என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள்"
- தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர்.
- திரைமறைவில் நடந்த ‘உள்ளடி’ வேலைகளால் மேலிடம் அதிர்ச்சி
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தி.மு.க. சார்பில் புதிய மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
மாநகராட்சியில் தி.மு.க.-கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேர் இருப்பதால், ராமகிருஷ்ணன் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் திடீரென போட்டி வேட்பாளராக களமிறங்கினார்.
இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்த உள்ள 55 கவுன்சிலர்களில் ஒருவர் மட்டும் வரவில்லை. மீதமுள்ள 54 பேர் ஓட்டு போட்டதில் ஒரு ஓட்டு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 30 ஓட்டுகளும், பவுல்ராஜூக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.
கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கவுன்சிலர் 23 வாக்குகள் பெற்றது கட்சி தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தலைமையின் உத்தரவையும் மீறி கவுன்சிலர் பவுல்ராஜிக்கு ஆதரவாக தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில், திரை மறைவுக்கு பின்னால் நடந்த பல சம்பவங்கள், கவுன்சிலர்களின் உள்ளடி வேலைகள் நடைபெற்றுள்ளது என்கின்றனர்.
நெல்லை மாநகராட்சியில் இருக்கும் கவுன்சிலர்கள் அனைவருமே அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். இவர்களில் 90 சதவீதம் கவுன்சிலர்கள் தற்போது வரை அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே இருந்த மேயர் சரவணனும் இவருக்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் மேயர் ஆனதிலிருந்து அவருக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கும் மோதல் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் மாநகராட்சி பணிகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தலையீடு அதிகரிக்க தொடங்கியதால் சரவணன் அவரை எதிர்த்து களத்தில் இறங்கினார். இதனால் மேயரை செயல்பட விடாமல் செய்யும் நோக்கில் கவுன்சிலர்களை அப்துல் வஹாப் தவறாக வழிநடத்தியதாக பலரும் புகார் கூறினர்.
ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அதீத நெருக்கடியின் காரணமாக சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அப்துல் வகாப்புக்கு ஆதரவான கவுன்சிலரை மேயராக அறிவித்தால் மட்டுமே மீண்டும் மாநகராட்சி கூட்டங்கள் பிரச்சனை இன்றி நடைபெறும் என்று தி.மு.க தலைமை கருதியது.
இதன் காரணமாக கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவரது ஆதரவாளரான ராமகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை ஆதரித்து வாக்களித்தால் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று சில கவுன்சிலர்கள் பேரம் பேசியதால் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவோடு இரவாக 'வைட்டமின் ப' வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் ராமகிருஷ்ணனை தேர்வு செய்யும் பட்சத்தில் அப்துல் வஹாப்பின் தலையீடு மாநகராட்சியில் மீண்டும் எழுந்து விடும் என்றும், நமக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் எல்லாம் கிடைக்காது என சில கவுன்சிலர்கள் கருதினர்.
இதனால் போட்டி வேட்பாளர் யாராவது நின்றால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுமார் 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்ததாகவே தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தான் கவுன்சிலர் பவுல்ராஜ் தனித்து போட்டியிடவே அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் வாக்களித்தது தெரியவந்தது. தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு கனவோடு காத்திருந்த கவுன்சிலர்களில் சிலரும், தங்கள் சமுதாயத்தை புறக்கணிப்பதாக கருதும் சில கவுன்சிலர்களும் பவுல்ராஜூக்கு வாக்களித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இது தவிர முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கானின் ஆதரவு கவுன்சிலர்கள், மாநகர செயலாளருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் என சிலரும் பவுல்ராஜூக்கு ஆதரவாக வாக்களித்திருக்க கூடும் எனவும், இதனால் பவுல்ராஜ் 23 வாக்குள் பெற்றிருக்கிறார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்லைக்கு வந்த அமைச்சர் கே. என்.நேரு கவுன்சிலர்களை அழைத்து யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஒரு கருத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டிருந்தால் நிச்சயமாக போட்டி இருந்திருக்காது எனவும், மேயர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்றும் கவுன்சிலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஆனால் கட்சி தலைமையும் முறையாக ஆலோசிக்காமல் மேயர் வேட்பாளராக நிறுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். இனிவரும் மாநகராட்சி கூட்டங்கள் கண்டிப்பாக ஒரு யுத்த களமாக காட்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கவுன்சிலர்கள் சிலர் கூறுகின்றனர்.
