search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • கொஞ்சம் கூட பால் சேர்க்காமல் பால்கோவா.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    கலாகந்த் சுவீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்துவதற்கு இது ஒரு அற்புதமான இனிப்பாக இருக்கும்.

    கொஞ்சம் கூட பால் சேர்க்காமல் பால்கோவா செய்தால் எப்படி இருக்கும். என்ன மேஜிக் மாதிரி தோணுதா, ராஜஸ்தானில் ஃபேமசான கலாகந்த் ஸ்வீட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    பனீர்- 2 கப்

    கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்

    பால் பவுடர்- 3 ஸ்பூன்

    பாதாம் பருப்பு- 6 ( நறுக்கியது)

    நெய்- தேவையான அளவு

    ஏலக்காய் தூள்- சிறிதளவு

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பால் பவுடர் சேர்க்க வேண்டும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்க வேண்டும். இதனை கட்டி இல்லாமல் நன்றாக கலந்துவிட வேண்டும். அதன்பிறகு அதில் பனீர் துண்டுகளை கையால் மசித்து இதில் சேர்க்க வேண்டும். துருவ வேண்டாம். கையால் பிசைந்து சேர்த்தால் போதுமானது.(குறிப்பு மிதமான தீயில் வைத்து சமைக்க வேண்டும்.)

    பின்னர் இதில் ஏலக்காய் பொடி மற்றும் நெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை சிறிது இறுகி வரும்போது பாதம் துண்டுகளை கலந்து இறக்கலாம். இந்த கலவையை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒருமணிநேரம் வைத்திருந்து எடுத்தால் சூப்பரான ராஜஸ்தான் ஸ்பெஷல் கலாகந்த் ரெடி.

    • குக்கீஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • குக்கிகளை வீட்டிலேயே நாம் சுலபமாக செய்ய முடியும்.

    குக்கீஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குக்கிகளை வீட்டிலேயே நாம் சுலபமாக செய்ய முடியும். வீட்டில் தான் செய்தீர்கள் என்று யாரும் நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவை நிறைந்ததாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சர்க்கரை- 100 கிராம்

    வெண்ணெய்- 150 கிராம்

    முட்டை- 1

    வெண்ணிலா எசென்ஸ்- கால் டீஸ்பூன்

    மைதா மாவு- ஒன்றரை கப்

    சோள மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்

    உப்பு- ஒரு சிட்டிகை

    பால்- ஒரு டம்ளர்

    செய்முறை:

    இந்த பட்டர் குக்கி செய்வதற்கு முதலில் ஒரு மிக்சி ஜாரில் 100 கிராம் அளவு சர்க்கரை சேர்த்து அதனை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பவுலில் 150 கிராம் வெண்ணெய் சேர்க்கவும். இது உப்பு சேர்க்கப்படாத வெண்ணையாக இருக்க வேண்டும். அறை வெப்ப நிலையில் இதனை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். வெண்ணை மென்மையாகும் வரை அடிக்க வேண்டும்.

    அதன்பிறகு பொடியாக்கி வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதன்பிறகு ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து அனைத்தையும் கிளறி விட வேண்டும். இப்பொழுது இதற்கான மாவுகளை சேர்க்கலாம்.

    ஒன்றரை கப் அளவிற்கு மைதா மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒரு சல்லடையில் சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக கலந்து விட வேண்டும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தும் ஒட்டாமல் சேர்ந்து வந்ததும் இதனை ஒரு பைப்பிங் பேக்கில் சேர்த்து விருப்பமான வடிவத்திற்கு குக்கிகளை செய்து கொள்ளவும்.

    ஓவனை 175 டிகிரி செல்சியசில் சில நிமிடங்கள் ஃப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் குக்கிகளை வைத்து 14 நிமிடங்கள் கழித்து எடுத்தால் குக்கி தயாராகி இருக்கும்.

    ஓவன் இல்லை என்றால் ஒரு கடாயை முன்கூட்டியே சூடு செய்து மிதமான தீயில் வைத்து கடாயினுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் தயார் செய்து வைத்திருக்கும் குக்கிகளை தட்டில் வைத்து மூடி வைக்க வேண்டும். குக்கிகளின் ஓரம் நன்கு சிவந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். குக்கி ஆறியதும் எடுத்து பார்த்தால் மொறுமொறுப்பான பட்டர் குக்கி தயாராகி இருக்கும்.

    • பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
    • பலாக்காய் வைத்து சுவையான பிரியாணி.

    பொதுவாகவே அனைவருக்கும் பிரியாணி என்றாலே மிகவும் பிடிக்கும். பலரும் பல விதமான சுவையில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள். அந்தவகையில் அனைவரது வீட்டில் பொதுவாகவே இருக்கக்கூடிய பலாக்காய் வைத்து எப்படி சுவையான பிரியாணி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    பேபி பலாக்காய்

    தண்ணீர்

    நெய்

    பிரிஞ்சி இலை

    பட்டை

    ஏலக்காய்

    கிராம்பு

    வெங்காயம்

    தக்காளி

    மஞ்சள் தூள்

    மிளகாய் தூள்

    கரம் மசாலா

    உப்பு

    தயிர்

    கொத்தமல்லி

    புதினா

    பாஸ்மதி அரிசி

    உப்பு

    செய்முறை:

    பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும். பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசலா தூள் மற்றும் பிரியாணிக்கு தேவையானளவு உப்பு சேர்க்கவும். அடுத்து அதில் தயிர் மற்றும் பலாக்காய் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

    அதன்பிறகு புதினா மற்றும் கொத்தமல்லியை பிரியாணி மசாலாவில் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி அது சற்று சூடான பிறகு 350 கிராம் பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டும். அடுத்து அதை வடிக்கட்டி பலாக்காய் வேக வைத்ததுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக மற்ற பிரியாணி செய்வது போன்று செய்ய வேண்டும். சுவையான பலாக்காய் பிரியாணி தயார்.

    • ஷாகி துக்கடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    • ஒரு புதுமையான ஸ்நாக்ஸ் ரெசிப்பி

    பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் உங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையான ஸ்னாக்ஸ் செய்து தர வேண்டும். அதிலும் அந்த ஸ்னாக்ஸ் அவர்களுக்கு பிடிக்கின்ற வகையிலும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான்.

    நாவில் கரையும் பால் ரப்பிடியுடன், மொறுமொறுவென்று நெய்யில் வறுத்த ரொட்டியின் சுவையும், ஏலக்காயின் மணமும் சேர்ந்து இனிப்புப் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் ஷாகி துக்கடா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட்- 6

    மில்க்மெய்டு- ஒரு கப்

    ஏலக்காய் தூள்- தேவையான அளவு

    தேங்காய் தூள்- ஒரு கப்

    முந்திரி, பாதாம், பிஸ்தா- தேவைக்கேற்ப

    எண்ணெய்- பொறிப்பதற்கு

    செய்முறை:

    முதலில் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அரை லிட்டர் பால் நன்றாக வற்றி வரும் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு பவுலில் தேங்காய் தூள், பாதாம், முந்திரி, பிஸ்தா கலவை மற்றும் மில்க்மெய்டு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டிவிட்டு அதனை சப்பாத்தியை திரட்டுவது போல ஒவ்வொரு பிரெட் துண்டுகளையும் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பிரெட் துண்டுகளின் நடுவில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள கலவையை வைத்து உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த உருளைகளை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த ஷாகி துக்கடாக்களை ஒரு பிளேட்டில் வரிசையாக வைத்து அதில் நன்றாக காய்ச்சி ஆர வைத்த பால் அல்லது மில்க் மெய்டு கலவையை ஊற்றி பரிமாறினால் டேஸ்டியான, ரிச்சான ஷாகி துக்கடா தயார். பண்டிகை தினங்கள் மட்டுமின்றி பார்ட்டி நாட்களிலும் உங்களது வீடுகளில் செய்து அசத்துங்கள்.

    • வயிற்றுப்புண்ணிற்கு மிகவும் நல்லது.
    • புளிச்ச கீரை உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

    காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. புளிச்ச கீரையை குழம்பு, கூட்டு, துவையல் போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கிறது. அடிக்கடிக்கு புளிச்சக்கீரை பருப்பு செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும் வல்லமை புளிச்சக்கீரைக்கு உண்டு.

    தேவையான பொருட்கள்

    புளிச்ச கீரை- ஒரு கட்டு

    துவரம் பருப்பு- கால் கப்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 5

    பச்சை மிளகாய்- 5

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    பூண்டு- 10 (நறுக்கியது)

    தக்காளி- 1 (நறுக்கியது)

    புளி- சிறிதளவு

    பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    கொத்தமல்லி தழை- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குக்கரில் துவரம்பருப்பு, புளிச்ச கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து கலந்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் ஏற்கனவே வேகவைத்து எடுத்துள்ள புளிச்ச கீரை பருப்பு கடையலை இதில் சேர்க்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா பப்பு தயார்.

