search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபயணம்"

    • நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது.
    • வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்க பணியினை தொடங்கி உள்ளது. இதற்காக புதிய அலகு அமைக்கப்பட உள்ளது. அதன்படி என்.எல்.சி. நிறுவனம் அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது,

    எனவே மாவட்ட அதிகாரிகள் என்.எல்.சி.க்கு நிலத்தை கையககப்படுத்த வந்தனர். ஆனால் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கு குடும்பத்துக்கு நிரந்தர வேலைவழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் இதற்கு அரசு செவிமடுக்கவில்லை. 

    எனவே கிராம மக்களுக்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த கோரியும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, இன்றும் , நாளையும் நடைபயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆவேசமாக பேசினார். இதனை தொடர்ந்து அவர் கங்கைகொண்டான், ,வடக்குவெல்லூர், தென்குத்து, அம்மேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றார். அவருடன் பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் சென்றனர். 

    • உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. பள்ளி மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
    • இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 190 பள்ளி மாணவ- மாணவிகள் இதில் கலந்துகொண்டு தேவர் சிலை, ராஜீவ்காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சென்று அழகப்பா கல்வி குழும மைதானத்தில் சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சோழன் உலக சாதனை புத்தக தலைவர் சண்முகநாதன் வழஙகிய சாதனை பட்டயத்தை அழகப்பா கல்வி குழும மேலாளர் காசி விசுவநாதன் மாணவர்களுக்கு வழங்கினார். சிலம்பாட்டக்குழு தலைவர் முனியாண்டி நன்றி கூறினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் இன்று களியக்காவிளையில் தொடங்கியது.

    அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு 95 சதவீதம் நடைபெற்றுள்ளது. அதனை 100 சதவீதமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் பங்களித்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்போது அதன் 2-ம் கட்டமாக குப்பை இல்லா குமரி எனும் திட்டத்தை அறிவித்து அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என செயல்படுத்தி வருகிறோம். மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர்கள் அழைத்து வாக்கத்தான் நிகழ்வை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இது நடைபெற இருக்கிறது.

    பிளாஸ்டிக் ஒழிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பொதுமக்கள் தாங்களாக பிரித்து வழங்கி வருகிறார்கள்.

    உறிஞ்சி குழி அமைத்து சுமார் 60 சதவீதம் வீடுகளில் கழிவுகள் வெளியில் விடவில்லை. குமரி மாவட்டமானது சுமார் 6 மாதத்திற்குள் குப்பையில்லா மாவட்டமாக மாறும் சூழல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழிப்புணர்வு நடைபய ணத்திற்கு மார்த்தாண்டம் லிஸ்டர் சந்திப்பில் லிஸ்டர் ஹார்ட் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் நடந்து வந்தவர்களுக்கு குளிர்பா னம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இயக்குநர் டாக்டர் அரவிந்த் மற்றும் லிஸ்டர் குழந்தையின்மை சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் ஆனந்தி விஜயன் ஆகியோர் அமைச்சர் மனோதங்கராஜிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த விழிப்புணர்வு நடை பயணமானது குழித்துறை வரை சென்றது.

    • மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
    • கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டி மேடு ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் படி உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு தூய்மை நடைபயணம் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி, சமூக ஆர்வலர்கள்,ஞாண சேகரன், கல்வி மேலா ண்மைக் குழு உறுப்பினரும் கல்வியாளருமான ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) சிவக்குமார் பேரணியை தொடக்கிவைத்து திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது, அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும், மக்கும் குப்பை, மக்கா குப்பையை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்கவும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தவும் தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளை பாதுகாப்பாக கையாள்வது, நீர் நிலைகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது, நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது, கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேணடும் என வலியுறுத்தினார்.

    முன்னதாக முழு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    மேலும் தூய்மைக் காவலர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.

    பேரணியில் மாணவர்கள் பதாகை ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பள்ளிவாசல் தெரு, சாலைத் தெருவழியாக பள்ளி வளாகம் சென்றடைந்தனர்.

    நிகழ்வில் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் செல்வம், ரகமத்துல்லா மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள் சந்திரசேகரன், ராஜேஸ் குட்டி, அய்யப்பன், ராஜா, முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.
    • இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.

    இந்த நடை பயணத்தை வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் மாதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அலவாய்ப்பட்டி ஊராட்சி வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
    • சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கொங்கு தனியார் மண்டபத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது. சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை முழுமையான4 வழி சாலையாக மாற்றக் கூறி நடை பயணம் சின்ன சேலத்தில் நடந்தது.  சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 37 கிலோமீட்டர் நீளம் உள்ள 9 இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளது.

    இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் கனரக இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு வழி சாலைகளில் பயணித்துவிட்டு திடீரென அகலம் குறுகிய இருவழி சாலைக்கு மாறும் பொழுது வாகனங்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.அவற்றில் ஒரு சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது. மேலும் பல சிறு விபத்துகள் வெளியே தெரிவதில்லை எனவே தமிழக அரசும் ஒன்றிய அரசும் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை முழுவதுமாக நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன்னிறுத்தி நடை பயணம் நடைபெற்றது.