கவுன்சிலர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த பின்னரும், போட்டி இல்லாமல் ஒரு மனதாக மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லையா என அமைச்சர்களையும், அப்துல் வகாப எம.எல்.ஏ.வையும் கட்சி தலைமை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் பவுல்ராஜூக்கு பின்னால் இருந்து செயல்பட்ட கவுன்சிலர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடிக்க தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக புகார்.
- கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 5 பேர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரை தொடர்ந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அந்தந்த வார்டுகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.
புகார்களுக்கு இடமின்றி மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுரை கூறி இருந்தது. ஆனாலும் ஆங்காங்கே கவுன்சிலர்கள், மேயர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக புகார்கள் வந்தன.
சமீபத்தில் கூட கோவை, நெல்லை தி.மு.க. மேயர்கள் மீது புகார்கள் வந்த காரணத்தால் அவர்களது பதவி பறிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி (தி.மு.க.) மீதும் புகார்கள் வந்தது. அவர் மீது தி.மு.க. கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஆனாலும் கடைசி நேரத்தில் இதில் சமரசம் காணப்பட்டதால் நம்பிக்கை
யில்லா தீர்மானம் ஓட்டெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால் மகாலட்சுமியின் மேயர் பதவி தப்பியது.
இப்போது சென்னை மாநகராட்சியில் உள்ள சில கவுன்சிலர்கள் மீது பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது. இதனால் ஒவ்வொரு கவுன்சிலரின் செயல்பாடுகள் பற்றி உளவுப்பிரிவு அதிகாரிகள் அரசுக்கு தகவல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் 3 பேர் இறந்து விட்ட நிலையில் 197 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
புகார்கள் விரிவாக்கப்பட்ட மண்டலங்களான பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம், கொளத்தூர் உள்பட பல பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு கொடுப்பதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் இடையூறாக இருப்பதாகவும் புகார்கள் சென்றுள்ளன.
ரூ.30 லட்சத்தில் வீடு கட்டினால் குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற ரூ.5 லட்சத்துக்கும் மேல் கேட்பதாகவும் பணம் கொடுக்காவிட்டால் பணிகளை நிறுத்துகின்றனர் என்றும் புகார்கள் சென்றுள்ளது. பணி மேற்கொள்ள வரும் ஒப்பந்த நிறுவன ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுப்பதாகவும், அதிகாரிகளை தரக்குறைவாக பேசி மிரட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விசயங்கள் அனைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு தெரிய வந்ததும், எந்த கவுன்சிலராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு
உள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி முழு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற இப்போதே கட்சித் தலைமை வியூகம் வகுத்து வரும் நிலையில் கவுன்சிலர்களால் அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார்.
அதனால்தான் பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையிடம் விரிவான அறிக்கை கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை மாநகராட்சியில் பெரிய அளவில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக 5 கவுன்சி
லர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். இப்போது அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு
உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் இதற்கான நோட்டீசை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
29-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் (தி.மு.க.), 189-வது வார்டு கவுன்சிலர் பாபு (தி.மு.க.), 195-வது வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம் (தி.மு.க.) ஆகியோருக்கு நோட்டீசு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தவிர மேலும் 2 கவுன்சிலர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஒரு கவுன்சிலர் வி.ஐ.பி. தொகுதியில் உள்ள பெண் கவுன்சிலர் என்று தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்துக்கே தெரியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
அரசின் இந்த நடவடிக்கையால் அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்களும் கலக்கத்தில் உள்ளனர். தொடர்புடைய கவுன்சிலர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.
