search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார்கள்"

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்கள் சம்பவ இடத்தில் இல்லாமல் 10 கி.மீ. தொலைவில் இருந்தனர் என வெளியாகி இருக்கும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. #Thoothukudifiring
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22, 23-ந் தேதிகளில் நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    3 இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் மிகப்பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டுகளில் 11 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற தொடங்கி உள்ளது. மேலும் மனித உரிமை ஆணையம், ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை ஆகியவையும் நடந்து வருகின்றன.

    ஆனால் 13 பேர் பலிக்கு காரணமான துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பது இன்னமும் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், “துணைதாசில்தார்கள் கண்ணன், சேகர், சந்திரன் ஆகிய மூவரும் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவர்கள் மூவரையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்க நேற்று ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்கள் போலீசார் தயாரித்த அறிக்கையில் முதலில் கையெழுத்திடவில்லை என்று ஒரு தகவல் வெளியானது. பிறகு கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர், சந்திரன் மூவரும் துப்பாக்கி சூடு நடந்த சமயத்தில் எங்கிருந்தனர் என்பதை ஆங்கில நாளிதழ் ஒன்று ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில் 3 தாசில்தார்களும் துப்பாக்கி சூடு சம்பவ இடத்திலேயே இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    முதல் தகவல் அறிக்கையில் மே 22-ந்தேதி திரேஸ்புரம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்த துணை தாசில்தார் கண்ணன் உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் அவர் திரேஸ்புரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்ததாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதுபோல மே 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் அருகில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு துணை தாசில்தார் (தேர்தல்) சேகர் உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் அவர் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாத்திமா நகர், லயன்டவுன் பகுதியில் இருந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    23-ந்தேதி அண்ணா நகரில் துப்பாக்கி சூடு நடத்த துணை தாசில்தார் சந்திரன் உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அவர் அருகில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகில் இருந்துள்ளார்.

    துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்கள் சம்பவ இடத்தில் அன்றைய தினம் இல்லை என வெளியாகி இருக்கும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து உயர் அதிகாரிகள் யாரும் பதிலளிக்க மறுக்கிறார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் விசாரணை நடத்தி வருவதால் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்க இயலாது என்றே அரசு மூத்த அதிகாரிகள் சொல்கிறார்கள்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்களில் ஒருவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு தனது பெயரை தெரிவிக்காமல் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் அவர், “யாரையும் கொல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அல்ல. புகாரில் நான் எல்லா தகவல்களையும் கூறி உள்ளேன்” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “தூத்துக்குடியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து 1908-ம் ஆண்டு போராட்டம் நடந்தபோதும், சுதந்திர போராட்ட வீரர் செக்கு இழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் போராட்டங்கள் நடத்திய காலங்களிலும் இந்த மாதிரி ரத்த கறை ஏற்பட்டது இல்லை. இப்போது 13 பேர் பலியானது வேதனை தருகிறது. அவர்களை சுட்ட போலீசார் அழுததை என் கண்ணால் நான் பார்த்தேன்” என்றார்.

    சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.சந்துரு இதுபற்றி கூறுகையில், “துணை தாசில்தார்கள் ஒரு இடத்தில் இல்லாத பட்சத்தில் அங்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட முடியாது” என்று தெரிவித்தார். #Thoothukudifiring

    ×