search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி"

    • கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி சாவில் சந்தேகம் என உறவினர்கள் மனு கொடுத்துள்ளனர்.
    • பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிஅருகே மூங்கில்துறைப்பட்டு அருகே பொருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர் (36) மாற்றுத்திறனாளி. இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எனது தங்கை மலர் கடந்த 27- ந் தேதி பெருமனம் கிராமத்திற்கு துக்கம் விசாரிக்க தனியார் மினிபேருந்தில் பயணம் சென்றார். அப்போது அவரை மணலூர்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்.

    எனது அக்கா மலருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இதனால் எனது அக்கா மலர் இரவு முழுவதும் பெட்ரோல் பங்கிலேயே இருந்துள்ளார். அந்த மினி பேருந்தும் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது. மறுநாள் 28- ந் தேதி பெட்ரோல் பங்க் வேலையாட்கள் மூலம் எனது அக்கா மலர் அங்கு இருப்பது குறித்த தகவல் வந்தது. பின்னர்மலரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தொடர்ந்து புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த போது கடந்த 29- ந் தேதி இறந்துவிட்டார். எனது அக்கா மலர் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே அக்கா மலர் உடலை தோண்டி எடுத்து உடல் கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்க வேண்டும்: கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.
    • அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைத்து துறைகளின் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாற்றுத்தி றனாளிகளுக்கை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அறிவறுத்தினார். அதன்படி அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்திடும் வகையில் வட்டார அளவில் முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி அட்டை வழங்கி, பணி வழங்குதல், வருவாய்த்துறை வாயிலாக உதவித்தொகை வழங்குதல் மற்றும் இதர சான்றுகள் வழங்குதல், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொழிற்கடனுதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு சேர்த்திடவும், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவிஇயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2 மாதங்களுக்கு மேலாக வேலை வழங்காமல் உள்ளனர்.
    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வருவாய் இழந்து பரிதவித்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கடத்தூர் ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2 மாதங்களுக்கு மேலாக வேலை வழங்காமல் உள்ளனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வருவாய் இழந்து பரிதவித்து வருகின்றனர். சில இடங்களில் மாற்றுத்திறனாளிகளின் ஊதியத்தில், கட்டாய வசூலிலும் ஈடுபடுகின்றனர்.

    இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மாலினி, நிர்வாகிகள் குருசாமி, அழகிரிசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • காரைக்குடி தொகுதியில் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள் மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மாற்றுத்திறனாளி சகுந்தலாவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து வீல்சேரும் வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.51.75 லட்சம் மதிப்பீட்டில் காரைக்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளுக்கு மேஜைகள்,நாற்காலிகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார்.

    சாக்கோட்டை ஒன்றியம் சாக்கவயல் உயர்நிலைப் பள்ளி,சாக்கோட்டை சிறுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்குடிகழனிவாசல் நகர்மன்ற நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி நகராட்சி வ.உ.சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி நகராட்சி ராமநாதன் செட்டியார் தொடக்கப் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை ப்பள்ளி, ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, முத்துப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தலா ரூ. 9.75 லட்சம் மதிப்பிலும் டெஸ்க்,பெஞ்சுகளை வழங்கினார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது காந்திபுரம் முதலாவது வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சகுந்தலாவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து வீல்சேரும் வழங்கினார்.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் மெய்யர்,காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி,நகர செயலாளர் குமரேசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ்,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரவீன்,நகர வர்த்தக காங் தலைவர் ஜெயப்பிரகாஷ், தொகுதி இளைஞரணி பொதுச்செயலாளர் பாலா,மாநில இளைஞர் காங் பொதுசெயலாளர் அருணா,தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் மணி மற்றும் தலைமை

    ஆசிரியர்கள் ஆசிரியர்கள்,மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குடிநீா், மீனவா்கள் பிரச்சினைகளை தீா்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் அளித்துள்ளார்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக ஜானி டாம் வா்கீஸ் பொறுப்பேற்று கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:-

    ராமநாதபுரத்தில் குடிநீா் பிரச்சினை, மீனவா்கள் பிரச்சினை உள்ளிட்டவற்றைத் தீா்ப்பதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மக்களைச் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஊரகப் பகுதிகளின் வளா்ச்சிக்கான திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் வளரும் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் இடம் பெற்றுள்ளதால் கல்வி மேம்பாட்டுக்குரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    ராமநாதபுரத்தில் ெரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்க ஆய்வு மேற்கொள்ளவும், சக்கரக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் கழிவுநீா் பிரச்சினைக்கு தீா்வு காணவும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளு க்கான நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்கள் கலெக்டரை 24 மணி நேரமும் 94441-83000 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். புதிய கலெக்டருக்கு கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் மற்றும் வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

    • 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவினை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான யு.டி.ஐ. அடையாள அட்டை சுமார் 50 பேருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய யு.டி.ஐ. அடையாள அட்டை என்பது ஆதார் அட்டை போன்றது. முதல்-அமைச்சர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சொர்ணலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு 11 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டைப் பதிவு, முதலமைச்சா் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான பதிவு ஆகியவை நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கா்லால் குமாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வகை உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவா்களுக்கான அனைத்துத் துறை நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற 14-ந்தேதி காலை 10 மணி முதல், மாவட்டத்தில் 11 இடங்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது.

    அதன்படி, 14 -ந்தேதி போகலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 15- ந்தேதி பரமக்குடி, 16ந்தேதி நயினாா்கோவில், 17- ந்தேதி முதுகுளத்தூா், 18- ந்தேதி கமுதி, 21- ந்தேதி கடலாடி, 22- ந்தேதி ஆா்.எஸ்.மங்கலம், 23-ந்தேதி திருவாடானை, 24- ந்தேதி திருப்புல்லாணி, 28-ந்தேதி மண்டபம், 29-ந்தேதி ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டைப் பதிவு, முதலமைச்சா் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான பதிவு ஆகியவை நடைபெறும்.

    இந்த முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதாா் அட்டை நகல், இருப்பிடச் சான்று நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.
    • சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நேர்காணல் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகள் நல சங்கம், தமிழ்நாடு மாற்றதிறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.

    மாற்றுதிறனாளிகள் நல சங்க தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். மாற்று திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மசந்திரன், மாநில பொதுசெயலாளர் பொன்னுசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவரும், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட பா.ஜ.க. தலைவருமான டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தன்னார்வலர்கள் நடத்தும் இந்த திருமண சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பொன்வாசுகிராம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கோபி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் வாசுதேவ் நன்றி கூறினார்.

    ஈரோட்டில் மாற்றுத்திறனாளியின் வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனி பள்ளிவாசல் பின்புறத்தில் வசிப்பவர் சிவசங்கரன் (வயது 34). மாற்றுத்திறனாளி வாலிபர். இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் ரெயில்வேயில் பேரேஜ் மெக்கானிக் ஆக பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அடையாளம் தெரியாத 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். சிவசங்கரன் வீட்டு கதவை பலமாக தள்ளினர். இதில் கதவு திறந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சிவசங்கரனுக்கு வீட்டுக்குள் 2 ஆசாமிகள் நுழைந்ததை கண்ட திடுக்கிட்டார்.

    பிறகு 2 ஆசாமிகளும் அவரை தாக்கினர். பிறகு அவரிடமிருந்து செல்போன் மற்றும் வீட்டில் இருந்த 8 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து ஓடி விட்டனர்.

    கொள்ளையர்களின் தாக்குதலில் நிலை குலைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது பற்றிய புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    ×