இதற்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களின் பதவியை பறிப்பதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விதி மீறல்களில் ஈடுபடும் கவுன்சிலர்களின் பதவியை உடனே பறிக்க முடியும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே குற்றச்சாட்டுக்கு உள்ளான கவுன்சிலர்களின் விளக்கத்தை பொறுத்து அவர்களின் பதவி தப்புமா? என்பது தெரியவரும்.
- டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி மாநகராட்சியில் போராட்டம் நடத்தியது
- மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். 10 எம்.பி.க்கள் (7 லோக்சபா மற்றும் 3ராஜ்யசபா) மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் (டெல்லி சட்டசபையில் உள்ள மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் ஐந்தில் ஒரு பங்கு) மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இதன் மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. ஒரு வேட்பாளருக்கு மேயர் பதவிக்கு 138 வாக்குகள் தேவை .இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 கவுன்சிலர்களும் பாஜக வுக்கு 105 கவுன்சிலர்கள் உள்ளனர்.
ஆம் ஆத்மிக்கு 134 கவுன்சிலர்கள், 13 எம்எல்ஏக்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர் . இதில் 3 சுயேச்சை கவுன்சிலர்களில் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு உள்ளது. இதனால் ஆம் ஆத்மிக்கு ஆதரவு 151 ஆக உயர்ந்தது.
மேலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு 9 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவும் கிடைக்க இருந்தது.ஆம் ஆத்மிக்கு மொத்த ஆதரவு 160 ஆக உயரும் சூழ்நிலையால் மேயர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.
டெல்லி மேயர்,துணை மேயர் பதவிக்கான தேர்தல் இன்று 26- ந் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் மேயர் தேர்தலை கவர்னர் அலுவலகம் நேற்று ரத்து செய்தது. டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் "தலித் விரோதி பாஜக" என்ற போஸ்டர்களை ஏந்தி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.
- ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.
- சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். மேயராக சரவணன் இருந்து வருகிறார்.
அவர் மேயராக பொறுப்பேற்றது முதல் அவருக்கும், கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் போக்கு இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் திருச்சி சென்று அமைச்சர் கே.என். நேருவை நேரில் சந்தித்து தங்களது புகார்களை எடுத்துக்கூறினர்.
தொடர்ந்து வார்டுகளில் பணி நடைபெறவில்லை. மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு பல்வேறு முன்னெடுப்புகளை கவுன்சிலர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இதனால் மாமன்ற கூட்டங்களையும் அவர்கள் புறக்கணித்து வந்ததால் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் அதன் பின்னரும் மாமன்ற கூட்டங்கள் நடைபெற்ற போது அதில் முறையாக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒரு கட்டத்தில் வார்டுகளில் பணி நடைபெறாததை கண்டித்து மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 2 கவுன்சிலர்கள் மற்றும் ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் ஆகியோரை கட்சியில் இருந்து 'சஸ்பெண்டு' செய்து தி.மு.க. தலைமை உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சுமார் 38 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனருக்கு கையெழுத்து போட்டு மனு அளித்தனர்.
அந்த மனுவில் உள்ள கையெழுத்துக்கள் உண்மையானது தானா என்பதை அறிய ஒவ்வொரு கவுன்சிலரையும் நேரில் அழைத்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜனவரி 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மாமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அதில் கவுன்சிலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் கமிஷனர் அறிவித்தார்.
இந்நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல சேர்மன்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில் அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவுன்சிலர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கவுன்சிலர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
எனவே தலைமை உத்தரவை ஏற்று நாளை (12-ந்தேதி) நடைபெறும் மாமன்ற கூட்டத்தை புறக்கணிக்க கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.
இன்றும் சில கவுன்சிலர்கள் சுற்றுலா செல்ல உள்ளதாகவும், எனவே நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கெடுக்க மாட்டார்கள் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமையில் நடை பெற்றது.
