என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி தடைகாலம்"

    • எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.
    • மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த தடை மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதுவரை எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள். மீன் பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறையும். எனவே மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1200 விசைப்படகுகள் உள்ளன. நேற்று மீன்பிடி தடை காலத்துக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரிகள், மீன்பிரியர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன்விலையும் அதிகரித்து இருந்தது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, வருகிற 15-ந்தேதி முதல் மீன்படி தடைகாலம் அமலுக்கு வருகிறது. இந்த காலத்தில் படகுகளை சீரமைப்போம். ஆழ்கடலுக்குள் மீனவர்கள் செல்லமாட்டார்கள் என்பதால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வருவது குறைந்துவிடும் என்றனர்.

    • மீனவர்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
    • மீனவர்கள் இந்த தடைக்காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

    அமராவதி:

    ஆந்திர அரசு வங்காள விரிகுடா கடலில், மாநில பிராந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க 2 மாத காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தள்ளது. இறால் உள்ளிட்ட மீன் இனங்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (61 நாட்கள்) 2 மாத காலம் இந்த தடை அமல்படுத்தப்படும். இந்த ஆண்டும் இதற்கான தடை உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மீனவர்கள் வரும் 15-ந்தேதி முதல் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது.

    "மீனவர்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் மீது அதிக அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    மீனவர்கள், இந்த தடைக்காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

    • மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
    • விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன் படிப்பதற்கு அனுமதியில்லை. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும். நாட்டு படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடைகாலம் பொருந்தாது. வழக்கம் போல் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தடைகாலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தடை காலத்தையொட்டி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரிதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். தடை காலம் தொடங்கியதால் அவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    மீன்பிடி தடை கால நாட்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் மூலமாக மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூந்தங்குழி, பஞ்சல், தோமையார்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் 2 ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்களுக்கு தடைகாலம் பொருந்தாது.

    • தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது.
    • விசைப்படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கருதி நாளை முதல் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளோம்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. எனவே விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக சென்னை மீன்பிடி துறைமுக விசைப்படகு சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    விசைப்படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கருதி நாளை முதல் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளோம். அரசால் தடை செய்யப்பட்ட கசார் இன மீன்களை பிடிக்க அனுமதி கிடையாது. இதை மீறும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.
    • இன்று நள்ளிரவு முதல் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில், மீன்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் 52 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

    இந்த நாட்களில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

    இதைதொடர்ந்து, நீண்ட கரை, தங்கசேரி, அழிக்கல் உட்பட மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலில் இருந்து கரை திரும்பினர். அவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியுள்ளனர்.

    • மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் இன்று வரை 61 நாட்கள் அமலில் உள்ளது.
    • மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் இன்று நள்ளிரவே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் இன்று (14-ந்தேதி) வரை 61 நாட்கள் அமலில் உள்ளது.

    இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் வழக்கமான உற்சாகத்துடன் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் செல்ல தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 1100 விசைப்படகுகள், 1500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால் இன்று நள்ளிரவே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து படகுகளில் ஐஸ்கட்டி, வலை, டீசல், ஒரு வாரத்துக்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதி 61 நாட்கள் தடைகாலத்திற்கு பின்னர் மீண்டும் சுறுசுறுப்பு அடைந்து உள்ளது. விசைப்படகுகளில் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் குறைந்தது ஒருவாரத்திற்கு பின்னரே கரை திரும்புவார்கள். எனவே அடுத்த வாரம் முதல் காசிமேட்டில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்தக் காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க தடைக்காலமாகும். அதன்படி இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி (இன்று) வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

    இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள். அந்தப் படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது. மேலும் விசைப்படகுகளில் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை ஏற்றும் பணியும் நடந்தது. சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன் பிடிக்கச் செல்ல தயாராக நிற்கும் விசைப்படகுகளில் டீசல் நிரப்பி வருகிறார்கள்.

    மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களைப் பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ்கட்டிகளை நிரப்பி வருகிறார்கள். இதனால் துறைமுகம் களைகட்டி காணப்படுகிறது.

    நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. நாளை ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்த விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். அப்போது சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, திருக்கை, நவரை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இவற்றை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இன்றே சின்னமுட்டம் துறைமுகம் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    • விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி மீனவர்கள் படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.
    • தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் மீன் பிடிக்க விசை படகுகளுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர்.

    அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்.

    நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும், கடலை வழிபட்டும் பின்னர் சென்றனர். இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டி புது பொலிவுடன் படகுகள் சென்றன.

    விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.

    தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.

    • தடைகாலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க மத்திய-மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தடை காலங்களில் படகு, மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் குடும்ப சூழ்நிலை கருதி வேறு வேலைகளுக்கும் சென்றனர்.

    இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்று இரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் இறங்குபிடி தளம் இன்று மீனவர்களின் வருகையால் களைகட்டியது.

    தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என பாம்பன் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ராமேசுவரத்தை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும், இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. எனவே மீன் பிடிப்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதன் காரணமாக தடைகாலம் முடிந்த நிலையிலும் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் ராமேசுவரம் மீனவர்களுக்கு இன்று வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் கடல் காற்று குறைந்து 17-ந்தேதி இயல்புநிலை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினத்தில் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
    • இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின.

    இதனால் கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.

    கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. கடமா எப்போதும் விற்கப்படும் விலையை விட ரூ.200 வரை குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.

    இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் இன்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குவதால் இன்னும் 2 மாதத்திற்கு இதே நிலைதான் இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகால் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிவிட்டனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் இங்குள்ள மீன் விற்பனை கூடம் இனி 1 ½ மாதத்திற்கு வெறிச்சோடி கிடக்கும். அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்கள், பைபர் படகுகளுக்கு தடை இல்லை என்பதால் அவர்கள் கடற் கரை யோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகமாகும் என்றனர்.

    • வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
    • சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை

    விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.

    மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினார்கள். இதனால் காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

    இந்நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க இன்று காலையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    மேலும் விலையை பொருத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், கவளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.

    • கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.
    • மீனவர்கள் கடலில் இறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகு கள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இதற்கிடையில் இந்த மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

     இதைத் தொடர்ந்து இந்த மீன்பிடி தடைகாலம் முடி வடைய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் விசைப் படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர்.

    மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகுதியை சீரமைத்து வந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் இறக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். பச்சை நிற வர்ணம் தீட்டு வது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். மீன்பிடி தடைகாலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைய இருப்பதை தொடர்ந்து வருகிற 15-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.

    இந்த விசைப்படகுகள் அன்று இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், திருக்கை, கைக்கொழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    2 மாதங்களுக்கு பிறகு வருகிற 15-ந்தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.

    ×