என் மலர்
நீங்கள் தேடியது "வனவிலங்குகள்"
- கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது.
- வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று (21-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் வருகிற 26-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.
கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பிறகு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
- வனவிலங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு சென்று விடுகிறது.
- வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்குவதால் ஆறுகள் வறண்டு போகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து தாகத்தோடு தண்ணீரை தேடி மலை அடிவாரப்பகுதியை நோக்கி வந்து விடுகிறது.
கடந்த சில வாரமாக வனப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மரங்கள், செடிகள், புற்கள் உள்ளிட்டவை காய்ந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. அவை மலை அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுத்த வந்த வண்ணம் உள்ளன.
எனவே வன விலங்குகளின் தாகம் தீர்க்க ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் உடுமலை வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு சென்று விடுகிறது.
அத்துடன் உடுமலை- மூணாறு சாலையை வனவிலங்குகள கடந்து அணைப்பகுதிக்கு செல்வதும் சற்று குறைந்து உள்ளது. வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால் தாகத்தை தீர்ப்பதற்காக விளை நிலங்களை தேடி செல்ல வேண்டிய நிலையும் வனவிலங்களுக்கு குறைந்துள்ளது. வனவிலங்குகள் சாலையை கடக்கும் சூழல் ஏற்பட்டால் வாகனங்களை பொறுமை காத்து இயக்குமாறும், வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- தற்போது பகல் நேரத்திலும் விலங்குகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
- விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் உலா வந்த வனவிலங்குகள் தற்போது பகல் நேரத்திலும் உலா வரத் தொடங்கி உள்ளன.
இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வருகின்றன. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.
மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கரடி அங்கு மிங்கும் ஓடியது. பின்னர் அங்குள்ள மரத்தின் அருகே சென்று மரத்தை சுற்றியது. மரத்தில் உள்ள கிளைகளை இழுத்தும், தலையை மரத்தின் இடுக்கில் கொடுத்தும் விளையாடி கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் இடுக்கில் கரடியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் கரடி அலறியது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். கரடியின் தலை மரத்தின் இடுக்கில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கரடி தலையை மீட்பதற்காக போராடியது. அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் இடுக்கில் சிக்கிய தலையை மீட்டது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வருகிறது.
- வாகனஓட்டிகள் கரடியை வீடியோ பதிவு செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவாரங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களில் கைகாட்டி-மஞ்சூர் சாலை வழியாக ஊட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது பெங்கால் மட்டம்-கேரிகண்டி சாலையில் ஒரு கரடி சாலையோரம் நடந்துசென்றது.
தொடர்ந்து அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் அந்த கரடியை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர்.
இதனை பார்த்த கரடி "நான் சும்மா தானே போய்கிட்டு இருக்கேன், என்னை ஏன்டா தொந்தரவு பண்றீங்க" என்பதுபோல் கையெடுத்து கும்பிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குன்னூர் கிளண்டல் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வாசு என்பவரின் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் புகுந்தன. பின்னர் அவை சமையல் அறையில் இருந்த சமையல் எண்ணெயை ஆசை தீர குடித்து தீர்த்தன.
அப்போது வாசு தற்செயலாக சமையல் அறைக்கு வந்தார். அங்கு 2 கரடிகள் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தங்களை காட்டி வீட்டுக்குள் நின்ற கரடிகளை விரட்டினார். இருப்பினும் அந்த கரடிகள் சமையல் அறையில் இருந்த எண்ணை கேனையும் எடுத்துச் சென்றன.
- 5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான்.
- வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.
ஜிம்பாப்வே நாட்டின் வடக்குப் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன், சிங்கங்கள், யானைகள் மற்றும் பிற ஆபத்தான வனவிலங்குகளின் இருப்பிடமான மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான வனப்பகுதியில் ஐந்து நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
டினோடெண்டா பூண்டு [Tinotenda Pundu] என்று அந்த சிறுவன் டிசம்பர் 27 அன்று வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது சிறுவன் தொலைந்து போனான்
5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான். நீரிழப்பினால் பலவீனமான நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான். வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.

சிறுவன் ஒரு ஆற்றங்கரையில் குச்சிகளைப் பயன்படுத்தி தண்ணீரைத் தோண்டி, ட்ஸ்வான்ஸ்வா என்ற காட்டுப் பழத்தை உண்டு வாழ்ந்துள்ளான்.
சிறுவனின் கதையை விவரித்த உள்ளூர் எம்.பி. முட்சா முரோம்பெட்ஸி, சிறுவன் அலைந்து திரிந்து , திசை தவறி, ஆபத்தான மட்டுசடோன்ஹா பூங்காவிற்குத் தெரியாமல் சென்றுள்ளான்.
ஹாக்வேக்கு அருகிலுள்ள காட்டில் 5 நீண்ட, கொடூரமான நாட்களுக்குப் பிறகு. உமே நதியின் துணை நதி அருகே சிறுவனை ரேஞ்சர்கள் உயிருடன் கண்டுபிடித்தனர்.
வீட்டிலிருந்து 23 கிமீ தூரம் அலைந்து திரிந்து, கர்ஜனை செய்யும் சிங்கங்கள், யானைகளைக் கடந்து செல்வது, காட்டுப் பழங்களை உண்பது மற்றும் ஆபத்தான காட்டுப் பகுதிகளுக்கு மத்தியில் உறங்குவது, 8 வயது சிறுவனுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று விவரித்தார். மட்டுசடோனா பூங்காவில் சுமார் 40 சிங்கங்கள் உள்ளன.