- பொதுமக்களுக்கு இடையூராக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அரியலூர்
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமையில் நடை பெற்றது.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு), நகராட்சி பொறியாளர்விஜய்கார்த்திக், நகர்மன்ற துணைதலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன்,கண்ணன்,ரேவதி, மகாலெட்சுமி, இன்பவள்ளி,முகமது இஸ்மாயில், மலர்கொடி,வெங்கடாஜலபதி,ஜெயந்தி,ராணி,ராஜேஸ்,தீபா, புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் தர்மராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன்,நகராட்சி மேற்பார்வையாளர் காசிநாதன், இளநிலை உதவியாளர் நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் சரிவர குப்பைகள் அள்ளுவதில்லை. சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றது. கொள்ளிடம் கூட்டுகுடி நீர் சரிவர விநியோகிப்பதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூராக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதற்கு ஆணையர் விஜய கார்த்திக் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நட டிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
- ரூ.13 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் 70 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைைம தாங்கினார். துணைத் தலைவர் தாமா செந்தில்குமார் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். இதில் 21 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வால்பாறை பகுதியில் நீண்ட நாள் கிடப்பில் இருந்த 12 மற்றும் 13-வது வார்டுக்கு உட்பட்ட ஊசிமலை பகுதி மற்றும் வெள்ளமலை பகுதியில் 13 கிலோமீட்டர் தொலைவு வரை ரூ.13 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வால்பாறை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இருந்ததை அடுத்து அப்பகுதியில் மக்கள் யாரும் செல்லாதவாறு கம்பி வேலி அமைத்து, அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிப்பது, வால்பாறையில் 20 இடங்களில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளும் விதமாக மொத்தம் 70 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள், வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் துவங்கியுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.
பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 17-வது வார்டு முடிஷ் பகுதியில் புதிய பஸ் நிறுத்தம் கட்டி தர வேண்டும் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு குறைந்த கட்டணத்தில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
- விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சேர்மன் வள்ளி முருகன் இனிப்புகளை வழங்கினார்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், தலைமை கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு இனிப்புகளை சேர்மன் வள்ளி முருகன் வழங்கினார்.விழாவில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முத்து, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை நகராட்சியில் குறைகளை தீர்க்க அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் கூறப்பட்டுள்ளது.
- கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், முனியசாமி ஆகியோர் பேசினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் மாரியப்பன் சென்னடி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் ரெங்கநாயகி, பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மானாமதுரை வாரச் சந்தை, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளுக்கு கட்ட ணம் வசூலிக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள மிதிவண்டி நிறுத்தத்தில் கட்டணம் வசூலிக் கும் உரிமை உள்ளிட்டவற்றுக்கு நடத்தப்பட்ட பொது ஏலத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மானாமதுரையில் குடி. நீர்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கூடுதல் பணியா ளர்களை நியமிக்க ஒப்புதல் அளிப்பது, கீழப்பசலை, மாங்குளம், சூரக்குளம் பில்லறுத்தான், கல் குறிச்சி, செய்களத்தூர், கீழமேல் குடி ஆகிய ஊராட்சிகளில் நகர் பகுதியுடன் ஒட்டியுள்ள தேர்வு செய்யப்பட்ட விரிவாக்கப் பகுதிகளை மானாமதுரை நகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து அரசுக்கு கருத்துரு அனுப்பு வது உள்ளிட்ட 33 தீர்மானங்களுக்கு உறுப் பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான கோரிக்கை களை முன் வைத்தனர். தி.மு.க . உறுப்பினர் மாரி கண்ணன் பேசுகையில், எனது வார்டில் இன்னும் புதிய தெரு விளக்குகளை பொருத்த வில்லை. நகராட்சி அலுவ லர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றார்.
கவுன்சிலர்கள் தெய் வேந்திரன், முனியசாமி ஆகியோரும் பேசினர். உறுப்பினர்களின் கேள்வி களுக்கு ஆணையர் ரெங்கநா யகி பதிலளிக்கையில், தற்போது பணிபுரியும் அலுவலர்கள் நேரடியாக புதிதாக பணிக்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை எப்படி அனுகுவது என்பது பற்றி கூறப்பட்டுள்ளது என்றார்.
