search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு"

    • தற்போது பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்று அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
    • இந்த அழைப்பு கடிதம், தற்போது ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் அனுப்பப்படும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வருகிற 11-ந் தேதி மீண்டும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அதை முடிவு செய்ய தீர்மானித்தனர்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கோர்ட்டு மூலம் போட்ட முட்டுக்கட்டையால் அது நிறைவேறாமல் போனது. கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றுதான் முதலில் கையெழுத்து பெறப்பட்டது.

    ஆனால் கோர்ட்டு மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொடுத்த நெருக்கடியால் அதை முறியடிக்க ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கடைசி நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

    மொத்தம் உள்ள 2660 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு கடிதம் வழங்கினார்கள். அதை வைத்துதான் அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வர இருந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து விட்டு 11-ந்தேதி கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    தற்போது பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்று அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த அழைப்பு கடிதத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு தலைமைக்கழக நிர்வாகிகள் அழைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த அழைப்பு கடிதம், தற்போது ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் அனுப்பப்படும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பல்வேறு அதிரடி முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி. எம்.ஜி.ஆர்.காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி தி.மு.க.வை எதிர்க்கட்சி என்பதை விட எதிரி கட்சியாகவே பாவித்து அரசியல் நடத்தினார்கள்.

    அதனால்தான் தொண்டர்களும் இயக்கத்தில் பிடிப்புடன் இருந்தார்கள். ஆனால் இப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் கட்சி தொண்டர்களையே கோபப்படுத்தும் வகையில் அமைந்து விட்டது.

    அவர் சசிகலாவை ஆதரித்த போதுகூட தொண்டர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கருணாநிதியை கலைஞர் என்று குறிப்பிட்டும், தான் அவரது ரசிகர் என்று குறிப்பிட்டும் தெரிவித்த கருத்துக்கள் தொண்டர்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக எம்.பி. பதவியில் இருக்கும் அவரது மகன் ரவீந்திரநாத் முதல்-அமைச்சரை சந்தித்து பேசியது மட்டுமல்ல தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டியது கட்சியினரிடம் இருந்த கொஞ்சம் நஞ்ச மரியாதையையும் இழக்க செய்தது.

    அப்படி இருந்தும் கடந்த முறை பொதுக்குழுக்கூட்டம் கூடுவதற்கு ஒருநாள் முன்பு வரை சமரசம் செய்யப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமை தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

    கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகாவது அமைதியாக இருந்திருந்தால் தொண்டர்களும் சகித்து கொண்டிருப்பார்கள். ஆனால் 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் இறங்கியதால் கொஞ்சம் நஞ்சம் அவரிடம் இருந்த அவரது ஆதரவாளர்களும் அவரை விட்டு விலகி விட்டார்கள்.

    அதனால்தான் இப்போது 2400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய கோரி கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்.

    கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் எழுச்சியுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிடலாம் என்று மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. ஐகோர்ட்டும் தடை செய்ய முடியாது என்று அறிவித்து விட்டது.

    கொரோனாவை காரணம் காட்டியாவது கூட்டம் தடை செய்யப்படுமா? என்று நினைத்தார்கள். ஆனால் அதையும் சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கப்போவதில்லை. கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    அதனால்தான் இந்த பொதுக்குழு, அரங்கத்திற்கு உள்ளே நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வெளியே பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்படுகிறது. பொதுக்குழுவுக்கு வரும் அனைவருக்கும் கிருமிநாசினிகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

    வருகிற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை முதலில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்து அறிவிக்கப்பட உள்ளது.

    ஏனெனில் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கிய போது பொதுச்செயலாளரை கட்சியின் உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதியை உருவாக்கி வைத்துள்ளார். அந்த விதி இதுவரை திருத்தப்படவில்லை.

    எனவே தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்து விட்டு உறுப்பினர்கள் மூலம் தேர்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படுவார்.

    அதுமட்டுமல்ல கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இதுவும் அ.தி.மு.க.வின் விதிகளில் உள்ளது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக அதை உடனடியாக செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் சாதகமான தீர்ப்பு பொதுக்குழுவுக்கு முன்பு வந்துவிட்டால் விதிகளை திருத்தும் தீர்மானம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மன நிலையை புரிந்து கொண்டு சமாதானமாக போனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கும் ஆபத்து வராது. இல்லாவிட்டால் பொருளாளர் பதவியையும் பறிக்கும் தீர்மானம் கூட கொண்டு வரப்படலாம். அதுமட்டுமல்ல அ.தி.மு.க.வில் கட்சிக்கு விரோதமாக யாரேனும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கலாம் என்பது கட்சி விதி.

    இந்த விதிப்படியும் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அ.தி.மு.க.வில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி வெளியில் போக செய்ய முடியும். இதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

    கடந்த முறை கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களில் சில தீர்மானங்களை நீக்குவது மற்றும் சில தீர்மானங்களில் மாற்றம் கொண்டு வருவது, புதிய தீர்மானங்களை சேர்ப்பது பற்றி பொன்னையன் தலைமையிலான தீர்மானக்குழு அடுத்த ஓரிரு தினங்களில் விவாதித்து முடிவு செய்யும்.