     இதனை சூடான சாதத்தில் நெய்விட்டு இந்த கோங்குரா பப்புவை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றுவதற்கு மிகவும் நல்லது.

    • பாக்கு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி சீக்கிரம் வெந்துவிடும்.
    • புளிக்குழம்பிற்கு மிளகு, சீரகப்பொடி சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்தால் வெஜிடபிள் போண்டா தயார். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு இது எளிய வழியாக இருக்கும்.

    * சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள பழைய தாள்களை கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

    * காபி டிகாஷன் போடுவதற்கு முன்பு சுடுதண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்தால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

    * அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

    * வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் சேனைக்கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * புளிக்குழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

    * இறைச்சியை வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

    * எண்ணெய் பலகாரங்களை டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

    * சீடை செய்யும்போது அதை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    * கிழங்குகளை சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் கொஞ்சம் புளியை வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

    • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
    • கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வெள்ளை அரிசியை உபயோகப்படுத்துவதைப் போல பண்டைய காலத்தில் பல வகையான அரிசிகளை உபயோகப்படுத்தினார்கள். அவ்வாறு அந்த அரிசிகளை உபயோகப்படுத்தி உண்ணும் பொழுது அவர்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த அரிசிகளில் ஒன்று தான் கருப்பு கவுனி அரிசி. கருப்பு கவுனி அரிசியை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

    கருப்பு கவுனி அரிசியை முறையாக உட்கொள்ளும் பொழுது மூளையை சிறப்பாக செயல்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மைகளை வெளியேற்றுகிறது. உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கும், நரம்பிற்கும் சிறந்ததாக திகழ்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சினைகள் அனைத்தும் நீங்குகிறது.

    தேவையான பொருட்கள்:

    கருப்பு கவுனி அரிசி -ஒரு கப்

    வெல்லம்- அரை கப்

    துருவிய தேங்காய் -கால் கப்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

    நெய் - 4 டேபிள் ஸ்பூன்

    முந்திரி மற்றும் திராட்சை -தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை சுத்தப்படுத்தி தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி அதை ஒரு பருத்தித் துணியில் கொட்டி, ஒரு மணி நேரத்துக்கு நிழலில் உலர்த்த வேண்டும். அதன்பிறகு அந்த அரிசியை வாணலியில் கொட்டி வாசனை வரும் வரை 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி மீண்டும் 5 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.

    மீண்டும் வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி, திராட்சையைப் போட்டு மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் பொடி, துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.

    அரிசியை மிக்சி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வெல்லத்தை சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.

    இந்த கலவையை வாணலியில் இருக்கும் கலவையுடன் கொட்டி மிதமான தீயில் நன்றாகக் கிளறி இறக்க வேண்டும். மீதமிருக்கும் நெய்யை லேசாக சூடுபடுத்தி இந்த கலவையில் ஊற்றி கலக்க வேண்டும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாகப்பிடிக்க வேண்டும். இப்போது சுவையான கருப்பு கவுனி அரிசி லட்டு தயார்.

    • கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கல்.
    • பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக செய்யலாம்.

    பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு. அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக சேர்க்கிறார்கள்... நாம் சேர்க்கும் எவற்றை சேர்ப்பதில்லை என்ற ரெசிபி உங்களுக்காக...

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 1 கப்

    வெல்லம் - 1/4 கிலோ

    தேங்காய் - 4 முதல் 5 பத்தை

    முந்திரி - தேவைக்கேற்ப

    உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப

    சுத்தமான பசு நெய் - 7 முதல் 8 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் அரிசியை நன்றாக கழுவிய பின்னர் நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குழைந்து வெந்த பின்னர் சாதத்தை வடிக்காமல் சல்லடை பாத்திரத்தில் போட்டு வேகவைத்த தண்ணீரை இறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் சாதத்தை அதே சட்டியில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கரண்டியால் மசித்து விட வேண்டும்.

    அதன்பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி அதை குழைந்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். சாதமும் வெல்லமும் நன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இரக்கலாம்.

