என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்"

    • தெரு நாய்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறின.
    • கடந்த 4 நாட்களில் தெருவில் சுற்றித் திரிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகரித்து வந்தது. அவை பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் தொல்லை ஏற்படுத்தி வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.

    மேலும் தெரு நாய்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறின. இதைத்தொ டர்ந்து தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நாய்களை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் தெருவில் சுற்றித் திரிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உள்ளனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கோபிநாத் கூறும்போது, பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கருத்தடை நடைபெறுகிறது. இதுவரை 14 வார்டுகளில் நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. கருத்தடை செய்த நாய்கள் பாதுகாப்புடன் பிடித்த இடத்தில் கொண்டு சென்று விடப்படும். மீதமுள்ள 13 வார்டுகளில் நாய்கள் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 26 நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்பட்டது என்றார்.

    • நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது.
    • சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சண்முகாநகர் ராமசிங் வீதியில் அரசு கழிவறை கட்டிடம் உள்ளது.

    இதன் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று ஏராளமான தெரு நாய்கள் உருண்டையான பொருள் ஒன்றை கடித்து குதறி தின்றன.

    அப்போது நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு ஒன்றுக்கொன்று குரைத்தன.

    இதனை அப்பகுதியில் மருந்து கடை வைத்துள்ள விக்கி என்பவர் பார்த்தார். நாய்கள் கடித்து கொண்டிருந்தது குழந்தையின் தலை போல இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் நாய்களை விரட்டி அடித்தனர்.

    அப்போதுதான் நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் தலையை மீட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் உள்ளதா? என தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தலை அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

    அந்த பகுதியில் குழந்தை ஏதாவது கொலை செய்து வீசப்பட்டதா? அல்லது சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கேயே பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

    ஆனால் சிறுத்தை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமலும், கூண்டுகளில் சிக்காமலும், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் சிறுத்தை மீண்டும் தன் வேட்டையை தொடங்கியது. ஊதியூர்-காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்றது. இதையடுத்து ஊதியூர் வனப்பகுதியில் இன்னும் சிறுத்தை பதுங்கி இருப்–பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வனப்பகுதிகளில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 4 கூண்டுகளை தயார்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர், அதன்படி கூண்டுக்குள் மாட்டு இறைச்சி மற்றும் உயிருடன் நாயை பாதுகாப்பான முறையில் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கூண்டுக்கு அருகே கூட சிறுத்தை வரவில்லை.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கூண்டுகளில் வைக்கப்பட்ட இறைச்சிகளை சிறுத்தை வந்து சாப்பிடவில்லை. வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக சுற்றி வருகிறது. ஒருவேளை ஊதியூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் மான் கூட்டங்களை சாப்பிட்டு வரலாம். ஊதியூர் பகுதியில் தற்போது தெருநாய்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தெருநாய்களை சிறுத்தை வேட்டையாடி வரலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதன் காரணமாக கூண–டுகளில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை சாப்பிட சிறுத்தை வராமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது.
    • நேற்று ஒரே நாளில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது.

    கோவை,

    கோவையின் மைய பகுதியில் ரேஸ்கோர்ஸ் அமைந்துள்ளது. இங்கு 2 அரை கிலோ மீட்டரில் நடைபயிற்சி செல்லும் மைதானம் உள்ளது. இங்கு தினசரி ஆயிரகணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ரேஸ்கோர்சில் குழந்தைகள் விளையாடும் பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அடைந்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் இடங்கள் அரசு அதிகாரிகளின் குடியிருப்பு, ஆலயம், கோவில் ஆகியவையும் அமைந்துள்ளது. எனவே இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை விரட்டி விரட்டி காலில் கடித்தது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த வெறிபிடித்த நாய் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது. இதனால் அந்த வழியாக சென்ற வர்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

    இதுபற்றி ரேஸ்கோர்சில் தினசரி நடை பயிற்சி செல்லும் வாலிபர் ஒருவர் கூறியதாவது:-

    ரேஸ்கோர்சில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் நாய்களை பிடித்து செல்கிறார்கள். பின்னர் கருத்தடை செய்த பின்பு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விடுகின்றனர். சில நேரங்களில் வேறு பகுதிகளில் பிடித்த நாய்களையும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பலர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தினசரி வந்து நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் உணவு பொருட்களை அளிக்கின்றனர். இதனால் ஈர்க்கப்பட்ட நாய்கள் அங்கே தங்கி விடுகின்றன. இப்படி நாய்களுக்கு உணவு அளிக்க விரும்புபவர்கள் நாய்களை அவர்களது வீடுகளுக்கு எடுத்து சென்று உணவு வழங்க வேண்டியது தானே. எனவே அதிகாரிகள் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன.
    • பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    பஞ்சாயத்து ஊழியர்கள் கிராமங்களில் உள்ள நாய்களை பிடித்து கூண்டுகளில் அடைத்தனர். 100-க்கும் ஏற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பஞ்சாயத்து ஊழியர்களால் பிடிக்கப்பட்டு ஊசி போடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்தன.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    • நாய்க்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து வளைகாப்பு நடத்திய காட்சிகள் உள்ளது.
    • நாய் மீது சாமந்தி மலர்களை பொழிவதையும், பின்னர் நாயின் கழுத்தில் ஒரு சிறிய மாலையை அணிவதையும் காண முடிகிறது.

