search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்டர்வியூ"

    • தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது.
    • திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

    பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    புதிதாக வேலை தேடுபவர்களாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் சிறப்பான பொறுப்பிற்கு காத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி... இங்கே குறிப்பிட்டுள்ள திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான், நல்ல சம்பளத்தில், சிறப்பான பணியிடத்தில் உங்களுக்கான பணிச்சூழலைக் கட்டமைக்க முடியும்.

    1. தொழில்நுட்ப அறிவு

    தொழில்நுட்பம் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாததாகிவிட்டது. எனவே தொழில்நுட்ப திறன்கள் உங்களிடம் இருக்க வேண்டும் என்று முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். உதாரணமாக, எக்செல் மற்றும் ஜி-சூட் போன்ற மென்பொருள்களைக் கையாளும் திறன், மென்பொருள் அல்லாத துறைகளிலும் பயன்படுகிறது. அதனால் சரியான தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக்கொள்வதில் உங்கள் நேரத்தை முதலீடு செய்தால், நீங்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

    2. சிக்கல் தீர்க்கும் திறன்

    நிறுவனங்கள், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றன. அவை அனைத்தையும், ஒருவர் மட்டுமே தீர்த்துவிட முடியாது. எனவே, தங்களுடைய நிறுவனத்தில்/ குழுவில் பணியாற்றும், எல்லா பணியாளர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

    3. மேம்பாடு

    கற்றல் மற்றும் மேம்பாடு என்பது முடிவில்லாத கற்றல் செயல்முறையாகும். வேகமாக மாறிவரும் துறையில், புதிய விஷயங்களையும், சமீபத்திய வழிமுறைகள்/தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வது அவசியம். உதாரணமாக, நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்தால், புதிதாக அறிமுகமாகும் கோடிங் மொழிகளை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் நகர முடியும்.

    4. தொடர்பு திறன்

    உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியைக் காண தகவல் தொடர்பு திறன் மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் யோசனையை மக்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க தொடர்பு திறன் அவசியம். ஒரு நல்ல தொடர்பாளராக, எவ்வாறு பேசுவது, கருத்துகளைப் பரிமாறுவது, பிறர் கருத்தை கவனமாகக் கேட்டறிவது என்பது போன்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    5. நிறுவன திறன்கள்

    ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு வேலைகளைப் பற்றி சிந்திக்காமல், கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தலாம். உங்கள் முன்னுரிமைகளுக்கு ஏற்ப உங்கள் அட்டவணையைத் திட்டமிடுவது உங்களை உந்துதலாகவும், உற்பத்தித் திறனுடனும் உணர வைக்கும்.

    6. நேர மேலாண்மை

    நேரம் என்பது பணம் போன்றது. உங்கள் நேரத்தை திறம்பட கையாள முடியாவிட்டால், நீங்கள் உங்களது வருமானத்தை பணயம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் தனது நேரத்தை சிறப்பாக நிர்வகித்தால் மட்டுமே தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்யாமல் வெற்றி பெற முடியும். இது வேலை-வாழ்க்கை சமநிலையை கடைப்பிடிக்க உதவுகிறது.

    • எப்படி உடை அணிகிறீர்கள், எப்படி தோற்றம் தருகிறீர்கள் என எல்லாமே நேர்காணலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • நேர்காணலில் நீங்கள் பதில் சொல்வது போலவே, சிகை அலங்காரமும் முக்கியமானது.

    'நம்மை முதலில் பார்க்கும்போது, அடுத்தவர்களுக்குத் தோன்றும் எண்ணம் தான் நிலையானது' என்கின்றனர், உளவியல் நிபுணர்கள். வேலைவாய்ப்பு நேர்காணல்களைப் பொறுத்தவரை இது முற்றிலும் உண்மை.

    நீங்கள் எப்படி உடை அணிகிறீர்கள், எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படி தோற்றம் தருகிறீர்கள் என எல்லாமே உங்கள் நேர்காணலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாகப் பெண்களின் கூந்தல் அலங்காரம் எப்படி அமைகிறது என்பது, வேலை வாய்ப்பு அளிக்க உள்ள நிறுவன அதிகாரி மீது மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகிறது.

