search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர்"

    • தமிழ்நாட்டில் குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினமும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் ஏராளமாக இயக்கப்படுகிறது. இவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கடத்தப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. தமிழ்நாட்டில் குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடலூர் தொரப்பள்ளி சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காய்கறி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கூடலூர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருப்பது தெரியவந்தது. கைது இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே வெள்ளேரியை சேர்ந்த சாஜர் (வயது 38) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சாஜரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • பரிசல் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கூடலூர் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக தெங்குமரஹடா, கல்லாம்பாளையம் பகுதிகளுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக 2 கிராம மக்களும் பரிசலில் சென்று வருகின்றனர். இன்று காலை கல்லாம்பாளையம் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் கல்லாம்பாளையத்தை சேர்ந்த 3 பேர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கோத்தகிரி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பரிசலில் ஏறி மாயாற்றில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கில் பரிசல் சிக்கி கொண்டது. சிக்கிய வேகத்தில் சிறிது தூரம் பரிசல் அடித்து செல்லப்பட்டது.

    இருப்பினும் பரிசல் ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு பரிசலில் இயக்கி கரைக்கு கொண்டு வந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக பரிசல் ஓட்டுனர் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர்.

    • தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.
    • காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா்.

    நீலகிரி மாவட்டம் கூடலூா், மங்குழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அங்குள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அந்த பகுதியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அந்த பகுதி மக்களுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்து, மாற்றுப்பாதையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அந்தக் குழுவினா் பாதிப்பு தகவல் கிடைத்தவுடன் எந்த நேரத்திலும் மீட்பு பணியை மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ளனா். கூடலூா் பகுதியில் கன மழை தொடர்வதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசுக்கு எடுத்துரைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி முகாமில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, வட்டாட்சியா் சித்தராஜ், கூடலூா் நகராட்சி ஆணையா் (பொ) காந்திராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, தி.மு.க. நகர செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

    • யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
    • யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, புளிய ம்பா–றை அடுத்துள்ளது கத்தரித்தோடு கிராமம். இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இதனால் அடிக்கடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காட்டு யானைகள் கூட்டம் வனத்தை விட்டு வெளியேறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம் அந்த பகுதியில் உள்ள தவமணி என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு தவமணி எழுந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.

    பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் வெளி யேறியது. இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதேபோல் அருகே உள்ள அட்டிக்கொல்லி கிராமத்தில் புகுந்த காட்டு யானை தா்மலிங்கம் என்பவரின் வீட்டையும் இடித்து சேதப்படுத்தியது.

    யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
    • யானைகள் நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே அரசு தேயிலைத் தோட்ட கழகத்தையொட்டிய பாண்டியாறு 4பி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

    அப்படி வரும் காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தேவாலா அட்டி பகுதியில் குடியிருப்புகளை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு அரசு தேயிலைத் தோட்டம் பாண்டியாறு எண். 4பி பகுதியில் நுழைந்தன.

    பின்னர் தொழிலாளி புவனேஸ்வரி என்பவரின் வீட்டை உடைத்து சேதம் செய்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். யானைகள் நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர். சம்பவம் குறித்து தொழிலாளர்கள் டேன்டீ நிறுவாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    தொடர்ந்து காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது
    • யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம், கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது.

    நேற்று காலை, 5:45 மணிக்கு யானை சத்தமிட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீதர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, தேயிலை தோட்டத்தில் யானை குட்டி ஈன்றது தெரியவந்தது.

    உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்காப்பாளர் காலன் தலைமையில், வன ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்

    . ஒரு மணி நேரத்துக்கு பின், யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது. 2 கி.மீ., துாரம் சென்ற யானை தேயிலை தோட்டம் ஒட்டிய வனப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டது.

    வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானைக் குட்டி நல்ல நிலையில் உள்ளது. தாய் பால் குடித்து வருகிறது. அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடையூறு ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்களை அப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை என்றனர்.

    • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகிறது.
    • யானை பஸ்ைச நோக்கி வேகமாக வந்து மறித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகிறது. குறிப்பாக சாலையில் சுற்றி திரியும் யானை கூட்டம் சாலையில் வாகனங்களை மறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    கூடலூரில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று எல்லமலை நோக்கி சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பஸ் ஒவேலி அடுத்த சூண்டி பாரம் இடையே ஒத்தக்கடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து சாலையோரம் யானை ஒன்று நின்றிருந்தது. இதனை பார்த்த டிரைவர் வாகனத்தை மெதுவாக இயக்கினார்.திடீரென யானை பஸ்ைச நோக்கி வேகமாக வந்து மறித்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். நீண்ட நேரம் யானை அங்கேயே நின்றிருந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடை ந்தனர்.பின்னர் யானை அங்கிருந்து வனத்தி ற்குள் சென்று விட்டது . இதையடுத்து பஸ்சை டிரைவர் இயக்கி சென்றார். யானை அங்கிருந்த சென்ற பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.
    • நாடுகாணி வனச்சரகர் வீரமணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே பால்மேடு பகுதியில் ஒரு கும்பல் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தேவாலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 3- ம் தேதி நள்ளிரவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 2 மூட்டைகளை சோதனை செய்த போது கடமான் இறைச்சி 50 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது கள்ளத்துப்பாக்கி மூலம் கடமானை வேட்டையாடியது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பால் மேட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 38), ஓ வேலி பேரூராட்சி பெரிய சூண்டியைச் சேர்ந்த மைக்கேல் (30) அருண் (26) மற்றும் சூண்டி மரப்பாலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.

