search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைச்சாலைகள்"

    விபத்துக்களை தடுக்க கரூரிலிருந்து கோவைக்கும், திருச்சிக்கும் விரைவுச்சாலைகள் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    கரூர்:

    கரூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனை கூட்டம், கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் நடந்தது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினர்.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 7-ஐ கடந்து செல்லும் தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரியார்வளைவு, அரவக்குறிச்சி பிரிவு ஆகிய பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலை 67-ஐ கடந்து செல்லும் கோடாங்கிபட்டி மற்றும் வீரராக்கியம் ஆகிய பகுதிகளிலும் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக மேம்பாலங்கள் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு அவை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.

    இதன் மூலம் விபத்துகளை தவிர்த்து சாலை பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட உள்ளது.

    மேலும் கரூரிலிருந்து கோவைக்கும், திருச்சிக்கும் விரைவுச்சாலைகள் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், பணிகள் தொடங்கப்படவுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர்கள் சங்கர் சுப்பிரமணியம் (திருச்சி), சிவக்குமார் (கோவை), முத்துடையார் (திண்டுக்கல்), நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×