search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்சென்னை"

    தென்சென்னை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தென்சென்னை பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. நிலத் தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டன.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பருவ மழை சரிவர பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வருகின்றன.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகின்றன.

    இந்த நிலையில் தென்சென்னை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதி வீதியாக குடிதண்ணீருக்காக அலைகிறார்கள். பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மூவரசம் பேட்டை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது.

    150 அடி ஆழத்துக்கும் கீழ் நீர்மட்டம் சென்று விட்டது. ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால் புதிதாக கூடுதல் ஆழத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முன்பு 20 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் இருந்தது. தற்போது 150 அடி ஆழத்திற்கு மேல் ஆழ் குழாய்கள் அமைத்தால்தான் தண்ணீர் வருகிறது.

    தென்சென்னை பகுதியில் தெரு குழாய்களில் குடிநீர் வரவில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை தான் தெரு ஓரம் உள்ள குடிநீர் தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கூடுதல் செலவு செய்து குடிநீர் ‘கேன்’ வாட்டர்களை வாங்கி வருகிறார்கள்.

    இதுகுறித்து பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவர் கூறியதாவது:-



    பெரும்பாக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கோடை காலத்தில் தெரு குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராது 4 நாட்களுக்கு ஒரு முறை தெரு ஓரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை. கோடை காலத்தில் மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் செலவு செய்து குடிநீர் கேன்களை வாங்கி வருகிறோம்.

    நிலத்தடி நீர் மட்டம் 150 அடி ஆழத்துக்கு சென்று விட்டதால் ஆழ்குழாய்களில் தண்ணீர் வரவில்லை. கூடுதல் ஆழத்தில் மீண்டும் ‘போர்வெல்’ போட்டு தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம், செம்பாக்கம் பகுதிகளிலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.

    பல்லாவரம் சுகம் நகரை சேர்ந்த விஸ்வநாதன் கூறியதாவது:-

    குடிநீர் தட்டுப்பாட்டால் மாதத்துக்கு ரூ.3,500 கூடுதல் செலவு செய்து தண்ணீர் தேவையை சமாளித்து வருகிறோம். பாலாற்று தண்ணீர் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் விநியோகிக்கப்படுகிறது. நிலத்தடி தண்ணீரும் ஆழ் குழாய் கிணறுகளில் வரவில்லை.

    தெருக்குழாய்களில் ஒழுங்கற்ற நிலையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பழைய ஆழ்குழாய்களை மாற்றி புதிய ஆழ்குழாய்கள் கூடுதல் ஆழத்தில் அமைத்து பொது மக்கள் தண்ணீர் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×