search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரைப்பாலம்"

    • தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
    • தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆறு திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னைக்குள் வருகிறது.

    புதுச்சத்திரம் கிராமத்தில் கூவம் ஆற்றை வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக கடந்த 1950-ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலம் திருநின்றவூர் வழியாக, ஆவடி, பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமானது ஆகும்.

    இந்த தரைப்பாலத்தில் புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, பெரியபாளையம், புதுவாயல் கூட்டுச்சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியார், தொழிற்சாலை பஸ்கள், கனரக வாகனங்கள் உட்பட தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலத்த சேதம் அடைந்த இந்த தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு ரூ.90 லட்சம் செலவில் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

    ஆனால் பயன்பாட்டிற்கு வந்த 3-வது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. அதன் பின்னர் மீண்டும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை. கரையின் இருபக்கமும் எந்த வித தடுப்பு சுவரும் இல்லாமல் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    இந்த தரைப்பாலத்தில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக சவுக்கு கம்புகளை தடுப்புகளாக அதிகாரிகள் கட்டி வைத்துள்ளனர். இந்த கம்புகளும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டவை.

    தற்போது கம்புகள் அனைத்தும் சேதம் அடைந்து உடைந்து விழுந்து கிடக்கிறது. மேலும் இந்த தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. தரைப்பாலப்பகுதியில் தெரு மின்விளக்குகள் எதுவும் கிடையாது.

    இரவு நேரத்தில் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடு வதற்காக சாலையோரம் திருப்பும் போது வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

    வாகன விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தில் கட்டப்பட்டு உள்ள தடுப்பு கம்புகளை வாகன ஓட்டிகள் வேடிக்கையுடன் பார்த்து செல்கிறார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டி செல்வது சவாலானது.

    கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் சென்றால் கூவம் ஆற்றிற்குள் விழும் அபாயம் உள்ளது. தரைப்பாலத்தில் எந்த தடுப்புகளும் இல்லை.

    இதில் விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தின் பக்கவாட்டில் சவுக்கு கம்புகளை கட்டி வைத்தி ருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. இந்த கம்புகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள் அதிவேகத்தில் வந்தால் எப்படி தடுக்கும்.

    எதன் அடிப்படையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருக்கிறது என்றே தெரிய வில்லை. இது அதிகாரிகளுக்கு தெரியாதா? தரைப்பாலத்தில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் உள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்தால் பருவமழையின் போதும் பாதிப்பு ஏற்டாமல் செல்ல முடியும் என்றனர்.

    • அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    • வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது.

    திருப்பூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது. இன்று காலை முதல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

    அதிக அளவு நீர் பாலத்தின் மேலே சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தில் வெள்ளத்தை கடக்காத வகையில் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் அருவிபோல கொட்டிவருகிறது. வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் நல்லம்மன் தடுப்பணை நிரம்பியும், தடுப்பணையின் நடுவே நல்லம்மன்கோவிலை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது. நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நொய்யல் வெள்ளம் நுரையுடன் செல்கிறது. 

    • கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • அம்மப்பள்ளி அனை திறப்பால் சாமந்தவாடா தரைப்பாலம் மீண்டும் உடைந்தது.

    திருவள்ளூர்:

    தமிழக ஆந்திர எல்லையான கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள அம்மப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் அம்மப்பள்ளி அணை நிரம்பியதையடுத்து 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அம்மம்பள்ளி அணையில் இருந்து 8 கி.மீட்டர் தூரம் கடந்து தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இதனால் தற்போது கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காப்பேட்டை, சாமந்தவாடா, நெடியம், மற்றும் விடியங்காடு வழியாக தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த ஆண்டு பெய்த மழையால் சாமந்தவாடா தரைப்பாலம் சேதம் அடைந்து இருந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து இருந்தனர். அந்த தரைப்பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்றது.

