search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி உயிரிழப்பு"

    • 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
    • சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஹினில்அன்சாரி-நசீரான்கதூம். இவர்களது மகள் அப்சார்கதூம் (வயது 4). இவர்கள் வால்பாறை ஊசிமலைமட்டம் எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் அவர்கள் தேயிலை தோட்டத்துக்கு சென்றபோது அங்கு வந்த ஒரு சிறுத்தை குழந்தை அப்சார்கதூமை தாக்கி கொன்றது. தகவலறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும், சிறுத்தையை கண்காணிக்க 6 இடங்களில் கண்காணிப்பு காமிராவையும் பொருத்தி உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து கூறிய வனத்துறை அதிகாரிகள், "வால்பாறை தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ள 6 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி உள்ளோம். கண்காணிப்பு காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவான உடன் அந்த பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறுத்தையின் கால் தடம் மற்றும் புதர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. வீட்டில் இருந்து வெகுதொலைவில் தனியாக விளையாட அனுமதிக்க வேண்டாம். மேலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் புதர்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    இதுதவிர இறைச்சி மற்றும் உணவுக்கழிவுகளை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சிறுத்தையை பிடிக்கும்வரை சம்பவம் நிகழ்ந்த தேயிலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டாமென சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.

    • காரை பார்த்த சிறுமி சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் திஷா பட்டேல் என்ற சிறுமி, ஸ்பர்ஷ் வில்லா சொசைட்டி வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. சிறிது நேரம் கழித்து, அவர் முன்னே ஒரு கார் வந்தது.

    காரை பார்த்த சிறுமி சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் சுதாகரித்து எழுவதற்குள், அந்த கார் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.

    சிறுமியின் மீது கார் மோதியவுடன் காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர் சிறுமியை பார்க்க வெளியே வருகிறார். அதற்குள் சிறுமி உயிரிழந்து விட்டார்.

    கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியின் மாதிரி பரிசோதனை செய்ததில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
    • ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த நோயாளியும் சண்டிபுரா வைரசால் உயிரிழந்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரசால் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு அம்மாநிலத்தில் ஏற்பட்ட முதல் மரணம் என்று சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது.

    மாநிலத்தில் 14 நோயாளிகள் தொற்றுநோயால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் 29 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் மற்றும் கடுமையான மூளையழற்சி (மூளையின் அழற்சி) அறிகுறிகளை கொண்டுள்ளது.

    சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமத்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமி வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் ஆரவல்லி மாவட்டம் மோட்டா கந்தாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிறுமியின் மாதிரி பரிசோதனை செய்ததில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் என்று சபர்கந்தா தலைமை மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த நோயாளியும் சண்டிபுரா வைரசால் உயிரிழந்துள்ளார்.

    இதுதவிர ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளியும், மத்தியப் பிரதேசத்தின் தாரைச் சேர்ந்த ஒருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜோவானா 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
    • தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அடிமாலி:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா (வயது 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று முன்தினம் இரவு ஜோவானா, தனது வீட்டில் 'நூடுல்ஸ்' உணவு சாப்பிட்டு கொண்டிருந்தாள். அப்போது தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோவானா பரிதாபமாக இறந்தாள்.

    • பள்ளி மாணவியான தக்சினாவுக்கு திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது.
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களுக்கு முன்பு தக்சினா பரிதாபமாக இறந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் தக்சினா (வயது 13).

    பள்ளி மாணவியான இவருக்கு, திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களுக்கு முன்பு தக்சினா பரிதாபமாக இறந்தார்.

    அவரது மரணத்துக்கு காரணம் என்ன என்று டாக்டர்கள் தீவிரமாக ஆய்வு செய்ததில், தக்சினாவுக்கு அரிய வகை அமீபிக் நோய் தாக்குதல் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அவரது முதுகுத்தண்டு திரவத்தை பரிசோதித்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சிறுமி தக்சினா, மூணாறுக்கு பள்ளி பயணம் சென்றபோது குளத்தில் குளித்தபோது இந்த நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    • கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாவண்யா சிறுவர்-சிறுமியருடன் சாலையில் நின்று விளையாடினாள்.
    • லாவண்யா உள்பட 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் கிராமத்தை சேர்ந்தவர் கீரலிங்கா. இவர் தனது மனைவி மற்றும் லாவண்யா என்ற 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாவண்யா, அந்த பகுதியை சேர்ந்த மற்ற சிறுவர்-சிறுமியருடன் சாலையில் நின்று விளையாடினாள். அப்போது தெருநாய் ஒன்று திடீரென விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில் லாவண்யா உள்பட 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    கழுத்தில் படுகாயம் அடைந்த லாவண்யா உள்பட அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பினர். லாவண்யாவும் வீடு திரும்பினாள்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென சிறுமி லாவண்யா உயிரிழந்தாள்.

