search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யசோதா"

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என கூறிய நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress
    சென்னை:

    காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், “தமிழக காங்கிரஸ் தலைவர் திரநாவுக்கரசர் செயல்பாடு திருப்தியாக இல்லை. 2 மாதத்தில் தலைவர் பதவியில் இருந்து மாற்றம் வரும். திருநாவுக்கரசர் நீக்கப்படுவார்” என்று கூறி இருந்தார்.

    இதற்கு மறைமலைநகரில் நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்தார்.

    பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று திருநாவுக்கரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். என்னை பதவயில் இருந்து நீக்குவேன் என்று கூறுகிறார். என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்? அதற்காக தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது? என்று பேசினார்.



    இந்த நிலையில் காங்கிரசின் மூத்த தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யசோதா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி பெரிய பதவி கிடையாது. மாநில தலைவர்தான் பதவிதான் முக்கியமானது. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிதான் முக்கியமானது. இந்த பதவியில் முகுல் வாஸ்னிக் உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் குறைபாடுகள் இருந்தால் இதை மாநில தலைவரிடம் சொல்லலாம். இல்லையென்றால் அகில இந்திய பொதுச்செயலாளரிடம் தெரிவிக்கலாம். அல்லது அகில இந்திய கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எடுத்து கூறலாம். அதைவிட்டு விட்டு மீடியாவில் குறைகளை சொல்வது தவறு. இது கட்சியை பலவீனப்படுத்தும்.

    காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதிர்க்கட்சியினர் குறை கூறும்போது அதற்கு பதில் அளிக்க மீடியாவை பயன்படுத்தலாம். ஆனால் உள்கட்சி விவகாரத்தை மீடியாவில் சொல்வது மிகப்பெரிய தவறு.

    நான் காமராஜர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறேன். எங்களால் எவ்வளவோ பேச முடியும். ஆனாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு நாங்கள் கட்சி இடும் கட்டளையை செயல்படுத்தி வருகிறேன்.

    சத்தியமூர்த்தி பவன்தான் எங்களுக்கு கோவில் மாதிரி. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இது தாயகம் போன்றது. ஆனால் சத்தியமூர்த்தி பவனை குறை கூறுவதை ஏற்க முடியாது.

    குஷ்புவுக்கு காங்கிரசின் பண்பாடு, காங்கிரசின் நடைமுறை எதுவும் தெரியவில்லை. 2 வருடத்துக்கு ஒருமுறை காங்கிரசில் தலைவர்கள் மாறுவது வழக்கம். வாழப்பாடி ராமமூர்த்தி உள்பட பல தலைவர்கள் 6 வருடம் வரை தலைவராக இருந்து இருக்கிறார்கள்.


    எனவே இப்போதைய தலைவரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய தலைவர் வரும் போது பேசலாம். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

    திருநாவுக்கரசர் குரல் பலமாக இல்லையென்றாலும் அவரது செயல்பாட்டை குறைகூற இயலாது. தினமும் அவர் கட்சிக்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று வருகிறார்.

    எதிர்க்கட்சிகாரர்களையும் நாகரீகமாக விமர்சிக்கின்றார். ஆனால் குஷ்பு தேவையில்லாமல் விமர்சிக்கிறார். குஷ்பு ஸ்டார் நடிகையாக இருப்பதால் தொண்டர்களுடன் பழகுவதில் சில சங்கடங்கள் இருக்கலாம். எங்களுக்கு அந்த சங்கடங்கள் கிடையாது.

    ஆனாலும் அநாகீகரிமாக குஷ்பு பேசக்கூடாது. தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரசில் இருந்தபோது தலைவர்களை விமர்சிக்கமாட்டார். நாட்டிய பேரொளி பத்மினி, ஜெயசித்ரா ஆகியோர் காங்கிரசில் இருந்தாலும் அவர்கள் இப்படி தலைவர்களை விமர்சித்தது இல்லை. கட்சி கூட்டங்களில் பேச பணம் கேட்டது கிடையாது.

    ஆனால் குஷ்பு ஒரு கூட்டத்தில் பேச ரூ. 1 லட்சம் வரை பணம் வாங்குகிறார். பணம் கொடுக்காத கூட்டத்தில் பேசுவது இல்லை. இது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவரை பொறுத்தவரை பணம் தேவையில்லாத ஒன்று. நல்ல வசதியாகதான் உள்ளார்.

    எனவே அவர் காங்கிரசுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். கட்சியில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தால் அவருக்கு மரியாதை அதிகரிக்கும்.

    இவ்வாறு யசோதா கூறினார். #Congress #Kushboo #Thirunavukkarasar #Yasodha
    ×