    நேர்காணலில் நீங்கள் பதில் சொல்வது போலவே, சிகை அலங்காரமும் முக்கியமானது. எந்த நிறுவனமும், சரியாக பராமரிக்கப்படாத கூந்தலைக் கொண்ட ஊழியர்களை விரும்புவதில்லை என்பதால், உங்கள் கூந்தல் அலங்காரத்தில் கவனம் செலுத்துங்கள்.

    குறைவான, அழகான மேக்கப்புடன், ஆர்ப்பாட்டம் இல்லாத, முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம் நீங்கள் சிறந்த தோற்றம் பெற்று விளங்க மிகவும் முக்கியமானதாகும்.

    நீங்கள் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து கொள்ளக்கூடிய ஆனால், தொழில்முறை தன்மையோடு அழகான தோற்றத்தைப் பெற உதவும் மூன்று எளிய கூந்தல் அலங்காரங்களை உங்களுக்காகத் தேர்வு செய்து வழங்குகிறோம்.

    * கொண்டை ( ஸ்லீக் லோ பன்)

    கொண்டை, அலுவலக நோக்கிலான உடைகளுடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய கூந்தல் அலங்காரம். ஏனெனில் இது சிக்கல் இல்லாதது மற்றும் காற்றில் பறக்கும் முடியையும் கட்டுப்படுத்துகிறது. கழுத்து அளவில் தாழ்வாகக் கொண்டை அமைத்துக்கொள்வது, சிக்கென, நவீனத்தன்மையோடு இருக்கும். அதே நேரத்தில் தொழில்முறை தன்மையையும் கொண்டிருக்கும்.

    இந்த தோற்றம் பெற...

    நல்ல சீப்பு கொண்டு தலைமுடியை வாரி, தலை முடி அனைத்தையும் ஒன்றாக்கி, உங்கள் கழுத்து அளவில் குதிரை வாலாக அமைத்துக்கொள்ளவும். இந்த குதிரை வால் பின்னலைச் சுருட்டி கொண்டையாக்கி, 'பின்' குத்திக்கொள்ளவும். சிடுக்கு உள்ள முடி எனில், செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி சீராக்கி கொள்ளவும்.

    * குதிரை வால் (போனி டெயில்)

    சரியான முறையில் அமைத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு நேர்காணலுக்குக் குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காரத்திற்கு நேர்த்தியான தோற்றம் தேவை. ஆன்டி பிரிஸ் கிரீம் (anti frizz cream) அல்லது ஸ்டலிங் பொருள் மூலம் இதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

    இந்த தோற்றம் பெற...

    உங்கள் தலைமுடியை நேராக்கி, தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும். தலைமுடியை மொத்தமாக இறுகப்பற்றி குதிரை வாலாக்கி, உங்களுக்கு விருப்பமான உயரத்தில் அதை சுற்றி இறுக்கமாக்கிக் கொள்ளவும். உங்கள் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து கொஞ்சம் முடி எடுத்து, அதை கூந்தல் அலங்காரத்தைச் சுற்றி அமைத்து நேர்த்தியான தோற்றத்தை உண்டாக்கிக் கொள்ளவும்.

    * முன்பக்க தலைமுடி (டிவிஸ்டட்)

    இந்த கூந்தல் அலங்காரம் மிகவும் நேர்த்தியாகத் தோன்றக்கூடியது, உடனடியாக தொழில்முறை தோற்றம் தரக்கூடியது. இந்த எளிதான கூந்தல் அலங்காரத்துடன், கண் அலங்காரம் மற்றும் நியூட் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டால் இன்னும் அசத்தலாக இருக்கும்.

    இந்த தோற்றம் பெற...

    உங்கள் தலைமுடியை டிரையர் கொண்டு நன்றாகக் காய வைத்து, கீழ்ப்பகுதியில் சுருள் முடியை உருவாக்கிக் கொள்ளவும். சீப்பு கொண்டு முன்பக்க முடியை அமைத்து, அதைப் பின்பக்கமாக இழுத்து, 'பின்' குத்திக்கொள்ளவும். செட்டிங் ஸ்பிரே மூலம் 'பினிஷ்' செய்யவும்.

