search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தல்
    X

    விழுப்புரம் அருகே டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தல்

    டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    மதுரை பழங்கானத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகளை பார்க்க கணேசன் முடிவு செய்தார். இதற்காக அவர் சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்திருந்தார்.

    இதையொட்டி நேற்று மாலை கணேசன் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை மதுரை பாலரங்காபுரத்தை சேர்ந்த டிரைவர் கிறிஸ்டோபர் டேனியல்(40) ஓட்டி சென்றார். இரவு 12 மணியளவில் அவர்கள் சென்னை சென்றடைந்தனர்.

    பின்னர் கணேசனை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு கிறிஸ்டோபர் டேனியல் மட்டும் காரில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டார்.

    தாம்பரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலிடம் நாங்கள் விழுப்புரம் செல்ல வேண்டும். எங்களை அங்கு இறக்கி விடுங்கள் என்றனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

    பின்பு அந்த 4 வாலிபர்களும் காரில் ஏறினர். அவர்கள் தலா 150 ரூபாய் கிறிஸ்டோபர் டேனியலிடம் கொடுத்தனர். அதன்பிறகு அவர் காரை விழுப்புரம் நோக்கி ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த கார் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள விராட்டிக்குப்பம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காரில் இருந்த ஒருவர் காரை நிறுத்தம்படி கூறினார்.

    உடனே கிறிஸ்டோபர் டேனியல் காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்தவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கிறிஸ்டோபர் டேனியல் தலையில் தாக்கினர்.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்பு அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து காரை கடத்தி சென்று விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் டேனியலுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களிடம் நடந்த விபரங்களை கூறினார். அவர்கள் 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிறிஸ்டோபர் டேனியலை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்டது குறித்து விழுப்புரம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    கார் கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தனிப்படை ஒன்று அமைத்தார். தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரை கடத்தி சென்றவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு சென்றதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார் கடத்திய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×