search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷெனாய்நகர்"

    ஷெனாய்நகர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ சுரங்கப்பாதையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். #Metrotrain

    சென்னை:

    சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்து வந்த நிலையில் இப்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ட்ரல், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பணிகள் நிறைவடைந்து சேவை தொடங்கினால்தான் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும்.

    தற்போது விமான நிலையம்- நேரு பூங்கா, விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே இரு வழியில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே ஒரு வழியில்தான் சேவை உள்ளது. மற்றொரு பாதை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    அதேபோல நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே நடந்த ஒரு வழி சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளன. இந்த 2 வழித்தடங்களிலும் அனைத்து பணிகளும் நிறை வடைந்ததை தொடர்ந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி பெங்களூரில் இருந்து பாதுகாப்பு கமி ஷனர் கே.ஆர்.மனோகரன் தலைமையிலான குழுவினர் இன்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு பணியினை மேற்கொண்டனர்.

    ஷெனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆய்வு பணி தொடங்கியது.

    முன்னதாக பாதுகாப்பு கமி‌ஷனர் கே.ஆர்.மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே மற்றொரு வழித்தடம் தயாராகி உள்ளது. 4.3 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்த பாதையிலும், நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே ஒரு பாதையிலும் ஆய்வு பணி இன்றும், நாளையும் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் உள்ள 7 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் 2 கட்டமாக ஆய்வு நடைபெறு கிறது.

    இதையடுத்து வருகிற 18 மற்றும் 19-ந்தேதியில் சின்னமலை- டி.எம்.எஸ். ஏ.ஜி. ஆபீஸ் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப் பணிகளும் நிறைவு அடைந்துள்ளதையொட்டி அங்கு ஆய்வு பணி தொடங்கப்பட உள்ளது.

    இந்த ஆய்வின்போது பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பது ஆராயப்படும். விபத்து காலத்தில் பயணிகள் வெளியே செல்ல வசதி, பயணிகளின் பாதுகாப்பு வசதியில் எதுவும் குறை உள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தரப்படும். நாளை மாலைக்குள் இந்த ஆய்வு முடிந்து விடும்.

    போக்குவரத்து உள்ள நேரத்தில் டிராலி மூலமாகவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரெயிலை இயக்கியும் சோதனை நடத்தப்படும். பாதுகாப்பு சோதனை முடிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை கொடுத்து விடுவோம். இந்த ஆய்வின்போது குறைகள் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே சேவை தொடங்குவது குறித்து மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல், சுரங்கப் பாதை பணிக்கான பொது மேலாளர் வி.கே.சிங், அதிகாரி நரசிம்மபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×