search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தி விநாயகர் கோவில்"

    • விஜயநகர மன்னர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு நிறைய நன்கொடைகளை வழங்கினார்கள்.
    • சுயம்பு விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்கள் குறைகளை எல்லாம் தீர்த்து வைத்தார்.

    காணிப்பாக்கம் விநாயகர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டபோது அந்த ஊர் மக்கள் பேரானந்தம் அடைந்தனர். உடனே சுயம்பு இருந்த இடத்தை சுற்றி சிறு குடில் அமைத்து நித்யபூஜை மற்றும் வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

    சுயம்பு விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்கள் குறைகளை எல்லாம் தீர்த்து வைத்தார். பக்தர்கள் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்தார். பக்தர்கள் நினைத்து வந்த காரியங்கள் நடந்தன.

    இதனால் சுயம்பு விநாயகர் புகழ் ஆந்திரா முழுவதும் பரவியது. மக்கள் அலை, அலையாக காணிப்பாக்கம் நோக்கி வரத்தொடங்கினார்கள். 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்து வந்த முதலாம் குலோத்துங்கசோழ மன்னனுக்கு இதுபற்றி தெரியவந்தது.

    சோழ மன்னர் தன் படைகள் புடைசூழ காணிப்பாக்கம் சென்றார். சுயம்பு விநாயகரை கண்டு தரிசனம் செய்தார்.

    அப்போதே அவர் உள்ளத்தில் சுயம்பு விநாயகருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று தோன்றியது. உடனே சிறு கருவறை அமைப்புடன் கருங்கல்லால் கோவில் எழுப்பினார்.

    அந்த ஆலயத்தில் காணிப்பாக்கம் பகுதி மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

    1336-ம் ஆண்டு காணிப்பாக்கம் பகுதி விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாறியது. சுயம்பு விநாயகரை நேரில் வந்து வணங்கிய விஜயநகர மன்னர்கள் அந்த கோவிலுக்கு நிறைய நன்கொடைகளை வழங்கினார்கள்.

    அது மட்டுமின்றி சுயம்பு விநாயகர் ஆலயத்தை சீரமைத்து புதுப்பித்தனர். மேலும் காணிப்பாக்கம் கோவிலுக்கு அர்த்தமண்டபம், மகாமண்டபம் கட்டி விரிவுபடுத்தப்பட்டது.

    அதன்பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் காணிப்பாக்கம் கோவில் எந்த வளர்ச்சியும் பெறவில்லை. சுயம்பு விநாயகரின் அற்புதங்களையும், அருளையும் கண்டு ஆங்கிலேயர்கள் பிரமித்தனர்.

    பூஜை முறைகளுக்கு அவர்கள் பரிபூரண ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால் கோவில் விரிவாக்கம் பணிகளில் அவர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு காணிப்பாக்கம் விநாயகர் புகழ் நாடெங்கும் நாலாபுறமும் பரவியது. எல்லா திசைகளில் இருந்தும் மக்கள் காணிப்பாக்கம் வரத்தொடங்கினார்கள்.

    மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிய பிறகே கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் ஆலய விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த விரிவாக்க பணிகளுக்காகவே கோவிலை சுற்றியுள்ள நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    அந்த இடங்களில் கோவிலுக்கான மேம்பாட்டு பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன.

    இதனால் இந்த ஆலயம் தற்போது பிரமாண்டமான ஆலயமாக மாறி வருகிறது. கோவிலை சுற்றிலும் வாகன நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக 100 அடி ரோடு அமைத்துள்ளனர்.

    கோவில் பிரதான பாதை தொடங்கும் பகுதியில் சேவா டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதை வாங்கி செல்லத் தொடங்கியதும் ஒரு விநாயகரை காணலாம். அங்கு தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள் (இதன் அருகில்தான் கோவில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது).

    இதையடுத்து கோவில் எதிரில் உள்ள புனித குளத்துக்கு சென்று புனிதநீர் எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். சில பக்தர்கள் அந்த இடத்தில் நின்று தீபம் ஏற்றி சுயம்பு விநாயகரை வழிபடுகிறார்கள்.

    நாம் அதை கடந்து முக்கிய நுழைவாயில் வழியாக உள்ளே செல்லாம்.

    கொடிமரம், பலிபீடம் உள்ள பகுதிகளுக்கு சென்று வழிபட வேண்டும். அதன் இருபக்கமும் கட்டணத்துக்கு ஏற்ப வழிபாடு 'கியூ'க்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நம் வசதிக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி செல்லலாம். இலவச தர்ம வரிசையும் உண்டு.

    கருவறையில் சுயம்பு விநாயகரை நிதானமாக தரிசனம் செய்யலாம். வேகமாக செல்லுங்கள் என்று ஊழியர்கள் குரல் கொடுப்பார்களே தவிர யாரும் உங்கள் கையைப்பிடித்து இழுத்து வெளியில் விடமாட்டார்கள். எனவே சுயம்பு விநாயகரை கண்குளிர கண்டு தரிசனம் செய்யலாம்.

    மகாமண்டபத்துக்குள் வரிசையில் செல்லும் போதே சுயம்பு விநாயகர் நம் கண்களுக்கு காட்சி கொடுத்து விடுவார். எனவே கவலைகள் தீர அவரை நேரில் தரிசனம் செய்தபடி வேண்டலாம்.

