என் மலர்
நீங்கள் தேடியது "கார் கடத்தல்"
- வழி கேட்பதுபோல் துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
வாணாபுரம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோலை சேகரன் என்பவரின் மகன் நாதஸ்டிமுருகன் (வயது 27). இவர் தனக்கு சொந்தமான காரை வேலூருக்கு சென்று பிறகு மீண்டும் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தார்.
தச்சம்பட்டு அருகே சென்றபோது அங்குள்ள ஏரிக்கரை ஓரத்தில் நின்று இயற்கை உபாதையை கழிக்க இறங்கினார். அப்போது அவரது பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் திருவண்ணாமலைக்கு செல்ல வழி கேட்டுள்ளனர்.
அதற்கு நாதஸ்டிமுருகன் நீங்கள் வந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து திடீரென 4 பேரும் நாதஸ்டி முருகனை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த காரை கடத்திச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை தாக்கி கார் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- பேக்கரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை ஒரு நபர் திருடிக்கொண்டு சென்றார்.
- காரில் இருந்து சிறுமி இறக்கி விடப்பட்டதை அங்கு நின்ற சிலர் பார்த்து சிறுமியிடம் விசாரித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 10 வயது மகளுடன் காரில் சென்றனர். வளைகுடா நாட்டில் வசித்து வந்த அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கேரளா வந்திருந்தனர்.
இவர்களது மற்றொரு குழந்தை குட்டியாடியில் உள்ள பெண்ணின் தாய் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக தம்பதியினர் தங்களது 10 வயது மகளுடன் காரில் சென்றனர். அப்போது பேக்கரியில் ஷாப்பிங் செய்வதற்காக குட்டியாடியில் ஒரு இடத்தில் காரை சாலையோரமாக நிறுத்தினர்.
அப்போது அந்த தம்பதியரின் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். இதனால் காரில் ஏ.சி.யை போட்டு வைத்துவிட்டு, மகளை காருக்குள்ளேயே விட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் பேக்கரிக்கு சென்றனர். அவர்கள் பேக்கரியில் மும்முரமாக பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பேக்கரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை ஒரு நபர் திருடிக்கொண்டு சென்றார். குழந்தை தூங்குவதை அந்த நபர் கவனிக்காமல் காரை வேகமாக எடுத்துச் சென்று விட்டார். இந்நிலையில் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்த தம்பதி, தங்களது கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காருக்குள் தங்களின் மகள் இருக்கிறாள் என்று கூறி கதறி துடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் நின்றவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், அவர்களது கார் சென்ற சாலையில் பொதுமக்கள் சிலர் உதவியுடன் மற்றொரு வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். செல்லும் வழியில் தங்களது காரின் அடையாளத்தை கூறி கேட்டபடி தொடர்ந்து சென்றனர்.
இந்தநிலையில் தம்பதியரின் காரை திருடிச் சென்ற நபர், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு காருக்குள் குழந்தை தூங்குவதை பார்த்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த குழந்தையை நடுவழியில் இறக்கிவிட்டு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
நடுவழியில் இறக்கி விடப்பட்ட சிறுமி என்ன நடந்தது என்று தெரியாமல் தவித்தபடி அழுது கொண்டே நின்றாள். காரில் இருந்து சிறுமி இறக்கி விடப்பட்டதை அங்கு நின்ற சிலர் பார்த்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தனது பெற்றோர் மற்றும் ஊர் பற்றிய விவரங்களை சிறுமி தெரிவித்தாள்.
இந்தநிலையில் கார் மற்றும் குழந்தையை தேடி வந்த தம்பதியர் சிறுமி தவித்து நின்ற இடத்துக்கு வந்துவிட்டனர். அவர்கள் தங்களது மகள் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் காரை திருடிச் சென்ற நபரை பிடிப்பதற்காக, தம்பதிக்கு உதவியவர்கள் தங்களது வாகனத்தில் அதே சாலையில் வேகமாக சென்றனர்.
அப்போது தம்பதியரின் காரை திருடிச் சென்ற நபரை சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இத்துக்கு வந்து காரை திருடிச் சென்ற நபரை பிடித்து கைது செய்தனர்.
