search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி மர்ம மனிதர்கள் துணிகரம்
    • கொள்ளை நடந்த கடை வீதியில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பலரும் இந்தக் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். எனவே எப்போதும் கடை வீதி மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும்.

    இங்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்‌ஷாராம் (வயது 45) என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக கடை நடத்தி வரும் இவர், கன்னியாகுமரி நடுத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    தற்போது பரிவேட்டை திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கன்னியாகுமரியில் அதிகமாக உள்ளது. இதனால் கடைகளில் விற்பனையும் அதிகமாக உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் பக்‌ஷாராம் கடையை அடைத்துச் சென்றார்.

    இன்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறந்தார். அப்போது உள்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து பக்‌ஷாராம் அதிர்ச்சி அடைந்தார்.

    கடைக்குள் சென்று பார்த்தபோது, மேற்கூரையை பிரித்து மர்ம மனிதர்கள் கடைக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வை யிட்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக போலீ சாரிடம் பக்‌ஷாராம் தெரி வித்தார்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை பழைய குற்றவாளிகள் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரிவேட்டை திருவிழா நடைபெறும் நேரத்தில், மக்கள் நடமாட்டம் நிறைந்த கடைவீதியில் கடைக்குள் புகுந்து மர்ம மனிதர்கள் கொள்ளையடித்திருப்பது பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று காலை தொடங்கியது
    • வாள்-வில், அம்புக்கு கொலு மண்டபத்தில் பூஜை நடந்தது

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்ன தானம், வாகனபவனி, நாதஸ் வரக்கச்சேரி, பாட்டுக்கச்சேரி, பரத நாட்டியம் போன்றவை நடைபெற்று வருகிறது.திருவிழாவை யொட்டி இரவில் வெள்ளிக் கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம், போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரி வேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான விஜயதசமியான இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி அம்மன் வேட்டைக்கு எழுந்தருளும் குதிரைக்கு கொள்ளு, காணம் போன்ற உணவு வகைகள் படைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாள்-வில், அம்புபோன்றஆயுதங்களையும்அதன்அருகில் பாணாசுரன் என்ற அரக்கனின் உருவ பொம்மையும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.அதன்பிறகுகாலை 10 மணிக்குகோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத் தில் அம்மன்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து காலை 11-30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம்நோக்கிஅம்மனின்பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும் கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும்போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர். ஊர்வலத் துக்கு முன்னால் நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட 3 யானைகள் அணிவகுத்து சென்றன. அதைத் தொடர்ந்து 2 குதிரைகளில் பக்தர்கள் வேடம்அணிந்து சென்றனர். அதனை அடுத்து கோவில் ஊழியர் ரமேஷ் வாள் ஏந்திய படியும் சுண்டன் பரப்பைச் சேர்ந்த பரம்பரை தர்மகர்த்தா

    வில் - அம்பு ஏந்தியபடியும் சென்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச வாத்தியம் கேரளபுகழ்தையம்ஆட்டம், சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் 100-க்கும் மேற்பட்டகிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்ம னின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகா தானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பகவதிஅம்மன் செல்கிறார்.

    அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபடுகிறார்கள். அம்மனின் வாகன பவனி முடிந்ததும் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ளகாரியக்காரன்மடம் வந்து வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்த தும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை ஊர்வலத்தையொட்டி நாகர் கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும் அஞ்சுகிராமம் கன்னியா குமரி சாலையிலும்இன்று காலை11மணிக்குபிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பரிவேட்டை ஊர்வலத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞான சேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன், கொட்டாரம் நகர செயலாளர் வைகுண்டபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    • 3500 படகுகள்- வள்ளங்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை
    • துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    இதுபோல கடற்கரை கிராமங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் இன்று காலை கடலுக்கு செல்ல வேண்டிய படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டன.

    கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தில் சுமார் 350 விசை படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இன்று காலை இந்த படகுகள் அனைத்தும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டன.

    இதுபோல குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும் இன்று கடலுக்கு குறைந்த அளவே விசைபடகுகள் கடலுக்கு சென்றது. 150-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

    குளச்சல் பகுதியிலும் குறைந்த அளவே வள்ளங்கள், பைபர் படகுகள் கடலுக்கு சென்றன. மாவட்டம் முழுவதும் சுமார் 3500 விசைபடகுகள், வள்ளங்கள், பைபர் படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    கன்னியாகுமரியை அடுத்த வாவத்துறை, ஆரோக்கிய புரம், மணக்குடி பகுதிகளிலும் இன்று சில பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இதுபோல குளச்சல் பகுதியிலும் ஒரு சில இடங்களில் கடல் சீற்றமும், அலைகளின் கொந்தளிப்பும் காணப்பட்டது.

