search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிப்பதிவேடுகள்"

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை அவிநாசி பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஓருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். கருவூலக் கணக்குத் துறை, முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது-

    தமிழக நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநிலஅரசு நிதிமேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக,தமிழக அரசு ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது.

    இத்திட்டத்தினைச் செயல்படுத்த கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவுற்றுள்ளன.

    சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இப்பணியினை அக்டோபர் 2018-க்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினி மயமாக்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த 4 நாட்கள் பயிற்சி பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக 2 நாட்கள் கருவூல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

    இப்பயிற்சியின் கீழ் சம்பளம் மற்றும் சம்பளம் சாராபட்டியல்கள் தயாரித்தல். மின் பணிப்பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல் மற்றும் இதர இனங்கள் தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுக்கும் மேலும் பட்டியல் கடவுசெய்தல், காப்பறை செயல்பாடுகள், முத்திரைத் தாட்கள் மேலாண்மை, மின் அலுவலகம், ஓய்வூதிய வழங்கல் மற்றும் இதர இனங்கள் குறித்து கருவூலத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் அரசின் வரவினமாக இந்நிதியாண்டில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.2350 கோடி அரசுக் கணக்கில் கருவூலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×