மேலும் புதிய வீடு கட்ட வரைபட அனுமதி, சொத்து வரி, பெயர் மாற்றத்துக்கான பணிகளை இன்னும் ஒரு மாத்துக்குள் பணிகளை முடிக்கத் தேவையான நட வடிகைகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். தலைவர் மாரிப்பன் கென்னடி பேசுகையில், தற்போது டெங்கு பரவி வருவதால் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகளை விரைவாகசெய்ய வேண்டும் என்றார்.
- வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறினர்
- குடிநீர் விநியோகிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும்.
இரணியல் :
வில்லுக்குறி பேரூராட்சி சாதாரண கூட்டம் நேற்று மாலை நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் இதுவரை வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறினர். மேலும் துணை தலைவர் ராமலிங்கம் தலைமையில் 14 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
துணை தலைவர் ராமலிங்கம் தலைமையில் கவுன்சிலர்கள் சரிதா, சுதா, தேவிகா, புஷ்பாகரன், எட்வர்ட் திலக், சுகிதா, அன்சிலாவிஜிலியஸ், ஜோஸ்பின்புனிதா, ரீனா, சுப்பிரமணியபிள்ளை, ஸ்டான்லி, கிரிஜாம்பிகா, வினோத் ஆகிய 14 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில், கலந்து கொண்டனர்.
வில்லுக்குறி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். போதுமான குடிநீர் விநியோகிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும்.
எல்லா வார்டுகளிலும் ஒதுக்கப்பட்ட வேலைகளை உடனே தொடங்க வேண்டும். குறைந்த பட்சம் வார்டுகளில் ரூ.10 லட்சம் நிதியிலாவது பணிகளை தொடங்க வேண்டும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேவையான தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
இதற்கு முன்பு நடந்தது போன்று பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
போராட்டம் குறித்த தகவல் பரவியதால் பொதுமக்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். செயல் அலுவலர் மகேஷ்வரி, தலைவர் விஜயலட்சுமி, இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் பாலசுந்தரம் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதுகுறித்து துணை தலைவர் ராமலிங்கம் கூறுகையில், வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தால் 400-க்கும் மேற்பட்ட பிளான் அப்ரூவல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பிளான் அப்ரூவல்கள் முறையாக விசாரிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு பின்பு ஏதாவது ஒரு காரணத்தை கூறி நிராகரிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் வீடு கட்ட முடியாத நிலையும், லோன் உள்ளிட்டவைகள் பெற முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. மேலும் குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இதுவரை சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்காத பல வார்டுகள் உள்ளன.
எனவே வார்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் நிதியிலாவது சாலை பணிகளை உடனே தொடங்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
- ஒப்பந்ததாரர்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- மாநகராட்சி அதிகாரிகள் அதிமுக கவுன்சிலர் கூறும் குற்றச்சாட்டை கண்டு கொள்வதில்லை.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில், 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், புதிய ரோடுகள் அமைத்தல், வடிகால், சிறுபாலம், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல் உள்பட பணிகள் நடந்து வருகிறது. நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஏதாவது, ஒரு திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பணி என்ற வகையில் நடந்து வருகிறது. இதனால், நகர் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கும், அவதிக்கும் ஆளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு நிலவுகிறது. எனவே ஒப்பந்ததாரர்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடாவும் 44 வது வார்டு கவுன்சிலருமான கண்ணப்பன் பேசியதாவது:-
மாநகராட்சியின் மையப்பகுதியாக, மத்திய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கிய வார்டாக உள்ளது 44 வது வார்டு. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால் இந்த வார்டில் எந்த பணிகளும் நடைபெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஐம்பதாவது வார்டில் 39 பணிகளும், 51 வது வார்டில் 41 பணிகளும், 56 வது வார்டில் 44 பணிகளும், 33 வது வார்டில் 19 பணிகளும் நடைபெற்று உள்ளது. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டான எனது வார்டில் இதுவரை வெறும் 4 பணிகள் மட்டும் நடந்துள்ளது. காரணம் கேட்டால் 44 வது வார்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணிகள் முடிந்தவுடன் மற்ற பணிகள் நடக்கவிருப்பதாக கூறுகின்றனர்.