    • சிறுமியின் உடல்நிலை சற்று தேறிய நிலையில், கடந்த 29-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
    • கிளீனிக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்த தன்மணியன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.

    இவரது மனைவி உஷா. இவர்களுக்கு சிவா(வயது 8) என்ற மகனும், சிவானி(6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி சிறுமி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் சிறுமிக்கு ஊசி போட்டுள்ளார்.

    பின்னர் சிறுமியின் உடல்நிலை சற்று தேறிய நிலையில், கடந்த 29-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கிளீனிக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவானி திடீரென மயக்கம் போட்டு விழுந்து இறந்துவிட்டார்.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊசி போட்டதில் பக்க விளைவு ஏற்பட்டு சிறுமி இறந்தாரா? அல்லது காய்ச்சல் பாதிப்பால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (வயது 43). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி விட்டு திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி இறந்தார். இதனை தொடர்ந்து கைதான செந்திலுக்கு ஜாமீன் வழங்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி-ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் வாகையூரில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
    • திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன். இவரது மனைவி லதா. இவர்கள் தங்களுடைய 3-வது மகள் காஞ்சனாவை சென்னையை சேர்ந்த கூலிதொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்தனர்.

    இவர்களது மகள் லாவண்யா (13). மகன் புவனேஷ் (9). இந்த நிலையில் காஞ்சனா குடும்பத்தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்த லாவண்யா 7-ம் வகுப்பும், புவனேஷ் 4-ம் வகுப்பும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விச்சாதாங்கலில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கடைசி நாள் விழா நடைபெற்றது. அன்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கென மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அவை ஒளிர்வதற்கென மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாடானது மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

    அப்போது லாவண்யா மாட்டுவண்டியில் அமர்ந்து இருந்தார். திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது. சிறுமி கதறி துடித்தாள். கதறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அனைவரும் உடனடியாக ஜெனரேட்டரின் இயக்கத்தை நிறுத்தி சிறுமி லாவண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிறுமி அப்ரா விடுத்த வேண்டுகோள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    • அப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்தவர் அப்ரா (வயது 16). இவருக்கு எஸ்.எம்.ஏ. எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அப்ராவின் சகோதரர் முகமதுவுக்கும் உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

    அவரையும் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கும் அப்ராவுக்கு ஏற்பட்டுள்ள அதே ஸ்பைனல் தசை சிதைவு நோய் ஏற்பட்டிருப்பதாக கூறினர்.

    அப்ராவின் சகோதரருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோயை குணப்படுத்த வேண்டுமானால் அதற்குரிய மருந்துக்கு பல லட்சம் செலவிட வேண்டும் எனக்கூறினர்.

    குறிப்பாக ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் என தெரிவித்தனர். சமூக வலைதளம் மூலம் ரூ.46 கோடி திரட்டினார்

    இதனை கேட்டதும் சிறுமி அப்ரா தளர்ந்து விடவில்லை. தனது சகோதரனை காப்பாற்ற சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கும் அதே நோய் பாதிப்பு இருந்த போதிலும் தனது சகோதரனை காப்பாற்ற அனைவரும் உதவுங்கள் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

    சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிறுமி அப்ரா விடுத்த வேண்டுகோள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பொதுமக்கள் பலரும் அப்ராவுக்கு உதவ முன்வந்தனர். வெளிநாடுகளில் இருந்தும் பலர் உதவி கரம் நீட்டினர். இதன் காரணமாக அவருக்கு குறுகிய காலத்திலேயே சுமார் ரூ.46 கோடி பணம் கிடைத்தது.

    இந்த பணத்தின் மூலம் அப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அதே ஆஸ்பத்திரியில் அப்ராவும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சகோதரன் உயிரை காப்பாற்ற உருக்கமான வேண்டுகோள் விடுத்து பணம் திரட்டிய அப்ரா, அதே நோய்க்கு பலியான சம்பவம் அவருக்கு உதவி செய்த மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகள் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

    வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின் பேரில் புணர்விகாவை நேற்று முன்தினம் இரவு நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

    அதன்படி இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெற்றோரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

    வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர். இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு புணர்விகா பரிதாபமாக இறந்தார்.

    வாயில் குங்குமம் திணிக்கப்பட்டதால் அவர் மூச்சு திணறி இறந்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×