search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222654"

    • ராமநாதபுரம் அருகே பால்குடம் எடுத்து திருநங்கைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • முத்துமாரி அம்மனுக்கு முதன் முறையாக முளைக்கொட்டு திருவிழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லை நாயகபுரம் கிராமத்தில் முன் மும்தாஜ் என்ற திருநங்கை வீடு உள்ளது. இந்த வீட்டில் 15 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மன் கோவில் அமைத்து முளைப்பாரித் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி முதலாம் ஆண்டாக முளைப்பாரித் திருவிழாவை நடத்தினர். இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோவில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    இந்த நிலையில் திருநங்கைகள் மாடக்கொட்டான் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரம் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். முளைப்பாரி களை ஊர்வலமாக சுமந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்தனர்.

    அதனையடுத்து முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனை நடத்தி முத்துமாரி அம்மனுக்கு முதன் முறை யாக முளைக்கொட்டு திரு விழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேலூர் அருகே கருங்காலக்குடியில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • மண்ணால் ஆன சுமார் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை (புரவிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்தனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா 21 நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதமிருந்து வந்தனர்.

    திருவிழாவின் முதல்நாளான நேற்று குயவர் திடலில் இருந்து மந்தை பொட்டலுக்கு மண்ணால் ஆன சுமார் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை (புரவிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்தனர்.

    2-வது நாளான இன்று மந்தை பொட்டலில் இருந்து 2 கி.மீ தூரமுள்ள சேவுகபெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் புரவிகளை சுமந்து சென்றனர்.

    மழை வேண்டி, விவசாயம் செழிக்க இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    • முதுகுளத்தூரில் செல்லியம்மன் கோவில் பூச்சொறிதல் விழா நடந்தது.
    • கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் மையப்பகுதியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு 46 -ம் ஆண்டு பூச்சொறிதல் விழா தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

    9-ம் திருநாளான நேற்று பக்தர்கள் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று செல்லியம்மன் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பூக்குழி திருவிழாவை காண ஆயிரக்கனக்கான பொதுமக்கள் திரண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு , தீயணைப்புத்துறை அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியில் சித்தண்ணன், கசுவம்மாள், மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கோவிலில் திருவிழா தொடங்கியது. அப்போது கோவில் சன்னதியில் இருந்து மின்னொளி ரதத்தில் சாமிகள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். உடன் பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பூசாரியிடம் பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலையில் சாமி, அந்த ஊர் குளத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கோவில் முன்பாக நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் வரிசையாக தரையில் அமர வைக்கப்பட்டனர். அப்போது கோவில் பூசாரி 'கோவிந்தா.. கோவிந்தா..' என்ற கோஷத்தை முழங்கியபடி பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார். அதன்பின்னர் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றன. மேலும் பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டில் வாங்கி தந்த கூரை புடவையை கசுவம்மாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அதனை உடுத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு முறையை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர்பவனி நடந்தது.
    • கோவில் முன்பு உள்ள கம்பத்தில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

    திண்டுக்கல் அருகே உள்ள கம்பிளியம்பட்டியை அடுத்த கே.ஆண்டியபட்டியில் மகாலட்சுமி அம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர்பவனி நடந்தது. பின்னர் தண்ணீர் துறை நீராடல் முடிந்து கோவிலுக்கு அம்மன் வந்தடைந்தார். தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கம்பத்தில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

    பின்னர் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய ஆண், பெண் பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக பக்தி பரவசத்துடன் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷம் முழங்கியபடி பூசாரி அங்கு வந்து, தேங்காயை எடுத்து பக்தர்கள் தலையில் உடைத்தார். விழாவில் கம்பிளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மலையாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
    • ஏராளமான பெண்கள் மடியேந்தி சாமியிடம் பிச்சை கேட்பது போல சாதம் பெற்று சென்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடியில் உள்ள சதுரகிரி மலையில் அமைந்துள்ளது மலையாண்டி சாமி கோவில். இந்த கோவிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வளர்பிறையில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இக்கோவிலின் இந்த ஆண்டு ஆடி திருவிழா நடந்தது. இதில் விதவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலையாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

    மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு மடிப்பிச்சை சோறு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி ஏராளமான பெண்கள் தங்கள் மடியேந்தி சாமியிடம் பிச்சை கேட்பது போல சாதம் பெற்று சென்றனர். மேலும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக மலையாண்டி சாமிக்கு வெள்ளி, சில்வர், இரும்பு முதலிய உலோகங்களால் ஆன வேல்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களி லிருந்தும், வெளி மாவட்டப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பூதகுடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படிப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர்.
    • பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள் காரணமாக இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் மூலமே பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதே போல படிப்பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர். கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மலர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆட்டம் போட்டும் உற்சாகத்தோடு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மலைக்கோவில் பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ள செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 8-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனை தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒருவர் பின் ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்த தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தொண்டி அருகே உள்ள வீரசக்தி கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • பக்தர்கள் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே அடுத்தகுடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூக்குழி உற்சவ திருவிழா வையொட்டி ஏராளமான பக்தர்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள்உள்பட 2,500க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் நடைபெற்றது. மாவிளக்கு ஏற்றியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.தீமிதி திருவிழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் திருவாடானையில் இருந்து ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவிழாவின்போது சில பக்தர்களிடம் இருந்து மர்ம நபர்கள் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் திருவிழாவின் போது திருட்டு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தவும், போக்குவரத்து நெரிசலை தவிக்க கூடுதலாக பஸ் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
    • 7-ந்தேதி சுயம்பு வராகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அது போல் ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுவது உண்டு. அதுபோல் இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    திருவிழாவின் 4-வது நாளான நேற்று கருவறையில் உள்ள மூலவரான சுயம்பு வராகி அம்மனுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

    தற்போது ஆஷாட நவராத்திரி விழா என்பதால் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெண்கள் அம்மியில் மஞ்சளை அரைத்து அதை அம்மனுக்கு கொடுக்கின்றனர். அதை அபிஷேகத்துக்கு பயன்படுகிறார்கள். மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும் என்பது பெண்களின் நம்பிக்கையாக உள்ளது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 7-ந்தேதி அன்று சுயம்புவராகி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுர சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இக்கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
    • தீமிதி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே மகிழியில் அமைந்துள்ள 32அடி உயரவாழ் முனீஸ்வரர் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 32அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆனி ஆண்டுத் திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    முக்கிய விழாவான தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பம்பை மேள வாத்தியங்களுடன் பூந்தேர் மற்றும் பூங்கரகம் புறப்பாடாகி அழைத்துச் சுற்றி வலம் வந்தது. அதைத்தொடர்ந்து வாழ்முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மனுக்கு சிறப்பு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புரவி எடுப்பு விழா நடைபெறவில்லை.
    • புரவி எடுப்பு விழாவை ஏராளமானோர் பார்த்து தரிசித்தனர்.

    சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற செகுட்டு அய்யனார், சூரக்குடியில் சிறைமீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில்களில் புரவி எடுப்பு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புரவி எடுப்பு விழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு புரவி எடுப்பு விழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக புரவி தயாரிக்கும் பணி கடந்த 3-ந் தேதி குலால வம்சத்தை சேர்ந்தவர்களிடம் பிடி மண் வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர்கள் குதிரை சிலை செய்ய நான்கு கரை பங்காளிகளுடன் இணைந்து சுமார் 40-க்கும் மேற்பட்டோர் 272 புரவிகளை எம்.சூரக்குடி புரவி பொட்டலில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தொற்று நோயில் இருந்து காப்பது உள்ளிட்டவைக்காக புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் தயாரான 272 புரவிகள் எம்.சூரக்குடி மையப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.அங்கு இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் சுவாமி அழைத்து புரவிகள் புறப்பட தயாரானது. மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் புரவிகளை சுமந்து கொண்டு புறப்பட்டனர். இதில் சிறைமீட்ட அய்யனாருக்கு அரண்மனை புரவி ஒன்றும் படைத்தலைவி அம்மன் கோவிலுக்கு மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை ஒன்றும், செகுட்டுஅய்யனார் கோவிலுக்கு அரண்மனை புரவி ஒன்றும் என 270 புரவிகள் புறப்பட்டன.

    சூரக்குடிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு புரவிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. புரவி எடுப்பு விழாவை ஏராளமானோர் பார்த்து தரிசித்தனர். கோவிலை சுற்றி உள்ள வளாக பகுதியில் புரவிகளை இறக்கி வைத்து தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே ரெங்கநாதன் காந்திமதி டிரஸ்ட் மூலம் குடிநீர், நீர்மோர் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×