    பொங்கலை தாளிக்க வேரு ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி உருகியதும் முந்திரி, உலர் திராட்சையை நெய்யில் நன்றாக வறுத்து பொன்நிறமானதும் அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதன்பின் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறுங்கள்.

    இறுதியாக கோவில் பிரசாதத்தில் மட்டும் சேர்க்கப் படும் பச்சை கற்பூரத்தை ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து கிளறினால் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார்.!

    குறிப்பு : கோவில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாசிப்பருப்பு சேர்க்க மாட்டார்கள். கட்டாயம் சேர்க்க வேண்டுமென விரும்பினால் தாராளமாக நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தற்போது கடைகளில் கிடைக்கும் வெல்லம் உப்பு சேர்த்துதான் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான வெல்லம் கிடைக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் சாதம் வடிக்கும் போதே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.. மேலும் சர்க்கரை பால் பொங்கலாக செய்ய விரும்புவர்கள் அரிசியை வெந்தது வடித்ததும் 1 கப் காய்ச்சிய பால் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.!

    • உருளைக்கிழங்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
    • உருளைக்கிழங்கு ஃபிரை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.

    உருளைக்கிழங்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. உருளைக்கிழங்கு ஃபிரை என்றாலே அனைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளைகிழங்கு சாப்பிடுவதால் நார்ச்சத்து உடம்பில் சேருகிறது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது. உருளைகிழங்கை வைத்து வீட்டிலேயே இந்திய-சீன உணவான ஹனி சில்லி பொட்டேடோ ஃபிரை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு – 6

    சோள மாவு – 1 ஸ்பூன்

    வெங்காயம் – 1/2 (நறுக்கியது)

    பச்சை குடைமிளகாய் – கால் கப் (நறுக்கியது)

    பூண்டு – 2 ஸ்பூன் பொடியாக (நறுக்கியது)

    இஞ்சி – 2 ஸ்பூன் பொடியாக (நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

    மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

    மிளகு தூள் – 1/2 ஸ்பூன்

    சோயா சாஸ் – 1 ஸ்பூன்

    சில்லி சாஸ் – 2 ஸ்பூன்

    தக்காளி கெட்சப் – 2 ஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    தேன் – கால் கப்

    வெங்காயத்தாள் கீரை – ஒரு கைப்பிடி

    வெள்ளை எள் – 1 ஸ்பூன்

    எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோலை நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் வைத்து கொள்ளவேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.

    சரியான பதத்திற்கு வரும்வரை உருளைக்கிழங்கை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து நன்றாக ஆறவிடவேண்டும். உருளைக்கிழங்கு ஆறியவுடன் சோள மாவை சலித்து உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

    மேலும் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் உருளைக்கிழங்கை அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து அடுப்பில் மற்றொரு பெரிய வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க விடவும். அதன்பின் நறுக்கிய பச்சை குடைமிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அவை அனைத்தும் சிறிது வதங்கியவுடன் அதனுடன் தேவையான அளவு சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அடுப்பை அனைத்து விட்டு சிறிது தேன் சேர்த்து கலந்து அதனுடன் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து மெதுவாக கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள், வெள்ளை எள்ளு சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ஹனி சில்லி பொட்டேடோ ஃபிரை ரெடி.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
    • நீரிழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம்.

    ஆரோக்கியமான இனிப்பு ஸ்நாக் ரெசிபியான ஓட்ஸ் சாக்லேட் பைட்ஸ் எப்படி செய்வது என தெரிந்துக்கொள்ளுங்கள்…

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ்- 2 கப்

    பேரிச்சை- 50 கிராம்

    ஆலிவ் விதைகள்- ஒரு ஸ்பூன்

    தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்

    பாதாம்- 20

    சாக்லேட்- 50 கிராம் (உருக்கிக்கொள்ளவும்)

    நட்ஸ்-அலங்கரிக்க

    செய்முறை:

    முதலில் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கொக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஓட்ஸ் மற்றும் பாதாமை ஒரு வாணலியில் இளம் வறுப்பாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வறுத்த ஓட்ஸ், பாதாம், ஆலிவ் விதைகள், தேங்காய் துருவல், பேரிச்சை போன்றவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதினை ஒரு சாக்லேட் மோல்டில் வைத்து அடுக்க வேண்டும். பின்னர் அதன் ஒவ்வொன்றின் மீதும் மேல்புறமாக உருகிய சாக்லேட் கலவையினை ஊற்றி அதன் மேல் நட்ஸ் வகைகளை தூவ வேண்டும். பின்னர் ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான அதேநேரம் ஹெல்தியான ஓட்ஸ் சாக்லேட் பைட்ஸ் தயார்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதில் சர்க்கரை இல்லை என்பதால் நீரிழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம். ஸ்கூலுக்கு ஸ்நாக்சாகவும் கொடுத்துவிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    • இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது.
    • உடல்நலத்துக்கு ஏற்றதா என்பது குறித்து பார்க்கலாம்.

