என் மலர்
நீங்கள் தேடியது "சிவராத்திரி"
- இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
- ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.
எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருகின்றது. அன்றைய தினம் இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள் தோறும் நற்பலன்கள் நடை பெறும். சிவராத்திரி அன்று சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்துசேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்து, அதிகாலையில் நீராடி, பின்னர் உணவருந்துவது உத்தமம்.
திருவண்ணாமலையில் ஈசனின் அடி முடியைத் தேடி அலுத்துத் திரும்பிய பிறகு, அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்வு நடைபெற்றது ஒரு சிவராத்திரி நாளில்தான்.
சிவபெருமான் வீற்றிருந்து அருள்வழங்கும் கோவில் ஒன்றில், எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடியது. அங்கு கருவறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் தீபம் அணையும் தருவாயில் இருந்தது. எலிக்கோ விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யின் வாசம் மூக்கைத் துளைத்தது. இதனால் அது விளக்கின் அருகில் சென்று, அணையும் நிலையில் இருந்த விளக்குத் திரியில் தன் மூக்கை வைத்து உரசியது. இதில் விளக்கில் இருந்து வெளிப்பட்ட திரியில், தீ நன்றாக பிடித்து விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அந்த எலியை, மறு பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக இறைவன் பிறக்கச் செய்தார். எலி, விளக்கைத் தூண்டி விட்டதும் ஒரு சிவராத்திரி நாள் என்று புராணம் சொல்கிறது.
ஒரு முறை உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய கரங்களால் மூடியதால் உலகமே இருள்சூழப்பெற்றது. அந்த நாளே 'சிவராத்திரி' என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்தவர்களுக்கெல்லாம் ஒளி கொடுக்க, சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். சிவராத்திரி அன்று, சிவலிங்கத் திருமேனியை வலம்புரி சங்கால் அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து, 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.
அன்றைய தினம் சனிப்பிரதோஷமும் இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த வருட மஹா சிவராத்திரி விளங்குகிறது,
'ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்
- சிவராத்திரி விழாவுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 40-க்கும் அதிகமான கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவில் சார்பில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதன்படி விழா நடைபெறுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தஞ்சை வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், தஞ்சை பெரியகோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நெல்லை நெல்லையப்பர் கோவில், கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வர் கோவில் ஆகிய 5 இடங்களில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகேயுள்ள திலகர் திடலில் மகா சிவராத்திரி விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏறத்தாழ 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான நிதியை திருக்கோவில் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விழாவை அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ நடத்தவில்லை.
அந்தந்த கோவில் நிர்வாகம் தான் நடத்துகிறது.
யானையை நாம் காட்டில் இருந்து கொண்டு வந்து வளர்க்கக் கூடாது. யாராவது நன்கொடையாளர்கள் யானையை கொடுத்தால் கோவிலில் (தஞ்சை பெரிய கோவிலில்) வளர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள 1,250 திருக்கோவில் களுக்கும், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 திருக்கோவில்களுக்கும் என மொத்தம் 2,500 கோவில்களுக்கு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.1 லட்சம் வீதம் என இருந்ததை தலா ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.50 கோடியை ஒரே தவணையில் தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்தார்.
ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் குழு அமைக்க அரசாணை வெளியிடப்படும். மற்ற கோவில்களுக்கு மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களின் பரிந்துரை அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.
இதுவரை 22 மாவட்டங்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரத் துக்கும் அதிகமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 40-க்கும் அதிகமான கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்பின்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கல்யாணசுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சதய விழாக்குழு தலைவர் செல்வம் மற்றும் அதிகா ரிகள் உடன் இருந்தனர்.
- 13-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது.
