search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 180944"

    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்கள் பெறப்பட்டது.
    • விசாரணை செய்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்களைபெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்துஅதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)அம்பாயிரநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன், திட்டஇயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

    உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
    • மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.

    சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை. சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் தமிழகத்து மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. இதனால் மீன்விலை அதிகரித்து உள்ளது.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட மீன் விலை வருமாறு:-

    சங்கரா கிலோ-ரூ.300, நெத்திலி- ரூ.250, வஞ்சிரம்-ரூ.1000,இறால்-ரூ.350,நண்டு -ரூ.400,சீலா-ரூ.400, வவ்வால் -ரூ.700, கட்லா-ரூ.300, சுறா -ரூ.450, மத்தி-ரூ.200 மீன்பிடி தடையால் அனைத்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.

    பொதுமக்கள் சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல நொச்சிக் குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது.

    • நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள செருப்பங்கோடு கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், கல்குளம் தாசில்தார் மற்றும் குருந்தன் கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி, செருப்பங்கோடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே விவசாய தோட்டமான தென்னந் தோப்பில் தனியார் நிறுவனம் டவர் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. டவர் அமைக்கும் பணியை அரசு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள திரு.வி.க பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரக்கோணம், திருத்தணி, காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திர மாநிலம், சத்தியவேடு, திருப்பதி, காளகஸ்திரி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பயணிகளும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையப்பகுதி எப்போதும் பயணிகள் கூட்டமாக இருக்கும்.

    ஆனால் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தற்போது கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பஸ்டிரைவர், கண்டக்டர்கள் குடிநீர் வசதியின்றி கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

    பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டி வெறும்காட்சி பொருளாகவே காட்சி அளிக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் பஸ் நிலையத்தில் இருந்த முதியவர் ஒருவரும், பெண் ஒருவரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் குடிநீர் இல்லாமல் மயங்கி விழுந்து இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு மற்ற பயணிகள் முதல் உதவி அளித்து அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்க வைத்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பயணிகள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இங்கு இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படாததால், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. கிராமத்தில் இருந்து வரும் கூலி தொழிலாளிகள் மற்றும் வசதி இல்லாதவர்கள் தாகத்துடன் தவிக்கின்றனர்.

    குறிப்பாக முதியோர், பெண்கள், சிறுவர்கள் சிலர் வெயிலின் தாகத்தால் மயங்கி விடுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கிராமங்களில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
    • மக்கள் தொகை அடிப்படையில், வழங்கிய தொட்டிகளை தேவையான இடத்தில் வைக்கவில்லை.

    உடுமலை :

    அரசு நிதியில் வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகளை, பயன்பாடு இல்லாமல், வீசி எறிந்துள்ள ஊராட்சி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் சார்பில், கிராமங்களில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. திட்டத்தின் கீழ் ஊராட்சிகள்தோறும், தள்ளிச்செல்லும் வகையிலான குப்பைத்தொட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மக்கள் தொகை அடிப்படையில், வழங்கிய தொட்டிகளை தேவையான இடத்தில் வைக்கவில்லை. படிப்படியாக இந்த குப்பைத்தொட்டிகள் பயன்பாடு இல்லாமல், குப்பையில் போடப்பட்டு ள்ளன. பல கிராமங்களில், குப்பைத்தொட்டிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, காணாமல் போயுள்ளன. இதனால், திறந்தவெளியில், குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.

    ஒவ்வொரு ஊராட்சிக்கும், பல லட்சம் ரூபாய் அரசு நிதியில், வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகளின் அவல நிலை குறித்து, மண்டல அலுவலர்கள், ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. படிப்படியாக அனைத்து குடியிருப்புகளிலும், குப்பை தொட்டியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் கொட்டும் குப்பையை தீ வைத்து எரித்து, கடமையை முடித்து கொள்கின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் அனுப்பியுள்ள மனுவில், 'குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில், குப்பைத்தொட்டிகள் பயன்பாடு இல்லாமல், உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலுமாக பின்பற்றப்படுவதில்லை. அலட்சியமாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

    • 1969-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் 1969-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்தது.
    • திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், அங்கிருந்து வருவதற்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் இருந்து நல்லூர், படியூர், காங்கயம், ஊதியூர், தாராபுரம், தொப்பம்பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக திருச்செந்தூருக்கு அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. 12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த இந்த பஸ் மூலம் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தென் மாவட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்பெற்று வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள், தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் காங்கயம் வழி திருப்பூர்-திருச்செந்தூர் பஸ்சை இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.
    • உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை.

    உடுமலை :

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.இவை அனைத்தும் புத்தம் புதிதாய் கிடைப்பதால் பொதுமக்களும் நாள்தோறும் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்த சூழலில் உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை.அதன் வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இட நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள்,விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.தற்போது மழை தொடங்கி உள்ளதால் கழிவுகள் தேங்காமல் தடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும்.எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துகிறது.
    • குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அருகே உள்ள சங்கேந்தி குடியிருப்பு பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு சமீப காலமாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துவதும், வீட்டில் உள்ளவர்கள் குரங்கை விரட்டினால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி அங்கு சுற்றித்திரியும் குரங்களை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அம்பேத்கர் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
    • அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பொதுமக்கள் சார்பில் மனு தரப்பட்டது.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர்மட்டம், அம்பேத்கர் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு போதிய நடைபாதை வசதிகள் இல்லை.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளிடம் மனு தரப்பட்டது. ஆனாலும் பலனில்லை. இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு போதிய நடைபாதைகள் இல்லை.

    எனவே நாங்கள் காட்டுவழி பாதையில் சென்று திரும்ப வேண்டி உள்ளது. எனவே அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, எங்களுக்கு ஊருக்குள் வசதியான நடைபாதைகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 358 மனுக்கள் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவைஅனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 358 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அலுவலக வளாகத்தில் கபசுரகுடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்துஅரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×