search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்ராசனம்"

    இந்த ஆசனம் பெண்களுக்கு உண்டாகும் பலவிதமான உடற்குறைபாடுகள் நீங்கும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: சக்ரா என்றால் வட்டம் என்று பொருள். இந்த ஆசனத்தில் உடல் வட்டமாக இருப்பதால் சக்ராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும், கைகளை மடக்கி உள்ளங்கைகளை இரு தோள்களுக்கும் அருகில் தரையில் நன்றாக பதிக்கவும், இரு கால்களையும் மடக்கி தொடையோடு சேர்த்து வைக்கவும், இரு கால்களுக்கும் இடைவெளி 2 அடி இருக்கட்டும். மூச்சை உள்ளே இழுக்கவும்.

    மூச்சை வெளியே விட்டு பிருஷ்டத்தையும் முதுகையும் மேலே தூக்கவும். இப்போது தோள்களையும் மேலே தூக்கி தலையை வளைத்து தலையின் மேல் பகுதியை தரை விரிப்பின் மேல் வைக்கவும். இந்த நிலையில் இரண்டொரு முறை சுவாசிக்கவும். மூச்சை வெளியே விட்டு தலையை தரையிலிருந்து மேலே தூக்கவும். அதே சமயம் கைகளை நேராக்கவும், முதுகை நன்றாக வளைக்கவும், கைகளிலும் கால் களிலும் உடல் எடை சமமாக இருக்கட்டும்.  

    இந்த ஆசன நிலையில் 30 முதல் 60 வினாடி சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டு கைகளை மடக்கி சவாசன நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 23 முறை பயிற்சி செய்யலாம்.  தரைவிரிப்பின் மேல் படுத்து சக்கராசனத்தை பயிற்சி செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு நின்ற நிலையில் இருந்து உடலை பின்னாலே வளைத்து ஆசன நிலைக்கு வந்து பயிற்சி செய்யலாம்.



    கவனம் செலுத்த வேண்டிய இடம்:
    மார்பு, இடுப்பு, வயிற்றின் மீதும் உடல் எடையை கைகளிலும், கால்களிலும் சமநிலைப்படுத்துவதின் மீதும் முதுகை தளர்வாக வைத்துக் கொள்வதின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: புதியதாக பழகுபவர்களில் சிலருக்கு இந்த ஆசனத்தில் தலையை தரையிலிருந்து மேலே தூக்குவது கடினமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தரையிலிருந்து முதுகையும், தலையையும் தூக்கும்போது மற்றொருவர் இடுப்புக்கு கை கொடுத்து சில நாட்கள் தூக்கிவிடுவது நல்லது. சக்ராசனம் செய்யும்போது தரைவிரிப்பு வழுக்கக்கூடியதாக இல்லாமல் இருக்க வேண்டும். 

    தடைகுறிப்பு: நோயுற்றவர்களும், பலகீனமானவர்களும், கைகளில் வலிமை குறைந்தவர்களும், சோர்ந்திருக்கும் போதும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பயன்கள்: நரம்பு மண்டலம் முழுவதும் புத்துணர்வு பெறும். மூச்சின் இயக்கம் சீராக அமையும். ரத்த ஓட்டம் உடலெங்கும் நன்கு பரவும். நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் ஹார்மோனை சரியாக சுரக்க தூண்டுகிறது. எல்லா வயதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் வாய்க்கும். பெண்களுக்கு உண்டாகும் பலவிதமான உடற்குறைபாடுகள் நீங்கும். காக்கும் கடவுளான விஷ்ணுவின் சக்கரம் தீமைகளை ஒழித்து நன்மைகளை காப்பது போல் இந்த ஆசனம் உடல், மனகுறைபாடுகளை ஒழித்து ஆரோக்கியம் காக்க உதவுகிறது. 
    ×