    • ஒரு ரெஸ்யூம் அதிகபட்சமாக இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும்.
    • நம் ரெஸ்யூமை படிப்பவர் அதற்கு 20 முதல் 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார்.

    வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, 'ரெஸ்யூம்' அடிப்படையில்தான் உயரதிகாரிகள் உங்களை மதிப்பீடு செய்வார்கள். அப்படிப்பட்ட ரெஸ்யூமை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. நட்பு வட்டத்தில் கிடைக்கும் ரெஸ்யூம் மாடல்களை கொண்டு, விண்ணப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நல்ல வேலையை வாங்கி தர இருக்கும் ரெஸ்யூம்களை பற்றி தெரிந்து கொள்வோமா...! குறிப்பாக, ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்?, அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?, எப்படி தயாரிக்க வேண்டும்?, எத்தனை பக்கம் இருக்க வேண்டும்.... போன்ற தகவல்களை எல்லாம் இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    * என்னென்ன வகையான ரெஸ்யூம்கள் இருக்கின்றன?

    ரெஸ்யூம்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை...

    1. ரிவர்ஸ் குரோனாலாஜிக்கல் ரெஸ்யூம்

    வேலைகளில் முன் அனுபவமுள்ளவர்கள் இது மாதிரியான ரெஸ்யூம்களை பயன்படுத்துவது நல்லது. இந்த ரெஸ்யூமில் தற்போது செய்யும் வேலை விவரங்களுடன் ஆரம்பித்து, மற்ற விவரங்களை அடுத்தடுத்து சொல்லலாம்.

    2. பங்ஷனல் ரெஸ்யூம்

    முதலில் கல்வி விவரம், கூடுதல் திறன், பணி அனுபவங்களை குறிப்பிட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து தெரியப்படுத்தலாம்.

    3. ஹைபிரிட் ரெஸ்யூம்

    மேலே சொன்ன இரண்டு வகையான ரெஸ்யூம்களின் கலவையாக இருப்பதுதான் ஹைபிரிட் ரெஸ்யூம். இதன் முக்கியமான நோக்கம், ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதுதான். ஒரு ரெஸ்யூமை ஈர்க்கும்படியாக தயார் செய்தாலே போதும், அது தன் கடமையை கச்சிதமாக செய்துவிடும்.

    * எத்தனை பக்கம் இருக்க வேண்டும்..?

    ஒரு ரெஸ்யூம் அதிகபட்சமாக இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து விவரங்களையும் அடக்கி விடுவது நல்லது. நம் ரெஸ்யூமை படிப்பவர் அதற்கு 20 முதல் 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார். எனவே, இரண்டு பக்கத்திற்குள் அனைத்து தகவல்களையும் தெளிவாக அடக்குவது நல்லது.

    * எப்படி தயாரிப்பது..?

    ரெஸ்யூமின் முதல் பக்கத்தில் உங்களுடைய பெயர், இ-மெயில் ஐ.டி., செல்போன் நம்பர் ஆகியவை இருந்தால் போதுமானது. இதன் மூலம் நிர்வாகம் உங்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அதே சமயம், உங்களது இ-மெயில் முகவரி பேன்ஸியாக இருக்கக்கூடாது. உங்கள் பெயரை மட்டும் முன்னிறுத்தும் வகையில் இ-மெயில் ஐ.டி.யை தயார் செய்து கொள்ள வேண்டும். இதே போல், உங்களது மார்பளவு புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து அதனை, ரெஸ்யூமின் வலது அல்லது இடது ஓரத்தில் வைக்க வேண்டும்.

