search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர் விமானம்"

    • அதீத சப்தம் கிராமப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்து எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்தது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வானில் காதை பிளக்கும் பெரும் சப்தம் கேட்டது.அப்போது ,வீடுகளில் உள்ள ஜன்னல், பாத்திரங்கள் அதிர்ந்தன. இந்த அதீத சப்தம் கிராமப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் பொது மக்கள் பீதியில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு உங்கள் பகுதியில் இந்த சத்தம் கேட்டதா என கேட்டுக்கொண்டனர்.

    மேலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வானில் ராணுவ விமானங்கள் பறக்கும் போதும் போர் விமானப் பயிற்ச்சியின் போது உருவாகும் வெள்ளைக்கோடு போன்ற படங்களை பகிர்ந்து,இது விபத்தாக இருக்கலாம் என தகவல்களை பரவின. இதனையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இது குறித்து முன்னாள் படைவீரர் ஒருவர் கூறுகையில்,திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து அவ்வப்போது பயிற்ச்சிக்காக போர் விமானங்கள் ,ஹெலிகாப்டர்கள் வான் பரப்பில் பயிற்சியில் ஈடுபடுவது உண்டு.சமீப காலமாக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜாஸ்,மிக் மற்றும் ரபேல் ரக போர் விமானங்களில் விமானப்படையினர் தினந்தோறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சி 17 க்ளோப் மாஸ்டர்,சி 130 ஜே சூப்பர் ஹெர்குலீஸ் ஆகிய ராணுவ ட்ரான்ஸ் போர்ட் விமானங்களையும் பயிற்சிக்காக பயன்படுத்தி வருகின்றனர். சூலூர் விமானப்படை ஓடு தளத்தில் இருந்து கிளம்பும் இந்த விமானங்கள் திருப்பூர் மாவட்டத்தின் வான் பரப்பில் பறந்த படி உட்சபட்ச வேகத்தில் செல்வது, ரேடாரில் சிக்காமல் தாழ்வாக பறந்து செல்வது,எதிரி நாட்டு வான் பரப்பில் மிக உயரமாக ஊடுருவி உளவு சேகரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் அதி வேகத்தில் செல்ல சோனிக் பூம் எனப்படும் முறையை கையாண்டு ஒளியின் வேகத்துக்கு இணையாக பயணிக்க எரிபொருளை வெளியிட்டு எரிக்கும் போது கிடைக்கும் அதிக அழுத்தம் காரணமாக உச்சபட்ச வேகத்துடன் போர் விமானம் முன்னோக்கி பாயும்.அப்போது எரிபொருள் மொத்தமாக எரியும்போது வெடிசப்தம் எழும். வானில் இப்படி நிகழும் போது பரவலாக பல கிலோ மீட்டருக்கு இந்த சப்தம் கேட்கும்.மேலும் லேசான அதிர்வுகளும் ஏற்படும்.

    அதிக ஈரப்பதம் மேகங்களில் இருக்கும் போது, இவ்வாறு சோனிக் பூம் ஏற்படுத்தி வேகமாக செல்லும் போது மிக மிக அதீத சப்தம் காதை பிளக்கும் வகையில் இருக்கும். இது போன்ற ஒரு சத்தமே காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் கேட்டிருக்கும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

    ஆனால் வெடிசப்தம் கேட்டது முதல் சமூக வலைதளங்களில் பல்வேறு புரளிகள் கிளம்பி வரும் நிலையில்,இந்த வெடிசத்தம் குறித்து அதிகாரிகள் முறையாக விசாரித்து கூற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்து எதுவும் நடைபெறவில்லை எனவும்,விபத்து என பரவிய தகவல் புரளி எனவும் தெரியவந்தது.

    ×