search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.எஸ்.இ"

    நீட் தேர்வு தமிழ் வழி வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தைபிழைகள் உள்ளது. எனவே கருணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #NEET2018 #TamilQuestionPaper #CBSE
    சென்னை:

    ‘நீட்’ தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு, பிள்ளைகளை தேர்வு மையத்துக்கு அழைத்து சென்ற 2 தந்தைகள் மரணம் என ‘நீட்’ தேர்வு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

    இந்த குளறுபடிக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தான் காரணம் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ‘நீட்’ தேர்வு தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக அனைவருக்குமான தொழில்நுட்பம்(டெக் பார் ஆல்) என்ற அமைப்பின் நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வுக்காக கிராமப்புற மாணவர்கள் 3 ஆயிரம் பேருக்கு நாங்கள் இலவச பயிற்சி அளித்திருந்தோம். அவர்கள் தமிழ் வழி வினாத்தாளில் தேர்வு எழுதினர். இந்த வினாத்தாளை ஆய்வு செய்த போது 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன்படி இயற்பியல் கேள்வியில் 10 வார்த்தைபிழைகளும், உயிரியல் கேள்வியில் 50 வார்த்தைபிழைகளும், வேதியியல் கேள்வியில் 8 வார்த்தை பிழைகளும் உள்ளன.

    குறிப்பாக ‘வவ்வால்’ என்பதற்கு ‘வவ்னவால்’, ‘சிறுத்தை’ என்பதற்கு ‘சீத்தா’, ‘விதை வங்கி’ என்பதற்கு ‘வதை வங்கி’ ‘ரகம்’ என்பதற்கு ‘நகம்’, ‘பழுப்பு’ என்பதற்கு ‘பழப்பு’ போன்று வார்த்தைபிழைகள் உள்ளன.

    180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றுள்ளது. எனவே வார்த்தைபிழை ஏற்பட்டுள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வழங்க வேண்டும். இந்த குளறுபடிகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பிறமொழிகளை போன்று தமிழ் மொழியிலும் புத்தகங்களை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NEET2018 #TamilQuestionPaper #CBSE
    ×