    இ-மெயிலுக்கு குறிப்பிட்டது போலவே, உங்களது புகைப்படமும் உங்களது தரத்தை எடுத்துரைக்க வேண்டும். போட்டோவை பார்க்கும் போதே அதில் ஒரு உத்வேகம் தென்பட வேண்டும். செல்பிக்கு போஸ் கொடுப்பது போல் இருக்கக்கூடாது. ஒரு நிர்வாகத்தில் எந்த துறைக்கு விண்ணப்பிக்க போகிறீர்கள் என்பதை மிகச்சுருக்கமாக இரண்டே வரியில் எழுத வேண்டும்.

    ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் உண்மையானதாக இருக்கவேண்டும். மற்றவர்களை கவர எந்த பொய்யும் சொல்லக்கூடாது. உங்களைப் பற்றிய முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டலாம். வித்தியாசப்படுத்திக்காட்ட தடித்த (Bold) எழுத்துகளில் எழுதலாம்.

    முதல்முறை வேலைக்கு விண்ணப்பிப்பவர் எனில், உங்கள் கல்வி சார்ந்த விவரங்களையும், ஏற்கனவே வேலை செய்தவராக இருந்தால் ஏற்கனவே பார்த்த வேலை விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தால் அதையும் ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டியது அவசியம். நாம் குறிப்பிடாவிட்டால் மனிதவள அதிகாரி அதுபற்றி கேட்டு, அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    இப்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, ஏற்கனவே வேலை செய்த அலுவலகங்களுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக விவரங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றன.

    ஒரு நிறுவனம் ரெஸ்யூமை எந்த பார்மெட் வழியாக (இ-மெயில், பேக்ஸ், போஸ்ட் போன்றவை) அனுப்ப வேண்டும் என்கிறதோ, அதன்படி அனுப்புவதே நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பிய ரெஸ்யூம் நிறுவனத்தின் பார்வைக்கு செல்ல தாமதமாகலாம்.

    * வேலைக்கு ஏற்ற மாதிரி..!

    நாம் எந்த வேலைக்குச் செல்கிறோமோ, அந்த வேலைக்கு ஏற்றமாதிரி நம் ரெஸ்யூம் இருப்பது அவசியம். ஒரே மாதிரியான ரெஸ்யூமை அனைத்து வேலைக்கும் பயன்படுத்துவது நல்லதல்ல. உதாரணத்திற்கு, ஏற்கனவே ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலை செய்த ஒருவர் மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்காக தன் ரெஸ்யூமை அளிக்கிறார் எனில், அதில் ஏற்கனவே வேலை செய்த விவரங்களை, அந்த நிறுவனம் உங்களால் அடைந்த லாப விவரங்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். அப்படி குறிப்பிடும்போது செய்வினை (Active) சொற்களை பயன்படுத்துவது நல்லது.

    * இணையதளங்கள்

    முன்பெல்லாம், ரெஸ்யூம் தயாரிப்பது, மிகவும் சவாலான வேலை. நண்பர்கள், உறவினர்கள் தயாரித்து வைத்த ரெஸ்யூம்களை வாங்கி, அதில் நம்முடைய விவரங்களை நிரப்பி, தயாரிப்போம். ஆனால் அந்த நிலைமை இன்றில்லை. கூகுளில் ரெஸ்யூம் என்று தட்டினால், பல நூறு இணையதளங்கள் வந்து நிற்கின்றன. அதில் ஏற்கனவே தயாரித்த ரெஸ்யூம் மாடல்களில் தொடங்கி, உங்களுடைய கற்பனைக்கு ஏற்ப தயாரித்து கொடுக்க காத்திருக்கும் இணையதளங்கள் வரை எல்லாவற்றையும் இலவசமாகவே பயன்படுத்த முடியும். இயல்பான ரெஸ்யூம்கள் இலவசமாகவும், ஒருசில ரெஸ்யூம்கள் சில நூறு ரூபாய்களிலும் கிடைக்கின்றன. இதன் மூலம், யாரும் தயாரிக்காத புதுமையான மற்றும் கற்பனை திறன் நிரம்பப்பெற்ற ரெஸ்யூம்களை, உங்களால் உருவாக்க முடியும். வேலை தேடிச் செல்லும் நிறுவன அதிகாரிகளை 'இம்பிரஸ்' செய்ய முடியும்.