    சுயம்பு தோன்றிய இடத்தை சுற்றி தற்போதும் பள்ளம் இருப்பதையும் எனவே சுயம்பு விநாயகரை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதையும் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

    சுயம்பு விநாயகரை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும் வழியிலேயே ரூ.50 மற்றும் ரூ.100-க்கு லட்டு பிரசாதம் கொடுக்கிறார்கள். தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

    இதையடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்துவழிபாடு செய்யலாம். ஒரே பிரகாரம்தான். பிரகாரத்தில் கண்ணாடி மண்டப அரங்கில் சித்தி-புத்தியுடன் உற்சவர் கணபதி உள்ளார். இந்த கண்ணாடி மண்டபத்தை நடிகர் மோகன்பாபு கட்டிக் கொடுத்துள்ளார்.

    அந்த கண்ணாடி மண்டபம் பின்புறம் வில்வமரம் உள்ளது. அந்த மரத்தடியில் நாகம்மன் உள்ளார். அவரை சுற்றி ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன.

    பிரகாரத்தில் ஐம்பொன் விநாயகர் சிலைகள் ஒரு தனி சன்னதியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இடதுபக்கம் வீரஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. வலது பக்கம் நவக்கிரக சன்னதி உள்ளது. வேறு எந்த சன்னதியும் கிடையாது. மொத்தமே 4 இடத்தில்தான் வழிபாடு நடப்பதால் சில நிமிடங்களில் தரிசனம் செய்து முடித்து விட முடியும்.

    ஒரே ஒரு பிரகாரத்தை சுற்றி பிரமாண்டமாக கருங்கற்கலால் சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. மண்டபங்கள் அமைக்க வசதியாக இந்த சுற்றுசுவர் கட்டுப்பட்டுள்ளது. இதுகோவிலை மிகவும் பெரிதாக, பிரமாண்டமாக காட்டுகிறது.

    எதிர்காலத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தால், அதை சமாளிக்கும் வகையில் திட்டமிட்டு கட்டிட பணிகள் நடப்பது பாராட்டுக்குரியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தம்பி லிகிதுடு தன் அண்ணனின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் மாம்பழ தோட்டத்துக்குள் புகுந்தான்.
    • தவறு செய்த லிகிதுடுவின் இரண்டு கைகளையும் வெட்ட உத்தரவிட்டார். அதன்படி லிகிதுடுவின் 2 கைகளும் வெட்டப்பட்டன.

    காணிப்பாக்கம் விநாயகர் அருள் வெளிபடுத்தப்பட்ட சம்பவங்கள் பல தடவை நடந்துள்ளன. வரலாற்று குறிப்பில் இடம்பெற்றுள்ள ஒரு அற்புதம் வருமாறு:-

    காணிப்பாக்கம் கிராமத்தின் அருகில் பகுதா நதி என்றொரு நதி உள்ளது. அந்த காலத்தில் பாலம் கட்டப்பட்ட வசதி இல்லாததால் மக்கள் அந்த பகுதா நதியில் இறங்கி நனைந்தபடிதான் கரை கடந்து வருவார்கள்.

    பெரும்பாலானவர்கள் அந்த பகுதா நதியை கடக்கும் போதே, புனித நீராடி விட்டு வந்து சுயம்பு விநாயகரை வழிபட்டு செல்வார்கள். இந்த பழக்கத்தால் காணிப்பாக்கம் விநாயகர் புகழ் பரவியது.

    காணிப்பாக்கத்தில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் அண்ணன்-தம்பி வசித்து வந்தனர். அண்ணன் பெயர் சுங்குரு. தம்பி லிகித்துடு.

    ஒரு நாள் அவர்கள் இருவருக்கும் காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரும் காணிப்பாக்கம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டனர்.

    காலையில் நடக்க தொடங்கி மதியம் வரை அவர்கள் நடந்து கொண்டே இருந்தனர். நீண்ட தூரம் நடந்ததால் அவர்களுக்கு 'களைப்பு' ஏற்பட்டது.

    அதோடு பசியும் வயிற்றை கிள்ளியது. பசி அதிகரித்த காரணத்தால் அவர்களால் மேற்கொண்டு தொடர்ந்து நடந்து செல்ல முடியவில்லை.

    கால்கள் தள்ளாட்டம் போட்டன. பசி மயக்கத்தில் கண்கள் சொருகியது.

    அப்போது பாதையோரம் மிகப்பெரிய மாஞ்சோலை இருப்பதை அண்ணன்-தம்பி இருவரும் பார்த்தனர். மாமரங்களில் நிறைய மாம்பழங்கள் நன்றாக பழுத்து தொங்கிக் கொண்டிருந்தது.

    அதைப்பார்த்ததும் தம்பி லிகித்துடுக்கு பசி மேலும் அதிகரிப்பது போல இருந்தது. இரண்டு மாம்பழத்தை பறித்து சாப்பிட்டால் பசி அடங்கி விடும் என்று நினைத்தான்.

    அந்த மாஞ்சோலை அந்த நாட்டு அரசனுக்கு சொந்தமானதாகும். அதில் நுழைந்து யாரும் மாம்பழம் பறிக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

    என்றாலும் லிகிதுடுக்கு பசியை அடக்க வேறு வழி தெரியவில்லை. ராஜாவின் மாஞ்சோலைக்குள் புகுந்து மாம்பழம் பறித்து சாப்பிட முடிவு செய்தான்.

    இதற்கு அண்ணன் சங்குடு எதிர்ப்பு தெரிவித்தான். வேண்டாம் இந்த பழங்கள் எல்லாம் அரசருக்கு சொந்தமானவை. அவற்றை பறிப்பது ராஜ துரோகமாகும் என்று எச்சரித்தான்.

    ஆனால் பசி வந்தால் பத்தும் பறந்து போகுமே.

    தம்பி லிகிதுடு தன் அண்ணனின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் மாம்பழ தோட்டத்துக்குள் புகுந்தான். மாம்பழங்களைப் பறித்து ஆசை தீர தின்றான். அதன் பிறகே அவனது பசி அடங்கியது. நிம்மதியாக வெளியில் வந்தான்.