    கண்டிப்பாக தி.மு.க. அரசின் சீர்கேடுகளை பற்றி ஒரு பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். அதை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் அறிவிப்பும் தீர்மானத்தில் இடம்பெற வாய்ப்பு உண்டு.

    • ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • ஜூலை 4ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நீதிபதி உத்தரவு

    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை உரிய நடைமுறைய பின்பற்றாமல் நடத்தியதாக கூறி, அந்த தேர்தலை ரத்து செய்யவேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 23ம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, கூடுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    தற்போது ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக அடுத்த பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பொதுக்குழுவை கூட்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மனுவில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் பொருளாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை மாவட்ட முன்னாள் செயலாளர் என்றும் சூரியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், ஜூலை 4ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு உத்தரவு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 4-ம் தேதி விசாரிக்கப்படுகிறது.
    • பொதுக்குழு கூட்டத்தில் நீதிபதிகளின் உத்தரவை மீறியதாக சண்முகம் குற்றச்சாட்டு.

    ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 4-ம் தேதி விசாரிக்கப்படுகிறது.

    ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த சண்முகம் கடந்த 23-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நீதிபதிகளின் உத்தரவை மீறியதாக சண்முகம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இந்நிலையில் இந்த மனுவை 4-ம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    • இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியை வழி நடத்தலாம்.
    • திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம்.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் தற்போது இல்லை. இரண்டு பதவிகளும் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அவைகள் காலாவதி ஆகிவிட்டன. இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி அ.தி.மு.க. பொருலாளர் மட்டுமே.

    எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக மட்டுமே உள்ளார். இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியை வழி நடத்தலாம் என்று கட்சியின் சட்ட விதி கூறுகிறது.

    மேலும், அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.
    • ஈபிஎஸ் தரப்பு நடத்தவுள்ள பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது என மனு.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கடந்த வாரம் ஒற்றை தலைமை கோஷத்தை திடீரென முன் வைத்தனர்.

    எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. தலைமை பதவிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அணி திரண்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் அனுமதி அளித்திருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பாதியிலேயே ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள களம் இறங்கி உள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த அவர் தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடீரென மனு அளித்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வக்கீல் மனோஜ்பாண்டியன் தலைமையிலான வக்கீல்கள் குழுவினர் இந்த மனுவை அளித்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் வருமாறு:-

    நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறேன். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. விதிகளில் திருத்தம் செய்து பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரும் நோக்கத்தில் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    எனவே 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்.

    பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கட்சியின் அவைத் தலைவர் வெளியிட்டு உள்ளார். இதனை செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில் எந்தவித மாற்றத்தையும் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க கூடாது. அ.தி.மு.க. சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி திருத்தங்கள் செய்வது ஏற்கத்தக்கதல்ல என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தனக்கு எதிராக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த மறுநாளே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் அவசரம் அவசரமாக மனுதாக்கல் செய்திருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. தனது வக்கீல்கள் மூலமாக மனுவை அளித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்றும் முறையிட முடிவு செய்துள்ளார்.

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் அமர்வதற்கு காய் நகர்த்தி வரும் நிலையில் அதற்கு தடை போடும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

    நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி சென்னை ஐகோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் விரைவில் மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தூக்கியுள்ள இந்த 2 கவசங்களும் கட்சிக்குள் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தான் வேனை பஞ்சர் செய்து காற்றை வெளியேற்றி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் வேறு வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போது ஓ.பன்னீர்செல்வம் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவருடன் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வெளியேறினார்கள். ஓ.பன்னீர்செல்வம் மண்டபத்தை விட்டு வெளியே வந்த போது தொண்டர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். அவர் டெம்போ டிராவலர் வேனில் இன்று வந்திருந்தார்.

    அந்த வேனில் ஏறி வீடு திரும்புவதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்றார். ஆனால் அவரது வேன் டயர் பஞ்சர் ஆகி இருந்தது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தான் வேனை பஞ்சர் செய்து காற்றை வெளியேற்றி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் வேறு வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுகிறது.
    • அதிமுக கட்சி விதிகளின்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் கூட்டும் அதிகாரங்கள் நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் ராம்குமார் ஆதித்தன். அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியின் மகன் கே.சி.பி. சுரேன். இவர்கள் இருவரும் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் நாங்கள் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி நடந்தது.

    அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் ஆகிய புதிய பதவிகளை உருவாக்கி தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த இரு பதவிகளுக்கும் ஏற்கனவே இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்களை மாற்றி வழங்கப்பட்டது.

    இவ்வாறு புதிய பதவிகளை உருவாக்கவோ, பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்களை மாற்றம் செய்யவோ கட்சியின் பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை.

    இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தபோது அந்த தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சிவில் வழக்கு தொடர்ந்தோம்.

    இந்த நிலையில், வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுகிறது. அதிமுக கட்சி விதிகளின்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் கூட்டும் அதிகாரங்கள் நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    எனவே அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டுதல், கட்சியின் ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடைவிதிக்க வேண்டும்.

    அ.தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். கட்சியின் பொதுக்குழு தான் அவைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி செயற்குழுவில் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை தேர்வு செய்ததற்கு தடை விதிக்க வேண்டும்.

    கடந்த ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இருமுறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

    ×