search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது.
    • சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்கள் உள்ளனர்.

    அவர்களில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

    இவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன.

    இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள்.

    ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன்.

    மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

    தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.

    சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா?

    கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.

    சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.

    இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

    எனக்கு இப்பதவியினைக் கொடுத்த முதலமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

    புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச்சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.

    அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும்.

    மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும் அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.

    எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய அரசுக்கு முழு ஆதரவு அளித்துவரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான எனது நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.

    இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 6 மாத காலமாக தனது துறைகளில் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார்களும் சென்றது. அவர் சந்திர பிரியங்காவை அழைத்து அறிவுரையும் கூறினார்.

    ஆனால், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதனிடையே நேற்று முன்தினம் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை ராஜ்நிவாஸில் சந்தித்தார். அப்போது கவர்னர் தமிழிசையிடம், அமைச்சர் சந்திர பிரியங்கா செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    அவரை நீக்கவும் திட்டமிட்டதாகவும் தெரிகிறது. இதனால், பதவியை பறிக்கும் முன்பு, அமைச்சர் சந்திர பிரியங்கா முன்கூட்டியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    • துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
    • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.

    எனவே அவர் நேற்று பகல் முழுவதும் சட்டசபைக்கு வரவில்லை. அவரது அலுவலக ஊழியர்கள் நேற்று மாலை வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இரவு 10 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருவதாக சட்டசபை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று முதலமைச்சரின் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முதலமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணியளவில் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். சுமார் 20 நிமிடம் அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 10.20 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் ரங்கசாமி இரவில் திடீரென சட்டசபைக்கு வந்ததால் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

    பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை, கியாஸ் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை என புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன்படி புதுவையில் அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 370 அரசு இடங்களில் 37 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதி இல்லாதவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

    எனவே மருத்துவக்கல்விக்கு தேர்வாகும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அரசு பள்ளி மாணவர்ளுக்கு இலவச மருத்துவ கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் கல்வி கட்டணம் செலுத்த சிரமப்படுகின்றனர்.

    எனவே முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். பெற்றோர்களும் தங்களின் சிரமத்தை தெரிவித்தனர்.

    இதையேற்று அரசு பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீட்டில் மருத்துவ கல்வி படிக்க இடம் பெறும் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் முழுவதையும் புதுவை அரசே செலுத்தும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் கேட்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.
    • சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. இரங்கல் குறிப்புக்கு பிறகு எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து பேசினர்.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா, மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்தாதது, தொகுதியளவில் நடைபெற வேண்டிய பணிகள், மக்கள் நல பணிகளை செயல்படுத்தாதது ஆகியவை குறித்து சபையில் விவாதிக்க வேண்டும்.

    அனைத்து பிரச்சனைகளுக்கும் தலைமை செயலாளரும், அதிகாரிகளும்தான் காரணம் என கூறுகின்றனர். அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அலுவல் முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் அமரும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

    9.45 மணியளவில், சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி எதிர்கட்சித்தலைவர் சிவா வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.

    அப்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிவா தலைமையில் சபைக்கு வந்தனர். அவர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று, அலுவல் பட்டியலில் இல்லாததை எப்படி பேசலாம்? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சபாநாயகர், நன்றி அறிவிப்பு அலுவல் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்தார். இதனால் சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார்.
    • சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி தன் அறைக்கு அழைத்து சென்றார். இதனால் சட்டசபை நிகழ்வுகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    9.37 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி20 மாநாடை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்கும் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஆகியவற்றுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

    தொடர்ந்து சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

    தொடர்ந்து 2023-ம் ஆண்டு புதுவை எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழத்தலை தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமிநாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர்.

    இந்த மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    புதுவை சட்டசபை 23 நிமிடத்தில் முடிவடைந்தது.

    • புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
    • அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.

    டெங்கு பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது புதுவையில் டெங்கு பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளிடம், டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தவும், வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

    மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுக அறிவுறுத்தவும், கொசுவை ஒழிக்க மருந்து தெளிக்கவும், அனைத்து ஆஸ்பத் திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.

    அதோடு டெங்கு காய்ச்சல் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்புமாறும் அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார்.

    டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டார்.

    • காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.
    • சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் 21 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    புதுவையில் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்து, நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு கவனம் செலுத்தும்.

    புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தில் முன்பு ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.

    புதிய திட்டமாக மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு சிறுதானிய உணவும் வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். படிக்கும் மாணவர்களுக்கு அது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பு மாணவர்களின் சோர்வை போக்கவே சிறுதானிய உணவு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    • கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
    • ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

    தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கோப்பை கவர்னருக்கு அனுப்பியது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை.

    கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு இந்த கோப்பும் கிடப்பில் போடப்பட்டது.

    புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    கடந்த மாதம் கவர்னர் தமிழிசை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி உள்ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பினார்.