ஆனால் பக்கத்து வார்டான 51 வார்டிலும் 24 மணி நேர குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அங்கு 41 பணிகள் நடந்துள்ளது. மேலும் 44 வது வார்டில் 24 மணி நேர குடிநீர் திட்டம் பாதி தெருகளுக்கு தான் வந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் 300 கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அதிமுக கவுன்சிலர் கூறும் குற்றச்சாட்டை கண்டு கொள்வதில்லை.
இந்நிலை நீடித்தால் வார்டு மக்களை திரட்டி மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் எந்த பாகுபாடு காட்டாமல் பணிகள் நடைபெறுவதாக கூறினார்.
- பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உள்ளிருப்பில் கலந்து கொண்டனர்.
- ஆழ்துளை கிணறு அமைத்தததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குளச்சல் :
குளச்சல் அருகே உள்ளது ரீத்தாபுரம் பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
வார்டு கவுன்சிலர்களும் சீரான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கவுன்சிலர்கள் பிராங்கி ளின், ஷோபா, சுசீலா, சிந்து, ஜெகதீஸ்வரி, ஜெயசேகர், ஜெயக்குமார், மரிய செல்வி, அனிதா, சோமன், ஆஸ்வால்டர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அவர்களிடம் செயல் அலுவலர் சங்கர் கணேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். இரவு ஆகியும் தீர்வு ஏற்பட வில்லை.
இதனால் கவுன்சிலர்கள் நேற்றிரவு முழுவதும் உள்ளிருப்பில் ஈடுப்பட்டனர். பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உள்ளி ருப்பில் கலந்து கொண்டனர்.
இன்று காலையும் தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.இவர்களுடன் பேரூராட்சி தலைவர் எட்வின்ஜோஸ், துணைத்தலைவர் விஜூமோன், 14-வது வார்டு கவுன்சிலர் ஷீலா ஆகியோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் வார்டுகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.2- வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில் ஆழ்துளை கிணறு அமைத்தததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பேரூராட்சி குழாயை சேதப்படுத்தி சிலர் திருடி சென்றதாக, செயல் அலுவலர் சங்கர் கணேஷ், குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
- நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
- வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தெருக்களில் விடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் நாய்களை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மேயர் மகேஷ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், நகர்நல அதிகாரி ராம்குமார் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறுகையில், நாகர்கோவில் நகரில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளையும் நாய்கள் கடித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறுகையில், நாய்களை துன்புறுத்தி பிடிக்க முடியாது. நாய்களை பிடிக்க ஜீவகாருண்யா டிரஸ்ட் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 52 வார்டுகளிலும் நாய்க ளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த கவுன்சிலர்கள் ஜீவகா ருண்யா டிரஸ்டை தொடர்பு கொண்டு நாய்களைப் பிடிக்க தகவல் தெரிவிக்கலாம்.
இதன் மூலமாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டுமே இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். ஒரு வார்டில் ஒரு மாதத்தில் 50 நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தால் விரைவில் நாய்களை கட்டுப்படுத்திவிடலாம்.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தெருக்களில் விடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாகர்கோவில் மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மேல ஆசாரிபள்ளம், அய்யா கோவில் அருகில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 20-வது வார்டுக்குட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி போன்ற வற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் 29-வது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் சர்ச் அருகில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 40-வது வார்டுக்குட்பட்ட வயல் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட்தளம் அமைக்கும் பணி, 43-வது வார்டுக்குட்பட்ட கலை நகர் பிரதான சாலையில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி மற்றும் மறவன்குடியிருப்பு மாதா மஹால் அருகில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி போன்றவற்றையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி உதவி பொறியாளார் சுஜின், இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் மோனிகா, ஆன்றோ ஸ்னைடா, விஜயன், சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ், ஜான், தி.மு.க செயற்குழு சதாசிவன், இளைஞரணி அகஸ்தீசன், பகுதி செயலாளர்கள் சேக்மீரான், துரை, ஜீவா, வட்ட செயலாளர்கள் விமல், பாஸ்கர், முகம்மது பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்