என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 204852"
- கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர்.
- சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.
பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
பதவியேற்பு விழாவில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுத்திருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம். நாங்கள் அறிவித்த 5 உத்தரவாதங்கள் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப்போகிறது. சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.
ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
- புதிய மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக நடைபெற்றது.
முதலில் முதல்-மந்திரியாக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றார்கள்.
அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற சித்தராமையா கர்நாடகாவின் 24-வது முதல்-மந்திரி ஆவார்.
விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின்(தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல்(சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு(இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன்(ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு விழா மேடையில் 30 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் மேடை முன் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மைதானத்தின் நடுவில் சுமார் 40 ஆயிரம் இருக்கைகளும், மைதானத்தின் கேலரியில் பொதுமக்களுக்கான இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத்திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
மந்திரி சபை பதவி ஏற்றதை தொடர்ந்து இன்று புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி, உளவுத்துறை, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட ஒதுக்கப்படாத அனைத்து துறைகளையும் முதல்-மந்திரி சித்தராமையா வைத்துக் கொள்வார். டிசிஎம் டி.கே. சிவக்குமார், நீர்வளத்துறையுடன் மற்றொரு முக்கிய துறையையும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித்தராமையா, பெங்களூரு விதானசவுதாவில் (சட்டசபை) உள்ள முதல்-மந்திரி அறைக்கு செல்கிறார்.
பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார்.
- கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார்.
கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக ஆட்சி செய்த சித்தராமையாவின் 2-வது இன்னிங்ஸ் இதுவாகும். இதுவரை 2 முறைக்கு மேல் கர்நாடக முதல்-மந்திரியாக பலர் பொறுப்பேற்று உள்ளனர்.
நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மற்றும் ஹெக்டே ஆகியோரின் சாதனைகளை சித்தராமையா முறியடிக்க உள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தால் இந்த முறை கர்நாடகாவில் அதிக காலம் பதவி வகித்த முதல்-மந்திரிகளில் 3-வது இடத்திற்கு சித்தராமையா முன்னேறுவார். இந்த பட்டியலில் தற்போது சித்தராமையா 5-வது இடத்தில் உள்ளார்.
நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார். மாநிலத்தின் 9-வது முதல்வராக இருந்த தேவராஜ அர்சு, 2 முறை தனித்தனியாக 2,790 நாட்கள் மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார்.
இவருக்கு அடுத்தபடியாக 2,729 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியவர் நிஜலிங்கப்பா. 1,967 நாட்கள் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, கர்நாடகாவில் அதிக காலம் ஆட்சி செய்தவர்களில் 3-வது இடத்தையும், 1,901 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பா 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த முறை சித்தராமையா 1,828 நாட்கள் பதவியில் இருந்தார். எனவே அவர் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சித்தராமையாவுக்குப் பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணா இந்தப் பட்டியலில் இடம்பெற்று 1,691 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கே.சி.ரெட்டி (1618 நாட்கள்), கெங்கல் ஹனுமந்தையா (1,603 நாட்கள்), பி.டி.ஜட்டி (1,393 நாட்கள்), வீரேந்திர பாட்டீல் (1,337 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார். பாதிக்கும் மேற்பட்ட முதல்-மந்திரிகள் 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 9 லிங்காயத்துகள், 7 ஒக்கலிகர்கள் 3 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 2 பிராமணர்கள் மற்றும் 2 வேறு சமூகத்தினர் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளனர்.
- கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார்.
- அந்த காரின் ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சித்தராமையாவுக்காக கர்நாடக அரசு சார்பில் புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயட்டோ நிறுவனத்தின் தயாரிப்பான டொயட்டோ வெல்பயர் என்பது அந்த காரின் பெயர். இதன் விலை பெங்களூருவில் ரூ.96 லட்சம். வாகன பதிவெண், இதர உதிரிபாகங்கள் பொருத்துதல் உள்பட ஆன்ரோடு கட்டணமாக ரூ.1 கோடியே 19 லட்சம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அப்படி இந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று பார்ப்போம்...
ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளன. பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்குகளும் இருக்கிறது. பனிமூட்டமாக இருக்கும் சமயத்தில் ஒளிரும் பாக் விளக்கு வசதியும் இதில் உள்ளது. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடல் காராகும். 150 எச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினை கொண்டது. இத்துடன் 143 எச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது.
இவை ஒன்றிணைத்து 145 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியவை. இதில் டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இருக்கைகள் ஒவ்வொன்றும் இடைவெளியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இருக்கையும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வசதிக்கு ஏற்ப முன், பின் நகர்த்தும் வசதியும். கால்களை வைக்க கீழ் பகுதியில் சிறிய மெத்தை போன்ற பகுதி இருக்கிறது. அத்துடன் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி கொள்ளும் வசதி உள்ளது.