    * ரெஸ்யூமே...!

    'நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்றும், 'ரெஸ்யூமே' என்று உச்சரிக்கிறோம். பயோடேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூம்ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர். பயோடேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவலர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தலாம். 'கரிகுலம் விட்டே' என்பது உயர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூம் என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவது.

    • விண்ணப்பங்களில் உங்களின் தகுதி, திறமைகளை ‘ஹைலைட்' செய்யுங்கள்.
    • நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே, அது நடத்தப்படும்.

    தனியார் துறைகளில், இப்போது புதுமையான நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. நமக்கு பழக்கமான நேர்காணல் முறையிலும், பழக்கமில்லாத புதுமையான நேர்காணல் முறையிலும் தேர்வு நடத்தப்பட்டு, அதற்கு பிறகுதான் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தவகையில், தனியார் துறைகளில், சமீபகாலமாக புழக்கத்தில் இருக்கும் ஒருசில நேர்காணல் முறைகளையும், அதில் கலந்து கொள்ள ஆயத்தமாகும் முறைகளையும் இந்த கட்டுரையில் படிக்கலாம்.

    சம்பந்தப்பட்ட பதவிக்கு ஏற்ற குறைந்தபட்சத் தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் இந்த 'ஸ்க்ரீனிங் இன்டர்வியூ'வின் நோக்கம். இங்கு உடல் மொழி, அதீத பணிவு இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரு காலி இடத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவியும் சமயத்தில், உங்களின் 'விண்ணப்பத்தை' மிக ஆழமாக ஆராய்வார்கள். அதில் சிறு சந்தேகம் தென்பட்டால் கூட, உங்களை நீக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. 'ஓவர் குவாலிபைட்' ஆக இருக்கிறீர்களா என்பது முதல் உங்கள் பணி அனுபவங்கள் வரை அனைத்தையும் வடிகட்டுவதுதான் இந்த நேர்காணல்.

    விண்ணப்பங்களில் உங்களின் தகுதி, திறமைகளை 'ஹைலைட்' செய்யுங்கள். இந்த இன்டர்வியூவில் சுற்றி வளைக்காமல் நேரடியான, தேவையான பதில்களை மட்டும் அளிக்கவும். தொலைபேசி மூலமாக அவர்கள் இன்டர்வியூ செய்யும்போது, குறிப்பு எடுத்துக்கொள்ள கையில் பேனா மற்றும் காகிதத்துடன் தயாராக இருங்கள். ஏனென்றால், நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே, அது நடத்தப்படும்.

    * டைரக்டிவ் ஸ்டைல் நேர்காணல்

    இப்படித்தான் நேர்காணல் செய்யப்போகிறேன் என்று எந்தவிதத் திட்டங்களும் முடிவுகளும் இல்லாமல் நடக்கும் நேர்காணல் முறை இது. இங்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நேர்காணல் செய்வார்கள். உங்களுக்கு கேட்கப்பட்ட அதே கேள்வி மற்றவரிடமும் கேட்கப்பட வேண்டும் என்ற நியதி இல்லையெனினும், எல்லோரிடமும் ஒரே கேள்வியை முன்வைக்கும்போது நீங்கள் அனைவரும் தருகிற பதில்களை அப்போதே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

    கொஞ்சம் கடினமாகவே இந்த முறை நேர்காணலின்போது நடந்துகொள்வார்கள். இதனால் அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்க வேண்டாம். ஆயினும் இன்டர்வியூ செய்பவர் உங்கள் மேற்பார்வையாளர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    * நடத்தை நேர்காணல்

    நீங்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்கு மனதளவிலும், நடத்தை அளவிலும் தகுதியானவரா என்பதை ஆராய இந்த வகை நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகை நேர்காணல்களில் படிப்பு என்பதை விட, உங்கள் நடத்தைதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். அதனால் நீங்கள் நீங்களாக இருங்கள். படிக்கும்போதும், முன்னர் பார்த்த வேலையின்போதும் நீங்களாக மேற்கொண்ட சில முனைப்புகளை எடுத்துக்கூறுங்கள். அவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சமூக நலன் சார்ந்தோ கூட இருக்கலாம். உங்களின் அனுபவங்களை 'வளவள' என்று கூறாமல், இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது.

    * உணவு இடைவேளை நேர்காணல்

    நேர்காணல் செய்பவர் உங்களை சாப்பிட அழைத்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் ஏதாவது ஒரு கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் பதறுவீர்கள். சாப்பிடவும் வேண்டும், அதே சமயம் பதிலும் சொல்ல வேண்டும் என்கிற அந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களின் சாமர்த்தியம் நிர்ணயிக்கப்படும். மேலும், பல தனிப்பட்ட விஷயங்களைப் பேசவும் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பவரை தங்கள் நிறுவனத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க, நடத்தப்படும் 'மீல் டைம் இன்டர்வியூக்கள்' கார்ப்பரேட் உலகில் மிகப் பிரபலம்.

    இந்த வகை நேர்காணலின்போது உங்களை ஒரு விருந்தினராக கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் சாப்பிட ஆரம்பிக்கும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். அதே போன்று அவர் சாப்பிடாமல் இடைவெளி விடும்போது நீங்களும் இடைவெளி விடுங்கள். அவர் எதை ஆர்டர் செய்கிறாரோ, அதை எடுத்துக்கொள்வது நல்லது. உங்களை ஆர்டர் செய்யச் சொன்னால், 'லைட்'டாக ஆர்டர் செய்யவும். உணவு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவிக்க மறக்க வேண்டாம்.

    * மனவலிமை நேர்காணல்

    உங்களின் பொறுமையை சோதிக்கவே இந்த வகை நேர்காணல் நடத்தப்படும். நீங்கள் சொல்கிற எந்த ஒரு தகவலுக்கும் எந்தவிதமான எதிர்வினையும் காட்டாமல் இருப்பது, முறைத்துப் பார்ப்பது, செய்ய முடியாத காரியங்களை செய்யச் சொல்வது என கிட்டத்தட்ட ஒரு கல்லூரி 'ராகிங்' போன்றது இந்த இன்டர்வியூ. எந்த கஷ்டத்திலும் நீங்கள் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இதன் அடிநாதம்.

    இந்த இண்டர்வியூவில் கையாளும் விஷயங்கள், ஒரு விளையாட்டுதானே தவிர, பெர்ஷனலாக உங்களை அவமதிக்கும் செயல் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். நிதானமாக இருங்கள். படபடப்போ, பயமோ இருந்தால் நீங்கள் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேராது.

    * இன்பர்மேஷனல் நேர்காணல்

    தங்கள் நிறுவனத்தில் தற்சமயம் வேலை காலி இல்லை என்ற நிலை இருந்தாலும், நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்களை ஒரு சந்திப்புக்கு அழைப்பார்கள். அந்த சந்திப்பில் உங்களுக்குத் தெரிந்ததையும், அவர்களுக்குத் தெரிந்ததையும் பரிமாறிக்கொள்வீர்கள். உங்களுக்கு குறிப்பிட்ட அந்தத் துறையை பற்றி என்ன தெரியும், அந்தத் துறையில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை எல்லாம் நிறுவனத்தினர் அறிந்துகொள்ளவே இந்த முறை நேர்காணல் பின்பற்றப்படுகிறது. இந்த நேர்காணலுக்கு செல்லும் போது துறை சார்ந்தும், நிறுவனம் சார்ந்தும் என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை முதலிலேயே 'ஹோம் வொர்க்' செய்துகொண்டுபோவது நல்லது.

    • ‘காபி இன்டர்வியூ’ என்றால், முதல் கட்ட தேர்வு என்றே பொருள்.
    • உங்களுக்கான தகுந்த மார்க் போடுவதுதான், இதன் அடிப்படை.

    பழக்கமான நபர்களே, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருந்தாலும், நேர்காணலுக்கான விதிமுறைகளை கடைபிடியுங்கள். இரண்டு பிரதி ரெஸ்யூம் அவசியம். கூடவே, பி.டி.எப்.ரெஸ்யூமும் மொபையில் இருக்கட்டும்.