    அங்கு அண்ணன் சங்குடு கடும் கோபத்தில் நின்று கொண்டிருந்தான். நீ செய்தது பெரிய தவறு. என் தம்பியாக இருந்தாலும் நீ குற்றவாளி. உன்னை அரசனிடம் ஒப்படைப்பதே என் கடமை என்று தம்பியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான்.

    அரசர் நடந்ததை எல்லாம் கேட்டார். தவறு செய்த லிகிதுடுவின் இரண்டு கைகளையும் வெட்ட உத்தரவிட்டார். அதன்படி லிகிதுடுவின் 2 கைகளும் வெட்டப்பட்டன.

    இதை கண்டு அண்ணன் சங்குடு பதறிப் போனான். அரசர் சாதாரண தண்டனை கொடுப்பார் என்று நினைத்த அவனுக்கு தன் தம்பி கைகள் வெட்டப்பட்டது மிகவும் கவலையளித்தது.

    சுயம்பு விநாயகா உன்னை நேரில் வழிபடத்தானே வந்தோம். வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே என்று மனம் வருந்தினான். விநாயகரிடமே முறையிடலாம் என்று தம்பியுடன் கோவில் நோக்கி நடந்தான்.

    அப்போது பகுதா நதி குறுக்கிட்டது. அதில் புனித நீராட அண்ணன்-தம்பி இருவரும் மூழ்கி எழுந்தனர். என்ன ஆச்சரியம்?

    ஆற்றில் விநாயகரை நினைத்தப்படி குளித்த தம்பி லிகிதுடுவின் கைகள் முன்பு போல தோன்றி இருந்தன. அவன் கைகள் வெட்டப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை.

    மகிழ்ச்சி அடைந்த இருவரும் காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்துக்கு வந்து மனதார வழிபாடு செய்தனர். கைகளை திருப்பி கொடுத்ததற்காக விநாயகருக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு பகுதா நதி காணிப்பாக்கம் விநாயகரின் புனித நீராடல் பகுதியாகி விட்டது. இது போன்று ஏராளமான அற்புதங்களை காணிப்பாக்கம் விநாயகர் பலரது வாழ்வில் நடத்தி உள்ளார்.

    • காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் ஆலயத்தில், கருவறையில் விநாயகர் உள்ள இடத்தை சுற்றி எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
    • சிறு கிணற்றில் இருந்து வெளிப்பட்ட விநாயகர் அதே இடத்தில் வழிபடுவதால், அந்த கிணற்று தண்ணீர் ஊற்றெடுத்து ஓடுவதாக கருதப்படுகிறது.

    தமிழ்நாட்டில் எத்தனையோ சுயம்பு தலங்கள் உள்ளன. அந்த 'சுயம்பு'கள் கவசம் போட்டு வைத்து வழிபடப்படுகின்றன. எந்த ஒரு சுயம்பு மூர்த்தமும் வளர்ந்ததாக வரலாறு இல்லை.

    ஆனால் காணிப்பாக்கத்தில் சுயம்பு வடிவில் வெளிப்பட்ட விநாயகர் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்தபடி உள்ளார். இது ஒரு அதிசயமான நிகழ்வாக இத்தலத்தில் கருதப்படுகிறது.

    சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுயம்பு வெளிப்பட்ட போது முனைப்பகுதி மட்டுமே தெரிந்தது. அதில் கடப்பாரைபட்ட வடு இன்றும் உள்ளது.

    அந்த சுமய்பு வளர, வளர விநாயகர் வடிவம் பெற்றது. தற்போது விநாயகரின் தொப்பை வரை தெரிகிறது.

    இந்த சுயம்பு விநாயகர் மீது ஆந்திர மாநிலம் அரகோண்டா கொல்லப்பள்ளியைச் சேர்ந்த சித்தையா என்பவரது மனைவி லட்சுமியம்மா மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் 1947-ம் ஆண்டு சுயம்பு விநாயகருக்கு ஒரு வெள்ளி கவசம் செய்து கொடுத்தார்.

    சுமார் 50 ஆண்டுகள் அது பயன்படுத்தப்பட்ட நிலையில் சுயம்பு விநாயகர் வளர்ந்து விட்டார். எனவே லட்சுமியம்மா செய்து கொடுத்த வெள்ளி கவசம் பயன்படுத்த முடியாதபடி சிறியதாகி விட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு சித்தூர் தொகுதி எம்.பி. ஆதிகேசவலு நாயுடு புதிதாக வேறொரு பெரிய வெள்ளி கவசம் செய்து கொடுத்தார்.

    தற்போது அந்த வெள்ளி கவசத்தையும் கடந்து சுயம்பு விநாயகர் வளர்ந்து வருகிறார்.

    சுயம்பு விநாயகர் வளர்வது காணிப்பாக்கம் மக்களிடம் மட்டுமின்றி ஆந்திராவில் உள்ள விநாயக பக்தர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது. சுயம்பு விநாயகருக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளி கவசங்கள் கண்ணாடி கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ரூ.100 பிரத்யேக தரிசன பாதை தொடங்கும் பகுதியில் அந்த வெள்ளி கவசங்களை காணலாம்.

    தீர்த்த கிணறில் பணம்

    காணிப்பாக்கம் கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் அதாவது ஐம்பொன் சிலைகள் உள்ள சன்னதி அருகில் ஒரு தீர்த்த கிணறு உள்ளது. அந்த கிணறு சுயம்பு விநாயகருடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

    இரும்பு கம்பி சட்டத்தால் அந்த கிணறை மூடி வைத்துள்ளனர். சுயம்பு விநாயகரை தரிசனம் செய்து விட்டு, பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள், அந்த தீர்த்த கிணற்றுக்குள் பணத்தை அள்ளி, அள்ளி போடுகின்றனர்.

