search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு"

    • புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச் செயல்பட்டு வருகிறது.
    • பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச் செயல்பட்டு வருகிறது.

    இந்த பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர சுண்ணாம்பாற்று பகுதியில் இருந்து படகு சவாரி இயக்கப்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம்.

    அதற்காக சுண்ணாம்பாற்று கடற்கரை பகுதியில் மரத்திலான படகு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் படகு குழாமுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பாரடைஸ் பீச்சுக்கு படகு சவாரி செய்தனர்.

    பின்னர் மாலையில் படகு குழாமுக்கு திரும்ப காத்திருந்தனர். அப்போது ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படகில் செல்வதற்காக மரப் பலகையிலான படகு பாலத்தில் முண்டியடித்து ஏறியதால் பாரம் தாங்காமல் திடீரென பாலம் சரிந்து உள்வாங்கியது.

    இதில் தூத்துக்குடி விடுதலை நகரை சேர்ந்த ஜூலி, மேரி, கீதா உள்பட 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆற்றில் விழுந்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    தண்ணீரில் தத்தளித்தப்படி அலறல் சத்தம் போட்ட அவர்களை உடனடியாக படகு குழாம் ஊழியர்கள் மீட்டனர். அதிர்ஷ்ட வசமாக ஏதும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் ஆற்றில் விழுந்த சுற்றுலா பயணிகளின் செல்போன்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. அந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மீன்பிடித்தடைக்காலம் தொடங்கியுள்ளதால் பழுதடைந்த படகுகள், மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்
    • தடைக்கால நிவாரணம் 10 ஆயிரம், மானியம் ரூ.2 லட்சம் வழங்க கோரிக்கை

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடித்தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக அமலில் இருக்கும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது பார்த்து தயார் நிலையில் வைத்துக்கொள்வது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து 520-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களை பொறுத்தவரையில் வாரத்தில் சனி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதும், வெள்ளிக்கிழமையில் விடுமுறையில் இருப்பதும் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 14-ந்தேதி தடைக்காலத்திற்கு முன்பே 12-ந்தேதியிலிருந்தே தடைக்காலத்தை அனுசரிக்க தொடங்கினர்.

    இந்நிலையில் மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வேண்டிய கோரிக்கைகள் குறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் அசன் மொகைதீன் கூறியதாவது:- ஆண்டு முழுவதும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும் அது வரவுக்கும், செலவுக்கும் சரியாக உள்ளது. இந்த வேளையில் 2 மாதகாலம் தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. மீன்வளத்தை பெருக்குவதற்காக கடைபிடிக்கப்படுகின்ற தடைக்காலம் வரவேற்கதக்கதாக இருந்தாலும், மீனவர்கள் வேறு வேலையின்றி வாழ்வாதாரத்திற்கு திண்டாடும் சூழ்நிலை உருவாகுகிறது.

    எனவே தமிழக அரசால் வழங்கக்கூடிய தடைக்கால நிவாரண நிதி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் தடைக்காலத்தில் 60 நாட்களுக்கும் மேலாக படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுவதால், படகின் என்ஜின்கள் ஓட்டப்படாமல் பழுதடைந்து விடுகிறது. இதனை சரி செய்வதற்கும், படகின் பழுதடைந்த பாகங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சரி செய்வதற்கும் அரசு மானியமாக ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்க வேண்டும்.அதனை தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் சிறுக சிறுக அடைத்து விடுவார்கள் என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், நாட்டின் அன்னியச் செலாவணிக்கு மீனவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மானியம் டீசல் ரூ.80-க்கு மேல் வழங்கப்படுகிறது. இந்த விலை மீனவர்களுக்கு கட்டுபடி ஆகாததால், டீசல் அதன் கொள்முதல் விலைக்கே வழங்கினால் பேருதவியாக இருக்கும். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன் பிடித்துறைமுகங்கள் தலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. துறைமுக விரிவாக்கப் பணிகளை விரைந்து தொடங்கினால் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவித்தார்.


    • சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது
    • சீரமைக்கும் பணி சென்னையை சேர்ந்த 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதனை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பொதிகை படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து பொதிகை படகு கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடல் வழியாக சின்னமுட்டம் துறை முகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த பணியில் சென்னையை சேர்ந்த 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர். பராமரிக்கும் பணி 3 மாத காலம் நடந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து பொதிகை படகு நேற்று புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு சின்னமுட்டத்தில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தபொதிகை படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

    அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    கடல் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பர்.

    ஆழ்கடல் அழகை ரசிக்க நீர்மூழ்கி கப்பலில் செல்ல வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தற்போது இதற்கு மாற்றாக செமிசப் மெரின்' என் றழைக்கப்படும் விசைப் படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் அமர்ந்தபடி கடல் அழகை ரசிக்கலாம்.