    • நவராத்திரி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நடக்கிறது
    • நாளை மறுநாள் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் சமய உரை அதைத்தொடர்ந்து பாட்டு கச்சேரி நாதஸ்வர கச்சேரி பட்டிமன்றம் பரதநாட்டியம் போன்றவை களும் இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி நாளை மறுநாள்அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 9.15 மணிக்கு மேல் 10.15மணிக்குள் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலை களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாக னத்தில்அம்மன் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் 10.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    பகல் 11-30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாக னத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும்போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதிதெரு, தெற்குரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டான சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவி லுக்கு பகவதி அம்மன் செல்கிறார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு செல்கிறது. வழி நெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து 'திருக்கணம்' சாத்தி வழிபடுகிறார்கள். பின்னர்அம்மன் மகாதான புரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.

    அங்கு வைத்துஅம்மன் வெள்ளி குதிரை வாக னத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாது காப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீ சார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் போக்கு வரத்து மாற்றமும் செய்யப்பட்டுஉள்ளது. மேலும் நாகர்கோவில், கொட்டாரம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திருவிழா நடக்கும் மகாதானபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பரிவேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை மறுநாள் பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

    • அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தொடங்கி வைத்தார்
    • சமுதாய வளைகாப்பு விழா கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார திட்ட உதவியாளர் சாஜி வரவேற்று பேசினார்.

    இதில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். கவுன்சிலர்கள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் சுலைமான் நன்றி கூறினார்.

    • ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி வருகை
    • போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படைஎடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான கன்னியாகுமரியில்ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள்களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • கோவிலில் பக்தர்ளுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்ளுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர்ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் தர்மேந்திரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.96 ஆயித்து 531 வசூலாகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப் பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப் படவில்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்

    • நவராத்திரி 5-ம் திருவிழாவையொட்டி நடந்தது
    • இலங்கை பக்தர் கூடை கூடையாக மலர் தூவி வழிபாடு

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்தக் கோவிலில் நவ ராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 26-ந்தேதிதொடங்கியது. 4-ம்திருவிழாவான நேற்று இரவு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தைமூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் 4-ம் திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர்கள் பலவூர் அண்ணாதுரை முத்துக்குமாரி கொட்டா ரம் இசக்கிமுத்து கன்னியா குமரியைச் சேர்ந்த வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர் மகாராஜன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, செயலாளர்அரிகிருஷ்ண பெருமாள், பொருளாளர் வைகுண்ட பெருமாள், துணைச் செயலாளர் ஓம் நமச்சிவாயா, கொட்டாரம்பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    5-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11 30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தியும் அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் கூடை கூடையாக தாமரை மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • மாணவ -மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் "மறுசிந்தனையில் சுற்றுலா" என்ற தலைப்பில் உலக சுற்றுலா தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரியில் இன்று காலை சுற்றுலா விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி சுற்றுலா அலுவலர் கீதாராணி, கல்லூரிமுதன்மை செயல் அலுவலர் மணிகிருஷ்ணா, முதல்வர் ராஜசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தப்பேரணி கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்த சந்திப்பு, சர்ச் ரோடு சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டான சந்திப்பு, வழியாக காந்தி மண்டபம் முன்பு சென்றடைந்தது. பேரணியில் கல்லூரி மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது கைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுலா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் இன்று பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளுக்கு படகுத்துறையில் வைத்து சுற்றுலாத் துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகம் இட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    குமரி மாவட்ட உதவி சுற்றுலா அதிகாரிகள் சதீஷ்குமார், கீதாராணி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளர் செல்லப்பா துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவையொட்டி பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிஉள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    • பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை
    • ஏராளமான போலீசார் குவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே பகவதி அம்மாள்புரம் உள்ளது. இந்த பகுதியில் ஆறு, குளங்களை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறையினர் இந்த பகுதியில் உள்ள ஆறு, குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் இந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 7 வீடுகள் ராட்சத ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் இன்று காலை இடித்து அகற்றப்பட்டன. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • கடலில் விழுந்து தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.
    • கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கோவளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு வள்ளத்தில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

    இருப்பினும் கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவ ராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவ ராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.

    விழாவின்போது பாரம் பரிய முறைப்படி 10 நாட்களும் அம்ம னுக்கு அபிஷே கத்து க்குரிய புனிதநீரை எடுத்து வருவதற்கு யானையை பயன்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெறப்பட்டது.

    அதன்பயனாக திற்ப ரப்பில்இருந்து கன்னியா குமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு யானை வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பகவதி அம்மன் அபிஷேத்துக்குரிய புனிதநீர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசி விசுவநாதர் கோவில் முன்பு வைத்து பூஜை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யானைக்கு கஜ பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு வெள்ளிக் குடத்தில் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    யானை ஊர்வலத்தை கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர்செயலாளர் வைகுண்டபெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், சக்கரதீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் சந்திர சேகர், செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞர்அணி அமைப்பாளர் பொன் ஜான்சன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்படதிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஊர்வலம் ரெயில் நிலைய சந்திப்பு, வடக்கு ரத வீதி, நடுத் தெரு, தெற்கு ரத வீதி, சன்னதி தெரு, வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு காலை 10மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    ×