இந்த காரின் பக்கவாட்டில் சாத்தக்கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான சீதோஷ்ண நிலை கன்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்ட்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது மிகசிறந்த பொழுதை நமக்கு தரும். அதுபோல் பின் இருக்கைகளில் 10.2 அங்குல எல்.சி.டி. டி.விக்களும் உள்ளன. இந்த கார் 2020-ம் ஆண்டு தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
- கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
- பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.
ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் ஆகியோரும் கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
- கன்டீரவா ஸ்டேடியம் முழுவதும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு :
கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அத்துடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். மந்திரிகளின் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்காக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேற்று காலை 9 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மந்திரிசபையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. இதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு தலா 10 இடங்களும், காங்கிரஸ் மேலிடத்திற்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மந்திரி பதவியை பெறும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை டெல்லி சென்றனர்.
அதாவது எம்.எல்.ஏ.க்கள் வீரேந்திரா, கோவிந்தப்பா, டி.சுதாகர், ரகுமூர்த்தி, அஜய்சிங், யஷ்வந்த்ராஜ் கவுடா பட்டீல், எம்.சி.சுதாகர், பிரதீப் ஈஸ்வர், கிருஷ்ண பைரேகவுடா, என்.ஏ.ஹாரீஷ், சீனிவாஸ் மானே, ரிஸ்வான் ஹர்ஷத், ஈஸ்வர் கன்ட்ரே, ரகிம்கான், சிவராஜ் தங்கடகி, சி.எஸ்.நாடகவுடா, அசோக் ராய், கே.என்.ராஜண்ணா, கே.ஆர்.ராஜேந்திரா, விஜயானந்த் காசப்பன்னவர் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டு கொண்டனர். அவர்கள் கட்சியின் இதர மேலிட தலைவர்கள் சிலரையும் சந்தித்து மந்திரி பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், தினேஷ் குண்டுராவ், பி.கே.ஹரிபிரசாத், யு.டி.காதர், ஜமீர் அகமதுகான், வினய் குல்கர்னி, தன்வீர்சேட் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தராமையா பதவி ஏற்கும் விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த விழாவில் அகில இந்திய அளவில் முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 6 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வருகை தரும் இந்த தலைவர்களுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விழா நடைபெறும் கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த ஸ்டேடியமே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தின் உள்ளே வெடிகுண்டு பிரிவு போலீசார் அங்குலம், அங்குலாக சோதனை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை தலைமை செயலாளர் வந்திதா சர்மா கவனித்து வருகிறார். இந்த பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா நடைபெறும் ஸ்டேடியத்திற்குள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள், தீ பற்றும் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், கூர்மையான ஒளியை ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
- துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.
கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தல் முடிவுக்கு பிறகு 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதைதொடர்ந்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ராஜ்பவனுக்கு நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்து கடிதத்தை சித்தராமையாவிடம் வழங்கினார்.
அதன்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கும் விழா இன்று பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் சித்தராமையாவுடன் துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- இதுவரை 13 முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
- அவர் முதல் முறையாக 1978-ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் போட்டி போட்டனர். நீண்ட இழுபறிக்கு பிறகு 2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய வாழ்க்கை குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
சித்தராமையா 1948-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி மைசூரு மாவட்டம் சித்தராமனகுந்தி கிராமத்தில் விவசாயியான சித்தராமே கவுடா- போரம்மா தம்பதியின் 2-வது மகனாக பிறந்தார். மைசூரு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. முடித்த அவர், அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். சட்டம் படித்த பிறகு சிறிது காலம் அவர் வக்கீல் தொழில் செய்தார். மைசூருவில் உள்ள வித்யாவா்த்தக கல்லூரியில் அவர் சிறிது காலம் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றினார்.
சித்தராமையாவின் மனைவி பெயர் பார்வதி, அவருக்கு 2 மகன்கள். ஒருவர் ராகேஷ், இன்னொருவர் டாக்டர் யதீந்திரா. அவர் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது, தனது அரசியல் வாரிசாக கருதிய நிலையில் ராகேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் டாக்டரான யதீந்திரா அரசியலுக்கு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யதீந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். அவர் தற்போது தனது தந்தைக்காக வருணா தொகுதியை விட்டுக்கொடுத்தார்.
சித்தராமையா தனது வீட்டில் வறுமை காரணமாக தனது தொடக்க கல்வியை ஆரம்பத்திலேயே பாதியில் நிறுத்தினார். குருபா சமூகத்தை சேர்ந்த அவர் சொந்த கிராமத்தில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். கல்வி மீதான அவரது ஆர்வத்தை கண்ட உள்ளூர் பள்ளி ஆசிரியர்கள் அவரை அழைத்து வந்து நேரடியாக 5-வது வகுப்பில் சேர்த்து கொண்டனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர் முதல் முறையாக 1978-ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். மைசூரு தாலுகா வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு அவர் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொண்டார். 1980-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். பின்னர் 1983-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் லோக்தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அப்போது தான் முதல் முறையாக அவர் கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தார்.