    பெரும்பாலும் 'காபி இன்டர்வியூ' என்றால், முதல் கட்ட தேர்வு என்றே பொருள். இன்று முக்கிய பொறுப்புகளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க, ரொம்பவும் இயல்பாக சந்தித்து உரையாட விரும்புவதன் தாக்கமாகவே, இந்த காபி இன்டர்வியூ நுழைந்திருக்கிறது. பெரும்பாலும் ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் உயர்ந்த பதவிக்கு விண்ணப்பிக்கும்போதும், பழைய குழுவில் இருந்து புதிய குழுவிற்கு மாற்றம் செய்யப்படும்போதும், இந்த காபி நேர்காணல் நிகழும். ஒரு கப் காபி குடித்துக்கொண்டே, உங்களின் நிறை-குறைகளை ஆராய்ந்து, உங்களுக்கான தகுந்த மார்க் போடுவதுதான், இதன் அடிப்படை. சரி, இதில் எப்படி நடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்வோம்.

    நீங்கள், காபி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால், பதற்றப்படாமல் அணுகுங்கள். வழக்கமான நேர்காணல் இல்லை என்பதால் பணியாற்றும் நிறுவனம் குறித்து பேச்சின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுப் பேசவேண்டியதில்லை. எனவே சீரியசாக இல்லாமல், ரொம்ப இயல்பாக நடந்து கொள்ளுங்கள். சாதாரண ஒரு கப் காபிதான். ஆனால் அதனை உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாக மாற்றிக்கொள்வது உங்கள் 'யுனிக்' சாமர்த்தியம்.

    பார்மல் உடையோ இல்லை கேஷ்வல் உடையோ.. உங்களுக்கு பொருத்தமாக இருப்பதை கொண்டு, உங்களை கனகச்சிதமாக காட்டிக்கொள்ளுங்கள். அவர்களின் தேவை பற்றி அறிவதோடு, புதிய பணிக் குழுவில் உங்கள் பங்கு என்ன?, கம்பெனியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் என விவேகத்துடன் தயாரானால் அட்டகாசம்.

    வழக்கமான நேர்காணலில் கேட்கமுடியாத கேள்விகளை காபி இன்டர்வியூவில் கேட்க முயற்சிக்கலாம். அதற்கும் தயாராக இருங்கள். பிரயோஜனமாக, நிறுவனத்தைப் பற்றி, நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள நபர்களைக் குறித்து கேட்டால், மனதில் தோன்றிய உண்மைகளை மறைக்காமல் கூறுங்கள். இந்த மாதிரியான கருத்துகளை கேட்பதற்குகூட, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருக்கலாம்.

    பழக்கமான நபர்களே, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருந்தாலும், நேர்காணலுக்கான விதிமுறைகளை கடைப்பிடியுங்கள். இரண்டு பிரதி ரெஸ்யூம் அவசியம். கூடவே, பி.டி.எப்.ரெஸ்யூமும் கைவசம் இருக்கட்டும்.

    நேர்காணல் செய்பவர்களுக்கு முன்னரே காபி ஷாப்பிற்கு வந்துவிட்டால், உடனே காபியை ஆர்டர் செய்ய வெய்ட்டரைத் தேடக்கூடாது. காபியும் கையுமாக, நேர்காணல் செய்பவருடன் அறிமுகமாவது சங்கடமில்லையா?. கூடவே, நேர்காணலின் கதாநாயகன் அவர் என்பதால், அவரது வருகைக்கு பிறகு உணவுகளை ஆர்டர் செய்யுங்கள்.

    அடுத்ததாக வேலை உங்களுக்கு பொருத்தமாக இல்லையென்றால், உங்கள் எதிர்பார்ப்பை அவரிடம் இ-மெயில் வழியாக தெரிவிக்கலாம். இதன்மூலம் நேர்மையான மனிதர் என்ற இமேஜ் அவர் மனதில் உங்களுக்கு கிடைக்கலாம்.

    ×