    கடலை காணும் வகையில் இரு புறமும் நீர் புகாத கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடலில் செல்லும் போது படகில் கீழடுக்கு 1.4 மீட்டர் அளவில் ஆழ்கடலில் பயணிப்பதால் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் ஆழ்கடல் அதிசயங்கள், பவளப் பாறைகள் மற்றும் அரிய வகை நீர் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

    இவ்வகை படகுகளில் செல்ல, பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த படகுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அந்தமான் தீவுகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது, அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திற்காக நாட்டிலேயே முதல்முறையாக புதுவையில் உள்ள பி.என்.டி.படகு கட்டும் தனியார் நிறுவனம், உப்பளம் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் 'டிரை மரான்' எனும் செமி சப் மெரின் விசைப் படகு தயாரித்து வருகிறது. சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தால் 16 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    இதில், மேல் தளத்தில் 25 பேரும், கீழ் தளத்தில் 25 பேரும் பயணிக்கலாம். ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் செல்லும்போது படகு ஆடாமல் பயணிக்க இருபுறமும் இறக்கை போன்ற அமைப்புடன் படகு கட்டப்பட்டு வருவதால் இதன் பெயர் 'டிரை மரான்' என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    • பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
    • 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.

    அவர்கள் கடல் வழியாக படகுகளில் செல்கிறார்கள். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல் மார்க்கமாக படகில் அகதிகள் சென்றனர். அப்போது அந்த படகு துனிசியா கடலில் கவிழ்ந்தது.

    இதில் 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தல மான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுஉள்ளது.

    இந்த சிலையைகடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும் போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். கடல் நடுவில இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துஉள்ளதால் இந்த சிலை அடிக்கடிஉப்பு காற்றினால்சேதம்அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்புகாற்றின்பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளு வர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி 4 ஆண்டு களுக்கு பிறகு இந்தமுறை திருவள்ளுவர்சிலைபராம ரிப்புபணியானதுரூ1கோடி செலவில்கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

    அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடை பெற்று முடிந்தது.அதைத் தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவது மாக சுத்தம் செய்யப்பட் டது. பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்ட "வாக்கர்" எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்டஇரும்புபைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று முடிந்து உள்ளது. ரசாயன கலவை பூசும்பணிநிறை வடைந்து உள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளூர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற 6-ந்தேதி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளு வர் சிலைக்கு படகு போக்கு வரத்துஇயக் கப்படுகிறது.இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளு வர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திருவள்ளுவர் சிலை வளாகம் சுத்தப் படுத்தப்பட்டு தயாராகி கொண்டிருக்கிறது.

    • சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
    • தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.

    நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.

    இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆற்று கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல்
    • வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர் லூக்காஸ் (வயது 44). இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவர் வழக்கம்போல் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். படகை லூக்காஸ் ஓட்டினார்.

    அவருடன் தூத்துக் குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 3 பேருமாக 13 மீன் பிடித்தொழிலாளர்கள் சென்றனர். இவர்களது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதி 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.

    அப்போது எதிர்ப்பாரா மல் திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் படகு உடைந்து உள்ளே கடல் நீர் புகுந்தது. செய்வதறியாது தவித்த மீனவர்கள் படகில் புகுந்த நீரை இறைத்து வெளியேற்றினர். அப்போதும் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் மீனவர் லூக்காஸ் படகை அருகில் கரை சேர்க்க இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து சென்றது. படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.பின்னர் 8 நாட்டிக்கல் தூரம் அடித்து சென்றபின் படகு கட்டுக்குள் வந்தது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்த பைபர் படகில் மீனவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்தனர்.

    நேற்று காலை லூக்காஸ் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்தார். ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லூக்காஸ் படகு நோக்கி விரைந்து சென்றனர். பல மணிநேரம் சென்ற மேற்படி வள்ளங்கள், விசைப்படகு லூக்காஸ் படகை அடைந்தது. பின்னர் அவர்கள் பைபர் படகில் இருந்த 12 மீனவர்கள், உடைந்த லூக்காஸ் விசைப்படகையும் மீட்டு கரை நோக்கி விரைந்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் மீனவர்கள் அனைவரும் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக கரை சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
    • வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

    இவர்கள் பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் இன்றும் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுககளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • மூங்கில் மரத்தாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.
    • ஒரு பொம்மையும் உட்கார்ந்து வருவது போல் அழகான அமைப்புகளும் செய்யப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் மர்மமான முறையில் நேற்று மூங்கில் மரத்தாலான படகு ஒன்று மிதந்து வந்து கரையில் ஒதுங்கி உள்ளது.

    இதனை கண்ட மீனவர்கள் ஆச்சரியத்துடன் மீட்டு அதை பார்த்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக கடலோர பாதுகாப்பு படையினரும் பொறையார் காவல் நிலைய போலீசாரும் அதில் விசாரணை செய்தனர்.

    அதில் ஒரு பொம்மையும் உட்கார்ந்து வருவது போல் அழகான அமைப்புகளும் செய்யப்பட்டிருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    இது எந்த நாட்டில் இருந்து வந்தது என்பது தெரியாமல் இருந்து வருகின்றனர்.

    • கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துள்ளது
    • சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

    கடல் நடுவில் இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் இந்த சிலை அடிக்கடி உப்பு காற்றினால் சேதம் அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

    133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

    அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மன்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்ட இரும்பு பைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த பணி நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து இயக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.
    • இவை இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    சொகுசு படகுகளை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பயனாக இந்த 2 அதிநவீனசொகுசு படகுகளையும் வருகிற 17-ந்தேதி முதல் படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ×