search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212048"

    • இளம்பெண்ணை கடத்தி சீரழித்த நால்வரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சிக்கான இலக்கணம் ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை கத்திமுனையில் கடத்திச்சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    இளம்பெண்ணை கடத்தி சீரழித்த நால்வரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது கூட அவர்களின் போதை தெளியவில்லை எனத் தெரிகிறது. போதை எத்தகைய சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருட்களால் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதையும் கருத்தில் கொண்டு போதை ஒழிப்பு உத்திகளை வகுக்க வேண்டும்!

    பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சிக்கான இலக்கணம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதிகள் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டில் ஜூலை 29-ந் தேதி நிலவரப்படி 5.63 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர்நீதி மன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதிகள் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த மாதத்தில் 2 நீதிபதிகளும், டிசம்பர் மாதத்தில் இன்னொரு நீதிபதியும் ஓய்வு பெறுகின்றனர். அதனால் காலியிடங்கள் 22 ஆக உயரும். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து பின்தங்கிய சமூகங்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3 போர்களில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, அவர்களை நடுங்க வைத்த வீரத்தின் விளைநிலம் கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலை.
    • அவரது பெருமைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அடுத்தடுத்து 3 போர்களில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, அவர்களை நடுங்க வைத்த வீரத்தின் விளைநிலம் கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளில் அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம். அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம் என்று கூறியுள்ளார்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், மாபெரும் வீரராக அறியப்பட்ட திப்பு சுல்தானின் வெற்றிக்கு அனைத்து வகைகளிலும் உதவியாய் இருந்தவர் தீரன் சின்னமலை தான். தேசப்பற்றில் அவருக்கு இணை எவருமில்லை. அவரது பெருமைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம். அவரது சிறப்புகளை போற்றுவோம் என்று கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
    • நுகர்வோர் விலைக்குறியீடு என்பது சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கான குறியீடு ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நடப்பாண்டில் 52 சதவீதம் வரை மின்கட்டண உயர்வை அறிவித்துள்ள வாரியம், இனி மின்சாரக் கட்டணத்தை ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகும். அவர்கள் மீது ஆண்டுக்கு ஆண்டு மின்சார கட்டண சுமை சுமத்தப் பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாழவே முடியாத நிலை உருவாகிவிடும்.

    தமிழ்நாட்டில் 90 சதவீத மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வதில்லை; மின்சார உற்பத்திச் செலவும் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வதில்லை. அவ்வாறு இருக்கும் போது நுகர்வோர் விலைக் குறியீட்டை காரணம் காட்டி மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும்.

    நுகர்வோர் விலைக்குறியீடு என்பது சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கான குறியீடு ஆகும். அதை மின்சாரக் கட்டணத்திற்கும் பொருத்த மின்வாரியம் லாபநோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. எனவே, ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பலருக்கு தனியார் கல்லூரிகளில் சேர வசதி இல்லை.
    • அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2.98 லட்சம் விண்ணப்பங்கள் தகுதியானவை. கடந்த ஆண்டை விட கூடுதலாக 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

    கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பலருக்கு தனியார் கல்லூரிகளில் சேர வசதி இல்லை. அவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருப்பதும் தான் விண்ணப்பங்கள் அதிகரிக்கக் காரணம் ஆகும்.

    பொருளாதார வசதியற்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் கண்டிப்பாக உயர்கல்வி கற்க முடியாது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தீர்வல்ல.

    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஏழை மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
    • பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்மமரணம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் சங்கிலித் தொடராக மாறிவிடாமல் தடுக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.

    பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளை குழந்தைகளாகப் பார்க்காமல் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவே பார்க்கின்றனர். அதனால், வீடுகளிலும் அவர்களை இயல்பாக இருக்க விடாமல், எல்லா நேரங்களிலும் படிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.

    கடந்த இரு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் கடினமானதாக இருந்தாலும், தேர்வுகள் கடினமானதாக இல்லை;

    ஆனால், இப்போது நிலைமை திடீரென மாறி மருத்துவப் படிப்புக்கு தயாராக வேண்டும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்களை மாணவச் செல்வங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவே தற்கொலைகளுக்கு காரணமாகும்.