துணிச்சலான பூங்கா ரேஞ்சர்களுக்கும், நியாமினியாமி சமூகத்தை சேர்ந்தவர்களும், ஒவ்வொரு நாளும் சிறுவன் கேட்கும்படி டிரம்ஸ் அடித்து தேடி கடைசியில் கண்டுபிடிக்க உதவியுள்ளார்கள் என்று நன்றி தெரிவித்த எம்.பி., டினோடெண்டாவைக் கவனித்து, அவரைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்கு ரேஞ்சர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.
- மனிதர்கள் உயிரிழப்பதும், காயம் அடைவதும் அடிக்கடி நடக்கிறது.
- கடந்த 5 ஆண்டுகளில் இது அதிகம் எனவும் கூறப்படுகிறது.
கோவை:
தமிழகத்தில் மனித-விலங்கு மோதல் என்பது அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் யானைகள் தாக்கி மனிதர்கள் இறக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அதுவும் குறிப்பாக மலைப்பகுதிகளான நீலகிரி மற்றும், கோவை மாவட்டங்களில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும், காயம் அடைவதும் அடிக்கடி நடக்கிறது.
நேற்று முன்தினம் கூட ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியான மைக்கேல் (வயது73), என்பவர் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் வால்பாறை நோக்கி சுற்றுலாவுக்காக பயணித்து கொண்டிருந்தார்.
வாட்டர் பால்ஸ் அருகே அருகே சென்றபோது சாலையை மறித்து நின்ற காட்டு யானை, இவரை திடீரென மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இப்படி தொடர்ந்து நாளுக்குள் நாள் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் காயம் அடைவதும், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை, மனித-வனவிலங்குகள் மோதலில் 80 பேர் இறந்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இது அதிகம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 2021-22-ம் ஆண்டு 40 பேரும், 2022-23 ம் ஆண்டு 43 பேரும், 2023-24 ம் ஆண்டு 62 பேரும், 2024- 25-ம் ஆண்டு 80 பேரும் மனித-வனவிலங்கு மோதலில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மனித-வனவிலங்கு மோதல் என்பது அதிகரித்து காணப்படுறது. 2024-25-ம் ஆண்டில் வனவிலங்குகளால் 259 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மனிதர்கள் 138 பேர் காயம் அடைந்துள்ளனர். 100-க்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.
மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனத்துக்கு அருகில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே வனவிலங்குகள் தாக்குதல் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்தினார்.
- "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார்.
வனவிலங்குகள் பாதுகாப்பிற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக, இந்திய பாதுகாவலர் பூர்ணிமா தேவி பர்மன்(45), டைம் பத்திரிகையின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
மொத்தம் 13 பேரை கொண்ட இந்த கவுரவமிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண்மணி பூர்ணிமா தேவி ஆவார்.
அசாமின் காம்ரூப் பகுதியில் பிறந்த பூர்ணிமா தேவி பர்மன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவர் விலங்கியல் துறையில் சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

2007 இல் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வீட்டு உரிமையாளர் அருகில் இருந்த நாரை கூடு கட்டிய மரத்தை வெட்டுவதை பார்த்தார். இதுகுறித்து உரிமையாளரிடம் கேட்டபோது நாரை கெட்ட சகுனம் என்றும் அவை நோய்களை பரப்பும் என்றும் பதிலளித்தார். இந்த பதில் பூர்ணிமாவின் வாழ்க்கையையே மாற்றியது.
அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்திவிட்டு, வன உயிர்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அதன் முக்கியத்துவம் குறித்த முழு நேர பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

நாரைகள் பாதுகாப்பிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், உள்ளூர் சமூகங்களிடம் வன உயிடீகள் பாதுகாப்பு விழ்ப்புணர்வு ஏற்படுத்துவற்காக "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பறவைகளின் கூடு கட்டும் இடங்களைப் பாதுகாத்தல், காயமடைந்த நாரைகள், பிற வன உயிரிகளுக்கு சிகிச்சை அளித்த மறுவாழ்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல் இந்த அமைப்பு மூலம் பெண்களுக்கு தறிகள் மற்றும் நூல் நெசவு இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் துணிகளை நெசவு செய்து அவற்றை விற்கும் தொழில்முனைவோராக பல பெண்கள் மாறியுள்ளனர்.

