search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்ந்தது"

    சென்னையில் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் வணிக கட்டிடங்களுக்கும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய 60 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. #Chennaiwater
    சென்னை:

    சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய 60 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் 8 லட்சத்து 70 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் மீட்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. மீட்டர் பொருத்தப்படாமலும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் மே மாதம் முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னையுடன் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் கட்டணம் ஏற்கனவே அதிகமாக இருந்து வந்தது. திருவொற்றியூர், மாதவரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது மற்றவர்களைவிட அதிகமாக கட்டணம் செலுத்தி வருகின்றனர். அதனால் அந்த பகுதிகளுக்கு 5 சதவீதம் மட்டுமே குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாடு உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை குடியிருப்புவாசிகள் ஒரு மாதத்திற்கு ரூ.50 வீதம் 6 மாதத்திற்கு ரூ.300 குடிநீர் கட்டணம் செலுத்தி வந்தனர். அவை மாதம் ரூ.80 ஆக உயர்த்தப்பட்டு அரையாண்டு கட்டணமாக ரூ.480 செலுத்த வேண்டும். புதிதாக சேர்த்த நொளம்பூர் பகுதியில் தற்போது மாதம் ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதிய குடிநீர் கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதுபோல ரூ.65 நிர்ணயிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதிக்கு ரூ.100, மீனம்பாக்கம், நந்தம்பாக்கம் பகுதிகளுக்கு ரூ.60 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளகரம், பெருங்குடி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த கட்டணம் ரூ.50 தற்போது ரூ.80 ஆக கூட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் வழங்குவதன் மூலம் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதை ஈடு செய்ய கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. புதிதாக இணைத்த பகுதிகளில் ஏற்கனவே வணிக ரீதியான இணைப்புகளுக்கு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கும் மாத கட்டணம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் ஏற்கனவே மாத கட்டணம் ரூ.70 வீதம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் ஒரு சில பகுதிகளுக்கு தற்போது சிறிது உயர்த்தப்பட்டுள்ளது. #Chennaiwater

    ×