search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226542"

    • இந்த ஆண்டு வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை வருகிறது.
    • தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள் சீர்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். அவர்கள் காலையில் சூரியோதயத்தை பார்த்து விட்டு பகவதி அம்மன் கோவில் சன்னதியில் சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று வருவது வழக்கம்.

    இது தவிர ஆடி அமாவாசை போன்ற நாட்களில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் நீராடி, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை ஆகும் அன்றைய தினம் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடல் சங்கமத்தில் அதிகாலை 4 மணி முதல் நீராடி இறந்த முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதன் பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவதற்கு வசதியாக படித்துறையின் பக்கவாட்டில் இரும்பு குழாய் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் கடலுக்குள் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இரும்பு சங்கிலி கோவில் நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது. மேலும் படித்துறை முழுவதும் பாசி படர்ந்து ஆபத்தை விளைவிக்கும்வகையில் உள்ளது. எனவே படிக்கட்டை சுத்தம் செய்து போதிய மின் விளக்கு வசதியும் செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் 97-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆடி அமாவாசை நாளான வருகிற 28-ந் தேதி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை முதல் ஏராளமானோர் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு குழித்துறை மகா தேவர் கோவில் அருகில் ஆற்றின் கரையையொட்டி பெரிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள் மற்றும் சுற்று பகுதிகளை நகராட்சி சார்பில் சீர்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • வருகிற 28-ந் தேதி பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தர்ப்பணம் செய்ய வரும் பெண்கள் உடை மாற்றுவதற்கு அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் 97-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி வருகிற 1-ந் தேதி வரை 20 நாட்கள் நடக்கிறது.

    பல விதமான பக்க காட்சிகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களை கொண்ட இந்த வாவுபலி கண்காட்சியை தினம் ஏராளமானோர் கண்டு களித்து செல்கிறார்கள்.

    ஆடி அமாவாசை நாளான வருகிற 28-ந் தேதி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை முதல் ஏராளமானோர் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். அதற்காக புரோகிதர்கள் பலி கர்ம பொருட்களுடன் அங்கு அமர்ந்திருந்து மந்திரம் ஓதி பலி தர்ப்பணம் கொடுக்க வருபவர்களுக்கு பொருட்களை வழங்குவார்கள்.

    இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு குழித்துறை மகா தேவர் கோவில் அருகில் ஆற்றின் கரையையொட்டி பெரிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல் பலி தர்ப்பணம் செய்ய வரும் பெண்கள் உடைகள் மாற்றுவதற்கான அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.மேலும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள் மற்றும் சுற்று பகுதிகளை நகராட்சி சார்பில் சீர்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • 26-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை தனியார் வாகனங்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.
    • ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது

    காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி முன்னேற்பாடுகளை செய்துள்ள மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து காரையாறு வரை 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியார் வாகனங்களில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது பொருட்களை கோவிலில் இறக்கி வைத்து விட்டு, சாமி தரிசனம் செய்த பின்னர் இரவில் தங்காமல் வாகனங்களில் கீழே இறங்கி வந்து விட வேண்டும். கோவிலில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.

    மேலும் ஏற்கனவே அறிவித்தது போன்று நாளை (திங்கட்கிழமை) பக்தர்கள் தனியார் வாகனங்களில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை தனியார் வாகனங்களில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. தனியார் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் விட்டு விட்டு, அரசு பஸ்களின் மூலமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.

    • கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் அமாவாசை தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினமான வருகிற 28-ந்தேதி ஆடிஅமாவாசை விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்படுகிறது. 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஆடி அமாவாசையையொட்டி அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். பின்னர் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேத மந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.

    அதன் பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள். ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும்போது பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபடுவார்கள். அம்மன் வீதி உலா முடிந்த பிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்துகோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறைமேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன் பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஆடி அமாவாசை அன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைசெய்து தர்ப்பணம் கொடுத்தார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசை அன்று அதிக அளவில் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று தெரிகிறது.

    மேலும் ஆடி அமாவாசை ஒட்டி வருகிற 28-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் அரசுவிடுமுறை அளிக்கப்பட்டுஉள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள்இயக்கப் படுகின்றன. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    • வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது.
    • நீர்வரத்தை பொறுத்து புனித நீராட அனுமதி அளிக்கப்படும்.

    பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றுடன், கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் இங்கு கூடுவதாக ஐதீகம் உள்ளது. இதனால் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டால் குடும்பம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இதன்காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி மாத பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர். மேலும் நாக தோஷம், திருமண தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் பரிகார வழிபாடும் செய்வார்கள்.

    இந்த நிலையில் வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது. இதை முன்னிட்டு பவானி கூடுதுறைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து திதி, தர்ப்பணம் மற்றும் பரிகார பூஜை செய்வதற்காக வருவார்கள். ஆனால் தற்போது பவானியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கலாமா? திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்ய அனுமதிக்கலாமா? என்பது குறித்து அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பவானி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மருத்துவத்துறை மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த துறை அதிகாரிகள் மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:- வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்தை முறையாக சீரமைக்க வேண்டும். தீயணைப்பு துறை சார்பில் நீச்சல் வீரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களோடு இருக்க வேண்டும். மருத்துவத்துறையினர் 2 டாக்டர்கள் மற்றும் செவிலியர் அடங்கிய சுகாதார குழுவினர் மற்றும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் இருக்க வேண்டும்.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் கூடுதுறையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். காவிரி ஆற்றில் வெள்ளம் குறித்த தகவல்களை பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். மேற்கண்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

    மேலும் ஆடி அமாவாசையான வருகிற 28-ந் தேதி பவானி கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கூடுதுறை பகுதியில் பக்தர்கள் திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை.

    கூடுதுறை தவிர ஆற்றங்கரையில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் அங்குள்ள நீர்நிலைகளில் பாதுகாப்பு கருதி பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்தை பொறுத்து காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    • 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    கொரோனா பரவல் காரணமாக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவில் அருகில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்து வழிபடுவார்கள்.

    இதையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக பாபநாசம் வனத்துறை அலுவலகத்தில் உதவி கலெக்டர் ரிஷப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அரசு பஸ்களில் மட்டும் செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. தினமும் 120 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 545 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் களக்காடு, அம்பை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வன கோட்டங்களில் இருந்து வனத்துறை ஊழியர்கள் 250 பேர் மற்றும் தன்னார்வலர்களும் இணைந்து வனப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் வருகிறவர்கள் பழைய பாபநாசம் சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு பாபநாசத்துக்கு நடந்து சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    தனியார் பேருந்துகள் பாபநாசம் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பகபிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், தாசில்தார் ஆனந்த் பிரகாஷ், வனச்சரகர்கள் ஸ்டாலின், கருப்பையா, கிருத்திகா (பயிற்சி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.
    • காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    • பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நடைபாதை தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து வன உயிரினச்சரணாலய பகுதியில் 4.75 கி.மீ தூரத்திற்கு செல்கிறது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந்தேதி (வெள்ளிக் கிழமை) வரையிலான 4 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து வாகனங்களுக்கு தாணிப்பாறை விலக்கு வரை இரு வழிச் சாலைகளும், தாணிப்பாறை விலக்கில் இருந்து தாணிப்பாறை அடிவாரத்தின் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் வரை வாகனங்கள் வருவதற்கும் மகாராஜபுரம் விலக்கு வழியாக திரும்பிச் செல்வதற்கும் என ஒரு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாணிப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே ஆட்டோ, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனித்தனியாக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசு பஸ்சை பயன்படுத்துபவர்களுக்கு என்று தாணிப்பாறையை அடுத்து கோவில் நுழைவு வாயிலுக்கு 800 மீட்டர் முன்பாக மற்றொரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வரை அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

    கோவிலுக்குச் செல்ல கோவில் நுழைவுச் சீட்டு ஏதும் வழங்கப்படாது. பக்தர்கள் யாத்திரை செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் பக்தர்களுக்கென அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகள், பஸ் நிறுத்துமிடங்கள், வாகனங்கள் முறையாக எந்தெந்த வழித்தடங்கள் வழியாக செல்ல வேண்டும் போன்ற விவரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் அழகாபுரி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, வத்திராயிருப்பு பஸ் நிறுத்தம் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே மருத்துவ வசதி, கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வனப்பகுதியில் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்குவதற்கு அனுமதி கிடையாது,

    பக்தர்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கோவிலிருந்து (தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து) மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் இரவு நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் மற்ற பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கோவில் செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொது மக்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் வனப்பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • முக்கிய திருவிழா 28-ந்தேதி நடக்கிறது.
    • 30-ந்தேதி இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது.