    இந்தநிலையில் அம்மப்பள்ளி அனை திறப்பால் சாமந்தவாடா தரைப்பாலம் மீண்டும் உடைந்தது. இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. எனவே சாமந்தவாடா தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கனமழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது. மேலும் பழனியை அடுத்துள்ள பெருமாள் புதூர், பெரியம்மாபட்டி, பச்சையாறு கிராமங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெருமாள்புதூர் கிராமத்திற்கு முன்பாக பச்சை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆற்றின் குறுக்கே கிராம மக்கள் கடந்து செல்லும் வகையில் தற்காலிகமாக மண்ணைக் கொட்டி பாதை அமைத்துக் கொடுத்து ள்ளனர். கன மழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    தற்போது பாலம் சேதமடைந்துள்ளதால் பச்சையாறு கிராமத்திலிருந்து பெருமாள்புதூர் கிராமத்திற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர். உடனடி யாக தற்காலிக பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாலம் சீரமைப்பு உடனடியாக நடைபெறாது என்பதால் மேலும் சில நாட்களுக்கு பணியில் தொய்வு ஏற்படும் எனவும் தெரிகிறது.

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
    • ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3080 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன.

    மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.

    இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருமங்கலம் அருகே நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையால் தரைப்பாலம் மூழ்கியது.
    • வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக டி.புதுப்பட்டி, சவுடார்பட்டி, கிழவனேரி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஓடியது.

    டி.புதுப்பட்டி கிராமத்தி லிருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. அப்போது கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சக்திவேல் டூவிலரில் கோபாலபுரம் நோக்கி சென்றார். நடுபாலத்தில் சென்ற போது திடீரென மழைநீர் பாலத்தினை மூழ்க அடித்ததால் டூவிலருடன் தண்ணீரில் விழுந்து அலறினார்.

    தண்ணீரில் மூழ்காமல் இருக்க அருகேயிருந்த கருவேலமரத்தினை பிடித்து மிதந்தார். இதனை கண்ட கிராமமக்கள் திருமங்கலம் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு படையினர் வருவதற்குள் தண்ணீரின் வேகம் அதிகரிக்கவே கிராமமக்கள் கயிறு மூலமாக மின்வாரிய ஊழியர் சக்திவேலுவை மீட்டனர். இருப்பினும் அவரது டூவிலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத் திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மேற்படி பாலத்தின் வழியாக யாரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தினர் .

    இதே போல் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழைநீர் வயல்வெளிகளில் புகுந்த தால் விவசாயிகள் கவலை அடைந்தனர். வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோபாலபுரம் பகுதியில் கவுண்ட நதி குண்டாறு தூர்வாரப்படாத தால் மழை வெள்ளம் தரைப் பாலத்தின் மேல் சென்றதாகவும் ஆதலால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பகுதியில் தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    • பொதுமக்களின் வசதிக்காக புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி-எமனேஸ்வ ரத்தை இணைக்கும் வகை யில் மேம்பாலம் கட்டப்பட் டது. அந்த பாலம் வழியாக தான் பரமக்குடியிலிருந்து இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங் கள், மாநிலங்களுக்கு தினந் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்ற னர்.

    இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பாலம் முழுவதுமாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது புதிய மேம்பால பணிகள் நடைபெறும் போது மக்கள் பயன்படுத்து வதற்காக புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப் பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து திறக்கப் பட்ட தண்ணீரில் தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்து இரண்டாக உடைந்து மக்கள், பாலத்தை பயன் படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலை யில் பகல், இரவு நேரங்களில் உடைந்த தரைப்பாலத்தில் நடந்து சென்று மது அருந்தி விட்டு வரும் போது உடைந்த பாலத்தில் போதை ஆசாமி கள் நிலை தடுமாறி விழுந்து இதுவரை 2 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே மக்களின் நலன் கருதி உடைந்த பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ஆற்றுப்பாலம் அருகே போடப்பட்ட தற்காலிக உடைந்த பாலத்தை முழுவது மாக அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் கட்டினால் நயினார்கோவில், இளை யான்குடி, எமனேஸ்வரம், வளையனேந்தல், முனை வென்றி, மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

    அதே போல் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய விலை பொருட்களை தங்களது சைக்கிள், இருசக்கர வாக னம் மற்றும் வேன்கள் போன்ற வாகனங்களில் தரைப்பாலம் வழியாக கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

    காலை, மாலை நேரங்க ளில் சைக்கிள், நடந்து மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆற்றுப்பாலம் அருகே புதிதாக தரைப் பாலம் அமைத்தால் வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிர்க்க முடியும்.