அப்போது ஜனதா கட்சி ஆட்சி நடந்தது. ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது அரசுக்கு சித்தராமையா ஆதரவு வழங்கியதால், அவருக்கு கன்னட கண்காணிப்பு குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போது தான் அந்த அமைப்பு முதன் முறையாக தோற்றுவிக்கப்பட்டது. கர்நாடக சட்டசபைக்கு இடைக்கால தேர்தல் நடைபெற்ற போது, ஜனதா தளம் சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் கால்நடை வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றினார்.
1989-ம் ஆண்டு எஸ்.ஆர்.பொம்மை ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாக பணியாற்றிய அவர், 1991-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து 1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதைத்தொடர்ந்து தேவகவுடா தலைமையில் அமைந்த ஆட்சியில் சித்தராமையா நிதித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அப்போது ஆடு மேய்த்தவரால் எப்படி பட்ஜெட் தயாரிக்க முடியும் என்று விமர்சனம் எழுந்தது. இதையே சவாலாக எடுத்துக்கொண்ட அவர் மிக சிறப்பான முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவர் இதுவரை 13 முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய அவரது பட்ஜெட்டை பலரும் பாராட்டியது உண்டு
1999-ம் ஆண்டு ஜனதா தளம் கட்சி உடைந்த போது, அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். அதன் பிறகு 1989, 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்த அவர், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது தரம்சிங் தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தபோது துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார்.
அதன் பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து சித்தராமையா நீக்கப்பட்டார். அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்த வரை காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். அதன் பின்னர் அவர் அஹிந்தா (சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தலித்துகள்) என்ற அமைப்பை தொடங்கினார். அரசியல் மற்றும் நிர்வாகத்தில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார்
காலப்போக்கில் அந்த அமைப்பை கலைத்துவிட்டு கடந்த 2006-ம் ஆண்டு சோனியா காந்தி முன்னிலையில் சித்தராமையா காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் சேர்ந்த பிறகு அரசியலில் அவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது. சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பிறகு அவரது சொந்த தொகுதி வருணா தொகுதியாக மாறியது.
2008-ம் ஆண்டு காங்கிரசின் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்ட அவர், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ரெட்டி சகோதரர்களின் கனிம சுரங்க முறைகேடுகளை கண்டித்து 2010-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து பல்லாரி வரை 320 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடித்தார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி போட்டியிட்டு பாதாமியில் மட்டும் வெற்றி பெற்றார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் படுதோல்வி அடைந்தார். 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியும் சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தது அவரது மனதை வெகுவாக பாதித்தது. இதை அவ்வப்போது வெளிப்படுத்தினார். ராகு, கேது, சனி என எல்லாம் சேர்ந்து தன்னை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளை குறை கூறினார்.
ஆட்சியை இழந்த பிறகு சித்தராமையா 2-வது முறையாக எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் அவர் 5 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் 2-வது முறையாக கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்.
- கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்க உள்ளார்.
- துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்கிறார் என காங்கிரஸ் தெரிவித்தது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதற்கிடையே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பினர். அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
தனக்கு ஆதரவளித்துள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். அப்போது டி.கே.சிவகுமார் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா பதவியேற்க உள்ளார்.
- பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை:
கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதற்கிடையே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார்.
- இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்துப் பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்வர் பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுத்ததால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.
தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது.
இன்று காலையில் அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சித்தராமையா அடுத்த முதல்வர் என்றும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. டி.கே.சிவக்குமார் மாநில தலைவராகவும் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 5 நாட்களாக நிலவி வந்த மூட்டுக்கட்டை நீங்கியது.
அடுத்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவியை பெற சில மூத்த தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதற்கு எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி இருப்பதால் குழப்பம் நிலவுகிறது.
- டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
- ராகுல் காந்தி ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்ததில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு சித்தராமையாவிற்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். இருவருமே முதல்-மந்திரி பதவியை பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தி வந்தனர். இதனால் டெல்லியால் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் போனது.
சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மல்லிகார்ஜூனா கார்கே உடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 48 மணி நேரமாக மாறி மாறி ஆலோசனைகள் செய்யப்பட்டன. சித்தராமையாவிற்கு முதல்-மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றால் அவர் கட்சியை உடைத்து விடுவார். தனியாக கூட கட்சி தொடங்கும் நிலைக்கு செல்வார்.
அதனால் டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி இதில் ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சோனியா காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு இருக்கிறார். அவர் பேசிய பின்பே டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை டி.கே. சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். அதோடு டி.கே. சிவக்குமாருக்கு 4 பெரிய துறைகள் மொத்தமாக அமைச்சரவையில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல், கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோர் பேசியும் இறங்கி வராத டி.கே. சிவக்குமார் சோனியா காந்தி பேசிய பின்பே இறங்கி வந்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்