    தெருநாய்கள் மீது வெறுப்பு காட்டுபவர்களுக்கு மத்தியில், ஒரு தெருநாய்க்கு இளைஞர்கள் சிலர் சேர்ந்து வளைகாப்பு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பரத் சந்திரன் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பெல்லா என்று பெயரிடப்பட்ட தெருநாய் ஒன்று கர்ப்பமான நிலையில் அந்த நாய்க்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து வளைகாப்பு நடத்திய காட்சிகள் உள்ளது.

    அந்த நாய் மீது சாமந்தி மலர்களை பொழிவதையும், பின்னர் நாயின் கழுத்தில் ஒரு சிறிய மாலையை அணிவதையும் காண முடிகிறது. மேலும், வீடியோவை பகிர்ந்துள்ள பரத்சந்திரனின் பதிவில், வெறுப்பு நிறைந்த உலகில் நாங்கள் எங்கள் பெல்லாவுக்கு வளைகாப்பு விழாவை கொண்டாடுகிறோம். அவளுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 2 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த ஒருவார காலத்தில் தெருநாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர். கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் தெருநாய்கள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கேரளாவில் தெரு நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.

    • சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன.
    • இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது.

    திருப்பூர்

    திருப்பூர்- நொய்யல் ஆற்றங்கரை பாலம் பகுதி முதல் சக்தி தியேட்டர், யூனியன் மில் ரோடு, வாலிப்பாளையம், ஊத்துக்குளி ரோடு, வாலிப்பாளையம் முருகன், சாய்பாபா கோவில் பகுதிகளில் பகல் நேரங்களில் கும்பலாக நின்று நாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன. இதனால் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- தனியாக நடந்து செல்பவர்களை விரட்டி வந்து கடித்து விடுகிறது.

    இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது. கும்பலாக ஒன்று சேர்ந்து கடிக்க வருவதால் என்ன செய்வது யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் அச்சம் அடைகின்றனர். இது வரை கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்து உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் காலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள் நாய்களுக்கு பயந்து பொழுது விடிந்த பிறகு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிக்கடி வயதானவர்கள் தான் நாய்கடிக்கு ஆளாகிறார்கள். ஆகவே இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன
    • தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்

    நாகர்கோவில் :

    வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, பறக்கை, கோட்டாறு, ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இறைச்சி கடைகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைக ளில் சிதறி கிடக்கும் உணவு பொருட்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து குப்பைகளில் கொட்டப்படும் மீதமுள்ள உணவுகளை தின்று வளர் கின்றன.

    தற்போது தெரு நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் உணவு கிடைக்காத வேளைகளில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தூரத்தி செல்கிறது. அப்போது சிலர் சாலைகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். சிலரை தெரு நாய்கள் கடித்தும் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முடிகள் உதிர்ந்த நிலையில் நோய் வாய்பட்டும், காயங் களுடனும் காணப்படுகிறது. இவ்வாறு நோய்கள் பாதித்த நாய்கள் பொதுமக்கள் அருகில் வரும்போது அவர்கள் கூடுதல் அச்சம் அடைகின்றனர்.

    மேலும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, மாநகராட்சி நகர் நல மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கிறார்கள்.

    தெரு நாய்களின் தொல்லை அதிகம் உள்ள பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையை விட்டு விட்டு தெரு நாய்கள் தொல்லை இல்லாத சாலை வழியாக சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மாநகராட்சி கூட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியு றுத்தப்பட்டுள்ளது.

    அதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வ லர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது.
    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது. அதை விரட்ட சென்ற தாயாரையும் கடிக்க வந்த போது அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் நாயை விரட்டினர். கடந்த மாதத்தில் மட்டும் கீழக்கரையில் 9 நபர் களை வெறி நாய்கள் கடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களை அச்சு றுத்தும் வெறி நாய் களை பிடிக்க கீழக் கரை நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகா ரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர் தலைவர் அபுதாஹிர் கூறுகையில்,

    கீழக்கரையில் தொடர்ச்சியாக வெறி நாய்கள் பொது மக்களையும் குழந்தை களையும் கடித்துக் கொண்டி ருக்கிறது. இதனை எஸ்.டிபி.ஐ. கட்சி வன்மையாக கண்டிப்ப தோடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கீழக்கரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    • கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
    • பொது மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை, கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் என்னிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ஏற்கெனவே சங்கரன்கோவில், மேல நீலிதநல்லூர், புளியங்குடி பகுதிகளில் இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட நபர்கள் தெரு நாய்களால் கடிபட்டு பாதிப்படைந்ததால் பொதுமக்களுடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடையநல்லூர் தொகுதி முழுவதுமே பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க இயலாத சூழ்நிலை இருக்கிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பொது மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் உடன் இருந்தார்.

    • நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது.
    • தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தர் தெருவில் தேவி என்ற பெண் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து குழந்தையின் முகத்தில் கடித்து குதறி உள்ளது.

    நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அதே பகுதியில் நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் ரெட்டமலை சீனிவாசன் தெரு, ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளதாகவும் அந்த தெரு நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்துடனே அந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும் மாநகராட்சிக்கு புகார் அளித்தால் ஊழியர்கள் வந்து நாயை பிடித்து சென்று திரும்பவும் அந்த பகுதியிலேயே விட்டு விடுவதாகவும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×