search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஆர்எஸ்"

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. #Cauvery #KRSDam #KabiniDam
    மைசூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் உடுப்பி, குடகு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் பேய் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகள் கடந்த 2 மாதத்தில் 2 முறை முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. குடகு, வயநாடு மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஹாரங்கி, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து நேற்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 530 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 69,583 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. இந்த நீர் கபிலா ஆற்றில் செல்கிறது. இதனால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் காவிரி மூலமாகவும், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கபிலா மூலமாகவும் திரிவேணி சங்கமம் பகுதியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்துக்கு செல்கிறது. நேற்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 113 கனஅடி நீர் காவிரியில் சென்றது. நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1.18 லட்சம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 86 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 2.04 லட்சம் கனஅடிநீர் தமிழகத்துக்கு சென்றது.



    குடகு மாவட்டம் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் தீவு போல் காட்சி அளித்து வருகிறது. தொடர் மழையால் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    மடிகேரி தாலுகாவில் கிராமங்களை ஒட்டிய மலைப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரம், பாறாங்கற்கள், மண் ஆகியவை குடியிருப்புகளில் விழுந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மக்கந்தூர் பகுதியில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதால் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இன்றி பரிதவித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மக்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. தொடர் மழை, பனிப்பொழிவு, மண்சரிவு காரணமாக அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் பலர் தங்களது குடும்பத்தினரை காணவில்லை என்று கூறினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குடகுக்கு நேற்று வந்தனர். அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கார்வாரில் இருந்து கப்பல் படையை சேர்ந்த 70 பேரும், மங்களூருவில் இருந்து கப்பல் படையை சேர்ந்த 80 பேரும் குடகு வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #Cauvery #KRSDam #KabiniDam

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. #Cauvery #KRS #KabiniDam
    மண்டியா:

    கர்நாடகத்தில் கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு சுமார் ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தமிழ்நாடு மேட்டூரில் உள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அந்த அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.




    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த வண்ணம் இருந்தது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு வந்தது. நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 122.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,135 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 5,009 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.

    அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283.17 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,541 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அந்த சமயத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 16,200 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 21,209 கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 25,595 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #Cauvery #KRS #KabiniDam
    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. #KRSDam #KabiniDam #Cauvery
    மைசூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக இரு அணைகளும் கடந்த 19-ந்தேதி இரவு முழுகொள்ளளவை எட்டின. இதைதொடர்ந்து இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் (முழுகொள்ளளவு-124.80 அடி) நீர்மட்டம் 123.33 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 49,893 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 42,524 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.

    அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2,282.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 28,022 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அதேவேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 27,033 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 69,557 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 68,277 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  #KRSDam #KabiniDam #Cauvery
    ×