search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 200774"

    சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

    சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் வசிப்பவர் டாக்டர் அமுதா (வயது 50). கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தனது கிளினிக்கில் டாக்டர் அமுதா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சிகிச்சை பெறுவதுபோல் வந்த ஒருவர் திடீரென்று கத்தியைக்காட்டி மிரட்டினார்.

    டாக்டர் அமுதாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த டாக்டர் அமுதா கூச்சல் போட்டுக்கொண்டே கொள்ளையனை விரட்டிச் சென்றார். அப்போது அங்கு வந்த சூர்யா என்ற இளைஞர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தார்.

    பின்னர் அந்த கொள்ளையன் அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அந்த கொள்ளையன் திருவள்ளூர் மாவட்டம் கண்டிகையை சேர்ந்த ஜானகிராமன் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, 10 பவுன் சங்கிலியையும் மீட்டனர்.

    கொள்ளையனை பிடித்த சூர்யாவை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். சூர்யா தனக்கு வேலை இல்லை என்றும், ஆனால் ஏ.சி.மெக்கானிக் தொழில் தெரியும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் கூறினார்.

    உரிய வேலை வாங்கித்தருவதாக சூர்யாவுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி நேற்று நிறைவேற்றப்பட்டது.

    கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்பாட்டின்பேரில் சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தில் சூர்யாவுக்கு ஏ.சி.மெக்கானிக் வேலை கிடைத்தது. இதற்கான பணி நியமன ஆணையை டி.வி.எஸ். நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாசன் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சூர்யாவிடம் நேற்று வழங்கினார்.

    மேலும், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் சேர்மன் ரவிபச்சமுத்து ரூ.1 லட்சம் வழங்கினார். சென்னை டவர்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் சூர்யாவுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வங்கி காசோலைகளும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் சூர்யாவிடம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஜெயராம், சாரங்கன், இணை கமிஷனர் விஜயகுமாரி, அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 
    ×