    இப்படி காணிக்கை செலுத்தினால், விநாயகர் நமக்கு எல்லா வகை செல்வங்களையும் அள்ளி தருவார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

    பவித்திர தீர்த்தம்

    காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் ஆலயத்தில், கருவறையில் விநாயகர் உள்ள இடத்தை சுற்றி எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். சிறு கிணற்றில் இருந்து வெளிப்பட்ட விநாயகர் அதே இடத்தில் வழிபடுவதால், அந்த கிணற்று தண்ணீர் ஊற்றெடுத்து ஓடுவதாக கருதப்படுகிறது.

    மழை காலங்களில் பகுதா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் சுயம்பு விநாயகரை சுற்றியும் அதிகமாக பெருகும்.

    இதைத்தான் தீர்த்தமாக எடுத்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். விநாயகர் பாதம் பட்ட இந்த தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே இதை பவித்திர தீர்த்தம் என்கிறார்கள்.

    காணி நிலம் வேண்டுமா? காணிப்பாக்கம் செல்லுங்கள்...

    ஒருவர் தன் வாழ்நாளில் சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்டி, அதில் நிரந்தரமாக வசிப்பது என்பது பெரிய விஷயமாக கருதப்படுகிறது. எல்லாருக்குமே அந்த கொடுப்பினை அமைந்து விடுவது இல்லை.

    லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் கூட நல்ல இடம் தேடி அலைவதைப் பார்த்திருப்பீர்கள். எனவே காணி நிலம் கிடைத்தாலும் அது கடவுள் கிருபையால் கிடைக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

    பெரும்பாலானவர்கள் அந்த காணி நிலம் கிடைப்பதற்கு கூட வாய்ப்போ, அறிகுறியோ இல்லையே என்று மிகவும் வருதப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

    அப்படிப்பட்டவர்கள் இனி கவலைப்பட தேவை இல்லை. அவர்களின் கவலையைப் போக்க காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் உள்ளார்.

    ஒருமுறை காணிப்பாக்கம் சென்று சுயம்பு விநாயகரை தரிசனம் செய்து உங்கள் உள்ளக்குமுறல்களை அவர் காலடியில் கொட்டி விட்டு வந்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் சுயம்பு விநாயகர் சும்மா இருக்க மாட்டார்.

    உங்கள் மீதுள்ள கிரக தோஷங்களை விரட்டியடித்து உங்கள் விக்கினங்களை விலக செய்து, மனதில் மகிழ்ச்சியை தருவார். அஷ்ட ஐஸ்வர்யங்களையும் உங்களை நோக்கி தேடி வரச் செய்வார்.

    அப்புறம் நீங்கள் காணி நிலம் மட்டுமல்ல, பல, பல காணி நிலங்களை வாங்கி குவிக்க முடியும். இது சுயம்பு விநாயகரை புகழ்ந்து எழுத வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதல்ல.

    காணிப்பாக்கம் தலத்துக்கு சாதாரணமாக வந்து சென்ற பலர் இன்று, தங்கள் சொந்த வாகனத்தில் வந்து செல்லும் அளவுக்கு வசதி வாய்ப்புகளை சுயம்பு விநாயகர் உயர்த்தி இருக்கிறார் என்று தேவஸ்தான அதிகாரிகள் ஆதாரங்களுடன் சொன்னதின் அடிப்படையில் இந்த குறிப்பு தரப்படுகிறது.

    எனவே காணி நிலம் இல்லையே, நிம்மதியாக தூங்க, தூங்கி, எழுந்திருக்க ஒரு வீடு இல்லையே என்று வருத்தப்படாதீர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது காணிப்பாக்கம் சென்று வாருங்கள். சுயம்பு விநாயகர் உங்களை உச்சத்துக்கு கொண்டு போவதை கண் கூடாகப் பார்ப்பீர்கள்.

    சுற்றுலாவாகவும் செல்லலாம்...

    சமீபகாலமாக முக்கிய கோவில்களுக்கு சென்று வருவதை ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் ஒரு சுற்றுலா போல மாற்றி விட்டனர். நமது கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் அடிக்கடி ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

    மகன்களும், மகள்களும் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விட்ட நிலையில் பலருக்கும் ஆன்மீக சுற்றுலா ஒன்றுதான் பொழுது போக்குவதாகவும் அதே சமயத்தில் புண்ணியத்தையும் மன நிறைவையும் தருவதாக இருக்கிறது. இன்னும் சிலர் வாடகை கார் அல்லது சொந்த காரில் பழமையான ஆலயங்களை தேடிச் சென்று வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    மொத்தத்தில் கோவில்களை தேடி செல்லும் ஆன்மீக சுற்றுலாக்கள் அதிகரித்து விட்டது. இதை உணர்ந்தே தமிழக அரசின் சுற்றுலா கழகம் தினமும் ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது.

    இந்த போட்டியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களும் சேர்ந்து கொண்டு பல வகை ஆன்மீக சுற்றுலாக்களை நடத்துகின்றன. இத்தகைய ஆன்மீக சுற்றுலாவுக்கு மிக, மிக ஏற்ற இடமாக காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் தலம் உள்ளது.