அவர் சாகுத் அருகே உள்ள ஆசாரிபரம் என்ற பகுதியை சேர்ந்த விஜீஷ் (வயது41) என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் குழந்தை படுத்து தூங்கியதை கவனிக்காமலேயே காரை திருடிக் கொண்டு சென்றிருக்கிறார்.
மேலும் குடிபோதையில் இருந்ததால் காரை மெதுவாகவே ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் தான் பின் தொடர்ந்து வந்த பொது மக்களிடமே சிக்கிக் கொண்டார். கைது செய்யப்பட்டுள்ள விஜீசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம் ராமநாராயணன் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து. கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்ணடியை சேர்ந்த சித்திக் என்பவர் காரை வாடகைக்கு எடுத்து சென்று திருப்பி ஒப்படைத்து விட்டார்.
இந்த நிலையில் அல்லி முத்து வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென மாயமானது. போலீசார் விசாரணையில் சித்திக், கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி திருவனந்தபுரத்தில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து சித்திக், அவரது நண்பர்கள் அனீஸ், பத்மாபதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். கார் மீட்கப்பட்டது. #tamilnews
காஷ்மீரின் தோடா மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஜம்முவில் வாடகைக்கு சொகுசு கார் ஓட்டி வருகிறார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி நேற்று முன்தினம் இரவு ராஜ்குமாரின் காரை 4 பேர் வாடகைக்கு எடுத்து சென்றனர்.
பஞ்சாப் மாநிலம் மதோபூர் அருகே கார் சென்ற போது திடீரென டிரைவர் ராஜ்குமாரை கடுமையாக தாக்கிய அவர்கள், பின்னர் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி காரில் இருந்து வெளியே தள்ளினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து இரு மாநில போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பதன்கோட் மற்றும் கதுவா சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கடத்தப்பட்ட கார் ஒன்றின் மூலம் அங்கு வந்ததாக கூறப்பட்டது. எனவே அங்கு மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த காரை கடத்தி சென்ற 4 பேரையும் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
விழுப்புரம்:
மதுரை பழங்கானத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகளை பார்க்க கணேசன் முடிவு செய்தார். இதற்காக அவர் சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்திருந்தார்.
இதையொட்டி நேற்று மாலை கணேசன் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை மதுரை பாலரங்காபுரத்தை சேர்ந்த டிரைவர் கிறிஸ்டோபர் டேனியல்(40) ஓட்டி சென்றார். இரவு 12 மணியளவில் அவர்கள் சென்னை சென்றடைந்தனர்.
பின்னர் கணேசனை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு கிறிஸ்டோபர் டேனியல் மட்டும் காரில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டார்.
தாம்பரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலிடம் நாங்கள் விழுப்புரம் செல்ல வேண்டும். எங்களை அங்கு இறக்கி விடுங்கள் என்றனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
பின்பு அந்த 4 வாலிபர்களும் காரில் ஏறினர். அவர்கள் தலா 150 ரூபாய் கிறிஸ்டோபர் டேனியலிடம் கொடுத்தனர். அதன்பிறகு அவர் காரை விழுப்புரம் நோக்கி ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த கார் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள விராட்டிக்குப்பம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காரில் இருந்த ஒருவர் காரை நிறுத்தம்படி கூறினார்.
உடனே கிறிஸ்டோபர் டேனியல் காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்தவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கிறிஸ்டோபர் டேனியல் தலையில் தாக்கினர்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்பு அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து காரை கடத்தி சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் டேனியலுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களிடம் நடந்த விபரங்களை கூறினார். அவர்கள் 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிறிஸ்டோபர் டேனியலை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்டது குறித்து விழுப்புரம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கார் கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தனிப்படை ஒன்று அமைத்தார். தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரை கடத்தி சென்றவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு சென்றதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார் கடத்திய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லை உடையார்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் ஐம்பொன் நகைகள் செய்து விற்று வந்தார். இவரது நண்பர்கள் மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன்.
இவர்களில் ரகுராமகிருஷ்ணன் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நம்பிராஜன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனிடையே சுரேஷ்குமார் சமீபத்தில் புதிதாக கார் வாங்கினார்.