- தற்போது கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்காக கோவில் வளாகத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் மின் விளக்கு அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜல விநாயகர் கோவில் அருகில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலை அரங்கம் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் வரிசைகளில் சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்போது கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் புதிதாக மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
கோவில் நுழைவு வாயிலில் இருந்து தட்சிணாமூர்த்தி சன்னதி வரை உள்ள வரிசை, மற்றொரு வரிசையுடன் இணைவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த முறை அது போன்று நடக்காமல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சொர்ணமுகி ஆற்றில் நடக்க உள்ள திரிசூல ஸ்நானம் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
மகா சிவராத்திரி உற்சவத்திற்கு முன்பு வருகிற 5-ந் தேதி மாசி மாத பவுர்ணமி அன்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து திரிசூலத்தை வேத பண்டிதர்கள் சாஸ்திர பூர்வமாக சொர்ணமுகி ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, திரிசூல ஸ்நானம் நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு வரை சொர்ணமுகி ஆற்றின் கரையோரத்தில் சிறு பகுதியில் பக்தர்கள் புனித நீராடுதலுக்காக தண்ணீர் குட்டையை அமைத்தர். இந்த ஆண்டும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தண்ணீர் குட்டை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி அறிவுரை வழங்க உள்ளார்.
விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு பேசியதாவது:-
இந்த ஆண்டு நடக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும். பிரம்மோற்சவ விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.
சிவன் கோவில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை ஒவ்வொருவரும் தங்களின் வீட்டு விழாவாக கருதி செயல்பட வேண்டும். விழாவின்போது பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மகா சிவராத்திரி அன்று சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வி.ஐ.பி.பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம், தோரண வாயில் அமைக்கப்பட வேண்டும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்கப்படும். வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை முன்கூட்டியே சீரமைத்துக் கொள்ள வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பிரம்மோற்சவ விழாவை வெற்றிகரமாக நடத்த அதிகாரிகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கோவில் துணை நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், பொறியியல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- இந்த விழா 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
- 20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அதன்படி முதல் நாளான 13-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞான பிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்படும்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், உடுக்கை படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.
அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் அர்ச்சகர்கள் கொடியேற்ற உள்ளனர். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் கோபுரங்கள் வாகன சேவையில் ஈடு படுத்தப்படும் வாகனங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் 4 மாட வீதிகளில் தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன. 2-வது நாள் காளஹஸ்தி சிவன் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது இதையடுத்து 15-ந் தேதி காலை பூத வாகன சேவையும் மாலை சுக வாகன சேவையும் நடைபெறுகிறது.
16-ந் தேதி காலை ராவண வாகன சேவையும், மாலை மயூர வாகன சேவையும் 17ஆம் தேதி சேஷ வாகன சேவையும் மாலை யாழி வாகனமும் 18-ந் தேதி மகா சிவராத்திரி அன்று லிங்கோத்ஷவமும், மாலை இந்திர விமான வாகன சேவையும், 19-ந் தேதி முக்கிய நிகழ்வாக ரத உற்சவம் நடைபெறுகிறது. மாலை கோவில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணமும், 21-ந் தேதி சபாபதி திருக்கல்யாணமும், 22ந் தேதி கிரி பிரதக்ஷனா நடைபெறுகிறது.23-ந் தேதி யாத்ரிகர் துவாரஜனம் நடைபெற உள்ளது.
26 ஆம் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நித்திய பூஜைகளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரமோற்சவ விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமூக விரோத கும்பலை கண்காணிக்க கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.
பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பு வதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- ராமேசுவரம் கோவில் சிவராத்திரி விழாவில் கரு. கருப்பையா பட்டிமன்றம் நாளை நடக்கிறது.
- மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.
மதுரை
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கோவை சூலூர் சித்த மருத்துவர் கரு.கரு. கருப்பையாவின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து இரவு 8மணிக்கு ''தமிழர் தந்தை'' சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவர் பொறுப்பில், மானாமதுரை பேராசிரியர் திருமாவளவன், தூத்துக்குடி வக்கீல் சாந்தா பங்கேற்கும் ''நகைச்சுவை பட்டிமன்றம்'' நடக்கிறது.ராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆயிரவைசிய முத்தாலம்மன் கோவில் சிவராத்திரி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பட்டிமன்ற நடுவர், மடப்புரம் விலக்கு கரு.கருப்பையாவின் ''ஜோதிட சொற்பொழிவு'' 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
- வருகிற 20-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
- 20-ந் தேதி சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.