    ஏனெனில் காணிப்பாக்கம் விநாயகர் தலத்தை சுற்றி காஞ்சிபுரம், வேலூர், திருப்பதி, சுருட்டப்பள்ளி, காளஹஸ்தி ஆகிய புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த புண்ணியத் தலங்களுக்கு மிக எளிதாக சென்று வரும் வகையில் திட்டமிட்டு சுற்றுலா பயணத்தை அமைத்துக் கொண்டால் விநாயகர், சிவன், பெருமாள், அம்பிகை, முருகன் ஆகியோர் தலங்களை ஒருங்கே தரிசனம் செய்து விட்டு வர முடியும்.

    சோளிங்கர் வழியாக ஆந்திரா மாநிலத்துக்குள் செல்லும் போது எல்லையில் மவுன குரு சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு முக்தி அடைந்த மவுனகுரு சுவாமிகளின் அருளை இந்த ஜீவ சமாதியில் சென்று தியானம் செய்தால் பெறலாம்.

    'இருந்தும் இல்லாமல் இரு' என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்த ஜீவசமாதி அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மவுன குரு சுவாமிகள் ஜீவசமாதிக்கு பின்புறத்தில் மகான்களின் விக்கிரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    மற்றொரு பக்கத்தில் சங்கு- சக்கரத்தாரியாக பெருமாள் உள்ளார். திருப்பதி ஏழுமலையானைப் பார்த்தது போலவே உள்ளது. இங்கு பெருமாளை வழிபட்டால் திருப்பதியில் ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்று கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளனர்.

    இந்த வளாகத்தின் மற்றொரு பகுதியில் மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அங்கும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து விட்டு வரலாம்.

    இந்த ஆன்மிக சுற்றுலா நிச்சயம் புண்ணியம் தருவதாக இருக்கும்.

    • முருகனுக்குத்தான் ‘அரோகரா’ போட்டப்படி காவடி எடுத்துச் செல்வார்கள்.
    • தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் எடுக்கும் காவடிக்கு தனி சிறப்பு உண்டு.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. மிக, மிக நேர்த்தியாக நடத்தப்படும் இந்த அன்னதான நிகழ்வைப் பார்க்க பிரமிப்பமாக இருக்கும்.

    காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்திலும் அதுபோன்ற அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டது. முதன் முதலாக இத்தலத்தில் 1991-ம் ஆண்டு அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.

    முதலில் 150 பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது. பிறகு அது 500 ஆக உயர்ந்தது. தற்போது தினமும் ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று வருகிறார்கள்.

    அன்னதான திட்டத்துக்கு பக்தர்கள் இயன்ற அளவு உதவி செய்யலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் ரூ. 1116 வழங்கினால் அவர் பெயரில் ஒருநாள் அன்னதானம் வழங்கப்படும்.

    அன்னதான திட்டத்துக்கு வழங்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80(ஜி) பிரிவின் கீழ் விலக்கு பெறலாம்.

    முருகனுக்குத்தான் 'அரோகரா' போட்டப்படி காவடி எடுத்துச் செல்வார்கள். தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் எடுக்கும் காவடிக்கு தனி சிறப்பு உண்டு.

    ஆனால் காணிப்பாக்கம் பகுதி மக்கள் சுயம்பு விநாயகருக்கு காவடி எடுக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுத்து வந்து விநாயகரிடம் சமர்ப்பிப்பார்கள்.

    திருமணம் திட்டமிட்டபடி நடந்தால், குழந்தை பிறந்தால் காவடி எடுத்து வருவதாக விநாயகரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அவர்கள் காவடி எடுத்து வருகிறார்கள்.

    கார்த்திகை மாதம் வந்து விட்டால், எங்கு பார்த்தாலும் சபரிமலை ஐய்யப்பனுக்கான சரண கோஷம் எழுவதை கேட்கலாம். ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, காவி வேட்டி உடுத்தி, விரதம் இருந்து பயபக்தியுடன் சபரிமலை யாத்திரையை மேற்கொள்வார்கள்.

    பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷம் போட்டபடி செல்வதை ஐய்யப்பனுக்கு மட்டுமே உரிய தனித்துவமான ஒரு வழிபாடாகவே இதுவரை நினைத்திருந்தோம். தற்போது அச்சு அசல் அதே மாதிரியான ஒருவழிபாடு காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை மையமாக வைத்து ஆந்திரா மாநிலம் முழுவதிலும் ஓசையின்றி நடந்து வருகிறது.

    ஆம், காணிப்பாக்கம் விநாயகரையும் ஆந்திர மாநில மக்கள் இருமுடி கட்டி நடந்து வந்து வணங்கி செல்கிறார்கள். இந்த வழிபாடு அப்படியே ஐய்யப்ப பக்தர்கள் வழிபாடு முறைகள் போலவே உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவார்கள். குருசாமி மூலம் அணிவிக்கப்படும் இந்த மாலைக்கு "கணபதி தீட்ச மாலை" என்று பெயர்.

    இந்த மாலை துளசி மாலை அல்லது ஸ்படிக மாலையாக இருக்கும். கணபதி தீட்ச மாலை அணிந்த நாள் முதல் 41 நாட்களுக்கு ஒரு மண்டலமாக விரதம் மேற்கொள்வார்கள்.

    இந்த விரத நாட்களில் தரையில் தான் படுத்து தூங்குவார்கள். செருப்பு அணிய மாட்டார்கள். மது, பீடி, சிகரெட் எதுவும் பயன்படுத்த மாட்டார்கள்.

    தினமும் காலை, மாலை இரு நேரமும் குளித்து காணிப்பாக்கம் விநாயகர் படம் அலங்கரித்து வைத்து சரணம் சொல்வார்கள். ஐய்யப்ப பக்தர்கள் எப்படி குழு, குழுவாக அமர்ந்து பக்தி பாடல்களை பாடுகிறார்களோ அதேமாதிரி பாடுவார்கள்.

