search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.என்.பி.எஸ்.சி"

    17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. #TNPSC #ExamResult
    சென்னை:

    தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது.

    அதையொட்டி பலரும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டது.

    இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர்.  #TNPSC #ExamResult
    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். #TNPSC #MKStalin
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    வேலை வாய்ப்பு தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதாக வரும் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “மாநில அரசில் உள்ள பதவிகளுக்கு போட்டித்தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை” என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 320 தெளிவாக கட்டளை பிறப்பித்து இருக்கிறது. அந்த அரசியல் சட்ட கடமையை தனியாருக்கு தாரை வார்க்க அரசு பணியாளர் தேர்வாணையம் முயற்சிப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    மாநில, சார்நிலை மற்றும் அமைச்சு பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கு போட்டி தேர்வு, அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி மற்றும் மாநில குடிமைப் பணி அதிகாரிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை நடத்தும் மிக முக்கியமான பொறுப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. இந்த ஆணையம் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகளை நம்பித்தான் எண்ணற்ற இளைஞர்கள் குரூப்-1 பதவிகளான சார்பு ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கும், அதே போல் குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய பல்வேறு அரசு பதவிகளுக்கும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு முன் வருகிறார்கள்.

    இரவு பகலாக படித்து அரசு ஊழியராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமப்புற மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து சென்னையில் நெருக்கடி மிகுந்த விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் வசதிக்காகவே தலைவர் கருணாநிதி உலகப்புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்து கொடுத்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் அவ்வப்போது புகார்கள் வெளிவந்தாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும் என்று இன்னமும் லட்சக்கணக்கான கிராமப்புற ஏன் நகர்ப்புற மாணவர்களும் நம்பி, தேர்வுபெற உழைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதத்தில் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், இமாலய ஊழல்கள் எல்லாம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புகாரின் அடிப்படையில் தான் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதை ஏனோ மறந்து விட்டு, போட்டி தேர்வுகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது “கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்” என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உணர வேண்டும்.

    நேர்மையான தலைவரின் கீழ் உள்ள ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இப்படியொரு விபரீத முடிவை எப்படி எடுக்க முயற்சிக்கிறது என்பதும், தனது அரசியல் சட்ட கடமையில் இருந்து விலகும் பொறுப்பற்ற செயலை ஏன் அமல்படுத்தத் துடிக்கிறது என்பதும் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தகுதியில்லாதவர்களை எல்லாம் உறுப்பினர்களாக நியமித்து ஏற்கனவே அரசு பணியாளர் தேர்வாணையம் அ.தி.மு.க.வின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க நினைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் உள்நோக்கத்துடன் அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    டி.என்.பி.எஸ்.சி. முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #TNPSC
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும்.

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்துக்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப்-1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியிருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-ல் இருந்து 37 ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.  #TNPSC #tamilnews 
    ×