search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு"

    • சென்னிமலை அருகே கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. அவரது கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இது குறித்து உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமானது. அந்த வழியாக சென்ற சிலர் பீடி, சிகரெட் பற்ற வைத்து விட்டு வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத்தொகையை பெற்றுத் தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள விவசாய சங்க கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் மற்றும் விவசாயிகள் உர சாக்குகளை சட்டைக்கு மேல் அணிந்து கொண்டும், கையில் கரும்புகளோடும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் கொடுங்கள் என கூறினர்.இதையடுத்து அவர்கள் தங்களது மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது ;-

    குறுவை சாகுபடி பணிகள் டெல்டா மாவட்டங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் தற்போது உரத்தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. மேலும் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். மேலும் பருத்தி கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளின் நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்றது.
    • அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வட்டாரம், சித்தம்பூண்டி, கொண்டரசம்பாளையம் கிராம கரும்பு விவசாயிகளுக்கு 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சியில் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் போய் தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை பயன்படுத்தி பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பொன்னி சுகர்ஸ் நிறுவன கரும்பு ஆய்வாளர் பழனிச்சாமி, மற்றும் மேலாண்மை அலுவலர் அல்லிமுத்து ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் கௌசல்யா, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது.
    • கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது.

    ஆனால் ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது. அதனால் தினசரி முழு அரவைத்திறனுக்கு ஆலை இயங்குவதில்லை. பெரும்பாலான நாட்களில் அரவைத்திறனுக்கு குறைவாகவே கரும்பு அரவை செய்யப்படுகிறது.

    கரும்பு அரவை அடிக்கடி நிறுத்தப்படுவதால் குறுப்பிட்ட காலத்திற்குள் கரும்பு வெட்டப்படாமல், கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதில் தற்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் இருக்கும் கரும்பு ஆலைக்கு கரும்புகள் ஏற்றி லாரிகள் தினமும் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வருகின்றது.

    இதில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதேபோல் நேற்று இரவு 8 மணியளவில் கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது. பின்னர் அருகே இருக்கும் வாகனங்களை விரட்ட ஆரம்பித்தது.

    ஒரு கட்டத்தில் யானை ரோட்டின் நடுவே நீண்ட நேரம் நின்று விட்டது. பிறகு மெல்ல, மெல்ல யானை நகர்ந்து காட்டிற்குள் சென்றதால் வாகனங்கள் நகர ஆரம்பித்தன.

    இதனால் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை அடர்ந்த வனப்ப–குதிக்குள் எங்கேயும் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    கரும்பு அதிகளவில் உற்பத்தி செய்வது ஒருவகையில் சர்க்கரை நோய்க்கு காரணமாக இருப்பதால், விவசாயிகள் வேறு பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தற்போது நீங்கள் (விவசாயிகள்) அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்கின்றனர். கரும்பு ஒன்றை மட்டுமே பயிரிடும் விவசாயிகள் காய்கறிகள் போன்ற மாற்று பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவிலான கரும்பு உற்பத்தி செய்யும் போது, அது அதிக கொள்முதலுக்கு வழிவகை செய்கிறது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணம்” என கூறினார்.

    மேலும், கரும்பு விவசாயிகளுக்கும் நிலுவையில் உள்ள 10 ஆயிரம் கோடி விரைவில் வழங்கப்படும் எனவும் யோகி தனது பேச்சில் கூறினார். சமீபத்திலும், குரங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் அனுமன் மந்திரம் தினமும் கூறினால் குரங்கு தொல்லை இருக்காது என யோகி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×