    பிறகு விநாயகர் சதுர்த்தி சமயத்தில் காணிப்பாக்கத்தை சென்று சேரும் வகையில் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்து நடைபயணத்தை தொடங்குவார்கள். சில ஊர்களில் 21 நாட்கள், அல்லது 11 நாட்கள் மட்டும் விரதம் இருந்தும் பயணத்தை தொடங்குவது உண்டு.

    பயணத்தின் தொடக்கமாக ஐய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டுவதை போலவே விநாயக பக்தர்களும் இருமுடி கட்டி தலையில் சுமப்பார்கள். ஐய்யப்ப பக்தர்கள் தங்கள் இருமுடி கட்டில் நெய் தேங்காய் வைத்திருப்பார்கள். விநாயக பக்தர்கள் தேன் தேங்காயை எடுத்துச் செல்கிறார்கள்.

    ஐய்யப்ப பக்தர்கள் எப்படி "சாமியே ஐய்யப்பா, ஐய்யப்பா சாமியே'' என்று சொல்வது போல இவர்கள் "சாமியே விநாயகா, விநாயகா சாமியே' என்று சரணம் சொல்லி செல்கிறார்கள்.

    ஐய்யப்ப பக்தர்கள் காவி அல்லது நீலநிற உடை அணிந்திருப்பார்கள். ஆனால் காணிப்பாக்கம் விநாயக பக்தர்கள் அத்தகைய உடைகளை அணிவதில்லை. தூய்மையான வெள்ளைநிற உடைகளையே அணிந்து நடந்து வருவார்கள்.

    காணிப்பாக்கம் கோவிலை வந்து சேர்ந்ததும் இருமுடியை சுயம்பு விநாயகருக்கு செலுத்துவார்கள். இருமுடியில் எடுத்து வரும் தேன் உள்ளிட்ட சில பொருட்களை கணபதி ஹோமம் செய்யும்போது அதில் சேர்ந்து விடுவார்கள். இதன் மூலம், தங்களது பிரார்த்தனைகளை சுயம்பு விநாயகர் எந்த இடையூறும் இல்லாமல் நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள்.

    இதனால் காணிப்பாக்கம் விநாயகருக்கு இருமுடி கட்டி விரதம் இருந்து செல்லும் புதிய வழிபாடு முறை ஆந்திரா முழுவதும் புகழ்பெற்று வருகிறது. தெலுங்கானா பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இருமுடி கட்டி, நடந்து வந்து பிரார்த்தித்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த புதிய வழிபாட்டு முறையை முதன் முதலாக கடந்த 2005-ம் ஆண்டு கோவில் அதிகாரி கேசவலு தொடங்கி வைத்தார். அவர் ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து சுயம்பு விநாயகரை வழிபட்டார்.

    அதன்பிறகு சுயம்பு விநாயகரை இருமுடி கட்டி வந்து வணங்கும் பழக்கம் பரவியது. கடந்த ஆண்டு சுமார் 1 லட்சம் பக்தர்கள் இருமுடி கட்டி காணிப்பாக்கம் வந்தனர். இந்த ஆண்டு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காணிப்பாக்கம் கோவிலுக்கு தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வருகிறார்கள்.
    • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்கிறது.

    1. காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோவில் சென்னையில் இருந்து சுமார் 165 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

    2. காணிப்பாக்கம் விநாயகரின் அற்புத ஆற்றல்களையும், சிறப்புகளையும் தெரிந்து கொள்ள ஒரு பிரகார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனம் முக்கிய ஊர்களுக்கு சென்று சுயம்பு விநாயகர் பற்றி தகவல்களை பரப்பி விடுகிறது.

    3. காணிப்பாக்கம் கோவிலை மேம்படுத்த ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. இதை கருத்தில் கொண்டு சுமார் 75 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    4. காணிப்பாக்கம் விநாயகர் முன்பு சத்தியம் செய்வது பற்றிய தகவலை படித்து இருப்பீர்கள். சிலர் நான் மது அருந்தமாட்டேன் என்று கூட விநாயகர் முன்பு சத்தியம் செய்து விட்டு செல்வதுண்டு.

    5. சுயம்பு விநாயகர் முன்பு சத்தியம் செய்து விட்டால் செய்ததுதான். ஏனெனில் ஆந்திர மாநில மக்கள் இந்த விநாயகரை தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள். அவர் முன்பு செய்யப்படும் சத்தியத்துக்கு பிறகு வேறு அப்பீலே கிடையாது.

    6. விநாயகர் கோவில் அருகில் ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் என்ற சிவாலயம் உள்ளது. ராஜகுலோத்துங்க சோழன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கட்டிய 108 சிவாலயங்களில் இந்த மணிகண்டேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். இந்த சிவாலயம் நிறைய கலை சிற்ப வேலைபாடுகள் நிறைந்த சிவாலயமாகும்.

    7. காணிப்பாக்கத்தில் ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயம் கட்டப்பட்ட சிறிது நாளில் அதன் அருகில் ஸ்ரீவரதராஜ சாமி கோவிலும் கட்டப்பட்டது. எனவே இத்தலத்தை ஹரிஹர ஷேத்திரம் என்றும் சொல்கிறார்கள்.

    8. காணிப்பாக்கம் கோவில் மேம்பாட்டுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானமும் உதவிகள் செய்து வருகிறது. முதல் கட்டமாக 14 அறைகள் கொண்ட ஒரு விடுதியை கட்டிக்கொடுத்துள்ளது.

    9. திருப்பதி ஏழுமலையான் தலத்தில் நடப்பது போன்றே காணிப்பாக்கத்திலும் விநாயகர் முன்னிலையில் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஒரு முகூர்த்த நாளில் ஒரே சமயத்தில் சுமார் 300 திருமணங்கள் நடைபெற்றன.

    10. திருப்பதி கோவிலில் விற்கப்படுவது போல இங்கும் லட்டு விற்பனை செய்கிறார்கள். 50 ரூபாய்க்கு ஒரே ஒரு லட்டு, பெரிய லட்டாக தருகிறார்கள்.

    11. திருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு முன்பு நெறிப்படுத்தி தனி, தனி காம்ப்ளக்ஸ் அறைகளில் அமர வைப்பது போல இங்கும் காம்பளக்ஸ் அறைகள் கட்ட திட்டம்.

    12. காணிப்பாக்கம் கோவிலை பிரமாண்டமாக காட்டுவதே பிரகார சுற்றுச்சுவர் கட்டமைப்புதான்.

    13. காணிப்பாக்கம் கோவிலில் காளிகோபுரம் ஒன்று கட்ட உள்ளனர். நெல்லூரைச் சேர்ந்த ஆதி நாராயண ரெட்டி என்பவர் இத்திட்டத்துக்கு ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.

    14. காணிப்பாக்கம் கோவிலுக்கு தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்கிறது.

    15. காணிப்பாக்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அந்த பகுதி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

    16. காணிப்பாக்கம் கோவில் மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்று வருவதால், எதிர்காலத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு ரூ.1 கோடி செலவில் கோவிலை சுற்றியுள்ள சுமார் 41 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

    17. புதிதாக வாங்கப்பட்ட இடத்தில் அன்னதான கூடம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், இரண்டு கல்யாண மண்டபங்கள், 4 வி.ஜ.பி. தங்கும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    18. சுயம்பு விநாயகர் கோவிலின் ராஜகோபுரத்தை ரூ.80 லட்சம் செலவில் மேம்படுத்த திட்டம்.

    19. காணிப்பாக்கம் விநாயகருக்கு தினமும் கொழுக்கட்டை படையல் போட்டு பூஜை நடத்தப்படுகிறது.

    20. காணிப்பாக்கத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. பவுர்ணமி நாளில் இத்தலத்தில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்த திரள்வது குறிப்பிடத்தக்கது.

    21. சுயம்பு விநாயகரை இஸ்லாமிய பெருமக்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    22. விநாயகரிடம் பிரார்த்தனை செய்து வேண்டி கொண்டவர்கள், அந்த பிரார்த்தனை நிறைவேறியதும் கோவில் பிரகாரத்தில் கொழுக்கட்டைகளை எடுத்து வந்து பக்தர்களுக்கு தானமாக கொடுக்கிறார்கள். சில சமயம் விநாயகருக்கு வைத்து வணங்கப்பட்டதும் சுட, சுட கொழுக்கட்டையை தானமாக கொடுக்கிறார்கள்.

    23. பிரகாரத்தில் கண்ணாடி மண்டபம் பின்புறம் நாகாத்தம்மன் சிலை உள்ளது. திருமணத்துக்கு வேண்டிக் கொள்ளும் பெண்கள் அந்த நாகத்தம்மன் சிலை மீது மஞ்சள், சிவப்பு நிற கயிறுகளை கட்டி செல்கிறார்கள். அப்படி செய்தால் உடனே திருமணம் கை கூடி விடுமாம்.

    24. காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை வழிபட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வதை காண முடிகிறது.

    25. இத்தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இங்கு தோஷம் கழிப்பது உள்ளிட்ட எந்த பரிகார பூஜைகளும் நடத்தப்படுவது இல்லை.

    26. சுயம்பு விநாயகரை வழிபட செல்லும் போது இரண்டே இரண்டு அருகம்புல் வாங்கிப் போட்டாலே போதும் என்கிறார்கள்.

    27. விநாயகருக்கு பொதுவாக 21 வகை நைவேத்தியம் படைப்பதுண்டு. ஆனால் சுயம்பு விநாயகருக்கு மிகவும் பிடித்தது வெண் பொங்கலும், தயிர் சாதமும்தான்.

    28. காணிப்பாக்கம் வரும் பக்தர்களுக்கு தினமும் கோவில் நிர்வாகம் சார்பில் 25 கிலோ புளியோதரை தயார் செய்து வினியோகம் செய்யப்படுகிறது.

    29. இத்தலத்துக்கு என்றே பிரத்யோகமாக ரூ.6 கோடி செலவில் தங்க விமான கோபுரம், ரூ.4 கோடியில் தங்க தேர் செய்யப்பட்டுள்ளது.

    30. சித்தூர் மற்றும் காணிப்பாக்கத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அழகாக தமிழ் பேசுகிறார்கள். தமிழில் கேள்வி கேட்டால் புரிந்து கொள்கிறார்கள். எனவே மொழி பிரச்சினை ஏற்படுமோ என்ற தயக்கம் தேவை இல்லை.

    • இந்தியாவில் புகழ்பெற்ற விநாயகர் கோவிலாக மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் திகழ்கிறது.
    • இந்தியாவில் உள்ள 99 சதவீத விநாயகர் தலங்களுக்கு எந்த வரலாற்று பின்புலமும் இல்லை.

    'கணபதி பூஜை கை மேல் பலன்' என்பது நம் முன்னேர்கள் வாக்கு. இன்று கணபதி வழிபாடு அங்கு, இங்கு என்றில்லாதபடி எங்கும் நிறைந்துள்ளது.

    எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும், சன்னதிகளில் தவறாமல் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. சங்கடங்களை தீர்ப்பவர் என்பதால் மக்கள் சதுர்த்தி நாளில் விநாயகரை மகிழ்விக்கவும், பூஜிக்கவும் தவறுவதே இல்லை.