    • கன்னியாகுமரியில் இருந்து நேபாளம் வரை நடக்கிறார்
    • பைக், பணம் இருந்தால் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா?

    கன்னியாகுமரி:

    நாகர்கோயில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி நிஷாந்த்.இவர் கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் லடாக் வரை நடைபயணம் மூலமாக சென்று 3 உலக சாதனை புத்தகம் மற்றும் பல சாதனைகளில் இடம் பிடித்து உள்ளார்.

    இந்த முறை புதியதாக சாதனை படைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடைபயணம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து உள்ளார்.

    அதன்படி அவர் தனது நடைபயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து நேற்று தொடங்கினார். காந்தி வடிவில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தனா திரில்லாபூர் காந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் நாகேந்திரன் ஆகியோர் அவரது நடை பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    பைக், பணம் இருந்தால் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா ஒரு ஏழை நினைத்தால் அவனது தன்னம்பிக்கையால் நடந்தே சாதிக்கலாம் என்று ஏழை மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடந்து பயணம் செய்கிறேன். என்று அவர் கூறினார்.

    இந்த பயனத்தை தொடக்கி வைத்த முத்தனா திரில்லாபூர் காந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் நாகேந்திரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

    • மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் உமர் ஹாஜியார் கொடியேற்றி வைத்தார்.விழாவில் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது கலந்துகொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரையை மனித நேய மக்கள் கட்சி பாராட்டுகிறது. இந்தியாவின் பன்முக தன்மை, மதசார்பின்மை கொள்கைக்கு கடும் அச்சுறுத்தல் நிலவும் இந்த வேளையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்பது மிகவும் அவசியமானது .அவரது நடைப்பயண யாத்திரை மகத்தான வெற்றியை பெற வேண்டும். ராகுல்காந்தி ஆட்சிக்கு வரும் போது இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும். 3சதவீதம் உள்ளவர்கள் 50 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் இடம் பிடித்துள்ளனர். நாட்டில் பிற்பட்டோருக்கும், மிகவும் பிற்பட்டோருக்குமான சமூக நீதி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்க வேண்டும். அதே போல் நீதிபதிகள் ரங்கநாதமிஸ்ரா, சச்சார் ஆகியோர் வழங்கிய அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.

    இந்தியா என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல .அது மதம், மொழி,இனம்,பண்பாடு, கலாச்சாரம் என பலவற்றாலும் பலருக்குமான பன்முகதன்மை கொண்ட நாடு ஆகும். உலகில் மதசார்பின்மை கொள்கை கொண்ட நாடு ஆகும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் இருக்கும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்த இஸ்லாமியர்களை வழக்கிலிருந்து விடுவித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தாய்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
    • ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் ரோட்டரி சங்கம், செய்யது ஹமீதா கல்லூரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடந்தது.

    கீழக்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம் முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை சந்திப்பில் முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் தாய்ப்பாலின் அவசியத்தையும், நன்மையையும் மாணவிகள் கோஷமிட்டு வெளிப்படுத்தினர்.

    கீழக்கரை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா ரோட்டரி சங்க தலைவர் கபீர் தலைமையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன் முன்னிலையில் நடந்தது. இதில் புதிதாக குழந்தை பெற்ற பெண்கள், கருவுற்று ஆலோசனைகள் பெற வந்த பெண்கள் 20 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.

    இந்த நிகழ்வுகளில் அரசுமருத்துவமனை மருத்துவர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், செய்யது ஹமீதா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிதோறும் நடைபயணத்தை மானாமதுரையில் நடத்தினர்.
    • 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

    மானாமதுரை

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிதோறும் நடைபயணத்தை மானாமதுரையில் நடத்தினர். அண்ணா சிலை தொடங்கி நகராட்சி அலுவலகம் வரைக்கும் நடைபயண பேரணி நடந்தது.

    சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் திலகவதி, துணைத் தலைவர் பேயத்தேவன், இணைச்செயலாளர் பாண்டி மீனாள், செயலாளர் பாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் சீமைச் சாமி, மாவட்ட துணை செயலாளர் பாலுசாமி, ஒன்றிய பொருளாளர் தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது மாநிலத்தலைவர் கலா பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. ஒரு சத்துணவு ஊழியர் 3 முதல் 7 பள்ளிகள் வரைக்கும் சத்துணவு மையங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வர வேண்டியுள்ளது .

    சமையலர் மற்றும் உதவியாளர்கள் இல்லாமல் பல மையங்கள் செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சத்துணவு ஊழியர்களின் ஊதியம் சிறப்பு காலமுறை ஊதியம் என பெயர் மாற்றினார்கள்.ஆனால் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காத நிலை தொடருகிறது. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியர்களுக்கு சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்கவேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.

    முதலமைச்சரிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி திருச்சியில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம். ஜூலை 15-ல் வாழ்வாதார உரிமையும் வரையறுக்கப்பட்ட ஊதியம் கேட்டு மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

    ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி சென்னையில் முதலமைச்சரை சந்தித்து நீதி கேட்பது என்று முடிவு எடுத்து மக்களிடம் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். வருகிற 10-ந் தேதி வரை பிரசார பயணம் நடைபெறுகிறது. 2500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். திருச்சியில் வருகிற 10-ந் தேதி கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×