கார் வாங்கியதை கொண்டாடுவதற்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக சுரேஷ்குமார் தனது நண்பர்கள் ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோருடன் நெல்லை தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்கு காரில் சென்றார்.
அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு 3 பேரும் மது அருந்தினர். பின்னர் ஆற்றில் குளித்தனர். இந்த வேளையில் அப்பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரிடம் இங்கு எப்படி காரை நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.
பின்னர் சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் தடுத்தனர். உடனே ஆத்திரமடைந்த கும்பல் அவர்களையும் தாக்கியது. பின்னர் 3 பேரையும் இழுத்து சுரேஷ்குமாரின் காருக்குள் போட்டனர். பின்னர் சுரேஷ்குமாரிடம் இருந்த கார் சாவியை பறித்து 3 பேரையும் காருடன் கடத்தி சென்றனர். காரை ஒருவர் ஓட்ட, மற்ற 2 பேர் காரில் இருந்தனர். 3 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும் சுரேஷ்குமாரும், ரகுராமகிருஷ்ணனும் காரில் இருந்து குதித்து தப்பினர். நம்பிராஜனால் காரில் இருந்து குதிக்க முடியவில்லை. டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது நம்பிராஜனை காரில் இருந்து கீழே தள்ளிய கும்பல் காருடன் தப்பி சென்றது. கடத்தப்பட்ட காரில் சுரேஷ்குமாருக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் இருந்தன. அவற்றுடன் கும்பல் தப்பிவிட்டது.
இதனிடையே கும்பல் தாக்கியதில் காயமடைந்த சுரேஷ்குமார், ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்குபதிவு செய்து காரை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிப்பட்டு:
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் உதயகுமார். கார் டிரைவர். நேற்று மாலை 3 வாலிபர்கள் திருத்தணி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 3 வாலிபர்களை அழைத்து கொண்டு திருத்தணிக்கு வந்தார். திருத்தணி முருகூரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு உதயகுமார் காரை திருப்பிய போது முன் பக்கத்தில் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென அவரை தாக்கினார். இதில் நிலை குலைந்த உதயகுமார் காரில் இருந்து கீழே விழுந்தார்.
உடனே 3 வாலிபர்களும் காரை கடத்தி சென்று விட்டனர். அவர்கள் சோளிங்கர் நோக்கி சென்றதாக தெரிகிறது.
தாக்குதலில் காயமடைந்த டிரைவர் உதயகுமார் கார் கடத்தல் பற்றி திருத்தணி போலீசில் புகார் செய்தார். காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tmailnews
சேலம்:
சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 33). டிராவல்ஸ் அதிபரான இவர் காரையும் ஓட்டி வந்தார்.
நேற்று புதுச்சேரிக்கு காரை ஓட்டி சென்ற உமா பதியிடம் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கும்பல் கேரள மாநிலம் கொச்சிக்கு செல்ல வேண்டும் கார் வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்டனர்.
உடனே வாடகையை பேசிய உமாபதி அவர்கள் சம்மதித்ததால் காரில் ஏற்றி கொண்டு சேலம் வழியாக கொச்சிக்கு புறப்பட்டார். கார் நள்ளிரவில் சேலம் கொண்டலாம்பட்டி மேம்பாலப்பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது காரில் இருந்த கும்பல் திடீரென உமாபதியை சரமாரியாக தாக்கியது. இதில் நிலை குலைந்த உமாபதியை கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சாலையோரம் தள்ளி விட்டு காரை கடத்தி சென்றது. இதனால் செய்வதறியாது திகைத்த உமாபதி கதறினார்.
பின்னர் சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் சங்கர் மாநகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி அந்த காரை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் அந்த கார் சிக்கவில்லை.
