள்கலன் முனை யத்துக்குள் நுழைந்து விட்ட தாகவும் விசாரணையில் ரஷ்ய வாலிபர் தெரி வித்துள்ளார். ஆனால் அவர் கூறும் தகவல் உண்மை தானா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் பிடிபட்ட ரஷ்ய வாலிபரிடம் பாஸ்போர்ட் இல்லை. எர்ணாகுளத்துக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் மட்டும் வைத்தி ருந்தார். பாஸ்போர்ட் இல்லாத நிலையில் அவர் கேரளா வந்தது எப்படி? எதற்காக துறைமுக பகு திக்குள் நுழைந்தார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அவரிடம் மத்திய உளவு அமைப்புகளான 'ரா' மற்றும் 'ஐ.பி.' அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ரஷ்ய வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு எர்ணாகுளம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். கொச்சி துறை முகத்துக்குள் ரஷ்ய வாலிபர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவைச் சேர்ந்த மலையாள மக்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சீசன் காலங்களில் விமான கட்டணம் திடீரென அதிகரிக்கப்படுவது அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து கேரள கடல்சார் வாரியம் விழிஞ்சம், கொல்லம், பேப்பூர் மற்றும் அழிக்கால் துறை முகங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கப்பல் சேவைகளை இயக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.

    அதன்பேரில் கப்பல் சேவைகளை தொடங்க 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கேரள கடல்சார் வாரியத் தலைவர் என்.எஸ்.பிள்ளை தலைமையில் கொச்சியில் நாளை (27-ந் தேதி) முதல் கட்ட விவாதம் நடைபெற உள்ளது. இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டால், பயண நேரம் அதிகரித்தாலும், அதிக சரக்குகளை கொண்டு செல்லமுடியும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    • பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன.

    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சாம்பல் ஆகின. இந்த தீ விபத்திற்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்றும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சிலருடன் பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், யூடியூபருக்கு எதிரான சிலர் அவருக்கு சொந்தமான படகு ஒன்றில் தீ வைத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படகு தீப்பிடித்து எரிவதை பார்த்த உள்ளூர் வாசிகள், அதன் நங்கூர கயிறை அறுத்து நீரில் தள்ளினர்.

    எனினும், பலத்து காற்று வீசியதால் தீப்பிடித்த படகு மற்ற படகுகளுடன் உரசியதால் கிட்டத்தட்ட 40-க்கும் அதிக படகுகள் சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட படகுகள் அனைத்திலும் டீசல் முழுமையாக நிரப்பப்பட்டும், கடலில் சமைக்க பயன்படுத்துவதற்காக கியாஸ் சிலிண்டர்களும் வைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக தீ மளமளவென பரவியது.

    தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தது. இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சீதிரி அபல்ராஜூ தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்கு பிறகு பேசிய அமைச்சர், "துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன. 9 படகுகள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு படகுக்கான முழு தொகையில் இருந்து 80 சதவீதம் வரை இழப்பீடாக படகுகளின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டு விடும். இது முதலமைச்சரின் முடிவு."

    "இந்த துறைமுகத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ. 150 கோடியை ஒதுக்கீடு செய்தோம், இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துறைமுகம் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது வரை எந்த அரசாங்கமும் இந்த துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது அரசாங்கம் தான் இதனை நவீன வசதிகளுடன் மேம்படுத்த நிதி ஒதுக்கி இருக்கிறது," என்று தெரிவித்தார். 

    • நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    தெற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்தனர்.

    இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வேதாரணியம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

    மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வா தாரம் பாதித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    மீன் வரத்து இல்லாததால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.
    • மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×