search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 216256"

    • ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
    • மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அரண்மனை அருகே தி.மு.க. சாா்பில் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகா் செயலாளா்கள் காா்மேகம், பிரவீன் தங்கம் ஆகியோா் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

    இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு, தலைமை செயற்குழு உறுப்பினா் அகமது தம்பி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின்படி பாரதி நகர் பஸ் நிறுத்தத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவின் தலைமை யில் கிளை செயலா ளர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடக்கிறது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 2022 பணி காலி இடங்களுக்குரிய முதல்நிலை தேர்வு 19.11.2022 மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்வு 27.11.2022 அன்று தேர்வு நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இந்த தேர்வுக்காக இலவச 3 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மாதிரி தேர்வு 9.11.2022 (புதன்கிழமை), 15.11.2022 (செவ்வாய்கிழமை), 17.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும் தமிழ்நாடு 2-ம் நிலை காவலர் பணியிடத்திற்கான மாதிரி தேர்வு 18.11.2022 (வெள்ளிக்கிழமை), 23.11.2022 (புதன் கிழமை), 24.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் 04567-230160 மற்றும் 9487375737 (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மாதிரி தேர்வை எழுத வரும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த விபரம், நுழைவுச் சீட்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தவறாது கொண்டு வர வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்ட தடகள போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் சீதக்காதி ஸ்டேடியத்தில் சங்க செயலாளரும், மாநில சங்கத்தின் இணைச் செயலாளருமான இன்பாரகு ஏற்பாட்டில் நடந்தது. டாக்டர் ஆசிக் அமீன் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஹாசித், ஆடிட்டர் ராமகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வருகிற 15-ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் இன்பா ரகு தெரிவித்தார்.

    • ராமநாதபுரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • தனியார்துறை வேலை இணையம் “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதேபோல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இவ்விணையதளத்தில் பதிவு செய்து பயன் பெற லாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு செய்யப்படமாட்டாது எனவும் அலுவலக அரசுத் பதிவு எக்காரணத்தை கொண்டும் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் அருகே பேரிச்சம்பழ பண்ணையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாகராஜன் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

    ராமநாதபுரம் வட்டம், அத்தியூத்து கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 0.50 ஏக்கர் பரப்பில் முகமது இர்சாத் என்ற பயனாளி தோட்டத்தில் ரூ.8,790 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா செடிகளையும், ரூ.4,920 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள மா செடிகளையும் பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து, அழகன்குளம் கிராமத்தில் சிவானந்தம் என்ற பயனாளி தோட்டத்தில் ரூ.2 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறையையும், என்மனம்கொண்டான் கிராமத்தில் மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டம் ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்டு வரும் மா மற்றும் கால்நடைகளையும், பேரிச்சம்பழம் பண்ணையையும், அரியமான் கிராமத்தில் பழ வகைகளான கொய்யா, மா, சப்போட்டா ஆகியவை வளர்க்கப்பட்டு வருவதையும், நொச்சி–யூரணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்லி விரிவாக்க திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வரும் மல்லிகைப்பூ தோட்டத்தையும், பஞ்சன்தாங்கி கிராமத்தில் வளர்க்கப்பட்டு வரும் அத்திப்பழ தோட்டத்தையும், தெற்குத்தரவை கிராமத்தில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாகராஜன் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • முதுகுளத்தூர் அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா நடந்தது.
    • ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ஊரணியில் மீன்பிடி திருவிழா நடந்தது.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.

    மீன்வலைகள், கச்சாவலைகள் கொசுவலைகள் ஆகியவற்றை கொண்டு கெண்டை, அயிரை, கெளுத்தி, விரால், குரவை மீன்களை பிடித்தனர்.

    ஏராளமான மீன்கள் பிடிபட்டதால் அவற்றை வாளிகளில் அள்ளிச் சென்றனர். இதன் காரணமாக கீழத்தூவல் கிராமத்தில் அனைவரது வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை கம, கமத்தது.

    • ராமநாதபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்பாலமுருகன் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் பட்டிணம்காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமாவூர், சோழந்தூர், காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், ரமலான்நகர், மேலக்கோட்டை, மாடக்கொட்டான், இளமனூர், தில்லைநாயகபுரம், தேவிபட்டிணம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம், எம்.ஜி.ஆர். நகர், எம்.எஸ்.கே.நகர், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குதரவை, எல்.கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குத்தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கானேந்தல், பால்கரை, பேராவூர், நாகநாதபுரம், இந்திராநகர் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டார்.
    • கடந்த 2 ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டு, 5-வதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த சங்கா் லால்குமாவத் மாற்றப்பட்டார். புதிய கலெக்டராக ஜானி டாம் வா்கீஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களாக வீரராகவ ராவ், சந்திரகலா, தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சங்கா் லால் குமாவத் ஆகியோா் பணியாற்றினா். தற்போது ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டு, 5-வதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரத்தில் தடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டுமென மீனவா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீனவர்களின் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு கள ஆய்வு நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீன்கள் இனப்பெருக்கத்தை கவனத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவா்கள் நலன் கருதி அரசு சாா்பில் நிவாரண நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 37 ஆயிரத்து 986 குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    குடும்பத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் என நிதி அறிவித்து சம்பந்தப்பட்டோா் வங்கிக்கணக்கிலும் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரத்தில் தடைக்கால நிவாரணத்தை இன்னும் 3,900 பேருக்கு வழங்கவில்லை என மீனவா்கள் சங்கத்தினா் கூறிவருகின்றனா்.

    இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் கூறுகையில், நடப்பு ஆண்டில் புதிதாக நிவாரணம் பெறுவதற்கு சோ்க்கப்பட்ட 3,900 பேருக்கு மட்டுமே இன்னும் நிவாரண நிதி அளிக்கப்படவில்லை.

    அவா்களது ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு கள ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வு முடிவுக்குப் பிறகே நிதி அளிக்கப்படும் என்றார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 68 மி.மீ. மழை பதிவானது.
    • தொண்டி கடலோரப்பகுதியில் நேற்று நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப்பகுதியில் நேற்று நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. ஓட்டு வீடு, கூரை வீடுகளில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தொண்டி சத்திரம் தெரு, வெள்ளை மணல் தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு தலைமையில் சுகாதார மேஸ்திரி கோவிந்தராஜன் பேரூராட்சி பணியாளர்களுடன் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 68 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் இப்பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது.

    • கவுசானல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    • ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வணிக மேலாண்மையியல் துறை மாணவர்கள் பெற்றனர்.

    ராமநாதபுரம்,

    பாளையங்கோட்டை திருஇருதய சபை சகோதரர்களால் நடத்தப்படும் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

    தமிழ் உயராய்வு மையத்தின் முதுகலை முதலாண்டு மாணவி டயானா இறைவணக்கம் பாடினார். உடற்கல்வி இயக்குனர் சுகந்தராஜ் வரவேற்றார். கல்லூரிச் செயலர் மரியசூசை அடைக்கலம் வாழ்த்துரை வழங்கினார்.

    முதல்வர் ஹேமலதா அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வணிக மேலாண்மையியல் துறை மாணவர்கள் பெற்றனர். மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடந்தன. ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் லட்சுமணன் நன்றி கூறினார். தமிழ் உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் சத்தியபாமா, தமிழ் உயராய்வு மையத்தின் இளங்கலை மூன்றாமாண்டு மாணவர் ஹரி ஹர சுதன், கணினி அறிவியல் துறை மாணவி நம்பு கமலி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    உப்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பெண் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் கடலூருக்கும் சேந்தனேந்தலுக்கும் இடைப்பட்ட பகுதியில் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையிலிருந்து கீழக்கரை நோக்கி வந்த கார் லாரியின் பின்புறமாக மோதியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள அலவாய்க் கரைவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி சாந்தி (வயது35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சாந்தியின் தந்தை முத்து ராமலிங்கம் (70), சித்தப்பா ராமச்சந்திரன் (60), உறவினர் முனித்துரை (53) மற்றும் கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×