search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருண்"

    விவசாயி மகன் ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்ததை எண்ணி ராவுத்தர் பாளையம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #AsianGames2018 #DharunAyyasamy
    திருப்பூர்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தர் பாளையத்தை சேர்ந்த தருண் (21) வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    தருணின் தந்தை அய்யாசாமி. விவசாயி. தாயார் பூங்கொடி. இவர் திருப்பூர் மாவட்டம் கணியாம்பூண்டியில் உள்ள மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    தருண் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 4-ம் வகுப்பு படிக்கும் போது அவருடைய தந்தை அய்யாசாமி இறந்து விட்டார்.

    தாயார் பூங்கொடி அரவணைப்பில் தருண் படித்து வருகிறார். விடா முயற்சியின் காரணமாக தற்போது ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். இது குறித்து தருண் கூறியதாவது-

    எனக்கு 8 வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். தாயார் எனக்காக நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.


    தற்போது அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ. 14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன்.

    சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

    எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 மாதங்களாக போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    6-ம் வகுப்பு படித்த போதே தடகள வீரராக உருவெடுத்த தருண் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். பிளஸ்-2 படிக்கும் போது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.

    தருண் தாய் பூங்கொடி கூறும் போது, தருண் விடா முயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டான். எங்களை சந்திக்க வருவதை கூட குறைத்து கொண்டு பயிற்சி மேற்கொண்டான். ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்லும் முன் தங்கம் எப்படியும் வென்று விடுவேன் என்று உறுதியாக கூறி சென்றான்.

    400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதும் மிகவும் சந்தோசம் அடைந்தேன். தருணின் தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி இது. எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து என்னிடம் வாழ்த்து கூறிய போது மிகவும் சந்தோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தருணுக்கு சத்யா (19) என்ற தங்கை உள்ளார். விவசாயி மகன் ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்ததை எண்ணி ராவுத்தர் பாளையம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவர்கள் தருணுக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  #AsianGames2018 #DharunAyyasamy
    ×