இதனால் போலீசார் உமாபதியை தாக்கி விட்டு காரை கடத்தி சென்ற வட மாநில வாலிபர்கள் யார், யார்?, எதற்காக கடத்தினார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கடத்தப்பட்ட கார் காரிப்பட்டி பிரிவு ரோட்டில் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் சாலையோரம் கார் நிறுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனாலும் கடத்தம் கும்பல் குறித்தும் உறுதியாக எந்த தகவலும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி லீபுரம் கல்லுவிளை ஆஞ்சநேயர் நகரில் வசிப்பவர் ரவீந்திரன் நாயர் (வயது 78). கேரளாவைச் சேர்ந்த இவர் அங்கு கல்வி அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வுக்கு பின் மன அமைதிக்காக கன்னியாகுமரியில் வீடு கட்டி தங்கியிருந்தார். இவர் கேரளாவில் விடுதியும் நடத்தி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி மாலை 3 மணிக்கு ரவீந்திரன் ஆஞ்சநேயர் நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஒரு காரில் வந்து இறங்கினர். அவர்கள் ரவீந்திரன் நாயரிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரது வீட்டுக்குள் புகுந்தனர்.
அந்த கும்பல் ரவீந்திரன் நாயரை கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க தேடினர். ஆனால் அவர்களிடம் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரவீந்திரன் நாயர் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் மட்டுமே சிக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ரவீந்திரன் நாயரை கத்தியால் குத்திவிட்டு 4 வெற்று காசோலைகளில் அவரிடம் கையெழுத்து வாங்கினர். பின்னர் அவரை கயிற்றால் கட்டி போட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த ரவீந்திரன் நாயரின் சொகுசு காரை கடத்திச் சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் ரவீந்திரன் நாயரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த துணிகர கொள்ளை தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் தலைமையிலான போலீசார் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தோவாளை தெற்கு தெருவைச் சேர்ந்த மனோஜ் (25), நாசரேத் கோவில் தெருவைச் சேர்ந்த பீம்சிங் (29), திருச்செந்தூர் அருகே உள்ள ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த செல்வபெருமாள் (28), சிதம்பரபுரம் தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் ரவீந்திரன் நாயரை தாக்கி காரை கடத்திச் சென்றவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் பீம்சிங் கல்லூரி மாணவர் ஆவார். செல்வபெருமாள் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். மனோஜ் மருந்து விற்பனையாளராக பணிபுரிகிறார்.
ரவீந்திரன் நாயர் வீட்டில் நடந்த கொள்ளைக்கு மனோஜ் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் நடந்த ஒரு கருத்தரங்கில் ரவீந்திரன் நாயரை, மனோஜ் சந்தித்துள்ளார். அப்போது தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதை தெரிவித்து ரவீந்திரன் நாயர் மனோஜிடம் மருந்து கேட்டுள்ளார். இதையடுத்து மனோஜ், ரவீந்திரன் நாயர் வீட்டுக்கு அடிக்கடி சென்று மருந்துகள் வழங்கினார்.
அப்போது ரவீந்திரன் நாயர் செல்வ செழிப்புடன் இருப்பதையும், தனியாக வசிப்பதையும் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது திட்டப்படி தான் 7 பேர் சேர்ந்து இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த தகவல்களை மனோஜ் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார்.
கடத்தப்பட்ட ரவீந்திரன் நாயரின் காரை அந்த கும்பல் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்று அந்த பணத்தை பங்கு வைத்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மார்த்தாண்டம் சென்று அந்த காரை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாங்காட்டை அடுத்த பரணிபுத்தூரில் சவாரி ஏற்ற வருமாறு இன்று காலை 6 மணி அளவில் தனியார் கால்டாக்சி நிறுவனத்துக்கு அழைப்பு வந்தது.
இதையடுத்து டிரைவர் செல்வம் காருடன் அந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரை பயணிகள் யாரும் வரவில்லை.
சந்தேகம் அடைந்த அவர் கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து அவர் சவாரியை ரத்து செய்து விட்டு காரை ஓட்ட முயன்றார். அப்போது மறைந்திருந்த 4 வாலிபர்கள் திடீரென செல்வத்தை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் காரை ஓட்டி கடத்தி சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த செல்வம் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு கார் கடத்தல் கும்பல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
போரூர் உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சார்லஸ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கால் டாக்சியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கார் செல்லும் இடத்தை கண்காணித்து விரட்டிச் சென்றனர்.
காலை 9 மணி அளவில் ஊரப்பாக்கம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கினர். உடனே அதில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காரை மீட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கார் கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். #Tamilnews