    இன்று பெரும்பாலான யூடியூப் சேனல்களில் செய்து காண்பிக்கப்படும் மக்கானா, பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஹெல்த்தான ஸ்நாக்ஸ். இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் மக்கானா என்பது என்ன... எங்கிருந்து கிடைக்கிறது... உடல்நலத்துக்கு ஏற்றதா என்பது குறித்து பார்க்கலாம்.

    பொதுவாக மக்கானா, வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும். அப்பகுதி மக்களால் அதிக அளவு விரும்பிச் சாப்பிடப்படுகிறது. நம் ஊரிலும் இப்போது பரவலாகக் கிடைக்கிறது. பார்ப்பதற்கு வெள்ளையாக குட்டி காளான் போல இருக்கும், சுவைக்கும்போது பாப்கார்ன் சாப்பிடுவது போன்று இருக்கும்.

     இது, அல்லி மலர்களின் விதையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால் இது முழுக்க முழுக்க சைவம் என்றே சொல்லலாம். இதை, ஆங்கிலத்தில் ஃபாக்ஸ் நட்ஸ் என்பார்கள். இதை அப்படியே சற்று வறுத்து பாப்கார்ன் போல சிலரும், தயிரோடு சேர்த்தும், சிலர் அதில் குழம்பும்கூட செய்து சாப்பிடுவார்கள். தற்போதுதான் தென்னிந்தியாவில் இந்த மக்கானா அறிமுகமாகி உள்ளது. எனவேதான் ஆன்லைன் மற்றும் சூப்பர் மார்க்கெட்டு களில் மட்டுமே கிடைக்கிறது.

    வாங்கும்போதே மக்கானாவை அது ஏற்கெனவே சமைக்கப் பட்டதா இல்லையா எனக் கவனித்து வாங்க வேண்டும். சில இடங்களில் சமைத்து பாப்கார்ன் போல் விற்கிறார்கள். அதை நாம் அப்படியே சாப்பிடலாம். சமைக்காதது எனக் குறிப்பிட்டிருந்தால், அதை வாங்கி நாம் சமைத்து சாப்பிட வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, அவற்றில் இருந்தே தேவையான அளவு புரதச்சத்து உள்ளிட்ட இதர சத்துகள் கிடைத்துவிடும்.

    எப்படி பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோமோ அதேபோல் இதையும் நமது உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் இதை எடுத்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் ஏற்ற இதில் மக்னீசியம், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்றவை இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது.

    சிலர் உடல் எடையைக் குறைக்கவும் இதை எடுத்துக்கொள்கிறார்கள். ஏனெனில், இதில் கொழுப்புச்சத்து மிகக்குறைவாகவே இருக்கிறது. நமது சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

    • மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி.
    • மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.

    கோடி வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இது ஆந்திரா ரெசிபி என்பதால் மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன்- 500 கிராம்

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    தக்காளி- 2 (நறுக்கியது)

    இஞ்சி-பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    தனியா- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    முந்திரி பருப்பு- 10

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    லவங்கம்- 3

    பட்டை - 2

    ஏலக்காய்- 2

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கொஞ்சம் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும். தற்போது இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நுறுக்கி எண்ணெய்யில் போட வேண்டும். வெங்காயம் தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்ததாகத் தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் சிக்கனை போட்டு அனைத்தையும் கலந்து வறுக்க வேண்டும். தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறி விட்டு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். வேண்டும் என்றால் சிக்கனை வேக வைக்க சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்.

    மற்றொரு பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு சிக்கனை அதில் போட்டு பொறிக்க வேண்டும். சிக்கனில் முந்திரி பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும். எண்ணெய்யில் சிக்கன் நன்கு வறுபட்டால் சுவையான கோடி வேப்புடு தயார்.

    ×