    அதுவும் மூல மூர்த்தியாக விநாயகர் உறைந்திருக்கும் தலம் என்றால் கேட்கவே வேண்டாம். விநாயகர் நம் வெளகீக வாழ்க்கை இடையூறுகளை எல்லாம் களைந்து, மற்றவர்களும் பயன் பெறும் சுகபோகங்களையும், அஷ்ட ஐஸ்வரியங்களையும், நமக்கு அள்ளி, அள்ளி தருவார் என்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் இந்தியாவில் புகழ்பெற்ற விநாயகர் கோவிலாக மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் திகழ்கிறது. ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாயை பக்தர்கள் வாரி வழங்கும் இந்த ஆலயம் மராட்டியர்களுக்கு மட்டுமின்றி இந்தியர்களுக்கே இஷ்ட தெய்வமாக உள்ளது.

    அந்த சித்தி விநாயகருக்கு இணையாக தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்.

    காணிப்பாக்கம் என்ற ஊர் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருளாதாலுகாவில் உள்ளது. சிறிய ஊர்தான் ஆனால் அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் வரசித்தி விநாயகரின் கீர்த்தி எல்லையற்றது.

    இந்தியாவில் உள்ள 99 சதவீத விநாயகர் தலங்களுக்கு எந்த வரலாற்று பின்புலமும் இல்லை. ஒரு அறை கட்டி ஒரு விநாயகர் சிலையை வைத்தால்கூட, அது ஆலயமாகிவிடும்.

    பொதுவாக விநாயகர் சிலையை தூரத்து ஊர்களில் இருந்து திருடி எடுத்து வந்து வைத்தால் அவர் அதிகசக்தி உடையவராக நன்மைகள் தருவார் என்ற ஒரு கருத்து மக்களிடம் எப்படியோ பரவி விட்டது. எனவே ஒரு ஊரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், இன்னொரு ஊரில் அருள் வழங்கிக்கொண்டிருப்பதை காணமுடியும்.

    ஆனால் காணிப்பாக்கம் விநாயகர் அத்தகைய நிலை பெற்றவர் அல்ல. அவர் தன்னைத்தானே காணிப்பாக்கம் பூமியில் இருந்து வெளிப்படுத்திக் கொண்டவர்.

    அதாவது சுயம்புவாக தோன்றியவர். விநாயகப்பெருமான், தன்னை சுயம்பு வடிவில் வெளிப்படுத்திக்கொண்ட பல தலங்களில் தனித்துவங்களுடன் இருப்பது இத்தலத்தில் மட்டும்தான் எனவேதான் காணிப்பாக்கம் விநாயகர் ஈடு இணையற்றவராகத் திகழ்கிறார்.

    ஒரு இடத்தில் ஒரு கடவுள் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தினால், அந்த இடத்து ஆலயம் பக்தர்களை ஈர்த்து, அருள்பாலித்து பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் நிறைவேற்றும் புனித தலமாக திகழும். தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ சுயம்பு தலங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

    காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் மிக, மிக எளிமையானவர். ஆனால் தன்னை தேடி, நாடி வரும் பக்தர்களை எளிமையில் இருந்து சகல யோகங்களையும் கொடுத்து அனுபவிக்க வைத்து, இந்த ஜென்ம பிறவியை நிறைவாக மாற்றும் அற்புத ஆற்றல்கள் கொண்டவர்.

    காணிப்பாக்கம் விநாயகரை வழிபட, வழிபட அவர் நம்மை மேம்படுத்துவார். ஆந்திரா மாநில மக்கள் மத்தியில் இன்று காணிப்பாக்கம் விநாயகர் பெரும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிப்பாக்கம் வந்து சுயம்பு வடிவ விநாயகரை வழிபட்டு, மெய் சிலிர்க்க, மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கிறார்கள்.

    திருப்பதி ஏழுமலையான் எப்படி பொறிவைத்து பிடித்து பக்தர்களைதன் வசமாக்கி, அவர்களது ஆன்மாவை சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்துகிறாரோ, அப்படி காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரும் பக்தர்களை ஈர்த்து அருள்பாலித்து, அவர்கள் வாழ்க்கை விக்னங்களை எல்லாம் துடைத்தொறிந்து வருகிறார்.

    இந்த சக்தி வாய்ந்த கோவிலை ஆந்திர மாநில அரசின் இந்து அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் இங்கு செய்யப்படுள்ளன.

    காணிப்பாக்கம் சென்று வந்தால் கவலைகள் தீரும் என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தான் ஆந்திர மாநில எல்லையையும் தாண்டி, காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரின் அருள்புகழ் நாலாபுறமும் பரவிக்கொண்டிருக்கிறது.

    இப்போது இந்த ஆலயத்தின் தல வரலாறை அறிய வேண்டும் என்ற ஆவல் உங்கள் மனதில் ஏற்பட்டு இருக்குமே....

    • கோவிலின் 7-ம்ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 28ந் தேதி தீர்த்த கலச ஊர்வலத்துடன் தொடங்கியது.
    • சித்தி விநாயகருக்கு மூலமந்திரஹோமம், திரவியஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 7-ம்ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 28ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்த கலச ஊர்வலத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கலச அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நேற்று காலை சித்தி விநாயகருக்கு மூலமந்திரஹோமம், திரவியஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.பின்னர் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா கமிட்டியினர் ஆண்டு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை வழிபட்டனர்.

    • காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று முதல் 24 நாட்களுக்கு தினசரி மாலை மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசில் உள்ள சித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதையொட்டி நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி நேற்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது .

    இன்று சனிக்கிழமை முதல் 24 நாட்களுக்கு தினசரி மாலை மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக ஏற்பாடுகளை காடையூரான்வலசு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×