    இதைத் தடுக்க வேண்டுமானால், மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும். அதற்காக, குறைந்தபட்சம் மேல்நிலை மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வுகள் வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.

    கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புத்திசாலிகள்; அவர்களுக்கு கனவுகள் உண்டு; அந்த கனவை நனவாக்குவதற்காக அவர்கள் விருப்பப்பட்டு படிப்பர்.

    அவர்கள் மீது உங்கள் ஆசைகளை திணித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தவறான முடிவுகளை எடுக்க பெற்றோர் காரணமாகி விடக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம்.
    • இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார். சுற்றுச்சூழலை காக்க பசுமைப்போர்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.

    புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மரங்களை வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமானது. அதனால் தான் பிறந்தநாள், திருமண நாளில் மரக்கன்று நடும் பாட்டாளிகளுக்கு நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.

    ஒரு மரத்திற்கு 5 அலகு மின்சாரம் என்பது மிகவும் குறைவான வெகுமதியாக இருக்கலாம். ஆனால், சுற்றுச்சூழலைக் காக்க மரக்கன்று நட வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்தும். இன்றைய சூழலில், உலகையும், உலக மக்களையும் காக்க இந்த உணர்வு தான் தலையாயத் தேவையாகும்.

    மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் கான்கிரீட் பாலைவனங்களான நகர்ப்புறங்கள் பசுமை பூமியாக மாறும். ஜார்கண்ட் அரசுக்கு பாராட்டுகள்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் கல்வி நிறுவனப்பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது.
    • படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

    தமிழ்நாட்டில் கல்வி நிறுவனப்பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது. வெளிமாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் படிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

    அண்மைக்காலமாக கொடிய போதைப் பொருட்கள் மாத்திரைகள் வடிவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. போதைக்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் மிகக்குறைந்த வயதிலேயே தங்களின் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

    காவல்துறையினர் நினைத்தால், போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு ஒழித்து விட முடியும். தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நமது விலை மதிப்பற்ற செல்வங்களான இளைய தலைமுறையினரை சீரழித்து விடும். அத்தகைய சீரழிவை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

    தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும்.
    • சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

    கைது செய்யப்பட்ட மீனவர்களில் இதுவரை விடுதலை செய்யப்பட்ட 12 பேர் தவிர மீதமுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சமூகநீதியை வென்றெடுப்பது மட்டுமே நமது இலக்கல்ல....
    • அனைவருக்கும் அவரவருக்கு உரிய சமூக நீதியை வழங்கும் நிலைக்கு உயர்வது தான் நமது இலட்சியம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னிய மக்களின் சமூகநீதியையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 43-ஆவது ஆண்டு தொடக்க நாள் இன்று. சங்கத்தை நிறுவிய மருத்துவர் அய்யாவுக்கும், அவர் வழி நடக்கும் சொந்தங்களுக்கும் வாழ்த்துகள்.

    சமூகநீதியை வென்றெடுப்பது மட்டுமே நமது இலக்கல்ல.... அனைவருக்கும் அவரவருக்கு உரிய சமூக நீதியை வழங்கும் நிலைக்கு உயர்வது தான் நமது இலட்சியம். அந்த இலக்கை எட்டுவதற்காக இன்று முதல் உழைக்க இந்த நாளில் பாட்டாளிகள் உறுதியேற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சாரக் கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதைக் கூட நியாயப்படுத்த முடியும்.
    • கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது.

    தவிர்க்கவே முடியாத சூழலில் மின்சாரக் கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதைக் கூட நியாயப்படுத்த முடியும். ஆனால், அனைத்துப் பிரிவினருக்கும் சராசரியாக 20 விழுக்காடு அளவுக்கும், அதிகபட்சமாக 52சதவீதம் வரையிலும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி வரி உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டண உயர்வை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது; அவர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    எனவே, தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வை கைவிட வேண்டும். இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கொடுத்துள்ள திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் மின் வாரியத்தை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×