மூத்த வனவிலங்கு உயிரியலாளராக அறியப்பட்ட பூர்ணிமா தேவி, WiNN (இயற்கை வலையமைப்பில் பெண்கள்) அமைப்பின் இந்திய பிரிவு இயக்குநராகவும், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) நாரை, ஐபிஸ் மற்றும் ஸ்பூன்பில் பறவைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
2017 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து இந்தியப் பெண்களுக்கான மிக உயர்ந்த சிவில் விருதான 'நாரி சக்தி புரஸ்கார்' விருதை பூர்ணிமா தேவி பெற்றார். அதே ஆண்டில், இங்கிலாந்து இளவரசி ராயல் அன்னே வழங்கிய கிரீன் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் விட்லி விருதையும் பூர்ணிமா தேவி பெற்றார்.

- வனவிலங்குகள் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகளை தினமும் கேட்பது மனவேதனையை ஏற்படுத்துகிறது.
- விலங்குகளின் தாக்குதல்களில் 555 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் காட்டு யானைகள், சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களை தாக்கும் சம்பவம் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகிறது. அதிலும் பலர் உயிரிழந்ததால் மலை கிராம மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டி ருக்கிறது.
இந்தநிலையில் வன விலங்குகளால மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ்வது உரிமை மீறல் என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. கோன்னியில் உள்ள கூட்டு மக்கள் குழு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பிற மனுக்கள் மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நீதிபதி டயஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-
வனவிலங்குகள் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகளை தினமும் கேட்பது மனவேதனையை ஏற்படுத்துகிறது. கடந்த 6 ஆண்டுகளில் கேரளாவில் காட்டு விலங்குகளின் தாக்குதல்களில் 555 பேர் கொல்லப்பட்டதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இனியும் அலட்சியமாக இருக்க முடியாது. மனித உயிர் விலை மதிப்பற்றது. அன்புக்குரிவர்களின் மரணத்தை ஆறுதல் வார்த்தைகள் மற்றும் நிதி உதவி ஈடுசெய்யாது. வன விலங்குகளால் மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ வேண்டியிருப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவை.
இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்ற உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலர் தெரிவிக்க வேண்டும், இழப்பீட்டு திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவையும் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது.
- யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
- புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்கா–புரம்,சிங்காரா, மாயார், தெப்பக்காடு, கார்குடி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகம் தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது.இதனால், சாலை–யோரங்களிலேயே வனவிலங்குகள் அதிகளவு வலம் வருகின்றன. குறிப்பக, மசினகுடி - தெப்பக்காடு சாலை, தெப்பக்காடு -கூடலூர் சாலையில் காட்டு யானைகள் அதிகளவு வலம் வருகின்றன.
அதேபோல், புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஆச்சிரியத்திற்குள்ளாக்கி வருகிறது.
கடந்த மாதம் பெய்த மழையால் தற்போது மசினகுடி மற்றும் முதுமலை வனங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால், யானைகள், மான்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. குறிப்பாக, மசினகுடி - தெப்பக்காடு சாலையில் அதிகளவு மான் கூட்டங்கள் காணப்படுகிறது. அதேபோல், யானைகளும் அடிக்கடி வலம் வருகின்றன. இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, வாகனங்களில் இருந்தவாறு புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.
- கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது.
- பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானை, காட்டெருமை, மான், புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிறைவு பெறும் வரை, அதன் உடற்பாகங்களை பாதுகாத்து வருகின்றனர். இதேபோல் இயற்கையான முறையில் வனவிலங்குகள் உயிரிழக்கும் நிலையில், உடற்கூறு ஆய்வுக்கு பின் அதன் உறுப்புகளை வனத்துறையினர் சேகரித்து வைத்திருந்தனர்.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சரவணன், வனச்சரகர்கள் முன்னிலையில் ஓவேலி வனச்சரக பகுதியில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் எலும்புகள், இறைச்சிகள் உள்ளிட்ட பாகங்களை எரிக்கும் பணி கூடலூர் மாக்கமூலாவில் உள்ள வன அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
அதில் பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர். பின்னர் ஆவணங்களின் அடிப்படையில் உடற்பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் கூறும்போது, வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதி பெற்று 500 கிராம் வனவிலங்கு இறைச்சி, 30 கிலோ காட்டெருமை எலும்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது என்றார்.க
- நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர்.
- வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கார்த்திக் (வயது24). இவரிடம் வனவிலங்குகள் வேட்டையாட கூடிய நாட்டு வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து நேற்றிரவு கார்த்திக் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த கார்த்திக்கை போலீசார் பிடித்து, வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கார்த்திக் மீது வனத்துறையில் ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது.
- வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர், காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து ஈடுபட்டு வந்தனர்.
அப்போது டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும் நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் விரட்டிய போது, அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று போலீசாரை பார்த்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோட முயன்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை அச்சுறுத்தவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும், அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, வேட்டையன், நாராயணன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதேபோல் புளியம்பட்டி பகுதியிலும் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. மொத்தம் 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்தது தெரிய வந்தது.
இதுபோன்ற சட்ட விரோதமாக வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் சம்பந்தமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாகவோ, அல்லது தனது வாட்ஸ்அப் எண் 9655220100 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் காவல் அலுவலகத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.