search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈழத்தாயகம்"

    பொது வாக்கெடுப்பில் மூலமாக ஈழத்தாயகம் விடுதலை பெறும் வரை உரிமை முழக்கக்குரல் ஒலிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2009-ம் ஆண்டு மே மாதத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் தாயக விடுதலைப்போரில் மாண்டார்கள். சிங்களப் பேரினவாத அரசாங்கம் உலக வல்லாதிக்க நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு தமிழர்களின் விடுதலைப்போரை அழித்து முடித்தார்கள். வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்கு உள்ளங்கையளவுக்குக்கூடச் சொந்த நாடில்லை என்பது தமிழரின் இறையாண்மை உணர்விற்கு எதிரானதாகும்.

    பால்மனம் மாறாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனின் வெறித்த பார்வையும், உயிரற்ற அவனது பிஞ்சு உடலும் எதன்பொருட்டும் மறைக்கவே முடியா துயர் கனவாய் தமிழர்தம் உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது. மானத்தமிழினம் இதனை மறந்து போகலாமா?. அன்னைத் தமிழினம் இதனைக் கடந்து போகலாமா? என்கிற கேள்விகளோடு ஒவ்வொரு வருடத்தின் மே மாதமும் எங்களது உளமனச்சான்றை உலுக்கிக் கேள்வியெழுப்புகிறது.

    அடிமை இருள் வாழ்வில் தொலைந்த அன்னைத் தமிழினத்திற்குள்ளும் விடுதலைக்கான வெளிச்சப்பொறிகள் உண்டென வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்டோர் நிரூபித்துக் காட்டிய பிறகும்கூட இனியும் உலகத்தமிழினம் நாம் தமிழர் என உணர்ந்து ஒரே குடையின் கீழ் திரளாமல் போனால் இனம் காக்க இன்னுயிர் ஈந்த மாவீரர்களின் ஆன்மாவிற்குச் செய்கிற பெருந்துரோகமாகும்.

    பொது வாக்கெடுப்பின் மூலமாக ஈழத்தாயகம் விடுதலைபெறும் வரை, ஒவ்வொரு தமிழனின் உரிமை முழக்கக்குரலும் உலகத்து வீதிகளில் ஒலிக்க வேண்டும். நமது கடைசி மூச்சு இருக்கும் வரை இந்நாளை இன மீட்சிக்கான நாளாகக்கருதி ஈழ நிலத்தின் அடிமைச்சங்கிலியை அறுத்தெறிய வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    ×