search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனுஷ்கோடி"

    • வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்தோம்.
    • காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியவாச பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்துள்ளது.

    இதுவரை 257 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடலோரப் பகுதியான அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமேசுவரம் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் அரிச்சல் முனை பகுதியில் இருந்த 8 பேரை மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ரூபன் மனைவி மரியா (வயது 35), மகன்கள் அபிலாஷ் (16) அபினாஷ் (14),சோதனை (8), அதுபோலே யாழ்பாணம் பகுதி அனைகோட்டை குலவாடி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் விஜய் குமார் (50), இவரது மனைவி தர்சிகா (34), மகன்கள் அஸ்நாத் (15), யோவகாஷ் (11) இப்பகுதியை என தெரியவந்தது

    வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததாகவும், இங்கே வந்தால் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பத்தை வழிநடத்தலாம் என்று முடிவு செய்து யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டதாகவும் இன்று காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 8 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 265 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். 

    • பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
    • அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை 250-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்தார்கள்.பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.

    அவர்கள் அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் அருகே கோதண்டராம கோவில் பகுதியில் 3 அகதிகள் வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் இன்று தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு இலங்கையை சேர்ந்த 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் இலங்கை யாழ்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் என்கிற விஜயன் (வயது46), அவரது மனைவி ராஜினி (45), மகள் திபேந்தினி (18) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் விசாரித்ததில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து வந்ததாகவும், அங்கிருந்து கள்ளப்படகு மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் 3 பேரையும் படகில் அழைத்து வந்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராம கோவில் கடலோர பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

    நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை அங்கு அவர்கள் தவித்தப்படி நின்றிருக்கிறார்கள். மீனவர்கள் கொடுத்த தகவலையடுத்து, அவர்கள் 3 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தலைமன்னார் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுமார் 23 கிலோ மீட்டர் தூர பயணத்தை 10 மணி நேரம் 45 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர்.
    • ஒரு வீரர் நீந்தி முடிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு வீரர் மீண்டும் நீந்தும் வகையிலான நீச்சல் பயிற்சியில் நீந்தி இந்த குழுவினர் தனுஷ்கோடி வரை நீந்தி வந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு ஒன்றில் இலங்கை தலைமன்னார் நோக்கி புறப்பட்டு சென்றனர். இவர்களுக்கு உதவியாக அந்த படகில் நீச்சல் பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 9 பேரும் சென்றனர்.

    இந்த நிலையில் தலைமன்னார் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 4 ஆண்கள் மற்றும் 3 பெண்களும் தனுஷ்கோடி நோக்கி நீந்த தொடங்கினர். கடலில் நீந்த தொடங்கிய இந்த குழுவினர் நேற்று மாலை 3.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தடைந்து தங்கள் நீச்சல் சாதனை பயணத்தை நிறைவு செய்தனர்.

    தலைமன்னார் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுமார் 23 கிலோ மீட்டர் தூர பயணத்தை 10 மணி நேரம் 45 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

    இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் (46), ராஜசேகர்துபர் (56), ஜெயபிரகாஷ் (56), சுமாரா (54) மஞ்சரி (46) சுஜாதா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சுமார் 23 கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளனர். இதில் ஒரே நேரத்தில் அனைவரும் நீந்தாமல் முதலில் ஒருவர் நீந்த தொடங்கி அவர் முடிக்கும் இடத்தில் இருந்து அடுத்த வீரர் நீந்த தொடங்குவார்.

    இதேபோன்று ஒரு வீரர் நீந்தி முடிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு வீரர் மீண்டும் நீந்தும் வகையிலான நீச்சல் பயிற்சியில் நீந்தி இந்த குழுவினர் தனுஷ்கோடி வரை நீந்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.

    ராமேசுவரம்:

    உலகம் முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை முதல் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர். தொடர்ந்து கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்வதற்காக கோவிலின் முதல் பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

    அதுபோல் அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரை பகுதி இரண்டு கடல் சேரும் இடமான தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சாலை பகுதியிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அரிச்சல் முனை கம்பிப்பாடு இடைப்பட்ட பகுதியில் சாலையின் இரு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஆகவும் இருந்தது.

    • ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
    • போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.

    ராமேசுவரம் :

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்று வீசும், கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ராமேசுவரம் பகுதியில் 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது. பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு சீறி எழுந்து வருகின்றன.

    பாதுகாப்பு கருதி துறைமுக பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்பு கம்புகளும் வைக்கப்பட்டு உள்ளன.

    ஆனால் நேற்று வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த தடுப்புகளை அகற்றிவிட்டு துறைமுக பகுதிக்குள் உள்ளே சென்று கடல் அலை சீறி எழுவதை மிக அருகில் நின்று செல்பி எடுத்தபடி ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்தனர். போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.

    • தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
    • அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதுபோல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்புகளுக்கு அருகே நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.

    ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் 4-வது நாளாக பலத்த சூறாவளி வீசுகிறது. இதனால் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது.
    ராமேசுவரம்:

    வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவக் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தீவுப்பகுதியான ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஆங்காங்கே மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் ரெயில்களும் பாம்பன் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காற்றின் வேகம் குறைந்த பின்னர் மெதுவாக இயக்கப்பட்டன.

    4-வது நாளாக இன்றும் சூறாவளியின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகள் மணலால் மூடப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இன்றும் பாம்பன் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    ×