search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதிப்பேச்சு"

    அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து உள்ளார். முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இது அவசியம் என அவர் கூறி இருக்கிறார். #India #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை முந்தைய நவாஸ் ஷெரீப் அரசு ஊக்குவித்ததால், அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது.

    இந்த நிலையில் அங்கு தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை அங்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலை மாறி, இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்து உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான், இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும், “வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு நமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி” என்றும் கூறி உள்ளார்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் அவரது முன்னாள் நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டதும், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவை தழுவிக்கொண்டதும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் விழாவில் சித்து கலந்து கொண்டதற்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “சித்து அமைதித் தூதர். பாகிஸ்தான் மக்கள் அவர்மீது மிகுந்த அன்பையும், நேசத்தையும் வாரி வழங்கினர். இந்தியாவில் அவரை குறி வைத்து விமர்சிப்பவர்கள், துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தீங்கு செய்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.

    பாகிஸ்தானின் புதிய வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி, “இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், சாகச செயல்களை நிறுத்துவதற்கு நாம் ஒன்றுபடுவது அவசியம். பிரச்சினைகள் கடுமையானவை என்பதையும், ஒரே நாளில் தீர்க்க முடியாது என்பதையும் அறிவோம். அதே நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்” என ஏற்கனவே கூறியது நினைவுகூரத்தக்கது.  #India #Pakistan #ImranKhan
    ×