இந்துசமய அறநிலையத்துறையின் குமரி மாவட்ட திருக்கோவில்கள் (சுசீந்திரம்) நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் சென்னித்தோட்டம் கமுகண்ணூர் மகாதேவர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் 65-வது மகாசிவராத்திரி திருவிழாவும், இந்து சமய மாநாடும் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 20-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
முதல் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜையும், 8 மணிக்கு சுத்திகலச பூஜை, 10.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ- மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு கொடிப்பட்டம் வழங்கும் நிகழ்ச்சி, 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கொடிமர பூஜை மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
2-வது நாள் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, காலை 7 மணிக்கு மாபெரும் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவாசக சித்தர் சிவ.தாமோதரன் திருவாசகம் முற்றோதுகிறார்.
8.30 மணிக்கு கலசபூஜை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு பகவதி சேவை போன்றவை நடக்கிறது.
இதேபோல் விழா நாட்களில் ஒவ்ெ்வாரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம், சாமி வாகன பவனி ஆகியவை நடக்கிறது. 8-வது நாள் திருவிழாவான 18-ந் தேதி மாலை 5 மணிக்கு சாமி ரிஷப ரதத்தை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகருமான பொன்மாணிக்கவேல் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். அன்று நள்ளிரவு 12 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளருமான சென்னை ஸ்ரீகாந்த் தேவா மாபெரும் இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான 20-ந் தேதி காலையில் அபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆறாட்டு பூஜையும் 6.30 மணிக்கு பஜனையை தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
- 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள்.
- இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமு மாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
இதற்காக பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர், திருநந்திக்கரை நந்தீஸ்வரர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர், திருப்பன்னிப்பாகம் மகாதேவர், கல்குளம் நீலகண்டசுவாமி, மேலாங்கோடு மகாதேவர், திருவிடைக்கோடு மகாதேவர், திருவிதாங்கோடு மகாதேவர், திருப்பன்றிகோடு மகாதேவர், திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆகிய 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டாக நடைபெறும் இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். அப்போது இவர்கள் காலை, மாலை வேளைகளில் குளித்து சிவன் கோவில்களுக்கு சென்று சிவநாமத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்வதுண்டு. சைவ வகை உணவுகளை மட்டுமே உட்கொள்வார்கள். பின்னர் சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து விபூதி பூசி, கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவர் கோவிலில் தொடங்கி ஒவ்வொரு கோவிலாக ஓடியவாறு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 110 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நீண்ட ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பழங்காலத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் நடந்தும், ஓடியும் சென்றுள்ளனர். அண்மை வருடங்களாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே நடந்தும், ஓடியும் செல்கின்றனர். பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் இந்த ஓட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிலில் உள்ள குளத்தில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்பதும் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பது ஐதீகம்.
சிவாலய ஓட்டத்திற்கான கதை
சிவாலய ஓட்டம் தொடர்பாக பக்தர்கள் மத்தியில் 2 விதமான கதைகள் கூறப்படுகிறது. இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய, தருமரின் யாகம் ஒன்றிற்கு புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்ற கதை மற்றும் சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவ பெருமானிடம் வரம் பெற்ற பின்னர் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் கோபாலா.. கோவிந்தா என்று கூறியவாறு ஓடியதும், இறுதியில் மோகினி அவதாரமெடுத்து வந்த விஷ்ணு சூண்டோதரனை அழிக்கும் கதை சொல்லப்படுகிறது.
இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய கதையில், புருஷா மிருகத்தின் பால் பெற சென்ற பீமன், கிருஷ்ணனின் உபதேசப் படி உத்திராட்ச கொட்டைகளை போட்ட இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், சூண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கி மறைவாக இருந்த இடங்களே சிவத்தலங்களாயிற்று என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முன்சிறை மகாதேவர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது.
திருநட்டாலம் கோவிலில் சுவாமி சிவன்-விஷ்ணு என சங்கர நாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.
இந்த வருடம் சிவராத்திரி தினம் வருகிற 18-ந் தேதியாக உள்ள நிலையில் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமுமாகவும் செல்லும் பக்தர்கள் 17-ந் தேதி பிற்பகலில் ஓட்டத்தை தொடங்குகின்றனர். 19-ந் தேதி காலையில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள்.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்றும் அச்சமும் மக்கள் மத்தியில் இருந்த நிலையில் சிவாலய ஓட்ட பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி இல்லாத சாலை வசதி, தடையற்ற மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இந்த விழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.
- 18-ந்தேதி அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.
ராமநாதபுரம் ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மக்களுக்கு புராதன பாத்தியமானதும், ஆயிர வைசிய மகா சபை, தர்மதவள விநாயகர். முத்தால பரமேசுவரி, ஆதிரெத்தினேசுவரர் வகையறா தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ளதுமான முத்தால பரமேசுவரி அம்பாள் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, மகா கணபதி மற்றும் நவக்கிரக வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்.
இதேபோல தினமும் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி அம்பாள் தேரோட்டமும், 19-ந்தேதி ஆதிரெத்தினேசுவரர் கோவில் திருக்குளத்தில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 20-ந்தேதி பால்குடம் ஊர்வலமும், அம்பாளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். தினமும் அம்பாளுக்கு உபயதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் சரவணன், அறங்காவலர்கள் ஞானசேகரன், சாந்தமூர்த்தி, ஆயிர வைசிய மகாஜன சபை தலைவர் கவுன்சிலர் ஜெயராமன், பொது செயலாளர்கள் ஜெயக்குமார், நாகராஜன், பொருளாளர்கள் சசிக்குமார், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், தேவஸ்தான குழுவினர், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மலையில் அமைந்துள்ளது.
- மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் எர்ராவாரிபாளையம் மண்டலம் தலகோணா கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. அந்தக் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மலையில் அமைந்துள்ளது.
அங்கு உயரமான மலைகளில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். சுற்றுலா பயணிகளும் வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்.
கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டிக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் நேரில் அழைப்பிதழை வழங்கினார்.
- மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந்தேதி வரை 11 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி கொடிமரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, கொடிமண்டபம் எதிரே பிரியாவிடையுடன் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளை வலம் வருகிறார்கள். இரவில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்கிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சியாக 8-ம் நாள் விழாவான மாசி மகா சிவராத்திரி அன்று (18-ந் தேதி) நடராஜர் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு சுவாமி-அம்பாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி காட்சி தருகின்றனர். அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடையானது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்..
9-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் விழா நாளான மாசி அமாவாசை அன்று சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வருகிற 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.
- 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- இரவில் நடக்கும் நான்கு கால பூஜைகள் விவரங்களை பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
மேலும் இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை, அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை வருகிற 18-ந் தேதி மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம். மேலும், 18-ந் தேதி இரவு முதல் மறுநாள் காலை வரை கோவில் நடை திறந்திருக்கும்.
சிவராத்திரி விழாவையொட்டி அன்று இரவு 4 கால பூஜைகள் நடைபெறும். அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும். அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்த சாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், காசி விசுவநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈசுவரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து மண்டபத்தில் எழுந்தருளினர்
- கோவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.
விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடை பெற்றது. தொடர்ந்து பிரியா விடையுடன், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
காலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடானார்கள். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சுவாமி-அம்பாள் காலை 9 மணியளவில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகிறார்கள்.
இன்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் புறப்பாடான பின் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும் தீர்த்த கிணறுகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றமடைந்தனர்.