    மாணவர்கள், விவசாயி கள் பொதுமக்கள் நலன் கருதி பழைய தரைப் பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய தலைப்பாலம் கட்டி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கன மழையால் தரைப்பாலம் உடைந்தது
    • மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் உடைந்தது. இதனால் சுற்றுவட்டார மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து அய்யன்கொல்லி, பகுதியில் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் கூவமூலா அருகே செட்டிவயல் பகுதியில் தரைபாலம் தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் உப்பட்டி மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர செட்டி வயல் பகுதியில் 180 குடும்பங்கள் இந்த பாலத்தின் வழியேசெல்ல வேண்டும். இந்த பகுதியில் பாலம் உடைந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
    • ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பாலாற்றின் குறுக்கே வாகன போக்குவரத்துக்கு வசதியாக, 25 ஆண்டுகளுக்கு முன் தரை மட்ட பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக காஞ்சிபுரத்தில் இருந்து, பிரமதேசம், ஆற்காடு, வேலுார் போன்ற பகுதிகளுக்கு பஸ் இயங்கி வருகிறது.

    மேலும் இந்த ஆற்றுக்கு மறுகரையில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லை தொடங்குகிறது.

    அதிகளவில் வட இலுப்பை, செய்யனுார், பேட்டை, பட்டரை, சித்தனகால், சீவரம், சிறுநாவல்பட்டு, பிரமதேசம், நாட்டேரி, கல்பாக்கம், தென்னம்பட்டு, புத்தனுார், ஐவர்தாங்கல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையின் போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அங்கு மண் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த மண்சாலை மழைக்காலத்தில் தாக்கு பிடிக்காது என்பதால் இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய தரைமட்ட பாலம் 4 கோடி ரூபாய் செலவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது தண்ணீர் பிரிந்து செல்லும், பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

    • சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் அடிக்கடி மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூர் அருகில் ஆத்தங்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அ.காளாப்பூரில் இருந்து ஆத்தங்கரைப்பட்டி செல்ல பாலாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த தரைபாலம் வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

    சில வாரங்களாக திண்டுக்கல் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாகவும், சிங்கம்புணரியில் பெய்த கனமழை காரணமாகவும், பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அ.காளா ப்பூர் தடுப்பணையில் தண்ணீர் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் அ.காளாப்பூர்- ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலம் பாலாற்றின் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தடைபட்டது.இதனால் அபாயம் அறியாமல் இந்த தரைப்பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கிராம மக்கள் வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றனர்.

    ஒவ்வொரு முறையும் மழைகாலம், வடகிழக்கு பருவ மழைக்காலம், புயல் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுவதால் இந்த பகுதி மக்கள் சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் தரைபாலத்தை கடந்து சென்று வருகின்றனர். ஆத்தங்கரைப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தரைப்பா லத்தை கடக்க பெற்றோருடன் சென்று வருவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இங்கு உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரை பாலம்அமைக்கப்பட்டது.
    • தரை பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதைக் கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட குயிலா பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரை பாலம்அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலம் புதுச்சேரி- தமிழக பகுதி களை இணைக்கும் பாலமாக அமைந்து வருகிறது.கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் குயிலாபாளையம் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தொடர் மழை பெய்து வருவதால் வயல்வெளிகளில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு அதிகப்படியாக மழை நீர் வெளியேறுவதால் தரைப்பாலம் மூழ்கி அதற்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. குயிலாபாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வனத்தாம்பா ளையம், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுவை மற்றும் தமிழக பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் தரை பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதைக் கடந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ஒவ்வொரு பருவ மழை காலங்களிலும் தரைப்பாலம் மூழ்கி வெள்ளம் செல்வதால் அவ் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் பல கிலோ மீட்டர் சுற்றி வேலைக்கு செல்வதாகவும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பயந்து வீட்டிலே விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு குயிலா பாளையம் பகுதியில் உள்ள பம்பை ஆற்றங்கரையில் மேம்பா லங்கள் அமைத்து அப்பகுதி மக்களுடைய பாதுகா ப்பையும் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக்கொடுக்க பொது மக்கள் வேண்டுகோள்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்றுவர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று புழல் ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெய்யூர்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று விடியற்காலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணி நிறைவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

    எனவே, சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும். உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுத்து அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என இப்பகுதி கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×