    மோப்ப நாயுடன் வீட்டில் சோதனை பின்னர் போலீசார் பறிமுதல் செய்த கடமான் இறைச்சியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து நாடுகாணி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர்கள் சீனிவாசன், ஷர்மிலி, நாடுகாணி வனச்சரகர் வீரமணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது முதுமலை வனத்துறைக்குச் சொந்தமான மோப்ப நாயும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. தொடர்ந்து வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 250 கிராம் வெடி மருந்து பொருட்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் லைட் ஆகியவற்றை வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசாரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து வன குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவியப்பா ஓடிச் சென்று புலியை விரட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலி பசுமாட்டை கொன்றுவிட்டு கவியப்பா மீது பாய்ந்தது.
    • தொழிலாளிகளை தாக்கிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

    ஊட்டி:

    கர்நாடக மாநிலம் கோபால்சாமி பேட்டையை சேர்ந்தவர் கவியப்பா (வயது 58). இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாடுகள் மேய்க்க சென்றார்.

    அப்போது லக்கிம்புரா வனத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி ஒன்று கடித்தது. இதைக் கண்ட கவியப்பா ஓடிச் சென்று புலியை விரட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலி பசுமாட்டை கொன்றுவிட்டு கவியப்பா மீது பாய்ந்தது.

    இதில் வலது கண் மற்றும் முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக புலியிடம் இருந்து கவியப்பா உயிர் தப்பினார். மேலும் புலியும் அங்கிருந்து சென்றது. பின்னர் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து கவியப்பாவை மீட்டு மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே அதே நாளில் மாலை நேரத்தில் மற்றொரு தொழிலாளி ராஜேஷ் என்பவரையும் புலி தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து பொதுமக்கள் மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத்தொடர்ந்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் போராட்டம் நடத்தவும் முயற்சி செய்தனர்.

    இதனால் சம்பவ இடத்துக்கு 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு புலியை தேடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு கும்கி யானை மீது பந்திப்பூர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் வெங்கடேஷ் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் அமர்ந்து இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

    பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு தனியார் விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் கண்டனர். தொடர்ந்து கால்நடை டாக்டர் வெங்கடேஷ் புலி மீது மயக்க ஊசியை செலுத்தினார். 10 வயது ஆண் புலி சிக்கியது இதனால் வலியால் புலி அங்கிருந்து சிறிது தூரம் ஓடி மயங்கி விழுந்தது.

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் ராட்சத வலைக்குள் புலியை அடைத்து கொட்டும் மழையில் தூக்கிச் சென்றனர். பிடிபட்ட ஆண் புலிக்கு சுமார் 10 வயது இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் புலியை கூண்டில் அடைத்து மைசூரு வன உயிரின மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கர்நாடக வனத்துறையினர் கூறும் போது, ஆண் புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருக்கிறது. இதனால் வேட்டையாடும் திறனை இழந்துள்ளதால் மாடு, மனிதர்களை தாக்கி வருகிறது. இதைத் தொடர்ந்து அதைப் பிடித்து மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைக்கு ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    இதன் காரணமாக அப்பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள் மின் கம்பிகளை சீரமைத்தனா். ஊட்டி குன்னூரிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது

    • கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.
    • நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

    ஊட்டி:

    கேரளா-கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.

    அப்போது மலைப்பிரதேசத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல டிரைவர்கள் பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்தது. ஊட்டியில் இருந்து வரும் போது நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

    இதனால் மலைப்பாதையில் 2-வது கியரை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசார் சாலையோரம் நின்று வெளிமாநில டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். இதனால் விபத்துகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர்-கேரள சாலைகள், ஊட்டி செல்லும் சாலை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ஸ்ரீமதுரையில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒரு வேன் நம்பாலக்கோட்டை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக வேனை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி சென்று கொண்டிருந்த ஒரு கார் 2-ம் மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அப்பகுதியில் மின்கம்பம் இருந்ததால் அதில் கார் தடுத்து நின்றது. இதனால் கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடும் நடவடிக்கை இதேபோல் பல இடங்களில் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, மலைப்பாதையில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கக்கூடாது. மேலும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • பொது மக்கள் கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி தாசில்தார் காயத்ரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோத்தகிரி தாலுகா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, நெடுகுளா உள் வட்டத்திற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) முகாம் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி தலைமை தாங்குகிறார்.

    28-ந் தேதி கோத்தகிரி, 29-ந் தேதி கோத்தகிரி, 30 ந் தேதி கோத்தகிரி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளதையொட்டி ஊழியர்கள் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தாசில்தார் சித்தராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு உள்ளதாவது:

    கூடலூர் தாலுகாவில் பசலி 1431-க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் தேவர்சோலை உள்வட்டத்துக்கும், 29-ந் தேதி கூடலூர் உள்வட்டத்துக்கும் ஜமாபந்தி நடக்கிறது. கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்குகிறார். எனவே, பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×