    இதனிடையே நீட் அல்லாத கலை, அறிவியல், தொழில்படிப்புகளுக்கான 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து, 3-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

    ஆனால் புதுவையில் மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கவில்லை. உள் ஒதுக்கீடு அனுமதிக்காக கவுன்சிலிங் தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 இடங்கள் கிடைக்கும். அரசு மருத்துவக்கல்லூரியில் புதுவைக்கு 10, காரைக்காலுக்கு 2, மாகி 1 என 13 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் 6, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தலா 9 இடங்களும் கிடைக்கும்.

    இதுதவிர பி.டி.எஸ். 11 சீட், பி.ஏ.எம். 4 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவ கல்விக்கான உத்தேச தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.

    இதற்காக இன்று மாலை 5 மணி வரை அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க சென்டாக் அனுமதி அளித்துள்ளது.

    விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதன்பிறகு மீண்டும் இறுதி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இதன்பிறகு கவுன்சிலிங் நடைபெறும். இதனால் ஓரிருநாளில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் யோகிபாபு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
    • இவர் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் யோகிபாபு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    • எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன.
    • யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது.

    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தையொட்டி கம்பன் கலையரங்கில் தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து, இனிப்பு வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், வீரர்கள் நம் நாடு வளர்ச்சியடைய வேண்டும் என எண்ணினர். அவர்கள் எண்ணம்போல நம் நாடு இப்போது பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

    உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா விளங்கி வருகிறது. எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன. நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் வகையில் புதுவையும் வளர்ச்சி பெற்று வருகிறது.

    யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். பல ஆண்டாக மாநில அந்தஸ்து கேட்டு வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து என்று எப்போதும் மத்திய அரசை அணுகி கோரிக்கை வைத்து வருகிறோம்.

    மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.

    நேரடியாகவும் சந்தித்து மத்திய அரசை கேட்டுள்ளோம். எம்.எல்.ஏ.க்கள், தலைவர்களை டெல்லி அழைத்துச் சென்று பிரதமரிடம் மாநில அந்தஸ்தை கேட்டு வலியுறுத்துவோம். நிச்சயமாக மாநில அந்தஸ்தை பெறுவோம். புதுவையில் ஆயிரத்து 348 தியாகிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படுகிறது.

    இந்த தொகையை உயர்த்த வேண்டும் என தியாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தியாகிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ, கலெக்டர் வல்லவன், அரசு செயலர் பத்மாஜெய்ஸ்வால், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன், துறை அதிகாரிகள், விடுதலை போராட்ட தியாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பழைய துறைமுக பகுதியில் ரூ.5½ கோடியில் நகர பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும்.
    • புதுவை, காரைக்காலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார். அதைத் தொடர்ந்து அவர் சுதந்திர தின உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெரியகாலாப்பட்டில் ரூ.20 கோடியிலும், நல்லவாடில் ரூ.19 கோடியிலும் மீன் இறங்கு தளம் அமைக்கவும், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை ரூ.54 கோடியில் விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும்.

    தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடியில் சட்டசபை வளாகம், காலாப்பட்டில் ரூ.483 கோடியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளது. பாண்டி மெரினா கடற்கரையில் ரூ.14½ கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல ரூ.12½ கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மழை காலத்திற்கு முன்பாக அனைத்து வாய்க்கால்களும் 190 கி.மீ. நீளத்துக்கு சுமார் ரூ.4½ கோடியில் தூர்வாரப்படும்.

    பிள்ளையார்குப்பம் படுகை அணை ரூ.20 கோடியிலும், பாகூர் ஏரிக்கரையில் ரூ.8 கோடியில் ஒருவழிப் பாலம், கொம்பந்தான்மேடு அணைக்கட்டு ரூ.13 கோடியில் கரைகளை செம்மைப்படுத்துதல், குடுவையாற்றில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டுவது உள்ளிட்ட நீர் நிலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடல் கட்டுமான பணி முடிவடைந்து இந்த ஆண்டே திறக்கப்படும். சின்னையாபுரத்தில் ரூ.23 கோடியில் 220 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். ரூ.23 கோடியில் மின்சார பஸ்கள் வாங்கப்பட்டு இந்த நிதியாண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடிக்கு அருகில் ரூ.15 கோடியில் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கு தனி பஸ் ஸ்டாண்டு கட்டப்படும். தாவரவியல் பூங்கா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும். சுதேசி பஞ்சாலை வளாகத்தில் ரூ.5½ கோடியில் நகர காட்டுப் பகுதி பசுமை பூங்காவாக மேம்படுத்தப்படும். வ.உ.சி., கலவை கல்லூரி, பான்சியானா பள்ளிகள் பழமை மாறாமல் மீண்டும் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

    பழைய துறைமுக பகுதியில் ரூ.5½ கோடியில் நகர பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும். புதுவை நகர பகுதியில் ஒட்டுமொத்த பாதாள சாக்கடை திட்டமும் ரூ.50 கோடியில் சீரமைக்கப்படும். புதுவையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்படுவதால் கடந்த காலங்களைவிட குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது.

    சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுலா தலங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் படிப்படியாக செயல்படுத்துவோம்.

    புதுவையை முன்னேறிய மாநிலமாக மாற்ற எங்கள் அரசின் செயல்பாட்டிற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு, ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    இந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் எனக்கேட்டு அனைவருக்கும் உளம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்றும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் திகழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி பிறந்தநாளில் அவர் என்றும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் திகழ எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    ×