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்ற நிகழ்ச்சியினை நடத்தி வைத்தார். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு 8 மணிக்கு கேடயசப்பரத்தில் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். 9-ம் திருநாள் வரை இரவு சாமி சப்பரத்தில் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது. முக்கிய திருவிழா 28-ந்தேதி நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகுபலையில் கற்பூர விலாசம் வரும் சிறப்பு காட்சியும், அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 11 மணிக்கு கற்பகப்பொன் சப்பரத்தில் சாமி எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது.

    29-ந்தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல்1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.

    30-ந்தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருனை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

    • வருகிற 27-ந் தேதிவரை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.
    • 29-ந்தேதி திருக்கல்யாணம், 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    திண்டிவனம் அருகே தென்பசியார் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு நாகஅங்காளம்மன் கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 9-ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள 108 விநாயகருக்கு சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாகஅங்காளம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த 108 கலசங்களுக்கு நாகராஜ் அய்யர் குழுவினர் சிறப்பு யாகம் நடத்தி தீபாராதனை செய்தனர்.

    பின்னர் கலசங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று 108 விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி மாலை அணிவித்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து வருகிற 27-ந் தேதிவரை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.

    மேலும் 28-ந் தேதி காலை 10 மணிக்கு கன்னிமார் கோவிலுக்கு கரகம் புறப்பாடு, பால்குடங்களுடன் கிரக வீதியுலா, அம்மனுக்கு கூழ் வார்த்தல், ஊரணி பொங்கல், அலகு குத்துதல், மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெறுகிறது. 29-ந்தேதி திருக்கல்யாணம், 30-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சக்தி உபாசகர் ராம்குமார், அருள்வாக்கு சித்தர் அசோக்ராஜ் அடிகளார், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது.

    சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாணிப்பாறை அடிவாரப்பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு உண்டான முன்னேற்பாடு பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் தாணிப்பாறை வண்டிப்பண்ணை பஸ்நிறுத்தத்திற்கு செல்லும் சாலையானது மிகவும் குறுகலாக உள்ளதால் 2 பஸ்கள் செல்ல முடியாத சூழ்நிலையும் உள்ளது. பஸ் நிறுத்த சரியான வசதி செய்து தரப்படவில்லை. ஆடி அமாவாசைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சாலை வசதி, பஸ் நிறுத்த வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதப்படுத்தி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது.
    • இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

    நெல்லை மாவட்டம் காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நேற்று காலை 9.15 மணிக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவிலில் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் பொறுப்பாளர் சங்கராத்மஜன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், உதவியாளர் பசுபதி உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வழக்கமாக இக்கோவிலின் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு விழா நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அகஸ்தியர்பட்டியில் இருந்து நாள் ஒன்றுக்கு 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல காணிக்குடியிருப்பில் இருந்து இரவு 7 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். தேவைப்பட்டால் இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தற்காலிகமாக மொத்தம் 400 சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக கோவிலின் சார்பில் வைக்கப்படும் கடைகளில் பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. முக்கியமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது. ஓட்டல் மற்றும் கடைகளில் வாழை இலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோவில் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 45 தண்ணீர் குழாய்கள் வைக்கப்படுகிறது. ஆடு வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்யும் போது ஆற்றுத்தண்ணீரில் ஆட்டின் ரத்தம் கலப்பதை தடுக்கும் விதமாக பட்டவராயன் சன்னதிக்கு முன் சிறப்பு மணல் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு 28-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை
    • 13-8-22 குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உள்ளூர் விடுமுறை

    கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு வியாழக்கிழமை (28-ந்தேதி) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தர விடப்படுகிறது.

    28-ந்தேதி அன்று உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 13-8-22 (சனி) கன்னியா குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். 28-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலை மைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப்பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர் களைக் கொண்டு இயங்கும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    ×